கடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்

.

கடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்- கவிஞர் லிபி ஆரண்யா நேர்காணல்



நவீன அரசியலை அது உருவாக்கியிருக்கும் அதிகாரத்தை எதிர்கொள்ளத் தம் கவிதைகளில் எள்ளலையும் நையாண்டியையும் பயன்படுத்துபவர் லிபி ஆரண்யா. அரசியலுக்கும் அழகியலுக்கும் சம்பந்தமில்லை என்று நிறுவத் துடிப்பவர்களின் மத்தியில் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை தன் கவிதைகளின் வாயிலாக நிரூபிக்கிறார்.
தப்புகிறவன் குறித்த பாடல், உபரி வடைகளின் நகரம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உபரி வடைகளின் நகரம் வாசகர்களின் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற தொகுப்பு…
உங்களுடைய கவிதைகள் பகடி மொழியும் நகைச்சுவையும் மிக முக்கியமாகப் பங்கு வகிப்பதற்கு காரணம்...
நான் தென்பகுதியில் இருக்கும் பகடி சார்ந்த உரையாடல்கள் மத்தியில் வாழ்ந்தவன். சிறு வயதில் என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தாங்க. அவுங்க அடிக்கடி எம்.ஜி.ஆர். படத்துக்குப் போவாங்க அதற்காக தாத்தா அந்தப் பாட்டியைப் போட்டு அடிப்பார். பிறகு யாராவது ஒருத்தர் சமாதானம் செய்து அந்தப் பாட்டியைக் கூட்டிவருவார்.
பாட்டியை அடித்த அசதியில் தாத்தா தூங்கி விடுவார். அந்த நேரத்தில் மறுநாள் எம்.ஜி.ஆர். படத்திற்குப் போவதற்கு பாட்டி தயாரிப்பு வேலையில் இறங்கியிருப்பார். பொதுவாக எளிய மனிதர்கள் தன்னுடைய துயரங்களையும் வருத்தங்களையும் வலிகளையும் கடந்து செல்ல ஒரு வலி நிவாரணியாகத்தான் பகடியை வைத்திருக்கிறார்கள். பகடி என்பது நாம் விரும்புகிற அரசியலை முன்னெடுக்கிற ஒரு ஆயுதமாகக் கூட இருக்கலாம்.
உங்களுடைய கவிதைகள் அகம் சார்ந்து குறைவாகவும் தெரு சார்ந்து அதிகமாகவும் உள்ளதே...

பொதுவாகவே வீடு என்பது கலைஞனுக்கான இடமில்லை. ஏன், ஒரு இயல்பான மனிதனுக்கு ஏற்ற இடமாகக்கூட வீடு இல்லை. நான்கு சுவர்கள் என்பது ஒரு தந்திரத்தோடு இருக்கிற சிறைச்சாலைதான். குடும்பத்தைக் கடுமையாகக் கேள்வி கேட்கிற இடத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளேயே புரட்சி நடத்துகிற மாதிரிதான் ஒரு பலவீனமான குரலாகத்தான் நமது செயல்பாடு இருக்கிறது. குடும்பத்துக்குள் இருந்துகொண்டேதான் குடும்பத்துக்கு எதிராகப் பேச வேண்டியிருக்கிறது.
எல்லாக் கயவர்களுக்கும் அபயமளிப்பதற்கு வீடு ஒன்று இருக்கிறது என்று மாலதி மைத்ரியின் கவிதை ஒன்று உண்டு. ஆகவே வீட்டைவிட தெரு எனக்கான இடமாக இருக்கிறது.
கவிதை உலகில் ‘எழுத்து’ மரபு, ‘வானம்பாடி’ மரபு என்று எதிர் எதிர் மரபு வகைகள் உண்டு இந்த மரபுகள் இன்றும் தொடர்கிறதா?
இது எப்போதுமே முடிவுறாத உரையாடல்களாக, முடிந்துபோய்விடக் கூடாதென்கிற ஆதங்கத்திலே இருக்கிற உரையாடலாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. கலையில் அரசியல் கலக்கக் கூடாது அப்படி கலந்துவிட்டால் கலை கெட்டுப் போய்விடும் என்ற குரல் இன்றைக்கு வரை ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இதற்கு எதிர்வினையாக கலையில் அரசியல் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் கலாபூர்வமாகச் செயல்பட்டார்களா என்ற கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக கலையில் அரசியல் கலக்கக் கூடாது என்று கூறுபவர்கள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது.
உதாரணமாக ஞானக்கூத்தனின் கவிதைகள், வடிவம் சார்ந்தும் கலைரீதியாகவும் எனக்குப் பிடித்தமானவை. அவரின் ‘சைக்கிள் கமலம்’ போன்ற கவிதைகள் இன்னும் ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன.
இதில் கவனமாகப் பார்க்கவேண்டியது அதிலுள்ள அரசியல்தான். அவருடைய ‘காலவழுவமைதி’ என்ற கவிதை முழுக்கமுழுக்கத் திராவிட அரசியலைப் பகடி செய்கிறது. இக்கவிதை வந்த நேரத்தில் கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ‘இத்தொகுப்பிலேயே மிகச்சிறந்த கவிதை ‘காலவழுமைதி’.
பொதுக்கூட்டங்களின் இரைச்சல் பின்னணியில் கயமைத் தோய்ந்த கட்டைக்குரலில் இதைப் படிக்கலாம். படிக்க வேண்டும்’ என்று எழுதியிருப்பார். ஞானக்கூத்தனின் கவிதைகள் அவரது அரசியல் தேர்வைப் பேசுபவையாக இருக்கின்றன.
ஜி. நாகராஜன் போன்றவர்கள் நாவலில் மதுரையை பதிவு செய்திருக்கிறார்கள். உங்களுடைய கவிதைகளில் எப்படிப் பதிவு செய்துள்ளீர்கள்?
என்னுடைய பால்ய காலத்தில் நிறைந்து வழிந்து ஓடுகிற வைகை நதியை இன்றும் தினமும் கடந்து செல்கிறேன். அதை எப்போதாவது குனிந்து பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை. அங்கு ஒரு ஆறு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறது.
இப்போது வைகை ஆற்றுக்குள் செம்மண் அடித்துவிட்டது. தாமிரபரணியிலும் பாலாற்றிலும் மண் களவாடப்படுவதை இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பே வைகையில் நடந்துவிட்டது. மதுரையில் உள்ள நீர் ஆதாரங்களான தல்லாகுளம், பீபீ குளம், கேசா குளம் இப்படிப் பல குளங்கள் எங்கள் கண்முன்னால் அழிக்கப்பட்டன.
இந்த நீராதரங்களைத் திரும்பக் கொண்டுவர நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. மதுரையிலுள்ள நீதிமன்றமே ஒரு குளத்தை தூர்த்துவிட்டுத்தான் கட்டியிருக்கிறார்கள். இதை எங்கே யாரிடம் சொல்வது? மதுரை மிகவும் பழம்பெருமை வாய்ந்த ஊர் என்றாலும் பல நசிவுகளோடுதான் இருக்கிறது.
உணர்வுபூர்வமான படைப்பாளி, கவிஞன் போன்றவர்கள் இந்த நசிவுகளிலிருந்துதான் எழுத முடியும் என நினைக்கிறேன். இந்த வகையில் மதுரை, சமூகத்திற்கு கொஞ்சம் கொடுக்க, தொந்தரவு செய்கிற, மகிழ்ச்சியளிக்கக்கூடிய, கைவிடக்கூடிய என்று எல்லாமுமாக இருக்கிறது.
ஒரு கவிஞன் பாடுபொருளை எப்படித் தீர்மானிக்கிறான்?
இன்றைக்கு இருக்கும் நுகர்வுக் கலாசாரத்தில் ஒரு தனிமனிதனுக்கு எங்குமே சுதந்திரம் இல்லை. இது இன்றைக்கு இருக்கும் புதுவகையான நெருக்கடி. மதுரை என்பது அகப்பாடல்களுக்குச் சொந்தமானது என்று எல்லோருக்கும் தெரியும். காதலும் வீரமும் வசித்த இடம்தான் மதுரை.
ஒரு பையன் தனக்குப் பிடித்த பெண்னை கூட்டிக்கொண்டு பத்து நிமிடம் பேசுவதற்கான இடம்கூட மதுரையில் இல்லை. சங்கம் வளர்த்த, அகப்பாடல்கள் நிறைந்த மதுரையின் இன்றைய நிலைதான் இது. இது போன்று பாடுபொருட்களுக்குப் பஞ்சமே இல்லை.
ஒரு வங்கியில் நாம் பேனா கேட்கும்பொழுது மூடியை கழட்டிவிட்டு கொடுக்கும்போது பேனா கொடுக்கிறாரே என்று சந்தோசப்படுவதா அல்லது பேனாவை இப்படி கொடுக்கிறாரே என்று சங்கடப்படுவதா என்பது புதுவகையான நெருக்கடி. அதுவும் ஒரு வலிதான். இந்த மாதிரியான புதியவகை நெருக்கடிகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அதற்கு நம் தோல்கள் தடிக்காமல் இருக்க வேண்டும். அகத்திலிருந்து வரும் வலிகளை கொஞ்சம் காதுகொடுத்து கேட்கிற மனிதன் ஏராளமான பாடுபொருட்களைத் தரிசிக்க முடியும் என நம்புகிறேன்.
புதுக்கவிதை அறிமுகமான போது ஒரு ஜனநாயகத்தன்மை இருந்தது. அது காலப்போக்கில் கோஷங்களாகவும் மாறியது. இப்போது பேஸ்புக், டிவிட்டரில் கவிதைகள் எழுதுகிறார்கள் இது பற்றி...
அசோகமித்திரனிடம் ஒருமுறை “நிறைய பேர் இப்பொழுது எழுத வருகிறார்களே... அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று பத்திரிகையில் கேட்டபொழுது அந்தப் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துப் படித்தேன். கேள்விக்கும் பதிலுக்கும் அச்சில் உள்ள இடைவெளியை பார்த்தபோது மிகுந்த பதட்டமாக இருந்தது. அந்த இடைவெளியை தாண்டியவுடன் மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
அந்த பதிலில் அவர் “இவர்கள் எல்லாம் ஏன் எழுத வருகிறார்கள்? நல்ல வேலைக்கு போகலாமே” என்றார். இதைப் படித்தால் அசோகமித்திரனின் இயல்பான நகைச்சுவை போல் தெரியும் அந்தப் பதிலில் ஒரு அரசியல் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. எல்லோரும் எழுத வருகிறபோதுதான் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. எல்லோரும் எழுதவருகிறபொழுதுதான் அசோகமித்திரனும் பதில் சொல்கிறார்.
இங்கே வரலாற்றில் யார் பேனாவை கையில் வைத்திருந்தார்களோ அவர்களின் குரலாகப் படைப்பு இருந்தது. இந்தக் குரலின் நீட்சியாக விமர்சனம் வருமானால் என்னைப் பொறுத்தவரைக்கும் நூற்றிமுப்பது கோடி பேருமே எழுத்தாளராகணுமுன்னு சொல்லுவேன்.
அப்படி எழுதுகிற பொழுது கலை சார்ந்தும் மதிப்பீடு சார்ந்தும் ஒரு தடையற்ற உரையாடலை நிகழ்த்தமுடியும். எழுத்து ஜனநாயகப் பூர்வமாகும் பொழுது நிறையபேர் எழுதவருவார்கள். அப்பொழுது தரம் குறையலாம். அப்படி தரம் குறைகிற பக்கம்தான் நாம் நிற்க வேண்டும்.
முன்பு கவிதை சமூகம் சார்ந்து இருந்தது. இன்றைக்கு தனிமனிதனைச் சார்ந்து இருக்கிறதே
பிருந்தாவின் கவிதை ஒன்றுண்டு, அந்த கவிதையில் எங்க அம்மா ஆற்றுக்குப் போவார்கள். அந்த ஆற்றில் குடிப்பதற்குத் தனியாக ஒரு குடத்திலும், குளிப்பதற்குத் தனியாக ஒரு குடத்திலும் எடுத்துப் புழங்குவார்கள் என்று கூறப்பட்டிருக்கும். எளிய மனிதர்களின் ஆறு இப்படித்தான் இருந்தது.
கலையும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆறுகள் எந்தப் பயன்பாடு பற்றியும் கவலையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும். இது மாதிரிதான் கலையும். கரையில் நிற்கும் மனிதர்களிடம் ஆற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். எனக்குக் குளிக்க மட்டும்தான் ஆறு என்று சொல்வதில் பிரச்சினை இருக்கிறது.
சிலருக்குக் குடிக்க மட்டும்தான் ஆறு என்று சொல்வதிலும் பிரச்சினை இருக்கிறது. இந்த இரண்டையும் பயன்படுத்தினால் தான் ஆறு நம்மோடும், நம்மோடு ஆறும் நெருக்கமாக இருக்க முடியும்.
சோவியத் மகாகவி மாயகோவ்ஸ்கி ஒரு கட்டத்தில் கடவுள் தேவையாக இருக்கிறது என்று கூறியது பற்றி ஒரு கவிஞனாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
கவிஞன் எப்போதுமே சாமானியன் தான். அகம் சார்ந்த விஷயங்களில் ஒரு சாமானியனுக்கு இருப்பது போல தலைசாய்ப்பதற்கும், ஆறுதலுக்கான விசயத்தையும் கைகொள்ள விரும்புகிறான். இதில் கவிஞனுக்குத் தேர்வு இருக்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ மத நம்பிக்கை உள்ளவர்களோ எளிமையாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்.
தத்துவம், அரசியல் சார்ந்து செயல்படும் நபர்கள் கடவுளைத் துரத்திவிட்டவர்கள். அகம் சார்ந்து எழுதுபவர்களுக்குச் சிரமம் வருகிறபொழுது கலை சார்ந்த விசயங்களைப் பற்றிக் கொள்கிறார்கள். கடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம் அல்லது ‘பாரு’க்குப் போகலாம்.
நெல்லையப்பரிடம் ஒப்புவிப்பது, நெப்போலியனிடம் ஒப்புவிப்பது என்று இரண்டு விதமான வாய்ப்புகள் சாமனியனுக்கு இருக்கின்றன. அதே மாதிரி கவிஞனுக்கும் இருக்கிறது. கவிஞர்கள் எப்போதுமே நிறைய விமர்சனங்களோடு இருப்பதால் கடவுளும் தள்ளி நிற்பதையே விரும்புகிறார். கடவுளின் வெற்றிடத் தைப் போக்க அன்புள்ள மனிதர் களிடமோ, நீர்மை வடிவங்களிலோ முழ்கியிருக்க வேண்டியிருக்கிறது.
Nantri tamil.thehindu

No comments: