இலங்கைச் செய்திகள்


ஆனந்த குமாரசுவாமி வீதியை திறந்து வைத்தார் ஜனாதிபதி

கோயில் உண்டியல் உடைப்பு: ஒரு தொகை பணம் கொள்ளை

பொலிஸாருககு எதிராக காலவரையறையின்றி பணி பகிஸ்கரிப்பு
நூறுநாள் வேலைத்திட்டத்தில் எம்மையும் உள்வாங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
ஹேமா குமுதினி விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்
 
‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு

ஆனந்த குமாரசுவாமி வீதியை திறந்து வைத்தார் ஜனாதிபதி



10/02/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெயர் மாற்றம் பெற்ற “நெளும் பொகுன” வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.



ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொக்குன மாவத்தை என கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி முன்னர் காணப்பட்ட ஆனந்த குமாரசுவாமி வீதி என்ற பெயரில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 







கோயில் உண்டியல் உடைப்பு: ஒரு தொகை பணம் கொள்ளை




10/02/2015 மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திலுள்ள பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு ஒரு தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 
இதனடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) காலை பொலிஸார் குறித்த கோயிலுக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர். 
இருப்பினும் இச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 








பொலிஸாருககு எதிராக காலவரையறையின்றி பணி பகிஸ்கரிப்பு


11/02/2015  வவுனியா பொலிஸார் நகர சபை உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியமை உட்பட 5 குற்றச்சாட்டுக்களை பொலிஸாருக்கு எதிராக முன்வைத்து வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் காலவரையறையற்ற பணி பகிஸ்கரிப்பில் இன்று முதல்ஈடுபட்டுள்ளனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 9 ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னிட்டு சுகாதார திட்டத்தை முன்னெடுத்தவேளை வீதியோர வியாபராத்தில் ஈடுபட்ட மரக்கறி வியாபாரிகளை அகற்றியிருந்த வேளையில் தனிநபரொருவர் அதனை புகைப்படமெடுத்திருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் வினவியபோது சம்பந்தப்பட்ட நபர் தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டமையால் தமது வாகனத்தில் ஏற்றி பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தோம்.
எனினும் பொலிஸார் பணிக்கு இடையூறு விளைவித்திருந்த நபரை விடுவித்து நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர், வருமான அறவீட்டு உத்தியோகத்தர் உட்பட ஆறுபேரை காலை 11 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 1 மணி வரை பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் கூட வழங்காது தடுது;து வைத்திருந்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
எனவே பணிக்கு இடையூறு வளைவித்தவரை விடுவித்து விட்டு நகரசபை ஊழியர்களை கைது செய்தமை கண்டிக்கின்றோம். இது தொடர்பாக நீதி வேண்டும் என தெரிவித்தனர்.
இதேவேளை 5 விடங்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் இப்போராட்டத்தில் வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபையின் உத்தியோகத்தர்கள் சுகாதார பகுதியினரும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி










நூறுநாள் வேலைத்திட்டத்தில் எம்மையும் உள்வாங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்


 11/02/2015 காணி அனுமதிப் பத்திரம் மற்றும் வீட்டு அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை பெற்றுத்தர கோரி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவிலுவுள்ள நாதன் திட்டம், உழவனூர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் வசிக்கும் இப் பிரதேச மக்கள், ' ஐந்து வருடங்களாக ஏமாந்தது போதும், எமக்கு காணி உரிமை, வீதி புனரமைப்பு வீட்டுத்திட்டம், மின்சாரம் போன்றவற்றை பெற்றுத் தாருங்கள். நூறுநாள் வேலைத்திட்டத்தில் எம்மையும் உள்வாங்குங்கள். தற்காலிக வீட்டில் எத்தனை வருடம் வாழ்வது? எமக்கு நிரந்தர வீட்டில் வாழ ஆசை தானே என பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நன்றி வீரகேசரி









ஹேமா குமுதினி விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்


11/02/2015 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஹேமா குமுதினி விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயக்கோன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி














‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு

12/02/2015 யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட  வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தலுக்கு தீர்வினை  வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை  கொழும்பு 06, வெள்ளவத்தையில்  (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்) கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிலத்தடி நீரை மாத்திரமே குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ் குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.
அதுபோல, எண்ணெய்கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும், துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம் என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.
இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.
இன்று யாழ் குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி





No comments: