புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா ? - கீதா மாணிக்கவாசகம்

.
( அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கியச்சங்கம்  அண்மையில் நடத்திய  15  ஆவது    தமிழ்   எழுத்தாளர்   விழாவில் இடம்பெற்ற   மகளிர்அரங்கில்   சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை)




" புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா ?  " என்ற தலைப்பில் எழுதுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நமது சமுகத்தில் "பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது ? மாற்றம் வரும் இத்தரணியில் அப்போது " என்ற சிந்தனை நடைமுறையிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிந்திக்கும் பெண் நான்.

ஒருவருடைய வாழும்முறை மற்றும் சிந்தனைகள் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகின்றது. பல தலைமுறைகளாகப் படித்த குடும்பத்தில் பிறந்து,  முற்போக்கான சிந்தனைகள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பெண் புலம் பெயர்ந்த இடத்தில், அவள் தாய் நாட்டில் எவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தாளோ அதைப்போலவே தான் இங்கேயும் வாழ்கின்றாள்.


இந்த தலைப்பைப் பற்றி கருத்துக் கணிப்பைப் பல அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெண்களுடன் செய்தேன். இவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கியச் ராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள்.  இதன்படி, அவர்களின் வாழ்வின் எந்த காலகட்டத்தில் பெண்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள் என்பதைப்  பொறுத்தே அவர்கள் புலம்பெயர்ந்த இடத்தில் சுதந்திரமாக வாழ்கிறார்களா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க ப்படுகின்றது.

இவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
முதலாவதாக :
15 வயதுக்குக் கீழ் குழந்தையாக இருக்கும் போதே புலம்பெயரும் பெண் குழந்தைகள்   மிக இலகுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி மிகவும் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் சிந்தித்து அதை செயலிலும் வெளிப்படுத்துகிறார்கள்.

இரண்டாவதாக :

திருமணமான உடனேயோ அல்லது திருமணமாகி சில வருடங்களிலோ புலம்பெயரும் பெண்கள், புலம்பெயர்ந்த இடத்தில் சுதந்திரமாக வாழ்வதாக கூறுகின்றார்கள்.

அதற்காக  அவர்கள் கூறும் காரணங்கள் சில:

1)    இவர்களில் பெரும்பான்மையானோர் தனிக்குடித்தனத்தில் வாழ்கின்றார்கள்,   குடும்பத்தில்   மூத்தோரின்  தலையீடுகள் இருப்பதில்லை. ஆக, தம்பதியினர் புரிந்து கொண்டு வாழும்போது இருவருடைய கருத்தும் ஏற்று கொள்ளப்படுகின்றது.
உலகத்தின் அனைத்து நாடுகளிலும் உள்ள குடும்பங்களில் இருக்கும் மாமியார்  மருமகள் சிக்கல் இங்கே இருப்பதில்லை.

2)    அடுத்து, பெரும்பான்மையான பெண்கள் வாகனங்ககள் பல ஒட்டுகின்றார்கள்.        வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும்மெனில் தன் விருப்பத்திற்கு  ஏற்ப வெளியே செல்லக்கூடிய சுதந்திரம் உள்ளது. அனாலும் இங்கே உறவுகளின் உதவி இல்லாததால், குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கு உண்டு

3)    இறுதியான காரணம், பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்கின்றார்கள். இங்கே வீட்டு வேலைக்கு என்று பணியாளர்களை வைத்து கொள்ளும் வசதியும் வாய்ப்பும் இல்லாததால் அனைவரும் வீட்டு வேலைகளில் உதவுகின்றார்கள். பல நல் இல்லங்களில் நள பாகமும் கூட  நடைப்பெறுகின்றது.

மூன்றாவதாக:

திருமணமாகி பல வருடங்களின் பின்னர் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் பல மாறுதல்கள் இருந்தாலும், தங்களுக்கு இங்கேயும், கருத்து சுதந்திரம் இருப்பதாக க் கருதுவதில்லை. இங்கே வந்த பின்னர் என்ன தான் வெளியே சென்று பொருள் ஈட்டினாலும், வாகனங்கள் ஓட்டினாலும் அவர்களுக்கு கருத்து  சார்ந்த சுதந்திரம் இருப்பது இல்லை. மற்றும் கணவரே பல சுதந்திரங்களை வழங்கினாலும் கூட, அவர்கள் அதை ஏற்க அச்சப்படுகிறார்கள்.  நமது மரபை பின்பற்றாவிட்டால் குடும்பம் குலைந்து விடுமோ என்ற அச்சம்   அவர்களை கட்டுப்படுத்தக் கூடும்.    ஏனெனில் நமது மரபில் பெண்களுக்கு குடும்பைத்தைக் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை உள்ளது. மேலும் நமது சமுகத்தில் பெண்கள் முதலில் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவராகவும், அதன் பின்னர் கணவருக்குக் கட்டுப்பட்டவராகவும் வாழ்கின்றார்கள்.ஆதலால்தானோ என்னவோ நமது மரபில் திருமணதிற்கு பின்னர் ,பெண்களே அயல் வீட்டிற்கு செல்கிறார்கள் ஆண்களை அனுப்பினால்  இரண்டு நாட்களில் திரும்பி விடுவார்களோ?

நமது சமூகத்தில் கல்வியின் வடிவாக சரஸ்வதியையும், வீரத்தின் வடிவாக துர்கையையும், செல்வத்தின் வடிவாக இலக்குமியையும் போற்றுகின்றார்கள். ஆனால்,  நடைமுறையில்
பெண்களை சக மானுடப்பிறவியாகவாவது  பார்க்கும் எண்ணம் எமது சமுகத்தில் வர வேண்டும். மகாத்மா காந்தியின் சிந்தனையான, எப்போது ஓர் இளம்பெண் நடு இரவில் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, தன்னந் தனியே வெளியே செல்ல முடிகிறதோ, அதுவே உண்மையான பெண் சுதந்திரம் என்ற நிலை இங்கேயும் இல்லை. சொல்லப் போனால் பட்டப் பகலில் கூட ஒதுக்குப்புறமான பேரூந்து நிலையத்திற்கோ, இரயில் நிலையத்திற்கோ நடந்து செல்வது பாதுகாப்பானது அல்ல.

இந்த நிலையை மாற்ற வேண்டும்மென்றால், சமூகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.  மேலும் பெண்கள், எதையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பெண்கள் தற்காப்புக் கலை பயின்று இருக்க வேண்டும். அல்லது தற்காப்புச் சாதனத்தை பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இங்கே மிளகுப்பூச்சு(Pepper Spray) என்ற தற்காப்புச் சாதனத்தை வைத்துக் கொள்வது சட்டத்திற்கு விரோதமானதாகும், ஆகவே தனியே வெளியே செல்ல வேண்டும் என்றால், சாதாரணமான  நறுமண  தெளிப்பான்னையே (ஸ்ப்ரேயை) தற்காப்பு சாதனமாகப் பயன் படுத்தும் நோக்குடன், வைத்துக் கொள்ளலாம்.

மேற்கத்தியச் சிந்தனைகள் உள்ள நாடுகளில், அனைவருக்கும் சம உரிமை மற்றும் சமநிலை அளிக்கப்படுகின்றது. இங்கே பெண்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கு ஒதுங்கி வழிவிடும் பழக்கம் பின்பற்றப்படுகின்றது, பெண்கள் அமர்ந்த பின்னரே ஆண்கள் இருக்கையில் அமர்கின்றனர். மேலும் பல சமயங்களில் பொதுப் போக்குவரத்தில், பெண்களுக்காக எழுந்து அமர இடம் கூட தருகின்றார்கள்.

அத்துடன் , மேற்கத்தியக் கலாச்சாரத்தில் பெண்கள் தமது தலைப்பாக, "MS" எனும் ஆங்கிலப் பதத்தைப் பாவிக்கும் வழக்கம் உள்ளது. இது அவர்களுக்கு  தமது தனிப்பட்ட விருப்பத்திற்கு எற்றவாறு, தங்களது அடையாளத்தைக் காட்டி கொள்ளவும், அவர்களது தந்தை பெயரை திருமணத்திற்க்குப் பின்னரும் வைத்துக்கொள்ளும் ஒரு வழியையும் தருகின்றது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் என்னை கவர்ந்த, மற்றும் தாக்கம் ஏறபடுத்தியவைகள் ஆகும்.

"பழையன கழிதல் மற்றும் புதியன புகுத்தல்" என்ற சிந்தனை கொண்ட நம் சமுகத்தில், இதற்காக ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவ்வாறு வந்தால் என்னை போன்று , தந்தை பெயரை திருமணத்திற்க்குப் பின்னரும் வைத்துக்கொண்டு இருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு பல நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இயலும். இனி வரும் காலங்களில் பெண்கள் அனைத்து சுதந்திரத்துடன் வாழ, முற்போக்கான சிந்தனைகள் கொண்டவராக வாழ, பெண்கள், பழக வேண்டும்.

ஆக, பெண்களாகியஆகிய நாம் தான் நம்மை நாமே ஒரு வட்டதிற்குள் பொருத்தி க் கொள்ளாமல், பரந்த இவ்வுலகில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை உணர்ந்து வாழ்ந்து, இனி வரும் சந்ததியினருக்கு உதாரணமாகத் திகழ வேண்டும்.

எனது எண்ணங்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பை எமக்கு அளித்த ATLAS அமைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவ்வளவு நேரம் எனது சிந்தனைகளை பொறுமையுடன் படித்த, உங்கள் அனைவருக்கும் எனது பல கோடி நன்றிகள். 

No comments: