.
சுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
சுப்பையா வயலைச் சுற்றி ஓடுகிறான்.
இருவரும் சிறுவர்கள்.
ஆனால் இப்பொழுதே, வயல் கொத்துவது சுப்பனின் வாழ்க்கை ஆகி விட்டது.
விடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். அப்பனுக்கு உதவியாக ஆவன பல செய்கிறான். மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. சின்னதோர் ஓய்வு இரவில் தான் - பால் நிலவில் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் விளையாட்டு. தூக்கம்.
சுப்பையா ஊர்ப் போஸ்ட் மாஸ்டரின் மகன். பக்கத்தூர்ப் பெரிய பள்ளியில் படிக்கிறான். வயல் அவன் தகப்பனாருடையது. வயலைச் சுற்றி ஓடுவது அவனுக்கு விளையாட்டு. பள்ளியில் படித்த 'பஞ்சி' தீர்ப்பது.
காலம் காற்றோடு செல்கிறது.
சுப்பையா 'கம்பஸ்' போய் விட்டான். விடுமுறைக்கு ஊருக்கு வருகிறான். கூடவே கொஞ்சும் கிளியென அவனது காதலி. ஊரைச் சுற்றிப் புகைப் படம் எடுத்துக் கொள்பவர்கள் வயலுக்கும் வருகிறார்கள்.
சுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
அப்பன் போய் விடச், சுப்பன் மட்டுமே வயலோடு வாழ்கிறான்.
விடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். மதியம் வரை வேலை. மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. பால் நிலவில் தன் நண்பர்களுடன் உட்கார்ந்து கொஞ்சம் கதை பேசல் - தூக்கம்.
வந்தவர்கள் சுப்பனுடனும் ஒரு படம் தட்டுகிறார்கள். நகர்கிறார்கள்.
காலம் காற்றோடு செல்கிறது.
சுப்பையா குடும்பத்துடன் வெளிநாடு போய் விட்டான். குடும்பத்துடன் 'சம்மர் ஹொலிடே'க்கு ஊர் வருகிறான். சுப்பையாவின் குழந்தைகள் வயல் பார்க்க வருகின்றன.
'மம்மி, வாட் இஸ் தட் மான் டூயிங்?"
சுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
"ஹி இஸ் ... ஐ மீன் ..... டார்லிங், வயல் கொத்துறதை 'இங்க்லீஷ்'இலை எப்படிச் சொல்லுறது?"
குழந்தைகள் நகர்கின்றன.
காலம் காற்றோடு போகிறது.
சுப்பையரின் குழந்தைகள் 'செட்டில்' ஆகி விட்டார்கள். மகள் 'லாயர்'. மகன் 'எஞ்சினியர்'. சுப்பையருக்கு இருதய நோய் இருப்பதாக டாக்டர் சொல்லி விட்டார். அவருக்குத் தேவையானது நல்ல காற்று, உடற்பயிற்சி, ஓய்வு, அமைதியான வாழ்க்கை.
சுப்பையர் ஊருக்கு வருகிறார் - நிரந்தரமாக.
சுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
விடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். மதியம் வரை வேலை . மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. பால் நிலவில் தன்னையொத்த சிலருடன் உட்கார்ந்து கொஞ்சம் கதை பேசல் - தூக்கம்.
சுப்பையர் வயலைச் சுற்றி ஓடுகிறார்.
வயலைச் சுற்றி ஓடுவது அவருக்கு உடற்பயிற்சி.
காலம் இன்னும் கொஞ்சம் உருள்கிறது.
சுப்பையர் வயலைச் சுற்றி ஓடுகையில் ஒரு நாள் விழுந்து விட்டார்.
விழுந்தவர் எழவில்லை.
வயலின் எல்லையில் ஒரு சுடலை. சுடலையின் கோடியில் ஒரு பூவரசு. பூவரசின் கீழ் அடுக்கிய ஒரு சிதை. பூவரசம் பூவைப் போலச் சிவப்பும் மஞ்சளுமாகச் சிதையைத் தழுவும் தீ நாக்குகள்.
சாம்பல் காற்றில் பறக்கிறது.
காடாற்றச் சென்றவர்கள் கையிலே பாற்செம்புடன் வயல் வரம்புகளினூடாக நடந்து வருகின்றனர்.
சுப்பன் இன்னும் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment