நேற்றும் இன்றும் - சிறைச்சாலை வளாகம் - vaamanikandan

.
* நேற்று மாலையும் சிறைச்சாலைக்குள் நுழைந்துவிட முடிந்தது. ஜாமீன் கிடைத்தது என்ற செய்தி தெரிந்தவுடனே அலுவலகத்திலிருந்து பெட்டியைக் கட்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டேன்.

* சிறைச்சாலையைச் சுற்றிலும் கடந்த சில நாட்களாக இல்லாத அளவுக்கு நிறைய போலீஸார் இருந்தார்கள். உள்ளே விடமாட்டார்கள் போலிருந்தது. ஆனால் ஒரு தில்லாலங்கடி வேலையைச் செய்தேன். பல நூறு ஏக்கருடைய சிறைச்சாலைக்குள் செல்வதற்கு வேறு இரண்டு வழிகள் இருக்கின்றன என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். பயன்படுத்திக் கொண்டேன்.

* டிஐஜியை சந்தித்துவிட்ட தினத்தன்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்தால் ‘போலி நிருபர் கைது’ என்று தினத்தந்தியில் செய்தி வந்துவிட வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்த மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலை நினைத்தபடியேதான் நடந்து கொண்டிருந்தேன்.  ஆனால் அந்த திருட்டு வழியில் யாருமே தடுக்கவில்லை.

* உள்ளே வெறும் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் மட்டும்தான் இருந்தார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும்தான் அமைச்சர்களில் எனக்கு அடையாளம் தெரிந்தது. சிறைச்சாலை வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிபேடு பக்கமாகவே நின்றிருந்தார்.

* தினசரி வந்து கொண்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருந்தார்கள். தளவாய் சுந்தரம், செ.ம.வேலுச்சாமி போன்றவர்களும் இருந்தார்கள்.

* சில எம்.எல்.ஏக்கள் ‘எப்படி உள்ள வந்த?’ என்றார்கள். ‘கன்னடத்தில் பேசினேன். விட்டுவிட்டார்கள்’ என்று மட்டும் சொன்னேன். குறுக்கு வழியைக் காட்டிக் கொடுத்தால் நாளைக்கு அத்தனை கட்சிக்காரர்களும் அந்த வழியைப் பயன்படுத்தினால் நானும் சேர்ந்து உள்ளே வர முடியாது என்கிற சுயநலம்தான்.

* அத்தனை பேரும் படு உற்சாகமாக இருந்தார்கள். வாயெல்லாம் பற்கள். ஜாமீன் உத்தரவு சிட்டி கோர்ட்டுக்கு வந்துவிட்டது..கையெழுத்தாகிவிட்டது... சிறைச்சாலைக்கு வந்துவிட்டது என்று ரன்னிங் கமெண்டரியில் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். 

* மாலை ஐந்தரை மணி வரையிலும் ஆறு மணிக்கே ஜெ. வெளியே வந்துவிடுவார் என்றார்கள். தனி விமானம் தயாராக இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு ‘இனி சாத்தியம் இல்லை’ என்று தெரிந்துவிட்டது. வழக்கம் போல ஆறேகாலுக்கு சிறைச்சாலையை விட்டு பிரமுகர்கள் வெளியேறினார்கள். 

* நேற்று போலீஸார் ஆறு மணி ஆகியும் யாரையுமே விரட்டவில்லை. அத்தனை பேரும் பதவியில் இருப்பவர்கள் என்பதால் அந்தச் சுதந்திரம் என்று நினைக்கிறேன். ஆறரை மணி வரைக்கும் உள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். பத்து இருபது நாட்களாக காத்துக் கிடந்த இடத்தைப் பிரியப் போகிற பிரிவுத் துயரம் என்று நினைத்துக் கொண்டேன்.

* சிறைச்சாலை வளாகத்திற்குள் வைகைச் செல்வன் ‘உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே’ என்றார். உண்மையை ஒத்துக் கொண்டேன். ‘என்னைத் தெரியுமா?’ என்றார்.  ‘உங்களைத் தெரியாம இருக்குமா? நற்றிணைப் பதிப்பகமே’ என்றேன். சிரித்தபடியே தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

                                                                  ****
  
* இன்று காலையில் ஒன்பதரை மணிக்குத்தான் சென்றேன். பெங்களூர்- ஓசூர் பிரதான சாலையிலிருந்தே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்தச் சாலையிலிருந்து பிரியும் சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தாண்டித்தான் சிறைச்சாலை இருக்கிறது. பிரதான சாலையிலேயே தயவு தாட்சண்யமில்லாமல் தமிழ்நாட்டு வண்டிகளைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தார்கள். 

* வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வெகு தொலைவிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள். கரை வேஷ்டி என்றால் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு முன்பாகவே நிறுத்திவிட்டார்கள்.

* அப்படியிருந்தும் பல நூறு பேர்கள் கொடிகளோடு நின்று கொண்டிருந்தார்கள். தலைமை மீதான இந்த வெறி நிச்சயமாக கன்னடக்காரர்களுக்கு புதிதாகத்தான் இருந்திருக்கும். எடியூரப்பா உள்ளே இருந்த போது இதே சிறைச்சாலை ஈயாடிக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். 

* பாஸ்போர்ட்,  ஆதார் அட்டை என உள்ளூர் முகவரிக்கான அத்தனை சான்றுகளையும் வைத்திருந்தேன். ஜெயில் வளாகத்தின் முக்கிய நுழைவு வாயில் செல்லும் வரையில் பிரச்சினை இல்லை. ‘லோக்கல் ரெஸிடெண்ட் சார்’ ‘ஆக்கட ஆபிஸ் இதியே சார்’ என்று ஏதாவது ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தினேன். மூன்று நான்கு கட்டங்களைத் தாண்டியாகிவிட்டது. ஆனால் நுழைவு வாயிலுக்கு மேல் நகர முடியவில்லை.

* நுழைவாயிலில் மட்டும் கிட்டத்தட்ட நூறு போலீஸாராவது இருந்தார்கள். துப்பாக்கிய ஏந்தியவர்களும் உண்டு.

* ஒன்பதரை மணி என்பது வெகு தாமதம். சீக்கிரமே சென்றிருக்க வேண்டும். திமிர்தான். எப்படியும் உள்ளே நுழைந்துவிடலாம் என்று நம்பியிருந்தேன். மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள். எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றார்கள். எந்தவிதத்திலும் ஏமாற்ற முடியவில்லை. அதிகமாகப் பேசினால் தமிழ்க்காரன் என்று கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் அமைதியாகிவிட்டேன்.

* ‘நீங்க ஏழரை மணிக்கு வந்திருக்கணும் பாஸூ’ என்றார் ஒரு நிருபர். தினமும் நான் உள்ளே நுழைந்துவிடுகிறேன் என்பது அவருக்குத் தெரியும். 

* மீண்டும் இரண்டு மூன்று முறை உள்ளே நுழைய முயற்சித்துப் பார்த்தேன். ம்ஹூம். இனி உள்ளே போக முயற்சித்தால் நிரந்தரமாக உள்ளேயே இருக்கச் செய்துவிடுவார்கள் போலிருந்தது. பம்மிக் கொண்டேன்.

* நுழைவாயிலில் மீடியாவுக்கென்று தனி இடம் ஒதுக்கியிருந்தார்கள். அத்தனை கேமிராக்கள். அத்தனை மைக்குகள். அவர்களுக்குள் ஒண்டிக் கொண்டேன். 

* ‘அம்மான்னா கெத்து’ என்றார் ஒரு நிருபர். தமிழ் நிருபர்தான். ‘எல்லாம் காசுண்ணே...இதே தீர்ப்பு எதிர்கட்சியாக இருக்கும் போது வந்திருந்தா கலகலத்து போயிருக்கும்’ என இன்னொருவர் கவுண்ட்டர் அட்டாக் கொடுத்தார். சண்டை பிடித்துக் கொள்வார்கள் போலிருந்தது. சற்று தள்ளி நின்று கொண்டேன்.

* போலீஸ்காரர்கள் கன்னட ஊடகங்களை ஒருவிதமாகவும் தமிழ் ஊடகங்களை இன்னொருவிதமாகவும் நடத்தினார்கள். தமிழ் நிருபர்கள் அந்தக் கடுப்பிலேயே இருந்தார்கள்.

* எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் மேயர்களும் எம்பிக்களும் வரிசையாக வந்து கொண்டேயிருந்தார்கள். சிறைச்சாலைக்குள் அவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. கைத்தடிகளை எல்லாம் அடிக்காத குறையாக போலீஸ்காரர்கள் விரட்டினார்கள்.

* சைதை துரைசாமி உட்பட எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காரைவிட்டு இறங்கியவுடன் காரையும் டிரைவரையும் போலீஸ்காரர்கள் வந்து வெகுதூரத்துக்கு துரத்தியடித்தார்கள்.

* ஜெயலலிதா வெளியில் வரும் போது சிறை வளாகத்திற்குள் என்ன ரியாக்‌ஷன் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்காகத்தான் இவ்வளவு முயற்சிகளும். ஆனால் ஆசை நிறைவேறாது என்று தெரிந்துவிட்டது.

                                                           ****

* மகி ‘எப்போ வருவீங்க?’ என்று ஃபோனில் அழைத்துக் கேட்டான். இனி இங்கே காய்ந்து என்ன செய்வது? ‘இப்போ வந்துடுறேன்’ என்று கிளம்பிவிட்டேன். அடுத்த சிக்னலில் வீடு. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அவ்வளவு வாகனங்கள். அத்தனையும் தமிழ்நாட்டு வாகனங்கள். 

* இந்த பத்து நாட்களில் தனிப்பட்ட முறையில் நிறைய அரசியல் பிரமுகர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘பேசவே மாட்டார். பந்தா பார்ட்டி’ என்று நினைத்தவர்களில் சிலர் படு இயல்பாக பேசி ஃபோன் நெம்பர் வாங்கிக் கொள்ளுமளவுக்கு பழகிவிட்டார்கள். டிவியில் கூனிக் குறுகி போஸ் கொடுப்பவர்கள் இங்கே படு பந்தாவாகத் திரிந்தார்கள். உலகம் நடிகர்களால் நிரம்பியிருக்கிறது. 

* வீட்டுக்கு வந்து சேர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் பயங்கர மழை. அந்த மழைக்கு ஒரு கமெண்ட் அடிக்க வேண்டுமல்லவா? அதிமுகக்காராக இருந்தால் ‘அம்மாவின் பிரிவினால் பெங்களூரே அழுதது’ என்று வாசித்துக் கொள்ளவும். எதிர்கட்சியினராக இருந்தால் உங்களுக்கு இஷ்டப்படி ஒரு கமெண்ட் எழுதிக் கொள்ளவும்.
         
                                                         ***

நிருபர் என்ற அடையாள அட்டை கூட இல்லாமல் இவ்வளவு ரிஸ்க் எடுக்க வாய்ப்பளித்த இந்த மாதிரியான அட்டகாசமான தருணம் இனி எப்பொழுது வருமென்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அதற்காக யாருக்கு நன்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அம்மா வெளியே வந்துவிட்டார். இப்பொழுது ‘குன்ஹாவுக்கு நன்றி’ என்றெல்லாம் எழுதினால் குஸ்கா ஆகிவிடுவேன் என்கிற எச்சரிக்கையுணர்வுடன் ‘அம்மாவுக்கு நன்றி’  என முடிக்கிறேன்.

nantri http://www.nisaptham.com/

No comments: