அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்

.
    13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்  
நினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக….
அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம்


கடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது.  இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துகளே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன.
இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இப்போது போல் அல்லாது அக்காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் மிகக் குறைவு அல்லது கிடையாது.  ஜூலை மாதம் பதின்னான்காம் திகதி உதயன் பத்திரிகையில் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனேன்.  கொழும்பில் அமிர், யோகேஸ் சுட்டுக் கொலை என தடித்த எழுத்துக்களில் தலைப்பிட்டுப் பிரதான செய்தி அமைந்திருந்தது. அமிர்தலிங்கம் அவர்களுடன் முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட, அவர்களுடன் இருந்த த.வி.கூ தலைவர் திரு சிவசிதம்பரம் அவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அது.




பலத்த பாதுகாப்பு நிறைந்த கொழும்பு புல்லர்ஸ் லேன் வீட்டில் எப்படிக் கொலையாளிகள் நுழைந்திருக்க முடியும் என ஆரம்பத்தில் வினவியவர்கள் சீக்கிரமே நடந்ததைக் கேள்விப்பட்டு மௌனித்து விட்டார்கள். பேச்சு நடத்த வேண்டும் என யோகேஸ்வரன் மூலம் கோரிக்கை வைத்து, முன் அனுமதி பெற்று, வந்த இளைஞர் குழு ஒன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவர்களை வாயிலில் இரும்புக் கதவடியில் காவலுக்கு நின்ற காவலர்கள் சோதித்ததாகவும், அப்போது யோகேஸ்வரன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து அவர்களை சோதனையின்றி அப்படியே உள்ளே அனுமதிக்கும்படி வேண்டியதாகவும் பின்னர் பத்திரிகைச் செய்திகள் கூறின. 

அமிர், யோகேஸ் ஆகியோரின் மரணச் சடங்குகள் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதாக ஒரு நினைவு. அந்த வைபவத்தில் கலந்துகொள்ள நானும் எனது ஒன்று விட்ட அண்ணன் விஜயானந்தனுடன் இருசக்கர வண்டியில் சென்றிருந்தேன். இந்திய அமைதிப் படையின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் காங்கேசன்துறை வீதி வழியாக இணுவிலில் இருந்து யாழ் நகர் நோக்கி நான் சென்று கொண்டிருந்தபோது அச்சமாகவும் கவலையாகும் இருந்தது. அச்சத்திற்குக் காரணம் அமைதிப் படை. ஏதாயினும் ஓர் அசம்பாவிதம் நடந்தால் வீதியால் போவோர் வருவோரை ஒரு பதம் பார்க்கும் அமைதிப் படையின் கைங்கரியம் ஊர் அறிந்த உண்மை. உருப்படியாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்ற கவலை வீட்டிலிருந்து புறப்படும் முன்னரே தொடங்கிவிட்டது. வழி நெடுக எனது அண்ணனுடன் பழைய நிகழ்வுகளையும் பேசிக்கொண்டே சென்றோம்.


எனது பத்தாவது வயதில் இணுவில் கந்தசுவாமி கோவிலடியில் இருந்து காங்கேசன் துறை வீதியில் இணுவில் சந்தைக்கு எதிர்ப்புறம் கட்டப்பட்ட எமது புதிய கல்வீட்டிற்கு நாம் குடிபெயர்ந்தோம். அன்றிலிருந்து இணுவில் சந்தை மைதானத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் நான் முன்வரிசையில் இருந்துள்ளேன்.  எழுபது பொதுத்தேர்தலில் இருந்து எழுபத்தேழு பொதுத்தேர்தல் வரைக்கும் பல தடவைகள் அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவரின் உணர்ச்சி மிக்க உரையை, இலக்கியச் சுவை நிறைந்த அரசியல் உரையை, எதிரிகளை நையாண்டி செய்து அவர் பேசும் பேச்சை நான் பலதடவைகள் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் அவர் பேசுவதற்கு முன்பாக அவரின் மனைவி திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் பேசுவதையும் தனது பேச்சின் முன் பாரதியார் பாடல்கள், எங்கள் ஈழத்தமிழ் நாடு எனப்படும் இன்னோர் இனிய தமிழ்ப் பாடல் என்பவற்றில் ஒன்றிரண்டை அவர் பாடுவதுண்டு.

இந்த நினைவுகளை அசைபோட்டபடி யாழ் நகரை அண்மித்த போது யாழ் ஆஸ்பத்திரி வீதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். வீதி நெடுக முழத்திற்கு ஒரு சிப்பாய் காவல் காத்திருக்க பயம் அதிகமாகிவிட்டது. நீண்ட வரிசையில் நின்று அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கும் யோகேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்தினேன். திருமதி அமிர்தலிங்கம் அழுதழுது வீங்கியிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட கணவனின் முகத்தையே பார்த்து விம்மிக்கொண்டிருந்தார். ஒரு கையில் விசிறியை வைத்து இடையிடையே ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார்.  அடுத்து இருந்த யோகேஸ்வரனின் உடலருகே திருமதி யோகேஸ்வரன் அழுதுகொண்டு நின்றிருந்தார். யாரோ எதோ கேட்க, “செய்யுங்கோ, அவரென்ன திரும்பியே வரபோறார்?” என சொல்லியபடி இடையிடையே நினைவுகளை மீட்டு புலம்பியபடியே இருந்தார்.

அஞ்சலி முடிந்து மைதானத்தில் நின்ற படியே தெரிந்தவர்களைப் பார்த்துப் பேசியபடியே இருந்தேன். என் ஊரிலிருந்து தமிழரசுக் கட்சியின் பழைய காலத்து உறுப்பினர்களாக ஆதரவாளர்களாக இருந்து பின் இயக்கங்களின் செல்வாக்கால் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த பலரையும் பார்க்க முடிந்தது. இணுவில் கிராமம் அடங்கியிருந்த அப்போதய உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் அங்கு நின்றிருந்தார். அவரை எனது அண்ணனிடன் சுட்டிக்காட்டினேன். அண்ணணின் சித்தப்பா முன்னாள் உடுவில் கிராம சபைத் தலைவராக இருந்த அமரர் சண்முகம் முத்துலிங்கம். அண்ணனும் சித்தார்த்தனும் மாணவப் பருவத்திலிருந்து நண்பர்கள். தமிழரசுக் கட்டியின் பிரச்சாரங்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள். தர்மலிங்கத்தின் தேர்தல் பிரசாரக் காலத்தில் ஒன்றாக உண்டு உறங்கி வாழ்ந்தவர்கள். சித்தார்த்தனை எனக்குப் பழக்கமில்லை. ஆயினும் தெரிந்து வைத்திருந்தேன். சித்தார்த்தனைப் பார்க்க அண்ணன் சென்று விட்டார். நான் என் மெல்ல நகர்ந்து சனக்கூட்டத்திற்கிடையே கூட்ட மேடை இருக்கும் இடத்தை நாடிச் சென்றேன்.


மேடைக்கு சற்று முன்னாலே சற்று ஓரமாக  நீண்ட நாட்களாகக் காணாத சிலரைக் காணக்கிடைத்தது. அதில் ஒருவர் அப்போதய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவரட்ணம் அவர்கள். நவம் அண்ணை என அன்போடு அழைக்கும் நவரட்ணம் எனது பள்ளிக்காலத்தில் யாழ். இந்துக்கல்லூரியில் சிற்றூழியராக இருந்தவர். கம்யூனிச சித்தாத்தங்களில் ஈடுபாடுள்ளவர். யாழ். இந்துக்கல்லூரியில் தமிழர் தேசிய உடையான வேட்டி, நீளக்கைக் சட்டை உடுத்தி வேலைக்கு வருவார். காலை வேளையில் தினவரவு இடாப்பு கொண்டு வரும்போது அவரின் மிடுக்கைப் பலதடவை வியந்திருக்கிறேன். எல்லா வயதினருடனும் இயல்பாக, எளிமையாக பழகுபவர். இந்திய அமைதிப் படை வந்த பின்னால் எண்பத்தொன்பது பொதுத்தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், யோகசங்கரி ஆகியோருடன் சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். நவம் இப்போது உடல் பருத்து இருந்தார். நவம் அண்ணையுடன் செட்டியார் அச்சகம் சங்கர் மற்றும் எனது ஆசிரியர் செட்டியார் சோமசுந்தரம் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். உரையாடலில் நானும் இணைந்துகொண்டேன்.


எனது பள்ளிக்காலத்தில் நவம் அண்ணன் பலதடவை அமிர்தலிங்கத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் விமர்சித்ததை நான் அறிவேன். நான் உயர்தர வகுப்புப் படித்த காலத்தில் 1976ஆண்டில் ஒரு நாள் பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத்தின் சார்பில் ஒரு வழக்காடுமன்றம் நடைபெற்றது. அக்காலத்தில் அமிர்தலிங்கம் மற்றும் நால்வருக்கு எதிராக ”ட்ரயல் அற் பார்” முறையில் வழக்கு நடைபெற்று வந்தது. அதனை ஒட்டி நாமும் ஒரு ட்ரயல் அற்பார் முறையில் ஒரு வழக்காடுமன்றம் செய்தோம். குற்றக்கூண்டில் தமிழ்த் தலைவர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் மாணவர் மன்றத் தலைவர் திரு இ. ஜெயராஜ் ( கம்பவாரிதி), திரு குணசிங்கம் (சிட்னி கட்டடக் கலைஞர்) மற்றும் ஒருவர் நீதிபதிகளாக இருந்த ஞாபகம் உண்டு. நானும் இன்னொரு நண்பனும் வாதிகளாக தோற்றினோம். சாவகச்சேரி க.ந.நவரத்தினத்தின் மகனும், இன்னொரு நண்பனும் பிரதிவாதிகளாகத் தோற்றினார்கள். வழக்காடு மன்றம் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினால் (கொழும்பில் நடைபெற்றதைப் போல) அதிக நேரம் வாதாட்டமாகி குழப்பத்தில் முடிந்தது. எனினும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் எனக்குத் தேவையான குறிப்புகளை எடுப்பதற்கு நவம் அண்ணனை நாம் அடிக்கடி சந்ததித்ததுண்டு.


இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நவரட்ணமும் செட்டியார் சங்கரும் அமிர்தலிங்கம் பற்றிப் பகிர்ந்துகொண்டவற்றை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரிகள் குறைகூறும் குற்றங்களுக்கு மத்தியில் இன்னமும் அமிர்தலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது என்பதை இருவரும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அரசியல் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும் எனினும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதை சங்கர் அடிக்கடி சொல்வதுண்டு. அன்றும் அதனைச் சொல்லிருந்தார் சங்கர்.

மேடையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட நான் மெல்ல மேடையை விட்டு விலகிவந்துவிட்டேன். இன்னமும் அச்சமாக இருந்தது.  கொழும்பு புல்லர்ஸ் லேனுக்குச் சென்றவர்களுக்கு அஞ்சலிக்கூட்டத்தைக் குழப்ப எவ்வளவு நேரமாகும் என்று எனக்குள் ஓர் எண்ணம் தோன்றி மறைந்ததும் அச்சம் அதிகரித்துவிட்டது. 
அஞ்சலிக்கூட்டத்தில் அப்போதய வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமை தாங்கி உரைநிகழ்த்தினார். “எனக்கு மட்டுமல்ல நண்பன் பிரபாகரனுக்கும் அரசியல் சொல்லித்தந்தவர் அமிர்தலிங்கம், ஆனால் அதனை அவர்” என அவர் பேசி முடிக்கமுன்னர் மைதானத்தில் கரகோசம் எழுந்தது. யாழ்ப்பாணத்தில் முதல்தடவையாக புலிகளை இக்கொலையுடன் சம்பந்தப்படுத்திய பகிரங்க செய்தி அது. இலங்கை அரசின் பிரதிநிதியாக அங்கு வந்திருந்தவர் அமைச்சர் காமினி திசநாயக்கா. காமினியின் பேச்சு நடந்த போது மைதானத்தில் அமைதி நிலவியது.  அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் அமைதியாகத் தூங்குகிறார்கள். அவர்கள் அமைதியாகத் தூங்குவதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அதனை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என அவர் பேசிய ஞாபகம் உண்டு. அப்போது அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை நடைபெற்றுகொண்டிருந்தது. கொழும்பு ஹில்டன் நட்சத்திர விடுதியில் அன்ரன் பாலசிங்கம், மாத்தையா, யோகி அடங்கிய புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு தங்கியிருந்தது. புலிகளே இக்கொலைகளைச் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்த போது அதனை அரசின் சார்பில் வன்மையாக மறுத்தவர் அப்போதய பாதுகாப்புப் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண. காமினி மறந்தும் கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற ஊகத்துக்குள் செல்லவில்லை. மாறாக அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எப்படி செயற்பட்டார் என்பதைப் பற்றியும் யோகேஸ்வரன் எப்படி இளைமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் உரிமைக்காகப் பாடுபடும் அதேவேளையில் எலோருடனும் நட்புறவுடன் பழகுவார் என்பதையும் பேசினார். அங்கு வேறு சிலரும் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.


அஞ்சலி உரைகள் நிறைவடைந்ததும், அண்ணனும் நானும் புறப்பட்டு விட்டோம். புறப்படுமுன்னர் அண்ணன் மீண்டும் சித்தார்த்தனிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு ‘கவனம்’ என்றபடி வந்தார். சித்தார்த்தனின் தந்தை தர்மலிங்கம் நான்கு வருடங்களுக்கு முன்னால் கடத்திக் கொல்லப்பட்டார். அது தொடர்பில் கவனமாக இருக்குமாறு மகனிடமும் அண்ணன் சொல்வதாக நினைத்துக்கொண்டு கேட்டேன். இல்லை, இப்போது அவர் புளட் இயக்கத்தில் இருப்பதாகவும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அவர் இப்போது தான் யாழ்ப்பாணம் வந்து ஒரு பகிரங்க வைபவத்தில் காணப்படுவதாகவும் அண்ணன் கூறியபோது நான் ஏங்கிப்போனேன்.

தான் ஒரு நாள் கொல்லப்படுவேன் என்ற பயம் அமிர்தலிங்கத்திற்கு இருந்தது என்றும் அதனால் தான் அவர் இலங்கை அரசின் பலத்த பாதுகாப்பில் கொழும்பில் உள்ளார் எனவும், அவர் இந்திய அரசின் ஏவலாளாக செயற்படுவதாகவும் பல்வேறுவிதமான செய்திகள் இயங்கங்களின் ஊடகங்களிலும், பரப்புரைகளிலும் வந்த ஞாபகம் உண்டு.

இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங்கிய அந்த எண்பத்தேழாம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முற்பகுதியில் காங்கேசன் வீதியில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் எறிகணைகள் வந்து விழத்தொடங்கியதும் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு இணுவில் கந்தசுவாமி கோயிலை நோக்கி நாம் ஓடிவிட்டோம். சிறிது சிறிதாக அம்மாவும், தங்கையும் வீட்டுப் பொருட்களை கொண்டுவரத் தொடங்கிவிட்டனர். நான் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கோயில் சூழலிலும் அருகிருந்த எனது பெரிய மாமா விட்டிலும் என் பொழுது கழிந்தது. இணுவிலில் இருந்த ஏனைய இயக்கத்தவர்களிடம், என்ன நடக்கிறது, எப்படி தீரப்போகிறது என்ற கேள்விகளுக்கு விடைதேடிய கூட்டத்துடன் இணைந்துகொண்டு தீவிர ‘அரசியல்’ கேட்டுக்கொண்டிருந்தேன். அடிக்கடி இந்திய வானொலிகளின் மூலம் ஊரடங்குச் சட்டம் பற்றியும் சில மணி நேரங்களுக்கு அதன் நீக்கம் பற்றியும். அன்பு வழி என்ற இன்னொரு நிகழ்ச்சி மூலம் அமைதிப் படையின்ன் ‘வீரதீரச் செயல்கல்’ பற்றியும் செவி நோகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கந்தசாமி கோவிலைச் சூழ உள்ள ஆலயங்களிலும் மக்கள் கூட்டம். சொந்த வீடுகளில் வாழமுடியாமல் அருகிலுள்ள ஆலயங்களில் தஞ்சமடைந்த மக்களை அமைப்பதிப்படை வாழ்விக்க வந்திருப்பதை நம்பியே அகவேண்டிய சூழல். வயிறோட்டம், சிரங்கு மற்றும் காச்சல் போன்ற வியாதிகள் வேகமாக இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் பரவத்தொடங்கியிருந்த வேளை. இணுவிலில் டொக்டர் பாலா அண்ணை கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள குருசாமி மடத்தின் திண்ணையில் இருந்து அவதிப்படுவோருக்கு இலவச மருத்துவம் செய்துகொண்டிருந்தார். சுன்னாகம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேலு தனது ஒரு சங்கக்கிளையில் இருந்து அரசி, பருப்பு, சீனி, உப்பு, தேயிலை போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஆலயப் பகுதிக்கு கொண்டுவர் உதவியிருந்தார்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அமைதிப் படையின் ’அன்பு வழி’ எல்லோராலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த போது தான் யாழ். போதனா மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் சிவபாதசுந்தரம் மற்றும் தாதியர், நோயாளர் எனப் பலர் அமைதிப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். புலிகள் மருத்துவமனையில் இருந்து தாக்குதல் நடத்தியபோது அமைதிப்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தியபடியே வைத்தியசாலைக்குள் புகுந்து கண்டபடி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பத்திரிகையில் வந்திருந்ததாம். ஆங்காங்கே சிலர் பத்திரிகைகளைக் கையில் வைத்திருந்த போது அது என் கையில் கிடைக்கவில்லை.

இவ்வேளையில் தான் அமிர்தலிங்கம் அவர்களின் செய்தி ஒன்று பத்திரிகையில் வந்ததாகக் கூறி இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் சிலர் அமிர்தலிங்கத்தை செந்தமிழும் கொடுந்தமிழும் கலந்து அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். தமிழ் மக்கள் அமைதிப் படைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமிர்தலிங்கம் ஓர் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்திருந்ததாக பத்திரிகைச் செய்தி கூறியதாம். என்ன சூழலில் அமிர்தலிங்கம் அத்தகைய கோரிக்கையை விடுத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆயினும் அந்தக் கோரிக்கை அப்போது தேவயற்றதொன்று என்பதை அவரின் முன்னாள் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்தியத் தூதரின் வற்புறுத்தலுக்கும், நெருக்குதலுக்கும் அமிர்தலிங்கம் ஆளாகிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருந்தது. புலிகளுக்கு எதிரான அமைதிப்படையின் முயற்சிகளுக்கு மக்களை ஆதரவளிக்குமாறு அமிர்தலிங்கம் கேட்டிருந்தால் அது மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ளாமலும், மக்களின் உணர்வுகளை, குறிப்பாக 1986-1987 காலத்தைய கள நிலவரங்களைப் புரிந்துகொள்ளாத தன்மையையே காட்டிநிற்பதாக கொள்ளலாம். அமிர்தலிங்கம் அவர்களின் கொலைக்குப் புலிகள் நேரடியாக உரிமை கோராத போதிலும் அக்கொலை தொடர்பாகவும், அமிர்தலிங்கம் தொடர்பாகவும் செய்திகள் வரும்போது முண்டியடித்துக்கொண்டு புலிகளின் ஆதரவாளர்களும் ஆதரவு ஊடகங்களும் விமர்ச்சிக்கத் தொடங்குவதின் பின்னால் உள்ள செய்தி தெளிவாகவே புரிகிறது.


அமிர்தலிங்கம் அவர்களின் இன்னொரு முடிவினையும் திகைப்போடு யாழ்ப்பாண சமூகம் பார்த்திருந்தது. அப்போது 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல். அந்தத் தேர்தலில் கொல்வின் ஆர். டி. சில்வா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பியின் ரோகண விஜேவீர போன்றோருடன் இன்னும் சிலர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அப்போதய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்கும் எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவிற்கும் இடையில் தான் இருந்தது. கொப்பேக்கடுவவின் யாழ்ப்பாணத் தேர்தல் பிரசாரத்திற்கு அவருடன் அப்போதய புகழ்பெற்ற சிங்கள நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவும் வந்திருந்தார். இணுவில் சந்தை மைதானத்தில் ஒரு பகல்பொழுதில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. நண்பர் குமாரசாமி வினோதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொப்பேக்கடுவ பேசும்போது தான் பதவிக்கு வந்தால் உடனடியாக 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும் சகல அரசியல் கைதிகளையும் விடுவிப்பதாகவும் தெரிவித்தார்.  வினோதன் தனதுரையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதாகவும் நேர்மையானவர்களாக இருந்தால் தமிழ்மக்களை மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கூறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுன்னாகம் பேருந்து நிலையத்தில் அன்றிரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் கூட்டம் அலைமோதியது. 

கொப்பேக்கடுவவும் விஜய குமாரணதுங்கவும் பேசினர். தான் இப்பொழுதே வென்றுவிட்டதாக உணர்வதாகவும் கூறி தனது இரு வாக்குறுதிகளையும் மீண்டும் வலியுறுத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள் மக்கள் தமக்குரிய ஆட்சித் தலைவரைத் தாமே தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கியிருத்தலே பொருத்தமானது என்றும் கூறியிருந்தது.  அது பற்றிய விளக்கக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களும் சிவசிதம்பரம் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஜே.ஆரின் ஆட்சியில் அல்லலுற்றவர்கள் அமிர்தலிங்கத்தினதும், கூட்டணியினதும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கொள்கைரீதியில் அமிரின் வாதம் சரியாக இருந்தாலும் நடைமுறையில் அது பொருந்தவில்லை.  அவ்வேளையில் கொப்பேக்கடுவ சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்து, அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்களின் அரசியல் போக்கில் மாற்றம் எற்பட்டிருக்கலாம்.  அமிர்தலிங்கத்தை விமர்சித்தவர்கள் அவருக்கும் ஜே.ஆருக்கும் இடையே இரகசிய உடன்பாடு இருப்பது போல காட்டிக்கொண்டனர்.  


இந்த சூழலை 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இப்போதய இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும்போட்டி நிலவிய அந்த வேளையில் தமிழ் மக்கள் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசம் தனது ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்தலில் தமிழர்கள் பங்குபற்றத் தேவையில்லை என்றும் சாரப்பட விடுதலைப் புலிகள் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.  புலிகளின் வேண்டுகோள் கூட தர்க்கரீதியானது என்றபோதிலும் அதற்குக் கூறப்பட்ட காரணத்தைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணியும் புலிகளும் இருபத்து மூன்று வருடகாலத்திற்கு முன்னாகவும், பின்னாகவும் நடைபெற்ற இருதேர்தல்களில் ஒரேமாதிரியாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஒரே காரணத்தைக் கூறியிருக்கிறார்கள் என்பதும் சுவாரசியமான ஓர் ஒற்றுமை.

அமிர்தலிங்கத்தை விமர்சிப்பவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு அவர் தமிழ்மக்களை எமாற்றினார் என்பது. அடுத்த மேதினத்திற்குள் சுதந்திரத் தமிழ் ஈழம் காண உறுதிபூணுவோம் என யாழ். முற்றவெளி மைதானத்தில் 1979இல் நடந்த யாழ். மாநகரசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமிர்தலிங்கம் பேசியிருந்தார். மேலும், எதற்கும் தயாரான ஐயாயிரம் இளைஞர்கள் என் பின்னால் வாருங்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என அமிர்தலிங்கம் இன்னொரு பிரசாரக் கூட்டத்தில் பேசியிருந்தார். புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் அமிர்தலிங்கத்தையும் அவர் மனைவியையும் விமர்சித்திருந்தனர். திருமதி அமிர்தலிங்கம் மக்களை உசுப்பேற்றிவிட்டார் என்றும் அமிர்தலிங்கம் மக்களை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனையாக அவர் கொல்லப்படவேண்டியவர் என்று யாரோ நினைத்திருக்கிறார்கள்.


அமிர் – யோகேஸ் கொலைக்கு உரிமைகோரும் நேர்மை செய்தவர்களுக்கு இற்றைவரை இருக்கவில்லை.  இறுதி யுத்தம் முடிந்த பின்னால் வரலாற்றை அசைபோட்டுப் பார்ப்பவர்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொண்டிருப்பர்.  அமிர்தலிங்கத்தைக் கொல்வதற்கு இரண்டு காரணங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கு அவர் கொல்லப்படக்கூடாது என்பதற்கான இன்னுமொரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் தூரப்பார்வை இல்லாது போய்விட்டது.
அமிர்தலிங்கம் அவர்களின் இருபத்தைந்தாவது நினைவு தினத்தில் இன்னமும் அவரை விமர்ச்சிக்கும் தமிழ் அபிமானிகளின் நோக்கம் ஒன்றாகத் தான் இருக்க முடியும். அமிர்தலிங்கத்தின் கொலைக்கு நியாயம் கற்பிக்க ஒரே வழி அமிர்தலிங்கம் மீதான குற்றச்சாட்டுகளும் கடுமையான விமர்சனங்களும் தான். எக்காலத்திலும் அமிர்தலிங்கம் தொடர்பான அவரின் இதயசுத்தியான அரசியல் செயற்பாடுகள் வெளி உலகிற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்படக் கூடாது என்று அவரின் கொலையாளிகள் சார்ந்த ஆதரவுக் குழுக்களும் ஊடகங்களும் நினைக்குமாயின் அது தவறாகவே இருக்கும்.

அமிர்தலிங்கத்தினது யோகேஸ்வரனினதும் இருபத்தைந்தாவது நினைவு தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னமும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை.
அடுத்த வாரம்: அமிர்தலிங்கத்தின் ‘தங்குமடம்’




No comments: