காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்!

.

சுடாத தீநாக்கில்
சுட்டதாய் அழும் மனதிற்கு
தொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்;

தொட்டாலும்
தீ பட்டாலும்
இதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும்
இனிது இனிது; காதல்
என்றும் இனிது இனிதே..

கண்கள் சிமிட்டி
காடெரிக்கும் போதையில்
கண்ணீர் திரட்டி
தலையணை நனைந்து
தலைமயிர் கொட்டி
தாடி வளர்ந்து
வீடு அழுது
ஊர் விரட்டி
ஒதுங்கியே பைத்தியமாய் திரிந்தாலும்
உள்ளே இனிக்கும் காதல்; ஒய்யாரமாய்
சிரிக்கும் காதல்,

ஆயிரம் மயில் கடந்தாலும்
அடுத்த வீட்டை அடைத்தாலும்
கொடுத்த சாமி உயிர்க் கேட்டு பிரித்தாலும்
காலத்திற்கும் – கசப்பின்றி இனிக்கும்
காதல் காதல் இனிதே; இனிதே காதல்..

பார்க்க நினைக்கும்
நித்தம் தவிக்கும்
பேச துடிக்கும்
பேசாமலே வலிக்கும்
வெறும் பார்வை கூசும்
லேசாக தொடும் உடம்பினாலும் உள்ளே
தீபம் ஒளிரும்,

இதழ் இனிக்கும்
இருமனம் சேர்ந்த ஒவ்வொரு தருணமும்
ருசிக்கும்,

தினிக்கும் ஜாதி
மிரட்டும் மதம்
மறுக்கும் பெற்றோர் எல்லோரையும் விடும்
விடயியலா இடத்தில் நின்று – மனது
அழும் அழும்; காதலுக்கு மட்டுமே அழும்

விழும் விழும் கண்ணீர் விழும்
விழும் அத்தனையும் இனிக்கும்; அத்தனை இனிது காதல்!!

No comments: