கவிதைக்காரர்கள்

.

கலகக்காரர்களைவிடவும் அபாயகரமானவர்கள்
கவிதைக்காரர்கள்.
தங்களுக்கான சூத்திரங்களில்
சிக்குப் பிடித்தலைகிறார்கள் அவர்கள்.

சூழ்நிலைகள் எதானால் என்ன.
போகட்டும் என்று எவற்றையும் விடுவதில்லை அவர்கள்.
இறப்பை அவமானத்தை ஒழுங்கீனத்தை
ருசித்துப் பரிமாறுபவர்கள் அவர்கள்.

காதலென்றும் காமமென்றும்
கதறுபவர்களைக் கூட மன்னித்துவிடலாம்
புரட்சி என்று பிதற்றுபவர்களை
ஒரு போதும் மன்னிக்காதீர்கள்.

தங்களுக்கான கத்திகளை அவர்கள்
அதிலேயே தீட்டிக் கொள்கிறார்கள்.
குப்பைகளாக திருப்பிக் கொட்டப்படும் விருதுகளில்
ரத்த முகத்தை வரைந்து கொள்கிறார்கள்.

நிம்மதி சூழுந்த இடத்தில்
குண்டு வைப்பவர்களைக் கூட கருணைமனுவில் கிடத்திவிடலாம்.
தங்களுக்கான ஆப்புகளையும் மயானத்தையும்
நிர்ணயித்தும் வடிவமைத்தும் கொள்பவர்கள் அவர்கள்.

மாஞ்சா தேய்த்த பட்டங்களோடு கடக்கிறார்கள்
அவர்களுக்கான போட்டி என நினைத்துவிடவேண்டாம்
சமயத்தில் அவை
உங்கள் கழுத்தை அறுப்பதற்காகவும் இருக்கக்கூடும்.
nantri www.blogger.com