இலங்கைச் செய்திகள்

.
* போராட்டம் மேற்கொண்ட மாணவர்களை கலைத்த பொலிஸார்!

* ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது - ராஜித

* ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் :சூட்சகமாக பங்காளி கட்சிகளுக்கு        
   ஜனாதிபதிஅறிவிப்பு

போராட்டம் மேற்கொண்ட மாணவர்களை கலைத்த பொலிஸார்!



பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீதான தடை மற்றும் மாணவர் வகுப்புத் தடை ஆகிய விடயங்களை முன்னிறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக சப்ரகமுவ பல்கலை மாணவர்களால் பெலிகில் ஓயா சந்திக்கருகில் கூடாரம் அமைத்து  எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுகொண்ட பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைத்ததுடன் கூடாரத்தையும் அகற்றினர். 





*********************************************************************************
ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது - ராஜித
ஒரு இனம்  இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாதென தெரிவித்துள்ள  அமைச்சர் ராஜித சேனாரத்ன  எத்தகைய  அபிவிருத்திப் பணிகளை  மேற்கொண்டாலும்  மனிதத்துவ பண்பு கொண்டவர்களை கட்டியெழுப்பத் தவறினால் பயனில்லை எனவும்  சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சுதந்திரத்திற்காக அன்று  சிங்கள  தலைவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்களும்  ஒன்று சேர்ந்து  போராடினர். இந்த ஒற்றுமையின் காரணமாக  நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.  
ஆறு தசாப்தங்களுக்கு முன் எமது  தாய்நாட்டிற்கு கிடைத்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பதற்கு சகல சமூகத்தவரும் கைகோர்த்து செயல்பட  வேண்டும்.  சிங்கள  தலைவர்களுடன் சேர் பொன்னம்பலம்  ராமநாதன், அருணாச்சலம்,  மஹாதேவா, ரி.பி. ஜாயா போன்ற தலைவர்கள் நாட்டிற்கு  செய்த தியாகம் மறக்க முடியாதவை. 
நாம் எத்தகைய  அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும்  மனிதத்துவப் பண்பு கொண்டவர்களை கட்டியெழுப்பத் தவறினால்  அதில்  பயனில்லை. மனித உள்ளம்  சீர் பெற வேண்டும். ஒரு இனம்  இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது.   தனிச்சிங்கள மொழிச்சட்டம்  காரணமாக  எமக்கு என்ன பலன்கள்  கிட்டியது. 40 வருடங்களின் பின் சிங்களத்துடன்  தமிழ் மொழிக்கும் சம  அந்தஸ்து   கொடுக்கப்பட்டது. 
*********************************************************************************
ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் :சூட்சகமாக பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதிஅறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 10 ஆம் திகதி நடைபெறுமென கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற அரசின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் சூட்சகமாக தெரிவித்ததாகவும் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்த பின்னர் இடதுசாரிக்கட்சிகள் ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவது. அரசுக்கு பாதகமாக முடியுமெனத் தெரிவித்த போதும் ஜனாதிபதி ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ.குணசேகர ஜனாதிபதி தேர்தல் குறித்து தான் ஆய்வொன்றை மேற்கொண்டதாகவும் ஆய்வு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி "நீங்கள் ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை எனக்கு வழங்காமல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியுள்ளீர்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தல் குறித்து நானும் ஆய்வொன்றை மேற்கொண்டேன். அந்த ஆய்வு எனக்கு ஆதரவாகவுள்ளது" என்று அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு பதிலளித்துள்ளாதாகத் தெரியவருகிறது.
கடந்த 15 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் தலைவர் அத்துரலிய ரத்தன தேரருக்கு பதிலாக மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இரண்டாவது முறையாக பதவியேற்று எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் நாடு முழுவதுமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களின் கூட்டமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நடைபெற்றுள்ளது.
இக் கூட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களை கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகிறது.
nantri virakesari.lk 

No comments: