முதன்முறையாக சவுதி பெண்கள்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை : இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென எச்சரிக்கை
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி
எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு
முதன்முறையாக சவுதி பெண்கள்
30/11/2015 சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஈடுப்பட்டுள்ளதுடன் வாக்களிக்கவுள்ளனர்.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது.
பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது படங்களை தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் போட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை : இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென எச்சரிக்கை
02/12/2015 இந்தியாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் சென்னை உட்பட வடமாவட் டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெய்துவரும் அடைமழையால் தலை நகர் சென்னை உள்ளிட்ட வடமாவட் டங்களில் ரயில், பஸ் போக்கு வரத்து மற்றும் விமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் தென்மாவட்டங் களுக்கு செல்லும் 12 ரயில்களும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் 3 ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 11 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடருமென வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரு நாட்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் அடைமழையால் குறித்த 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்படுகிறது. அத்துடன் மழை நீரும் ஆற்று நீருடன் சேர்ந்ததால் வீதிகள் அனைத்தும் ஆறுகளாக மாறியுள்ளன. இதனால், அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் செங்கல் பட்டிலேயே நிறுத்தப்பட்டன.
மேலும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்தும் தடைபட்டது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முத்துநகர், ராமேசுவரம், மலைக்கோட்டை, உழவன், மன்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட 11 எக்ஸ்பிரஸ் ரயில்களும், எழும்பூர் மங்களூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா, புதுடெல்லி, விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களை அமைத்து, வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இரு நாட்கள் பெய்த அடைமழையிலேயே வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, பெய்துவரும் அடைமழையால் ஓடுதளத்தில் மழைவெள்ளம் தேங்கியிருப்பதால் சென்னை விமான நிலையம் நாளை வியாழக்கிழமை காலை வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 4000 பயணிகள் முடங்கியுள்ளதுடன் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் நிலை தடுமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் கொலை குற்றவாளிகளான சாத்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 15 பேரின் தண்டனையை குறைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எச்.எல்.தத்து, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
இந்நிலையில், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு குறித்து அவர் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதுடன் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சார்பில் எல்.எல் தத்து இன்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி
03/12/2015 அமெரிக்கா, கலிபோர்னியாவின் சன்பெனடீனோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கலிபோர்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை விடுமுறை களியாட்ட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாகவும் இது இரத்தக்களரியை ஏற்படுத்தும் ஒரு பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு
03/12/2015 மலேஷியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான எம்.எச் 370 விமானமும் அதில் பயணித்த 239 பயணிகளுடன் காணாமல் போனது, இதை தேடும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வல்லுனர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமது தேடுதல் நடவடிக்கையை நிறுத்தபோவதாக தெரிவிக்கின்றன.
அவர்கள் எம்.எச் 370 விமானம் இந்திய பெருங்கடலில் தெற்கு பகுதியில் இருக்கலாம் என்று கூறுகின்றன.
எம்.எச் 370 விமானம் பெய்ஜிங்கில் இருந்து கோலாலம்பூர் பயணித்த போது கடந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி