மறைமலை அடிகள்

.

‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’
- ராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் திருமுறையில் உள்ள பாட்டை மகள் நீலாம்பிகை படிக்க, தந்தை வேதாசலம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
சுவாமி வேதாசலத்துக்கு அந்தப் பாடலில் ஒரு நெருடல் இருந்தது. மகளிடமே கேட்டார். ‘‘நீலா! இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு உடம்பாகிய யாக்கை என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் வேதாசலம்.
‘‘அப்படியானால் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை எடுத்துத் தந்தார். அன்றுதான் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. எதையும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உடைய சுவாமி வேதாசலம், தனது பெயரை ‘மறைமலை அடிகள்’ என்று மாற்றிக் கொண்டார். தனித்து நிற்கும் தகுதியை உடையது தமிழ் என்று மறைமலை அடிகளால் உலகுக்கு உணர்த்தப்பட்டது.


தமிழ்... தமிழ் என்று கத்தினார் என்பதால், மற்ற மொழிகள் அறியாதவர் அல்ல... மறைமலை அடிகள். காளிதாசனின் சாகுந்தலத்தை, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு வடமொழி ஆளுமை படைத்தவர். இந்த மொழிபெயர்ப்பைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய மொழிபெயர்ப்பு அது.
alt
தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதி வைத்துவிட்டுப் போனார் மறைமலை அடிகள். இவை  ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். எனவே அவரது தனித்தமிழ் இயக்கம் என்பது ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல. தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது. மறைமலை அடிகள் மிகச் சிறுவயதிலேயே பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து விட்டார். 15 முதல் 21 வயதுக்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிவஞான போதம் என முக்கிய இலக்கியங்கள் அனைத்தும் அவர் மனதில் வாழ்ந்தன.
அந்தத் தமிழ்த் திறமைதான் நாகப்பட் டினத்தில் இருந்து அவரைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பணிக்கு அழைத்து வந்தது. ‘சூரியநாராயண சாஸ்திரி’ என்கிற இயற்பெயரை, ‘பரிதிமாற் கலைஞர்’ என்று மாற்றிக்கொண்ட தமிழ்ப்புலவர்தான், மறைமலை அடிகளை நேர்முகத் தேர்வு செய்தவர். மூன்று கேள்விகளைக் கேட்டார் பரிதியார். அதில் கடைசிக் கேள்வி, ‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக் காட்டு சொல்லுங்கள்’ என்பது. ‘அஃது எனக்குத் தெரியாது’ என்றார் மறைமலை. ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள்’ என்றார் பரிதிமாற் கலைஞர். ‘தெரியாது’ என்று சொல்பவரை, ‘எப்படித் தேர்வு செய்யலாம்’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘அஃது என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். எனக்கு என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற் கலைஞர். நமக்குத்தான் வேலை கிடைத்துவிட்டதே என்று விடவில்லை மறைமலை. தனது தேர்வைத் தொடங்கினார். மூன்று கேள்விகளை பரிதிமாற் கலைஞரிடம் கேட்டார். ‘என்னைவிட நீங்களே சரியாகச் சொல்லக் கூடியவர். அதனால்  நீங்களே சொல்லுங்கள்’ என்றார் பரிதியார். இந்தக் காலமாக இருந்தால் தேர்ந்தெடுத்தவரையே கேள்வி கேட்ட தற்காக, வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால் பரிதிமாற் கலைஞர், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர் தன்னைவிட அறிவாற்றல் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அன்றைய ஆசிரியர்கள் அப்படித்தான் இருந்தார்கள்.
மறைமலையடிகள் பாடம் நடத்துவதைப் பார்த்து, அதன் இனிமையில் மாணவர்கள் மயக்கமுற்றனர். ‘ஐயா, இதையே புத்தகமாக எழுதுங்கள்’ என்றார்கள். ‘வெளியிட பணம் இல்லையே’ என்றார் மறைமலை. ‘நாங்கள் பணம் திரட்டித் தருகிறோம்’ என்றார்கள் மாணவர்கள். அப்படி வெளியானதுதான் முல்லைப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகள். அறிவை உணர்பவர்களாக மாணவர்களும், அறிவை உணர்த்துபவர்களாக ஆசிரியர்களும் அந்தக் காலத்தில் இருந்துள்ளனர்.
ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாக கற்றால் போதும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை, அந்தத் தீர்மானத்தை எதிர்த்து தனது 36-வது வயதில் பணியில் இருந்து விலகினார். இதன் பிறகுதான் அவரது பொதுவாழ்வே தொடங்கியது. தான் கற்றுக்கொண்டதை மக்களிடம் கொண்டு செல்லப் புறப்பட்டார். தமிழகத்தின் அனைத்துக் கோயில் களிலும் சைவ சித்தாந்தம், சமரச சன்மார்க்கம், வேதாந்தமும் சித்தாந்தமும்... என்ற பொழிவுகளைத் தொடங்கினார். ஏட்டில் இருந்த தமிழ்ச் சமய இலக்கியங்கள் எல்லாம், எளிதில் புரியாத பாட்டில் இருந்த பக்தி நெறிப் பாடல்கள் எல்லாம் மறைமலை அடிகளின் தமிழால் தமிழ்நாட்டுத் தெருக்களில் வலம் வரத் தொடங்கின.
தமிழர்க்கு நாகரிகம் இல்லை, வரலாறு இல்லை, வடமொழியில் இருந்துதான் தமிழ் வந்தது என்று அதுவரை சொல்லப்பட்டு வந்த உள்நோக்கம் உள்ள அறிவுக்குப் புறம்பான அத்தனை குதர்க்க வாதங்களையும் தனது சொல்லால் தவிடுபொடி ஆக்கினார் மறைமலை அடிகள்.  ‘தமிழா... சமஸ்கிருதமா?’, ‘தமிழரா... ஆரியரா’ என அறிவுச் சூழலில் எழுந்த மோதலில் அறிவாற்றலுடன் பதில் கொடுத்தார்.
இன்னொரு பக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சைவ சமயத்தின் மீதும், கடவுளின் மீதும் தாக்குதல் தொடுத்ததைத் தடுக்கும் தேவையும் மறைமலை அடிகளுக்கு ஏற்பட்டது. இவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தவர் நுழைந்து கேள்விகள் கேட்டபோது, சில இடங்களில் மோதலே ஏற்பட்டது. ராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சபையில் அடிகள் பேசும்போது, ‘இந்து மதத்தைப் பற்றிப் பேசும் ஈ.வெ.ரா. இயக்கத்தவர்கள் இஸ்லாமைப் பற்றிப் பேசுவார்களா? அப்படிப் பேசினால் அந்தச் சமயத்தவர் கொன்று குடலை மாலையாக அணிவார்கள் அல்லவா?’ என்று பேசிவிட்டார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ‘திராவிடன்’ இதழ், மறைமலை அடிகளை எதிர்த்து எழுதியது. இவர் மீது வழக்குப் போடும் முயற்சிகள் நடந்தன. இரண்டு அமைப்பினர்க்கும் தூதுவராக இருந்து திரு.வி.க. சமாதானம் செய்தார்.
இவை அனைத்தையும் அறிந்த பெரியார், ‘குடி அரசு’ இதழில் எழுதிய தலையங்கத்தில் மறைமலை அடிகளின் பெருமைகள் அனைத்தையும் சொல்லி, அவர் மீது தமது இயக்கத்தவர்கள் நடந்துகொண்ட முறைக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்தார். அதன்பிறகே திராவிட இயக்கத்தவர்கள் மறைமலை அடிகளைத் தாக்கி எழுதுவதை நிறுத்திக்கொண்டார்கள். ‘மறைமலை அடிகளும், காசு பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’ என்று பெரியாரே சொன்னார். சைவத்தைக் காக்கவும், தமிழ் பக்தி இலக்கியங்களின் பெருமையைச் சொல்லவும் தன் பயணத்தை மறைமலை  அடிகள் நிறுத்தவில்லை.
வெறும் பேச்சாளராக, பக்திச் சொற்பொழி வாளராக சுகம் கண்டுவிடாமல் தமிழுக்குச் சோதனை வந்தபோது எல்லாம் வீதிக்கு வந்து போராடுபவராக அடிகள் இருந்தார். இந்திமொழி உயர்நிலைப் பள்ளிகளில் 5, 6, 7, படிவங்களில் கட்டாயமாகும்  என்று 1937-ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘தமிழர் கழகம்’ உருவாக ஊக்கம் கொடுத்தார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறைதிருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பி வைத்தார். 1948-ல் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது பெரியாருடனும் அரசியல் இயக்கத்தவர்களுடனும் மேடை ஏறினார்.
தமிழுக்கும், சைவத்துக்கும் துளி சேதாரம் வந்தாலும் சினந்தெழக் கூடியவராக மறைமலை யடிகள் இருந்தார். இன்றைய தமிழ் அமைப்புகள், சைவ சமய மன்றங்கள், தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்கள் தனித்தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் முன்னோடி அவர்தான். ‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால் ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்” என்று சொல்லும் துணிச்சல் மறைமலை அடிகளுக்கு மட்டும்தான் இருந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது படைப்புகள் அனைத்தையும் ‘தமிழ் மண்’ இளவழகன் மொத்தமாக எடுத்துவரும் பணியில் இருக்கிறார்.
மறைமலை அடிகள் தனித்தமிழ் கண்ட நாட்டில்தான், தமிழில் பேசுவதையே கேவலமாக நினைக்கும் காலம் உருவாகி விட்டது. ஆங்கிலம் தெரியாது என்று சொல்வது கேவலமாக இருக்கிறது. ஆனால், தமிழ் தெரியாது என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. தமிழ் என்று சொல்லி பேசும் தமிழாவது, தமிழாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ‘தமிழா நீ பேசுவது தமிழா?’ என்று கேட்ட உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் இவை...
‘‘உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ஃப் என்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றாய் விடியாது உன் வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை.
வண்டிக்காரன் கேட்டான் லெப்ஃட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ஃபைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
கொண்ட நண்பனை ஃப்ரெண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?
-குரல் கேட்போம்

No comments: