வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 - நவரத்தினம் அல்லமதேவன்

.
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட
வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015

மெல்பேணில் கடந்த 05.12.2015 சனிக்கிழமை Epping Memorial Hall, Epping. மண்டபத்தில் வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் வெகு கோலாகலமாக நடந்தேறியுள்ளது. தமிழ்க் கலாச்சாரத்தின் படி மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. ஸ்ரீமதி ரமா சிவராஜாவின் மெல்பேண் கவின்கலை இசைக்கல்லூரியின் மாணவிகளான சாருநிதா செல்வராஜா, அம்சவி கோபாலசிங்கம், சாம்பிகா ஈஸ்வரநாதன், ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். வாத்தியக் கலைஞன் வாசவன் பஞ்சாட்சரம் தபேலா வாசித்திருந்தார்.
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர், அறிவிப்பாளர் திரு.வில்லியம் இராஜேந்திரம் அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று தந்து வரவேற்புரையை வழங்கியிருந்தார். தலைமையுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர், அறிவிப்பாளர் திரு.எட்வேட் மரியதாசன் அவர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், முக்கிய செயற்பாடான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும் அத்துடன் அனைத்து நேயர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்



பிரதம விருந்தினராக விக்டோரியா பாராளுமன்றத்தின் அமைச்சரும் (Minister For Energy & Resources - Industry), மில்ப்பார்க் பாராளுமன்ற உறுப்பினருமான Ms.Lilli D"Ambrosio அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்த பல வருடங்களாக வருகை தரும் அவர் தனது உரையில் சங்கத்தின் அனைத்து செய்றபாடுகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். Ms.Lily D'Ambrosio அவர்களை அறிவிப்பாளர் திருமதி நீனா டேரியஸ் அவர்கள் பூக்கொத்து வழங்கி வரவேற்றார்.
வானமுதம் தமிழ் ஒலிபரப்பினைத் தந்துதவிய Plenty Valley Studio  நிறுவனத்தின் சார்பில் Vice President Shelley Karpathakis அவர்கள் விருந்தினராக வருகை தந்திருந்தார். அவரிடம் வானமுதம் ஒலிபரப்புச் சேவை ஆண்டு தோறும் றேடியோத்தோன் நிதி சேகரிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட வெள்ளிகளுக்குரிய காசோலையை சங்கத்தின் நிதிச் செயலாளர் திரு.அன்ரன் நியூட்டன் அவர்கள் அனைத்து நேயர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை அறிவிப்பாளர் பாடும்மீன்.சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் அறிவித்திருந்தார்.
விற்றிசீ தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டு சமூக சேவையாளர்கள் மற்றும் ஊடகச் சேவைக்குப் பங்களிக்கும் மெல்பேண் வாழ் அன்பு உள்ளங்கள் ஐவரைத் தேர்ந்தெடுத்து நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்தார்கள். 3 ZZZ தமிழோசை வானொலி அறிவிப்பாளர் திரு.ரமேஷ் பாலகிருஷ்ணர், கவின் கலை இசைக்கல்லூரி நிறுவனர் இசைக்கலைமணி, சங்கீத கலாவித்தகர் ஸ்ரீமதி ரமா சிவராஜா, எழுத்தாளர், கவிஞர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி.அருண் விஜயராணி, எழுத்தாளர், இளைப்பாறிய ஆசிரியை, அதிபர் திருமதி.மேரி பத்மா ரொபேர்ட், மில்ப்பார்க் தமிழ்ப் பாடசாலை தமிழ் ஆசிரியை, வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி.ரெஜினா சந்திரகுமார் ஆகியோர் அந்த கௌரவத்தினைப் பிரதம விருந்தினர் Victorian Parliament Minister, MP. Ms.Lily Ambrosio இடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியினூடாக சேகரிக்கப்பட்ட நிதி முல்லைத்தீவு மாவட்டத்தில்அமைதி தென்றல்செயற்பாட்டு நிதியத்தின் மூலம் வாழ்வாதாரம் இன்றி வாழ்கின்ற எமது உறவுகளுக்கு அனுப்பி பல செயற்திட்டங்களை நிறைவேற்றியிருந்தார்கள். அதனுடைய விபரங்கள் நேயர்கள் அனைவருக்கும் Slide Show காட்சிகள் யாவும் காண்பிக்கப்பட்டது. அந்த விபரங்களுக்கு பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களும், திருமதி நீனா அவர்களும் இணைந்து ஒலி வடிவம் கொடுத்திருந்தார்கள்.
மெல்பேண் வாழ் இசைக்கலைஞன் திரு.ஜெராட் யோகரட்ணம் அவர்களின் நெறியாள்கையில் அமுத கானம் திரையிசைப்பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெராட் யோகரட்ணம், மு.பாரதிதாசன், சுவாதி கிருஷ்ணமூர்த்தி, நிவேதா நியூட்டன், கீதா தெய்வேந்திரன், குருதேவன் ஸ்ரீஞானானந்தன், திருபவன் தர்மகுலேந்திரன், செம்பருத்தி சிவஞானசுந்தரம் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தார்கள். செந்தூரன் யோகரட்ணம், அக்ஷன் வாசவன், கிருஷ்ணா ரகுநாதன், சீவராஜா செல்லத்துரை, கிருஷிகன் சீவராஜா, கீர்த்திகன் சீவராஜா ஆகியோர் வாத்தியக் கலைஞர்களாக இனிமையான இசையை வழங்கியிருந்தார்கள். அனைத்து ரசிகர்களின் கரகோஷங்கள் அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் நிறையவே இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
திரு.அஜித் அந்தனி அவர்கள் நகைச்சுவை கலந்த நீங்களும் நடிக்கலாம் என்ற நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பங்களிப்போடு திறம்பட நடாத்தியிருந்தார். ரசிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி எனவே அனைவரது ஒத்துழைப்போடு மிகவும் நன்றாகவே நடபெற்றது. கரியோக்கி இசையுடன் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியை அறிவிப்பாளர் திரு.வாசவன் பஞ்சாட்சரம் அவர்கள் தனது இனிமையான பாடலுடன் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம் அவர்கள் பொப்பிசைப் பாடல்களை பாடி அனைவரை தன்பால் ஈர்த்துக் கொண்டு ஆடலுடன் பாடல் என்ற நிகழ்ச்சியாக நடந்தேறியது.
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், வானொலி அறிவிப்பாளர் கௌசல்யா அன்ரனிப்பிள்ளை அவர்கள் நன்றியுரை வழங்கினார். வண்ணத்தமிழ் மாலை நிகழ்ச்சிகளை வானொலி அரிவிப்பாளர்கள் திரு.எட்வேட் அருள்நேசதாசன், திரு.ஸ்ரீரஞ்சன் ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் தொகுப்பாளர்களாக நிகழ்ச்சிகள் யாவற்றையும் மிகவும் திறம்பட நடாத்தியிருந்தார்கள்.
விழாவின்  ஒருங்கிணைப்பாளர்களான சங்கத்தின் உப செயலாளர் திரு.சாம்பசிவம் தியாகராஜா, மற்றும் நிதிச் செயலாளர் திரு.அன்ரன் நியூட்டன் இருவரும் திறமையாக ஒழுங்கு செய்திருந்தார்கள். சங்கத்தின் மற்றய செயற்பாட்டாளர்களான திரு.இராமநாதன் சிவயோகநாதன், திரு.அஜித் அந்தனி, திரு.ஈஸ்வரநாதன் கந்தசாமி, திரு.நிரோஷ் முத்துக்குமார், ஆகியோரும் முன்னின்று நிகழ்ச்சிகள் அனைத்தையும் செவ்வனே நடை பெற பல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கியிருந்தார்கள்.
கடந்த ஆண்டு போல் இந்த வருடமும் நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி எமது தாயக உறவுகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது என்ற நல்ல செய்தியையும் தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மெல்பேணில் இயங்கும் வங்கி, வர்த்தக வியாபார, மருத்துவ நிலையங்கள்,என யாவரும் பூரண அனுசரணையாளர்களாக தங்கள் முழு ஆதரவை நல்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். விற்றிசீ தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வானொலி ஒன்பது ஆண்டினைக் கடந்து பத்தாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டுவோமாக.
வாழ்க தமிழ்.

நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேண்.

No comments: