56 ஆண்டுகளாக தீபாவளியை துறந்த கிராம மக்கள்: பரபரப்பு இல்லாத 12 பட்டி கிராமங்கள்

.


தீபாவளி எப்போது வருமோ என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை, இனிப்பு, பலகாரம், பட்டாசு, மத்தாப்பு கனவுகளுடன் எதிர்பார்த்து காத்திருப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்களை பற்றி துளிகூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளியே கொண்டாடுவதில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர்ஐப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவதும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வதும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடையின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந்துயரம் தொடர்ந்துள்ளது.
இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958-ம் ஆண்டு பெரிய அம்பலகாரர் பெரி.சேவுகன் அம்பலம் தலைமையில் ஊர்க்கூட்டம் போட்டுள்ளனர். அப்போது கிராம தெய்வமான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவதில்லை என ஒருமித்து முடிவெடுத்தனர்.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை, துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண்டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெரிய அம்பலகாரர் சே. சபாபதி கூறியதாவது: தீபாவளி வர்ற காலம் மழைக்காலமாகவும், விதைப்பு செய்யும் காலமாகவும் இருக்கும். அப்போ யாரு கைலயும் காசு இருக்காது. கையில இருக்குற நெல், தானியக் கையிருப்பும் கரஞ்சு, வெளியில வட்டிக்கு வாங்குற நெலம ஏற்பட்டுச்சு.
அப்போல்லாம், வட்டிக்கு வாங்கின 100 ரூபாய்க்கு ஒரு மூட்ட நெல்லு கொடுக்கணும். அந்த நேரத்தில வர்ற தீபாவளிய, கடன் வாங்கித்தான் கொண்டாடணும்ங்கிற நெலம. அது எல்லாருக்கும் கஷ்டத்த கொடுத்துச்சு. அப்பத்தான் கூட்டம் போட்டு, தீபாவளிய நிப்பாட்டிட்டு, அதுக்கு பதிலா பொங்கல சிறப்பா கொண்டாடுறதுன்னு முடிவெடுத்தாங்க. தீபாவளிக்கு என்னென்ன பயன்படுத்துறோமோ அத பொங்கலன்னிக்கி பயன்படுத்தி கொண்டாடலாம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ்சாங்க.
தீபாவளிய இருக்கிறவங்க கொண்டாடுவாங்க, இல்லாத வீட்டுப் புள்ளைக என்ன செய்யும்?
இருக்குற வீட்டுப்புள்ளக கோடி (புத்தாடை) கட்டி நிக்கும்போது, இல்லாத வீட்டுப்புள்ளங்க பழசோட நின்னா மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதப்பாக்குறப்போ புள்ளய பெத்தவங்களும் நொந்து போவாங்க.
அதனால, எல்லாரும் சந்தோஷமா இருக்குற நாள தீபாவளியா கொண்டாடுவோம்னு நிப்பாட்டி 56 வருஷமாச்சு.
இந்த ஊரைச் சேர்ந்தவங்க எங்க இருந்தாலும், தீபாவளியன்னிக்கி பலகாரம் கூட போடாம சாதம், கஞ்சியத்தான் குடிப்பாங்க. தீபாவளியன்னிக்கி இங்க பொண்ணு எடுத்தவங்கள விருந்துக்கு அழைக்கமாட்டோம், வெளியில பொண்ணு கட்டுனவங்களும் விருந்துக்கு போக மாட்டாங்க. மனக்குறை வந்துட கூடாதுங்கிறதால தோதுப்பட்ட இன்னொரு நாள்ல விருந்து வெப்பாங்க. சின்னப் புள்ளைல இருந்து பெரியாளுக வரைக்கும் இதை கடைப்புடுச்சி வர்றோம். 56 வருஷமா தைப்பொங்கலத்தான் தீபாவளியா கொண்டாடுறோம்.’ என்றார்.
இக்கிராமத்தில் பெரியவர்கள் வகுத்த கொள்கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்து, விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது ஆச்சரியமான விஷயம்.

nantri http://tamil.thehindu.com/

No comments: