'லிங்கா' பிரச்சினையில் இறங்குகிறாரா ராமதாஸ்?- உத்தம வில்லனையும் பாதிக்க வாய்ப்பு!

.


'லிங்கா' இழப்பீடு தொடர்பான விவகாரத்தில், விநியோகஸ்தர்கள் நடத்தவிருக்கும் பிச்சை எடுக்கும் போராட்டத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
'லிங்கா' இழப்பீடு விவகாரத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 10% இழப்புத் தொகை மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, விநியோகஸ்தர் மீண்டும் போராட்டம் நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.
இம்முறை தமிழகம் முழுவதும் மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். 'லிங்கா' வெளியான திரையரங்கள் அனைத்திலும் படக்குழுவினருக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டு உண்டியல் வைக்கப்படு என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தை சென்னை - போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு தொடங்க இருக்கிறார்கள். இதில் பிரபல அரசியல் கட்சி தலைவர் பங்கேற்று முதல் காசை போட்டு தொடங்கி வைப்பார் என்று அறிவித்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அரசியல் தலையீடு
'பாபா' படப் பிரச்சினையை போலவே, தற்போது 'லிங்கா'விலும் அரசியல் தலையீட்டின் பேரில் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. இன்று விநியோகஸ்தர்கள் தரப்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தங்களது போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள்.
பிச்சை எடுக்கும் போராட்டத்துக்கு ஏற்கெனவே ராமதாஸ் ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும், அவர் தான் முதல் பிச்சையை போட்டு ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமன்றி சந்திக்கும் தலைவர்கள் அனைவரிடமும் 'லிங்கா'வில் என்ன வியாபாரம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தயாரிப்பு செலவு ரூ.45 கோடியா?

ரஜினியின் சம்பளம் போக வெறும் ரூ.45 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் தான் 'லிங்கா' என்று விநியோகஸ்தர்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்கள்.
இது குறித்து 'லிங்கா' படக்குழுவில் பணியாற்ற சிலரிடம் பேசியபோது, "சார். நீங்களே யோசித்துப் பாருங்கள். அப்படத்தில் எத்தனை காட்சிகள் கிராபிக்ஸ் பண்ணியிருக்கிறோம், எத்தனை செட், ஒவ்வொரு காட்சிக்கும் எத்தனை நடிகர்கள், முக்கியமான நடிகர்களுக்கான கேராவேன், சாப்பாடு செலவு என அனைத்தையும் சேர்த்து எப்படி 45 கோடி வரும்.
முதலில் அப்படத்தில் வரும் அணை செட் இருக்கிறதே, அதற்கு மட்டும் கிட்டதட்ட 9 கோடி செலவானது. அது போக சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா, ஏ.ஆர்.ரஹ்மான், சாபுசிரில், ரத்னவேலு, வைரமுத்து, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட நடிகர்களின் சம்பளம் இருக்கிறது. இதெல்லாம் கணக்கு போட்டால் படத்தின் பட்ஜெட் என்ன? என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
தயாரிப்பாளருக்கு லாபம் தான் எவ்வளவு?
'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைவ் வெங்கடேஷ் மொத்தமாக ஈராஸ் நிறுவனத்திற்கு ரூ.157 கோடிக்கு விற்றுவிட்டார். அதற்கு பிறகு அந்நிறுவனம் தான் 'லிங்கா' தொடர்பான அனைத்து வியாபாரங்களையும் பார்த்தது.
"'லிங்கா' படத்தை தயாரித்த வகையில் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் 23 கோடி ரூபாய் என்றும் முன்னாடியே வரிச் செலுத்திய வகை என்பதை எல்லாம் கழித்து 20 கோடி தான் கிடைத்திருக்கிறது. அதில் 10 கோடி ரூபாயை கதை திருட்டு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி இருக்கிறார். அவருடைய கையில் இருப்பது இப்போது 10 கோடி" என்கிறார்கள் தயாரிப்பாளருக்கு நெருக்கமான வட்டத்தினர்.
இழப்பீடு விவரம்
'லிங்கா' இழப்பீடு என்பது தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தமிழ்நாட்டிற்கு மட்டும் கொடுக்கவில்லை. உலகளவில் ஒட்டுமொத்தமாக 'லிங்கா'வின் நஷ்டம் என்பது 54 கோடி ரூபாய். தமிழ்நாட்டிற்கு மட்டும் கொடுக்க முடியாது என்பதால் அனைத்து மொழிகளுக்கும் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த இழப்பீடு விவகாரத்தில் படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய ஈராஸ் நிறுவனம் தற்சமயம் வரை அமைதி காத்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தான் தென்னிந்திய நிர்வாக இயக்குநராக இருக்கிறார். ஈராஸ் நிறுவனம் கர்ப்பரெட் நிறுவனம் என்பதால் இழப்பீடு தர முடியாது என்று தெரிவித்துவிட்டது.
ஈராஸ், வேந்தர் மூவிஸ், ரஜினிக்கு ரெட்?
விநியோகஸ்தர்கள் தரப்பில் போராட்டம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அமைதி காத்து வருவதால் ஈராஸ் நிறுவனம், வேந்தர் மூவிஸ் மற்றும் ரஜினி நடிக்கும் படங்கள் ஆகிய மூன்றுக்கும் ரெட் கார்டு போடாலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். அவ்வாறு ரெட் போடப்பட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்தபின் தான் ஈராஸ் நிறுவனம், வேந்தர் மூவிஸ் மற்றும் ரஜினி நடிக்கும் படங்கள் அனைத்துமே வியாபாரம் ஆகும். ரெட் போடும் அளவிற்கு ரஜினி கொண்டு செல்ல மாட்டார் என்று பேச்சுகள் நிலவுகின்றன.
உத்தம வில்லன்...
ஈராஸ் நிறுவனம் தங்களது அடுத்த வெளியீடாக கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படத்தை ஏப்ரல் 2-ம் தேதி வெளியிட இருக்கிறது. ரெட் போடப்பட்டால் அப்படத்தின் வியாபாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது கவனிக்கத்தக்கது.
அமைதி காக்கும் ரஜினி
அனைத்து விநியோகஸ்தர்களுமே ரஜினியை நம்பிதான் படத்தை வாங்கினோம் என்று பேட்டியளித்து வருகிறார்கள். திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்து ரஜினி தான் பிரச்சினையை முடித்து வைக்கச் சொன்னார். ஆனால் 10% இழப்பீடு என்பதை மறுத்து, தற்போது பிரச்சினை அரசியல் தலையீடாக மாறு வருகிறது. "நான் படத்தில் நடித்துக் கொடுத்தேன். 'பாபா' என்னுடைய தயாரிப்பு அதனால் இழப்புத் தொகையை திருப்பி கொடுத்தேன். இப்படத்தில் நடித்தேன். வியாபாரத்தில் நான் தலையிடவில்லை. ஆகையால் இவ்விஷயத்தில் நான் தலையிட முடியாது" என்று ரஜினியும் தெரிவித்துவிட்டு விலகி இருக்கிறார்.
'லிங்கா' பிரச்சினையைப் பொறுத்தவரை தயாரிக்கும் போது இருந்த பிரச்சினைகள் என்பதை எல்லாம் தாண்டி ரஜினி என்ற ஒரு தனி திரைப்படக் கலைஞரை குறிவைக்கும் அளவுக்கு பின்னணி அரசியல் சார்ந்து பிரச்சினைகள் வளர்ந்து வருகிறது. இதனை ரஜினி உணர்ந்து அமைதி களைக்க வேண்டும் என்பதே கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

No comments: