உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் இன்னமும் இந்தியாவை வீழ்த்தவில்லை... தொடரும் ஆதிக்கம்... ஆம்! அப்படித்தான் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இனி பேசப்படுவதற்கான சாத்தியம் மிகுதியாகி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி... அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடியே கிடந்தன; காய்கனிக் கடைகள் முதல் தேநீர் கடைகள், மருந்து கடைகள் எங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் லைவ் ரிலே. கையில் நோட்டும் பேனாவுமாக கடை முதலாளிகள் கல்லாவை விடவும் இந்தியா எவ்வளவு ரன்கள் எடுக்கும் என்ற ஆர்வத்தில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
இனி உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தங்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சில தரப்பினர் மகிழ்ச்சியில் கருத்து தெரிவிக்க, மற்ற சிலரோ, பாகிஸ்தானை வென்று விட்டோமா... இனி இந்தியாவை இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை அசைக்க முடியாது என்றும் பரவலாக கலவையான கருத்துகள் உலா வந்தபடி உள்ளன.
இந்தியாவை இனி அசைக்க முடியாது என்று பலரும் கருதுவதற்குக் காரணம், இந்திய அணி இன்று தன் ஆட்டத்தின் மூலம் தங்களை மிகவும் பலமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று இன்று இந்திய வீரர்கள் காட்டிய வெற்றி முனைப்பு மற்றும் தீவிரம் பாகிஸ்தான் தனது பலவீனத்தை மீறி எழுச்சிபெற விடாமல் செய்தது.
தோனியின் கள வியூகம்


முதலில் டாஸ் வென்றது; தயங்காமல் பேட்டிங் செய்தது; ரோஹித் சர்மாவை விரைவில் இழந்தாலும், ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்று எந்தவித அழுத்தத்தையும் மன நெருக்கடிகளையும் கருத்தில் கொள்ளாமல் பிட்சில் விழுந்த பந்துகளுக்கு தங்களுக்கேயுரிய வகையில் அபாரமாக வினையாற்றினர்.
குறிப்பாக நோக்கினால், தோனி கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்டதைப் போல ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்து விக்கெட்டுகளைத் தக்க வைத்தல், விராட் கோலி ஒரு முனையைத் தாங்கிப் பிடிக்க மற்றவர்கள் அவரை வைத்துக் கொண்டு அழுத்தம் இல்லாமல் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது போன்றவை.
தோனியின் எதிர்பார்ப்பையும், அவர் அடிக்கடி கூறும் திட்டமிடுதலை களத்தில் சிறப்பாகச் செயல்படுத்துவது என்பதும் இன்றைய முக்கிய ஆட்டத்தில் கைகூடியது.
பாகிஸ்தான் பின்னடைவுகள்
நிச்சயம் முத்தரப்பு ஒருநாள் தொடருக்குப் பிறகு தோனி "கிரிக்கெட் கிட் பேக்-ஐ பூட்டிவிட்டோம்" என்று ஓய்வின் அவசியத்தை வலியுறுத்தியது இந்திய அணியின் எழுச்சிக்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணி எப்போதும் பந்துவீச்சில் பயங்கர பலம் பெற்று களமிறங்கும், ஆனால், இம்முறை அவர்களின் பிரதான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன் காயமடைந்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும், தொடக்கத்தில் களமிறங்கி அபாயமாக ஆடியும், பந்து வீச்சில் சிக்கனம் காட்டி தொடக்கத்தில் தனது ஸ்பின் பந்து வீச்சை வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முகமது ஹபீஸ் காயம் காரணமாக விலகியதும் பாகிஸ்தானுக்கு சொல்லொணா பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
7 அடி உயர முகமது இர்பான் ஏதோ செய்துவிடுவார் என்று நம்மூர் ராகுல் திராவிட் கூட பயம் காட்டினார். ஆனால், ஷிகர் தவண் அவரது ஷாட் பிட்ச் பவுன்சரை சிக்சருக்குத் தூக்கி கிளீன் மெசேஜை தெரிவித்தார். மேலும், அவர் ஒரு நேரத்தில் பந்துவீசும் போது பிட்சை சேதப்படுத்துகிறார் என்று 2-வது முறையாக எச்சரிக்கப்பட்டு அவரால் ஓவர் தி விக்கெட்டில் பந்து வீச முடியாமல் போனது. இதுவும் பாகிஸ்தானுக்குப் பின்னடைவே.
'பவர்'ஃபுல் பேட்டிங் யுக்தி
இந்திய பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், பவர் பிளேயில் முன்னணி பேட்ஸ்மென்கள் களத்தில் இருந்தும் அதிக ரன்களை எடுக்கவில்லை என்பது சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால், பவர் பிளே என்பது எப்போதுமே சாதகமாக அமையாது, விரைவு ரன்களைக் குவிக்கப்போய் மடமடவென விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக்கூடியது. பவர் பிளே என்பது இரண்டு விதத்தில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கக் கூடியது.
எனவேதான் இந்திய அணி தோனியின் கேப்டன்சியில் பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்று சில காலங்களாக ஆடி வருகிறது. இன்றும் அப்படித்தான் ஆடியது. தோனியின் வாதம் என்னவெனில், பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் கடைசி 10 ஓவர்களில் அடித்து நொறுக்கலாம் என்பதே. இன்றும் இந்தியா 192 ரன்களிலிருந்து 217 ரன்களையே எட்டியது. பவர் பிளேயில் 25 ரன்கள்தான். ஆனால் விக்கெட்டுகள் விழவில்லை.
கடைசி 10 ஒவர்களில் 83 ரன்கள். அப்போது 30 ரன்களில் இருந்த ரெய்னா, முன்னதாக அவுட் ஆகாமல் இருந்ததால்தான் அவர் அதன் பிறகு அதிரடியாக விளையாடி 56 பந்துகள் மொத்தம் சந்தித்து 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 74 ரன்களை எடுக்க முடிந்தது. இதுவே மிக முக்கியம்.
கடைசியில் தோனி, ஜடேஜா 50 ஓவர்கள் விளையாடியிருந்தால் ஸ்கோர் 320 அல்லது 330 ரன்கள் சென்றிருக்கும். ஆனால் 3 ரன்னில் கோலி இருந்தபோது அவர் அடித்த ஷாட்டை யாசிர் ஷா கேட்ச் பிடித்திருந்தால் ஆட்ட முடிவு எப்படி வேண்டுமானாலும் திரும்பியிருக்கும். மேலும் அவருக்கு உமர் அக்மல் கேட்ச் ஒன்றைவிட்டார். அதுவும் மிக முக்கியமானது. அனைத்தையும் விட முக்கியமானது ரெய்னாவுக்கு பவுண்டரி அருகே நிற்காமல் முன்னால் நின்று கேட்சை சிக்சருக்குத் தள்ளிவிட்டது. இவையெல்லாம் பாகிஸ்தானை காயப்படுத்தியிருக்கும்.
மூவரின் அசத்தல் ஆட்டம்
கடந்த சில நாட்களாகவே ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளான துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் எதுபற்றியும் பதற்றமின்றி ஆடி, நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தவிதம், அவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது. அதேபோல், கோலியின் பொறுப்பான சதம் , அவரிடம் உள்ள 'க்ளாஸ்' ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுரேஷ் ரெய்னாவின் அதிரடியின் துணை மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம்.
இந்திய பந்துவீச்சு...
இந்தியப் பந்துவீச்சு பலவீனம் என்ற கவலையில் பலரும் இலக்கு போதாது என்றே கருதியிருப்பர். ஆனால், எப்போதுமே விளக்கு வெளிச்சத்தில் 300 ரன்கள் இலக்கை துரத்துவது எந்த அணிக்கும் அவ்வளவு சுலபமல்ல.
இந்தியப் பந்துவீச்சு பலவீனத்தை நினைத்து பலரும், தோனி உட்பட, சற்றே அச்சம் கொண்டிருக்கும் அதே வேளையில் பாகிஸ்தான் பேட்டிங் பலவீனத்தைக் கண்டு அந்த அணி பயந்து கொண்டுதான் இருந்தது.
யூனிஸ் கானை தொடக்கத்தில் களமிறக்கினார்கள். ஆனால், அவர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பதற்றத்தையும் தன்னிலே வெளிப்படுத்தினார். அனுபவமிக்க ஒரு வீரர் ஆடும் நல்ல தற்காப்பு ஆட்டம் கூட அவருக்குப் பதட்டத்தில் கை கூடாமல் போக, முகமது ஷமி வீசிய துல்லிய பவுன்சரை விட்டு விலகுவதா, அடிப்பதா என்ற இரட்டை அரைகுறை ஆசையில் தோனியிடம் பிடி கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல் இறங்கி மிகவும் அனாயசமாக ஆட, அகமத் ஷெசாத்தும் தன்னம்பிக்கைப் பெற பாகிஸ்தான் இன்னிங்ஸில் அந்த ஒரு பகுதி மட்டும் நம்பிக்கை அளிப்பதாக இருந்து. அதுவும் உமேஷ் யாதவ்வை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஹாரிஸ் சோஹைல் அடிக்கவும், 'ஆரம்பிச்சுட்டாங்கய்யா' என்றே தோன்றியது.
இந்த நிலையில் ஹாரிஸ் சோஹைல் ஒரு பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக வேகமாக முக்கால் கிரவுண்ட் வந்து விட, ஷெசாத் ஓட மறுக்க பந்து தோனிக்கு பக்காவாக வர, அவர் த்ரோவை தன் முனையில் உள்ள ஸ்டம்பை அடித்தார். ஆனால் எதிர்முனையில் சோஹைல் வர இன்னும் சில வினாடிகள் இருக்கின்றன. தோனி த்ரோவை ரன்னர் முனைக்கு எறிந்திருந்தால் சோஹைல் அப்போதே ரன் அவுட். இந்த வாய்ப்பு பறிபோனது வேறு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கும்.
திருப்புமுனை ஏற்படுத்திய அஸ்வின்
இந்நிலையில், அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட, அவர் விதம் விதமாக கோணங்களை மாற்றி வீச, தோனியின் கள வியூகமும் ரன்களை விட்டுக் கொடுக்காமல் அமைய, ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அரிய மெய்டன் ஓவரை வீசினார். இதில் ஷெசாத் கடுமையாக டென்ஷன் ஆனார்.
ஒரு புறம் ஜடேஜா, மோஹித் சர்மாவும் நெருக்கடி கொடுக்க சோஹைல், ஷெசாத்தின் பதற்றம் அதிகரித்தது. அப்போதுதான் 18-வது ஓவரை வீச வந்த அஸ்வின், ஹாரிஸ் சோஹைலுக்கு 5 டாட் பந்துகளை வீச, அவரது பதற்றம் அதிகரித்ததைக் கண்ட தோனி ஏற்கெனவே ஸ்லிப்பில் ரெய்னாவைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். அப்போது 6-வது பந்தை அருமையான ஆஃப் ஸ்பின்னாக வீச எட்ஜ் எடுத்து ரெய்னாவிடம் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் 79/2 என்று ஆனது. அரிய ஒருநாள் கிரிக்கெட் மெய்டனுடன், அடுத்ததாக விக்கெட் மெய்டன் சாதனையையும் நிகழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார் அஸ்வின்.
அஸ்வின் கொடுத்த நெருக்கடியினால் சரிந்த விக்கெட்டுகள்:
தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்க 23-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 101/2 என்று சற்று நம்பிக்கையுடன் இருந்தாலும் ரன் விகிதம் எகிற எகிற பதற்றமும் கூடியது.
அப்போதுதான் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் கை கொடுத்தது, உமேஷ் யாதவ்வை 24-வது ஓவரில் கொண்டு வந்தார். 47 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த ஷெசாத், யாதவ் வீசிய பந்தை கட் செய்ய அது பாயின்ட் திசையில் நேராக ஜடேஜாவிடம் சென்றது, ஷாட்டின் வேகத்தினால் அதனை விட்டுப் பிடித்தார் ஜடேஜா, ஒரு வினாடி இந்திய ரசிகர்களின் இருதயத் துடிப்பு நின்று பிறகு வந்தது.
பந்துவீச்சில் முகமது ஷமியின் முனைப்பான ஆட்டமும், உமேஷ் யாதவின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
தோனியின் அபார அப்பீல்!
மக்சூத் களமிறங்கினார். இவரையெல்லாம் இந்திய பவுலர்கள் பார்த்ததேயில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மென். ஆனால் தோனி, ஸ்லிப்பில் ரெய்னாவை மீண்டும் கொண்டு வர, யாதவ் வீசிய வேகப்பந்து சற்றே எழும்ப கட் செய்தார்... நேராக ரெய்னாவிடம் கேட்ச் ஆனது.
மீதமிருப்பது அபாய வீரர் உமர் அக்மல், இவரெல்லாம் நின்றால் எந்த ஓர் இலக்கும் ஒன்றுமில்லாமல் ஆகும். ஆனால் இன்று கடும் நெருக்கடி, பதற்றம். என்ன செய்வார் அவர்? ஜடேஜா வீசிய பந்து ஒன்று குட் லென்த்தில் பிட்ச் ஆகி திரும்ப மிக மெலிதாக எட்ஜ் செய்தார், தோனி அதனை அபாரமாக பிடித்து முறையீடு செய்ய நடுவர் மறுத்தார். ஆனால் உடனேயே 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தார். மிக மெலிதான அந்த எட்ஜ் 'அவுட்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தோனியின் துல்லியமான கணிப்பு கைகொடுத்தது.
79/2 என்ற நிலையிலிருந்து 105/5 என்று பாகிஸ்தான் சரிய, வழக்கம் போல் மிஸ்பா, ஷாகித் அஃப்ரிதி ஜோடியால்தான் ஏதாவது செய்ய முடியும் என்ற நிலை உருவானது. ஆனால் அப்ரிதி சிறிது நேரம் தனது பவர் ஹிட்டிங்கைக் காண்பித்தாலும், இந்திய பவுலிங் மற்றும் தோனியின் கள வியூகம் வெற்றிக்கான ரன் விகிதத்தை பாகிஸ்தானுக்கு அதிகரிக்கவே செய்தது. அதனால்தான் 25-வது ஓவர் முதல் 34-வது ஓவர் வரை 9 ஓவர்களில் பாகிஸ்தான் 51 ரன்களையே எடுக்க முடிந்தது.
மிஸ்பாவின் தவிப்பு
பவர் பிளே 33-வது ஓவரில் எடுக்கப்பட்டது. பவர் பிளேயில் 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் உமேஷ் யாதவ் 34-வது ஓவரில் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஆனால், 35-வது ஓவரை ஷமி வீச 22 ரன்கள் எடுத்த அஃப்ரிதி, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, மிஸ்பா தனித்து விடப்பட்டார்.
149/6 என்ற நிலையில் மிஸ்பா சில பல ஷாட்களை ஆடினார். ஒரு சாம்பியன் போல்தான் தனிநபராக அவர் சமீபகாலங்களில் ஆடிவருகிறார். ஆனால் இன்று இந்திய அணியின் தீவிரத்துக்கு முன்னால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரிடம் இருந்த தவிப்பு எளிதில் வெளிப்பட்டது.
கடைசியில் 46-வது ஓவரில் ஷமி பந்தில் 76 ரன்களில் வெளியேறினார். 47-வது ஓவரில் ஆட்டம் முடிந்தது.
அக்னிப் பரீட்சையில் இந்தியா வெற்றி முகம் கண்டது. ஆட்டத்தின் போக்கில் சில டென்ஷன்கள் இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானை மிக எளிதாகவே வென்றனர் என்று கூறலாம்.
பாகிஸ்தானுக்கு எதிராக முன்பு அடிக்கடி இந்தியா விளையாடும். இதனால் ஒவ்வொரு வெற்றியும், தோல்வியுமே இந்திய அணியை பலப்படுத்தி வந்தது. ஆனால், சமீப காலங்களாக பாகிஸ்தானுடன் அதிகமாக ஆடுவதில்லை. தற்போது இந்த அபார வெற்றி இனிவரும் காலங்களில் இருதரப்பு போட்டிகள் அதிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒட்டுமொத்தமாக, இந்தப் போட்டியில் கேப்டன் தோனியின் கள வியூகமும், பேட்டிங் - பவுலிங் - ஃபீல்டிங் ஆகிய மூன்று அம்சங்களிலும் ஏற்பட்ட மும்பெரும் எழுச்சியும் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் மட்டுமல்ல, இன்று இந்திய அணி ஆடிய விதம் - உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது என்றே கூற முடியும்

நன்றி http://tamil.thehindu.com/