பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள்.
சென்ற வார இறுதியில் வேலை செய்ததற்கு நேற்று compensation holiday கொடுத்திருந்தார்கள். பயன்படுத்திக் கொண்டேன். வேறு என்ன? பரப்பன அக்ரஹாராதான்.  வழக்கத்தைவிடவும் கூட்டம் அதிகம். மதியம் பன்னிரெண்டு மணியளவில் ஆயிரம் பேராவது இருந்திருப்பார்கள். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்இ எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் மற்றும் செந்தூர்பாண்டியன் ஆகிய நால்வர் மட்டும் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் செய்தித்தாள்தான். அதில் நத்தம் மட்டும் தாடியோடு இருந்தார். ஓபிஎஸ், நத்தம், செந்தில் பாலாஜி போன்றவர்கள் எல்லாம் அப்படித்தான். அம்மா வரும் வரைக்கும் கன்னத்தில் கத்தி படாது என்று சபதம் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கட்சியில் கே.ஏ.செங்கோட்டையன், ராமநாதபுரம் அன்வர் ராஜா போன்றவர்கள் எல்லாம் சீனியர்களாக இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஏகப்பட்ட எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களுமாக சிறை வளாகமே நிரம்பிக் கிடந்தது. ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கலர்ச்சட்டையும் பேண்ட்டும் அணிந்தபடி யாரிடம் கேள்வி கேட்டாலும் ஒரு மார்க்கமாக முறைக்கிறார்கள்.உளவுத்துறையாக இருக்கும் என நினைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. சில உளவுத்துறை ஆட்களும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது நான்கு பேர் குழுவாக நின்றபடி பேசிக் கொண்டிருந்தால் அவர்களின் உதடுகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். திரவியம் என்றொரு நண்பர் ‘நீங்க மணிகண்டன் தானே?’ என்றபடி சத்தமாக கேட்டபடியே வந்தார். உளவுத்துறைக்காரர் ஃபோன் செய்வதான பாவனையில் அருகில் வந்து நின்று கொண்டார். அந்த இடத்தில் Jammer வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். சிக்னல் சுத்தமாக இருக்காது. பிறகு யாரிடம் ஃபோனில் பேசுகிறாரோ? உளவு பார்க்கிறாராம். அந்த அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லையென்றாலும் எதற்கு வம்பு? ‘அந்தப்பக்கமாக போகலாம் வாங்க’ என்று நகர வேண்டியதாகிவிட்டது.

திமுகவில் பெருந்தலைகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி என்று திரும்பத் திரும்ப ஒரே முகங்கள்தான். ஆனால் அதிமுகவில் நேற்று அமைச்சராக இருந்தவர் இன்று வெறும் எம்.எல்.ஏ ஆகிவிடுவதும் இன்றைய மாவட்ட செயலாளர் டம்மி ஆகிவிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதால் அமைச்சர்களின் முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதே கூட சிரமம்தான். இதில் எம்.எல்.ஏக்களையும் எம்.பிக்களையும் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது? வைகைச்செல்வன், கே.பி.முனுசாமி போன்ற வெகுசிலரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. பத்தோடு பதினொன்று அத்தோடு நாங்களும் ஒன்று என சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

கே.ஏ.செங்கோட்டையனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருக்கு ‘நம்ம ஊர் பையன்’ என்பதில் ரொம்ப சந்தோஷம். நிறைய கேள்விகளைக் கேட்டார். ‘அம்மா இங்க வந்ததிலிருந்து ஹோட்டலில் ரூம் எடுத்துட்டேன்’ என்றார். மடிவாலாவில் தங்கியிருக்கிறார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு மட்டும் சென்னை சென்று வந்திருக்கிறார். மற்றபடி பெங்களூர்வாசி ஆகிவிட்டார். அவரைப் போலவேதான் பலரும் இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு நிராகரிக்கப்படும்பட்சத்தில் இங்கேயே நிறையப்பேர் வாடகைக்கு வீடு பிடித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே ஒரு பிரமுகர் அதைச் செய்துவிட்டதாகச் சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாததால் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

மதியம் சிறைவளாகத்திலேயே கட்சிக்காரர்களுக்கான உணவு ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். படு சுமாரான உணவுதான். நேற்று கிருஷ்ணகிரி எம்.பியின் செலவு என்றார்கள். வெகு சிலருக்கு அடையார் ஆனந்தபவனின் பொட்டலம் உணவு கிடைத்தது. ஆனந்தபவனும் சரவணபவனும் ஒருநாள் மாற்றி ஒருநாள் இருநூறு பேருக்கான உணவை ஏற்பாடு செய்துவிடுவதாகச் சொன்னார்கள். நான் வீட்டிலேயே மதிய உணவை முடித்திருந்தேன். ஆனால் செங்கோட்டையன் துளியாவது சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார். தவிர்க்கவே முடியாத வற்புறுத்தல். அவருக்கு எங்கள் ஊரில் எப்பொழுதுமே நல்ல பெயர் உண்டு. கிட்டத்தட்ட தொகுதிவாசிகளின் அத்தனை பேரின் வீட்டிலும் ஏதாவதொரு நிகழ்ச்சியில் கலந்திருப்பார். ஊரில் இவ்வளவு நெருக்கமாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்காது. கூடவே பத்துப் பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நேற்று அப்படியில்லை. அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டார். பதவியில் இல்லையென்றாலும் அவருக்கு இன்னமும் கட்சியில் மரியாதை இருக்கிறது. அத்தனை பேரும் வந்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். அவரிடம் வருகிற ஒவ்வொருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்குத்தான் சங்கடமாக இருந்தது. அன்வர் ராஜாவையும், அரியலூர் மாவட்டச் செயலாளரையும். மேலூர் எம்.எல்.ஏ சாமியையும் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? பெரிய மனிதர்கள் இப்படி சீக்கிரமாக மற்றவர்களை அறிமுகப்படுத்தி வைக்கமாட்டார்கள். கே.ஏ.எஸ் அநியாயத்துக்கு பண்பானவராக இருக்கிறார். ‘வீட்டுக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தேன்.

வருகிற வழியில் இளவரசியின் உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள். கட்சிக்காரர்கள் யாரையும் அருகிலேயே அண்டவிடவில்லை. ஓரமாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தினமும் சசிகலாவையும், இளவரசியையும் சந்திக்கிறார்களாம். ஆனால் இதுவரையில் ஜெயலலிதா யாரையுமே சந்திக்கவில்லை. இதை யார் சொன்னார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? சிறைச்சாலை டிஐஜி ஜெயசிம்ஹாதான் சொன்னார்.

ஆமாம். நேற்று ஜெயசிம்ஹாவிடம் பேசினேன். அது ஒரு குருட்டு அதிர்ஷ்டம். நேற்று தேர்ந்தெடுத்த சில கன்னட பத்திரிக்கையாளர்களைப் பார்ப்பதற்கு அவர் அனுமதி கொடுத்திருந்தார். அதில் ஒரு பத்திரிக்கையாளர் நல்ல நண்பர். என்னைப் பற்றித் தெரியும். ‘நானும் வரட்டுமா?’ என்றேன். ‘பன்னி பாஸூ’ என்று அழைத்துச் சென்றுவிட்டார். அவருடைய நிழற்படக் கருவியை வாங்கிக் கொண்டு நிருபரைப் போலவே நுழைந்துவிட்டேன். சிறைச்சாலைக்குள் நுழையுமிடத்தில் ஐடி கார்ட் எதுவும் கேட்பார்களோ என்று தயக்கமாகத்தான் இருந்தது. முதல் நுழைவாயிலில் ஆதார் அட்டையைக் காட்டிவிட்டு ‘பாஸ்போர்ட் வெரிவிஃபிகேஷன்’ என்று சொல்லி உள்ளே நுழைந்திருந்தேன். ஆனால் சிறைச்சாலைக்குள் நுழைவதும் அவ்வளவு எளிதானதாகவா இருக்கும்? ஆனால் நல்ல வேளையாக அதெல்லாம் கேட்கவில்லை.  ‘சாயுபுரு’ அழைப்பின் பேரில் நான்கைந்து பேர் உள்ளே சென்றதால் வெறும் ஸ்கேன் மட்டும் செய்து கையில் ஒரு சீல் குத்தி அனுப்பிவிட்டார்கள். சாயுபுரு என்றால் ‘தல’ என்கிற மாதிரியான அர்த்தம். சிறைச்சாலையைப் பொறுத்தவரைக்கும் டிஐஜிதானே சாயுபுரு?

முதன்முறையாக சிறைச்சாலைக்குள் நுழைகிறேன். மாரியம்மனைக் கும்பிட்டுவிட்டு காலை எடுத்து வைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். காபி எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். சாயுபுருவை விதவிதமாக நிழற்படங்களாக எடுத்துத் தள்ளினார்கள். பெரும்பாலும் கன்னடத்தில் மாத்தாடினார்கள். நான் மட்டும் அவ்வப்போது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். அவருக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை என்று நினைக்கிறேன். ‘தயவு செய்து உண்மையான செய்தியை மட்டும் எழுதுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு ஊதுபத்தி உருட்டும் விவகாரமும், ஜாமீன் விசாரணையின் போது ஜெயலலிதா மயக்கம் போட்டதாக கிளப்பிவிடப்பட்ட செய்தியும் அவரை டென்ஷனாக்கியிருக்கிறது. அன்றைய தினம் அவர் டிவியே பார்க்கவில்லை என்றார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன், ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை பேர் குறித்தும் வளைத்து வளைத்து கேள்வி கேட்டார்கள். அவர்களின் தினசரி நடவடிக்கைகள் என்ன, அறை எப்படி இருக்கிறது, என்ன சாப்பிடுகிறார்கள், வெளியில் இருப்பவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஏகப்பட்ட கேள்விகள். சலிக்காமல் பதில் சொன்னார். உள்ளே அழைத்துச் சென்ற பத்திரிக்கை நண்பர் ‘உள்ளே வாங்க..ஆனா பேசிட்டு வந்து விலாவாரியா எதையும் எழுதிடாதீங்க’ என்ற உறுதியை வாங்கிக் கொண்டுதான் அழைத்துச் சென்றார். இப்பொழுது நான் எதையாவது  அவசரப்பட்டு எழுதினால் இனி இப்படியான ஒரு வாய்ப்பு எந்தக்காலத்திலும் அவர் வழியாகக் கிடைக்காமல் போய்விடும் என்பதால் ஒரு நான்கைந்து நாட்கள் போகட்டும். அதன்பிறகு டிஐஜியிடம் பேசியதையெல்லாம் எழுதுகிறேன்.

இப்போதைக்கு டிஐஜியிடம் நான் கேட்ட ஒரேயொரு கேள்வி மட்டும்-

டிஐஜி ‘சிறைக்குள் ஜெயலலிதா மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றார்.

‘அவ்வளவு பெரிய லெவலில் இருந்தவர் சிறைக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று எப்படி சார் சொல்ல முடியும்?’ என்று கேட்டேன். இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

‘அவ்வப்போது நான் சந்தித்து பேசுகிறேன். அவரேதான் சொன்னார்’ என்றார். டிஐஜி அதை திரும்பவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அவர் சொன்னது உண்மையாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

No comments: