எழுத மறந்த குறிப்புகள் யாழ்தேவி நினைவுப்பதிவு - முருகபூபதி

.
தெற்கிலிருந்து   வடக்கு  நோக்கிய   பாதையைத்தேடி
தர்மசேன  பத்திராஜாவின்    In Search Of A Road
                                           
                                                                          போர்க்காலத்தில்  வடக்கிற்கான  ரயில் பாதை  வவுனியாவுக்கு அப்பாலும்    மன்னார்    பாதையில்    மதவாச்சிக்கு  அப்பால்  மன்னார் - தலைமன்னார்   பியர்  ரயில்  நிலையங்கள்    வரையும்    சென்ற   ரயில்கள்  தடைப்பட்டன.   பாதை     சீர்குலைந்த  பின்னர்  இந்த வழித்தடத்தில்  இயங்கிய    அனைத்து    ரயில்  நிலையங்களும் சிதைந்துபோயின.
அகதி  மக்களின்   முகாம்களாகவும்   விலங்கினங்களின் சரணாலயங்களாகவும்    மாறின.   ரயில்   தண்டவாளங்களும் சிலிப்பர்கட்டைகளும்  பங்கர்   அமைக்க   பெயர்த்து அழைத்துச்செல்லப்பட்டன.    அதனால்    அந்தப்பாதைகளில்   புல்லும் புதரும்   பாம்பு    புற்றுக்களும்    மண்டிவளர்ந்தன.   சில   இடங்களில் ஒற்றையடிப்பாதைகள்    உருவாகின.
ஒரு   காலத்தில்  மக்கள்    நடந்து சென்ற   ஒரு வழிப்பாதைகள் காலப்போக்கில்   பிரிட்டிஷ்  ஆட்சியில்    ரயில்    பாதைகளாயின.   அந்த    பிரிட்டிஷார்    இலங்கையின்    பூர்வீகத்  தமிழர்களுக்கும் இந்தியாவிலிருந்து    அழைத்துவரப்பட்ட   குடிமக்களுக்கும் உருப்படியான    தீர்வை    வழங்காமல்     தட்டிச்சுற்றிக்கொண்டு         (  இந்தியாவிலிருந்து   சுருட்டிச்சென்ற    பெறுமதியான  பொருட்களை பிரித்தானிய    நூதன   சாலைகளில்    பார்க்கலாம்.    கோஹினுர் வைரத்தை  மகாராணியின்  கிரீடத்தில்    பார்க்கலாம்) புறப்பட்டபின்னர்    சுதந்திரம்    என்பது  இலங்கையின்  மூவின மக்களுக்கும்   நிரந்தரமான   மகிழ்ச்சியைத்தரவில்லை.    அரசியல் கட்சிகள்  தமது    வாக்கு வங்கிகளை    பெருக்குவதில்   கவனம் செலுத்திய  அளவுக்கு   இனப்பிரச்சினை    தீர்வு    விடயத்தில்  அக்கறை  காண்பிக்கவில்லை.


போர்க்காலத்தில்   வடக்கிற்கான  ரயில்    பாதைகள்   வவுனியா மதவாச்சிக்கு   அப்பால்   மக்களும்    கால்நடைகளும்    படையினரும் செல்லும்     செம்மண்    பாதைகளாயின.
இலங்கையில்  பிரிட்டிஷார்  செய்த   நன்மைகளையும்   நாம்   புறம் ஒதுக்கிவிடமுடியாது.    அந்த    நன்மைகளில்  ஒன்றுதான்   1905  ஆம் ஆண்டு   ஓகஸ்ட்   மாதம்   1   ஆம்   திகதி    கொழும்பிலிருந்து முதலில்    வடக்கு     நோக்கிப்    புறப்பட்ட    முதலாவது   புகையிரதம்.
நிலக்கரி     தொழிலாளர்களின்     உழைப்பையம்    உயிரையும்   குடித்த நிலக்கரியிலும்  நீரிலும்     ஓடிய    வண்டி   அது.    மூத்த தலைமுறையினர்   அந்த     ரயில்களில்     பயணித்திருப்பார்கள்.    இன்று பல    நாடுகளில்   தண்ணீரிலும்   நிலக்கரியிலும்   செலுத்தப்பட்ட அந்த   புகையிரதங்கள்    சேவையில்    இல்லை.


 நவீன  விஞ்ஞான   தொழில்   நுட்பம்   கண்டுபிடித்த     நவீன   ரயில்கள்    பயன்பாட்டுக்கு    வந்தும்   பல  ஆண்டுகளாகிவிட்டன. மின்சார    ரயில்களும்     ஓடுகின்றன.    எனினும்    இன்றும் புகையிரதம்   -    புகையிரத    நிலையம்   முதலான   சொற்கள் மக்களிடத்திலும்     ஊடகங்களிலும்   பேசுபொருள்தான்.
புகை கக்கக்கியவாறு   ஓடிய    புகையிரதங்களை    நூதனசாலைகளில் காணலாம்.     உல்லாசப்பயணிகளை     கவருவதற்காகவும்    இன்றைய தலைமுறைக்குழந்தைகளுக்கு  காண்பிப்பதற்காகவும் அவுஸ்திரேலியா  உட்பட  பல  நாடுகளில்       நீராவியில்   ஓடும்   புகையிரதங்கள்  அபூர்வமாக  சேவையில்  ஈடுபடுத்தப்படுகின்றன.
அவுஸ்திரேலியா   மெல்பனில்    பெல்கிறேவ்    பிராந்தியம்   இயற்கை எழில்   மிக்க  ரம்மியமான  பிரதேசம்.    இங்கு Puffing Billy  என்ற உல்லாசப்பயணிகளை  கவரும்    பிரதேசத்தில்    பெல்கிரேவிலிருந்து நிலக்கரி -  தண்ணீரில்   இயங்கும்  புகையிரதம்   தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்தப்பத்தியில்  நான்  குறிப்பிடவிருக்கும்   காலாநிதி  தர்மசேன பத்திராஜா    இலங்கையின்   முன்னணி    திரைப்பட  இயக்குநர். தரமான    சிங்களப்படங்களையும்  குறும்படங்கள்   ஆவணப்படங்கள், தொலைக்காட்சி   நாடகங்கள்    பலவற்றையும்   இயக்கியவர்.
இலங்கையின்    சிங்கள   சினிமாவை   சர்வதேச   தரத்திற்கு உயர்த்தியவர்கள்   வரிசையில்    இடம்பெறும்   தர்மசேன   பத்திராஜா பழகுதற்கு    இனியவர்.    சிறுபான்மை   இனமக்களிடம்  அளவுகடந்து நேசம்    பாராட்டுபவர்.    விசால   மனம்படைத்த    மனித  உரிமை செயற்பாட்டாளர்.
எல்லாவற்றுக்கும்   அப்பால்  மனித நேயக்கலைஞர்.   அதனால்  எனது நெஞ்சத்துக்கும்  நெருக்கமானவர்.
அவரை  நான்  முதல்  முதலில்    சந்தித்ததும்  கொழும்பு   கோட்டை ரயில்  நிலையத்தில்    ஒரு    பகல்பொழுதில்தான்.   அதனால்   அந்த முதல்    சந்திப்பும்   மறக்கமுடியாதது.
யாழ்ப்பாணத்தில்    தயாராகிக்கொண்டிருந்த    நண்பர்  -  எழுத்தாளர் காவலூர்    ராசதுரையின்   பொன்மணி  படப்பிடிப்பு    வேலைகளுக்காக தர்மசேன    பத்திராஜாவும்   அவரது   ஒளி  -   ஒலிப்பதிவாளர்    மற்றும் சிலரும்   அன்றைய    தினம்   மதியம்      காங்கேசன் துறை நோக்கி  புறப்பட்ட  ரயிலில்  பயணித்தார்கள்.
அன்றைய    சந்திப்பு   எதிர்பாராதது.

எனினும்  -  அவரை   அதன்பின்னர்   சந்திக்க    காலம்    கடந்து   நான் அவுஸ்திரேலியா    வந்தபின்னர்தான்    சந்தர்ப்பம்    கிடைத்தது.
பொன்மணியில்     திருமதி    சர்வமங்களம்   கைலாசபதி  -  டொக்டர் நந்தி  -   பொறியிலாளர்    திருநாவுக்கரசு  -  ஊடகவியலாளர்    கமலா தம்பிராஜா  -  கலைஞர்    சோக்கல்லோ    சண்முகம்  -  மௌனகுரு - சித்திரலோக    தம்பதியர்  -  பவாணி    திருநாவுக்கரசு  -  திருமதி   காவலூர்   ராசதுரை   உட்பட   பலர்   நடித்தனர்.    கதாநாயகியாக திரைப்பட    நடிககை  சுபாஷினி    நடித்தார்.     பல்கலைவேந்தன் சில்லையூர்    செல்வராசன்   பாடல்கள்    இயற்றினார்.    காவலூர் ராசதுரையின்     மைத்துனர்    தயாரித்திருந்தாலும்    பொன்மணியின் கதை  -  வசனம்    நிருவாகத்தயாரிப்பு    முதலான   பொறுப்புகள் அனைத்தையும்  சுமந்தவர்   காவலூர்.

தர்மசேன    பத்திராஜா   அஹஸ்கவ்வ -   பம்பரு  எவித் -    பாரதிகே - சோல்தாது    உன்னேஹ் -    எயா   தென் லொக்கு   லமயெக் -   முதலான சிங்களப்படங்களையும்    இயக்கியிருப்பவர்.   1970 இல்    இயக்கிய சத்துரோ    (எதிரி)   பத்து  நிமிட   குறும்படம்தான்.


பல  உள்நாட்டு    சர்வதேச   திரைப்படவிழாக்களிலும்   தர்மசேன பத்திராஜாவின்    படங்கள்    காண்பிக்கப்பட்டு   விருதுகள் பெற்றுள்ளன.
   யாழ்ப்பாணத்தில்   பல்கலைக்கழக    வளாகம்     தோன்றியதும்    அங்கே   விரிவுரையாளராகவும்     பத்திராஜா     பணியாற்றியவர்.
இலங்கையில்  முன்னர்    வெளியான    சரிநிகர்   பத்திரிகையில் பத்திராஜாவின்  சோல்தாது  உன்னேஹ்  திரைப்படம்   பற்றிய விமர்சனம்   அவரது    படத்துடன்   வெளியாகியிருக்கிறது.    அதன் பிரதி  என்வசம்   நீண்டகாலம்   இருந்தது.
பத்திராஜா    மெல்பன்     மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்    பெங்காளி திரைப்படங்கள்    தொடர்பான    தமது  Phd   பட்ட   ஆய்வினை மேற்கொள்வதற்கு   வருகைதந்திருந்த  சந்தர்ப்பத்தில்   மக்கள் விடுதலை    முன்னணியின்  (JVP)    ஸ்தாபகரும்   அதன்   முன்னாள் பொதுச்செயலாளருமான    தோழர்    லயனல்   போப்பகே   இணைந்து இயங்கும்   மனித   உரிமை    அமைப்பு    ஒழுங்கு   செய்திருந்த ஒன்றுகூடலில்   மீண்டும்   பலவருடங்களின்   பின்னர்    பத்திராஜாவை    சந்தித்தேன்.
பிறிதொரு     சந்தர்ப்பத்தில்    என்வசம்   இருந்த    அவர்  பற்றியும் அவரது   திரைப்படம்    தொடர்பாகவும்    எழுதப்பட்டிருந்த   சரிநிகர் பத்திரிகையின்   பிரதியை     கையளித்தேன்.   அந்தக்கணங்கள் அவருக்கு   மகிழ்ச்சியான   தருணங்கள்.
நினைவுடன்   பாதுகாத்து   வைத்திருந்து    தந்தமைக்கு   தனது நன்றியை   பரவசத்துடன்   சொன்னார்.
மீண்டும்    அவருடனான   சந்திப்பு   அவரது   இயக்கத்தில் வெளியான    In Search Of A Road   -   ஒரு பாதையைத்தேடி -  ஆவணப்படம்    மெல்பனில்  காண்பிக்கப்பட்ட    வேளையில்  நிகழ்ந்தது.    இக்காட்சியையும்    தோழர்    லயனல்  போப்பகே    மெல்பன்    பல்கலைக்கழக  வளாகத்தில்   ஒரு  சிறிய  மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்தார்.
அந்தக்காட்சிக்குப்பின்னர்  உற்சாகமான    அதே   சமயம் கருத்துச்செறிவுடன்    பத்திராஜாவுடன்    கலந்துரையாடலும் இடம்பெற்றது.   சில    கேள்விகளுக்கு  தர்க்கரீதியான   பதில்களும் வழங்கினார்.


   In Search Of A Road      ஆவணப்படத்தில்   யாழ்பல்கலைக்கழக மருத்துவ  பீட   பேராசிரியர்  டொக்டர்    நந்தியும்  நாடகக்லைஞர் பிரதியாளர்   குழந்தை   சண்முகலிங்கமும்   நடித்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில்  போர்க்காலத்தில்  நீடித்த    மின்சாரத்தடையினாலும் எரிபொருள்    தட்டுப்பாட்டினாலும்    பல்கலைக்கழக   மருத்துவபீட மாணவர்களுக்கான    பயிற்சிப்பாடங்களை   இரவில்    எழுதுவதற்கு தாம்    மண்ணெண்ணை   சிம்னி    விளக்கினை   எவ்வாறு   சிக்கனமாக பயன்படுத்துகிறார்   என்பதை   உருக்கமாக   இப்படத்தில்    டொக்டர் நந்தி சொல்கிறார்.
இப்படம்   குறித்து  சிறிய  பிரசுரமும்   தமிழ்   ஆங்கிலம்  சிங்களம் ஆகிய    மும்மொழிகளிலும்  வெளியிடப்பட்டது.
அந்தப்பிரசுரத்தில்   இடம்பெற்ற  வரிகளை   இங்கு பதிவுசெய்கின்றேன்.
வடக்கே   ஓடும்   புகையிரத  வண்டியினதும் அதற்குச்சமாந்தரமாகச்செல்லும்  ஏ 9  பாதையினதும்   ஒன்றோடு ஒன்று    பின்னிப்பிணைந்த  கதை  ஒரு  பாதையைத்தேடி....
போருக்கும்    சமாதானத்துக்கும்    இடையில்   அகப்பட்ட  நிலையில் உள்ள    மக்களின்    கதை.    பயணக்கதை    மரபில்   உருவாகியுள்ள இத்தயாரிப்பு   தன்கதை  சொல்லும்   பாணியில்   ஒரு விவரணப்படமாக   வெளிவருகின்றது.     இந்தப்புகையிரத   வண்டியும் ஏ 9  பாதையும்   யுத்தம் -  சமாதானம்   பயணம்  -   சமூக   எழுச்சி  - இடம் இடப்பெயர்வு    என்பவற்றின்   சின்னங்களாகும்.
யாழ்நகர்   நோக்கிப்புறப்படும்   புகையிரத   வண்டி   இடம் -  நிலம் பிராந்தியம் -  யுத்தம்   -  சமாதானம்  -   இல்லம்   -  நாடு என்பவற்றுக்கூடாகப்  பயணம்  செய்கிறது.    ஒரு    பூமியை   நாடி....  ஒரு    கதையைத்தேடி.
உண்மைக்கும்    புனைகதைக்கும்   இடையில்   உள்ள   இந்தப்படம் எம்மை   ஒரு    நூறு   ஆண்டு காலப்பயணத்துக்கூடாக  ஒரு எதிர்காலத்தை   நோக்கியே  எம்மை  இட்டுச்செல்கிறது.
இந்தப்படத்தை   பார்த்துக்கொண்டிருந்தபொழுது  எனக்கும் அருகிலிருந்த   மனைவிக்கும்  கண்கள்  பனித்தன.   கரங்களை   இறுக்கி எம்மை  நாமே    ஆசுவசப்படுத்திக்கொண்டோம்.
பலரும்   கூடியிருந்த  அந்த  மண்டபத்தில்  பத்திராஜா    பேசும்பொழுது அவரது    குரல்    கம்மியிருந்தது.    பருவகால    மாற்றத்தினால் தொண்டை    அடைத்திருக்கிறது.   உரத்துப்பேச    முடியவில்லை எனச்சொல்லிக்கொண்டு    அதற்கான   நிவாரண   இனிப்பை   எடுத்துக்கொண்டார்.


அவருடன்   மீண்டும்   ஒரு  சந்திப்புக்கு  நாள்   குறித்தேன்.
மெல்பனில் -  சிட்னி  வீதியில்    ஒரு    உணவகத்தில்   அவருக்கு இராப்போசன  விருந்து   வழங்கினோம்.    நானும்    மனைவியும் நண்பர்கள்    சட்டத்தரணி    செல்வத்துரை  ரவீந்தரன்  தம்பதியர் - டொக்டர்     நடேசன்  தம்பதியர்    மற்றும்    தோழர்   லயனல்  போப்பகே - சித்திரா   தம்பதியார்    அவருடன்    நீண்டநேரம்   குறித்த   ஆவணப்படம் இலங்கை   அரசியல் -  சமூகம்   - இனப்பிரச்சினை தொடர்பாகவெல்லாம்     கலந்துரையாடினோம்.
அதன்பின்னர்    அந்த    ஆண்டு  (2007)   மார்ச்   மாதம்   மெல்பனிலிருந்து    வெளியான   உதயம்   மாத    இதழில்    பத்திராஜா பற்றியும்  In Search Of A Road   ஆவணப்படம்   தொடர்பாவும் எழுதினேன்.
அதிலிருந்து  சில   பந்திகள்:
நினைவுகள்    சாசுவதமானவை.    அழியாதவை.    நினைவுகள் மரணித்துப்போனால்    அதுவே  மனிதனின்    மரணமுமாகிவிடும். பூமிப்பந்தெங்கும்   வாழும்  மனிதகுலம்    நினைவுகளை சுமந்துகொண்டே    ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று  தேசிய   இனப்பிரச்சினையால்    யுத்த  நெருக்கடிக்குள்   மூழ்கி மரணங்கள்   மலிந்த    மண்ணாக    மாறி   இருக்கும் இலங்கையைப்பற்றிய    வெட்டு    முகத்தோற்றத்தைப்    பத்திராஜா இந்த    ஆவணப்படத்தின்    மூலம்   காண்பித்துள்ளார்.
இலங்கையில்  ஒரு  காலத்தில்    புரிந்துணர்வுடன்   வாழ்ந்த   மூவின மக்களும்   தமது    வாழ்விடங்களை    தொலைத்துவிட்டு நினைவுகளைச்சுமந்துகொண்டு  இடம்   பெயர்ந்துகொண்டிருக்கின்றனர்.     குறிப்பாகத்தமிழர்கள்    அந்நிய நாடுகளுக்கு    புலம்பெயர்ந்துவிட்டனர்.
எங்குதான்  சென்றாலும்    முன்னர்    வாழ்ந்த   வாழ்வும் - நடமாடிய பிரதேசங்களும்  -  பயணித்த  ரயில்    வண்டிகளும்    நினைவுத்தடத்தில் நீக்கமற   நிறைந்திருக்கும்   என்பதை    இந்த  ஆவணப்படத்தின் மூலம்    மிகவும்    உருக்கமாகச்சித்திரித்துள்ளார்    பத்திராஜா.
சிதைந்து    சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பது   ஏ 9  பாதையில்  அமைந்த ரயில்   நிலையங்கள்    மாத்திரமல்ல    மக்களின்     நெஞ்சங்களும்தான் என்பதை    இப்படத்தின்    காட்சிகளில்    பார்க்கும்போது நெகிழ்ந்துபோகின்றோம்.
வடக்குக்கான  ரயில்  போக்குவரத்து   துண்டிக்கப்பட்டதனால்  கிளாலி  கடல்  ஏரிப்பாதையூடாக    மக்கள்    அனுபவித்த சொல்லொணாத்துயரம்   சித்திரிக்கப்படுகிறது.
முஸ்லிம்  மக்களின்  வெளியேற்றம் -   யாழ்குடா   நாட்டிலிருந்து தமிழ்   மக்களின்   தென்மராட்சியை   நோக்கிய   பாரிய  இடப்பெயர்வு.
தாம்   வாழ்ந்த   மண்ணை   தரிசிக்கத்திரும்பும்   மக்களின் உள்ளக்குமுறல்....    இவ்வாறு    பல   உண்மைகளை    கெமரா உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு   சிறந்த   திரைப்பட   இயக்குநர்   போதகர்   அல்ல.   அதனால் அவர்    வெளிப்படையாக   எந்தவொரு    செய்தியையும் போதிக்கமாட்டார்.
இந்தப்படத்தின்  மூலம்  என்ன   செய்தியைச்சொல்ல  வருகிறீர்கள்? எனக்கேட்டதற்கு   நீங்களே   ஊகித்துப்புரிந்துகொள்ளுங்கள் - என்று இரத்தினச்சுருக்கமாகப்பதில்   அளித்தார்.
ரசிகர்களின்   சிந்தனையில்  ஊடுருவுவதில்தான்    கலைஞர்கள்  வெற்றி  காண்பர்.   பத்திராஜாவும்    அப்படித்தான்   எமது   சிந்தனையில் ஊடுருவுகின்றார்.
மீண்டும்  இந்த   ஆவணப்படத்தினை   பலரதும்   வேண்டுகோளின் நிமித்தம்    பிறிதொரு   மண்டபத்தில்   நண்பர்   நடேசனின் வண்ணாத்திக்குளம்  நாவலின்  ஆங்கில  மொழிபெயர்ப்பு வெளியீட்டு  நிகழ்ச்சியின்பொழுது   காண்பித்தோம்.
இந்தப்படத்தின்    சிடியை  தோழர் அஜித் ராஜபக்ஷ  மெல்பன்   உட்பட பல   நகரங்களில்  காண்பித்தார்.    அனுமதிச்சீட்டுக்கள் விநியோகிக்காமல்  ரசிகர்கள்  காட்சியின்பொழுது  வழங்கிய  சிறிய நன்கொடைகளே   சேகரிக்கப்பட்டு    பத்திராஜாவுக்கு    வழங்கப்பட்டன.
இலங்கையிலிருந்த    அரசியல்   அழுத்தங்களினால்   இப்படம்   அங்கே    காண்பிக்கப்படவில்லை.    இப்படம்   போரில்   பங்கேற்ற அனைத்து   தரப்பினரையும்  கருத்தாழத்துடன்   விமர்சித்தது. போரினால்  பாதிக்கப்பட்ட  அனைத்து    மக்களின்  ஆத்மக்குரலாக பேசியது.
குறிப்பிட்ட  ஏ 9  பாதையில்    தார்போட்ட  வீதியாகவிருக்கட்டும் சிலிப்பர்கட்டைகள்  தண்டவாளங்களினால்    அமைக்கப்பட்ட   ரயில் பாதைகளாகவிருக்கட்டும்    வராலாற்று    ரீதியாக    புள்ளிவிபரப்படி பார்த்தால்    அந்தப்பாதைகளில்   அதிக   எண்ணிக்கையில் பயணித்தவர்கள்    தமிழர்களே.
அவர்கள்   ஒரு    காலகட்டத்தில்  தொலைத்துவிட்டிருந்த அந்தப்பாதையை       உலகிற்கு  காண்பித்தவர்       மனிதாபிமானம்   மிக்க   ஒரு சிங்களச்சகோதரர்தான்    என்பதே    இந்தப்பதிவு    உணர்த்தும் செய்தி   எனக்கருதுகின்றேன்.
உலக     யுத்தங்களாகட்டும்   உள்நாட்டு    யுத்தங்களாகட்டும்   அவற்றை     ஆதாரங்களுடன்    திரைப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும்    வெளியிடும்    தேர்ந்த   ரசனை   மிக்க சமூகக்கலைஞர்களின்   நோக்கம்    யுத்தங்களை    ஆதரிப்பது  அல்ல. அவர்களின்  பதிவுகளில்   காண்பிக்கப்படும்    மனித  வலி  மீண்டும் வந்துவிடக்கூடாது   என்பதற்கான  எச்சரிக்கை  செய்திதான்.
இந்த    ஆவணப்படத்தினை    இயக்கித்தயாரித்த  கலைஞர்    தர்மசேன பத்திராஜாவின்    நீண்ட  நாள்  கனவு  மீண்டும்   ஏ 9  பாதை மக்களுக்காக   திறக்கப்படவேண்டும்  -  மீண்டும்   யாழ்தேவி வடக்கிற்கான   தனது   பயணத்தை  தொடரவேண்டும்    என்பதாகத்தான்   இருந்தது.
அந்தக்கனவு    போருக்குப்பின்னர்    நனவாகியிருப்பதை    மகிழ்ச்சியுடன் எமது    தேசத்து   மக்கள்    கொண்டாடும்   இத்தருணத்தில் இந்தக்கட்டுரையை   சிரம்    தாழ்த்தி   நண்பர்    தர்மசேன பத்திராஜாவுக்கு   சமர்ப்பிக்கின்றேன்.
இக்கட்டுரை எழுதப்பட்ட வேளையில் மீண்டும் தர்மசேன பத்திராஜாவுடன் தொலைபேசியில் உரையாட நேர்ந்தமைக்கு எனது அருமை நண்பர் காவலூர் ராஜதுரையின் மறைவுச்செய்தியே காரணமாக அமைந்தது.
காவலூரின் நண்பர் பத்திராஜா இந்த துயரச்செய்தி கேட்டதும் சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு தனது ஆழ்ந்த கவலையை பெருமூச்சுடன் வெளிப்படுத்தினார். தமது இரங்கலையும் தெரிவித்தார். தமது அனுதாபங்களை திருமதி காவலூருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு சொன்னார்.
பின்னர் அவர் காவலூரின் புதல்வர்களுடன் உரையாடியதாக அறிந்துகொண்டேன்.
தர்மசேன பத்திராஜா மீண்டும் இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாகவும் சொன்னார். அவரது மற்றுமொரு புதிய படம் விரைவில் திரைக்கு வருகிறது.
பத்திராஜாவுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரையை அவரது இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்தின் கதை வசன கர்த்தாவும் தயாரிப்பு நிருவாகியுமான எமது அருமை நண்பர் காவலூர் ராஜதுரையின் நினைவாகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
----0----
letchumananm@gmail.com








No comments: