.
திரு. ஹென்றி லாசன் |
பில் என்று அழைக்கப்படும் வில்லியம் ஸ்பென்சர், ஒரு கோடை நாளில் பள்ளிக்குப் போகாமல் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றுவிட்டான். ஆசிரியர் அவன் பள்ளிக்கு வராததைப் பற்றி அவன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி அதை வில்லியத்தின் தம்பியான ஜோ என்று அழைக்கப்படும் ஜோசப்பிடம் அவன் வீட்டுக்குச் செல்லும்போது கொடுத்துச் சொன்னார்.
“ஜோசப், இதை இன்றிரவு உன் அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.”
“சரி ஐயா.”
ஜோ பள்ளிவிட்டு வரும்வரை ஒரு சந்தில் காத்திருந்த பில் அவன் வந்ததும் அவனுடன் இணைந்துகொண்டான்.
“நீ அப்பாவிடம் கொடுக்க ஒரு கடிதம் வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”
“ஆமாம்.” ஜோ சொன்னான்.
“அதில் என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”
“ம்..தெரியும். நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை, பில்?”
“அதை அப்பாவிடம் கொடுக்குமளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லைதானே, ஜோ?”
“நான் கட்டாயம் கொடுக்கவேண்டும். கொடுப்பேன். நான் ஆசிரியரிடம் உறுதியளித்திருக்கிறேன்.”
“நீ கொடுக்காதது ஒருநாளும் அவருக்குத் தெரியவராது.”
“இல்லை. அவர் தெரிந்துகொள்வார். அவர் நம் வீட்டுக்கு சனிக்கிழமை வருவார். மேலும் நாளை என்னிடம் கேட்பார்.”
சற்று நேர மௌனம்.
“இங்கே பார், ஜோ. அடிவாங்கிக்கொண்டு, இன்றிரவு பட்டினி கிடக்க நான் விரும்பவில்லை. ஜானி நோலெட்டுடன் போஸம் வேட்டையாட வருவதாய் உறுதியளித்திருக்கிறேன். அவன் அவனுடைய துப்பாக்கியை எனக்கு சுடத் தருவதாக சொல்லியிருக்கிறான். விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம்.நான் அந்த வாய்ப்பைத் தவறவிட விரும்பவில்லை. இல்லையானால்… முன்பு போல் நான் மீண்டும் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன்.”
பில் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டான். ஜோ குழப்பத்தோடு அமைதியாக வந்தான்.
பில் மறுபடியும் முயன்றான். பயமுறுத்தியும், வாதிட்டும், கெஞ்சியும் பார்த்தான். ஆனாலும் ஜோ மிகவும் பிடிவாதமாக இருந்தான்.
“ஆசிரியர் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார், பில்!”
“ஜோ.. நான் உன்னைத் தர விடமாட்டேன்.”
ஜோ சங்கடத்தில் ஆழ்ந்தான்.
“நான் உன்னைத் தரவிடமாட்டேன், ஜோ.”
சென்ற வாரம் பில் தன்னிடம் எப்படி சண்டையிட்டான் என்பதை ஜோ நினைத்துப் பார்த்தான்.
“என்னால் அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழிக்கமுடியும். என்னால் நூறு பொய்கள் சொல்லமுடியும். ஒரு டஜன் பிரம்படி கூட என்னால் வாங்கிக்கொள்ளமுடியும். ஜோ, என்னால் முடியும்.”
ஜோ என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“என்னால் அதைவிடவும் அதிகமாக செய்யமுடியும். அது உனக்கும் தெரியும்,ஜோ.” ஜோவுக்குத் தெரியும்.
அவர்கள் அப்போது ஒரு பழைய சுரங்கநிலப்பகுதியைக் கடந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பாதையை ஒட்டி முப்பது அல்லது நாற்பது அடி ஆழ சுரங்கப்பள்ளமொன்று இருந்தது. ஏற்றங்கால் சட்டங்கள் உடைந்து புனல் வடிவில் சுரங்கப்பள்ளத்தின் உள்நோக்கி விழுந்துகிடந்தன.பழைய மரச்சட்டங்கள் சில ஐந்தடி ஆழத்தில் பள்ளத்துள் தாறுமாறாக சிக்கிக்கிடந்தன.
ஜோ சட்டென்று தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு கடிதத்தை எடுத்து அந்தப் பள்ளத்துள் வீசியெறிந்தான். அது படபடத்துப்போய் ஒரு பழைய மரச்சட்டத்தின் மீது நிலைகொண்டுவிட்டது. பில் அதைப்பார்த்தான். எதுவும் சொல்லவில்லை. தொலைவில் அவர்களுடைய தந்தை வேலைவிட்டு வருவதைப்பார்த்த இருவரும் அவசரமாக அகன்றனர்.
ஜோ மிகுந்த கவலையில் ஆழ்ந்தான். பில் அவனைத் தேற்றி உற்சாகப்படுத்த முனைந்தான். ஆனாலும் பலனில்லை. பில், தான் இனிமேல் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாமல் வெளியில் சுற்றமாட்டேன் என்றும் ஒருபோதும் சண்டைபோட மாட்டேன் என்றும் திருடமாட்டேன், பொய்சொல்லமாட்டேன் என்றும் பலவாறாக உறுதியளித்தான். ஆனால் ஜோ முதன்முறையாக, தான் ஒரு நம்பிக்கைத் துரோகத்தை செய்துவிட்டதை எண்ணி எண்ணி மருகினான்.அவனால் அவ்வளவு எளிதில் சமாதானமடைய இயலவில்லை.
பில்லுக்கு இரவில் விழிப்பு வந்து பார்த்தபோது, ஜோ அவனுடைய படுக்கையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.
“ஏன், என்ன விஷயம், ஜோ?”
“நான் இதுபோன்ற ஒரு மோசமான செயலை இதுவரை செய்ததே இல்லை.அந்தக் கடிதத்துடன் சேர்ந்து நானும் அந்தக் குழிக்குள் குதித்திருக்கவேண்டும்.ஆசிரியர் என்னை மிகவும் நம்பியிருந்தார், பில். நாளை அவர் கேட்கும்போது நான் பொய் சொல்லவேண்டும்.” விசும்பியபடியே ஜோ சொன்னான்.
“அப்படியானால் உண்மையைச் சொல், ஜோ. சொல்லிவிட்டு அடி வாங்கிக்கொள். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். இரண்டே இரண்டு பிரம்படிகள்! பிறகு எல்லாம் முடிந்துவிடும்.”
“இல்லை, என்னால் முடியாது. அவர் என்னை ஒருபோதும் இனி நம்பவே மாட்டார். நான் இதுவரை பள்ளியில் பிரம்படி வாங்கியதே இல்லை, பில்.அப்படி நான் அடிவாங்க நேர்ந்தால் அதன்பின் பள்ளிக்குப் போகவே மாட்டேன்.நீ ஏன் வீட்டை விட்டு ஓடிப்போகிறாய்? விஷம விளையாட்டுகளில் ஈடுபடுகிறாய்? திருடுகிறாய்? எங்கள் எல்லோருக்கும் பிரச்சனை உண்டாக்குகிறாய்? அம்மா இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்கிறார்கள் என்றோ அப்பாவை இது எவ்வளவு வேதனைப்படுத்துகிறது என்றோ உனக்குத் தெரியாது. இன்று உன்னால் ஆசிரியர், அம்மா, அப்பா அனைவருக்கும் நான்துரோகமிழைத்துவிட்டேன். எல்லாம் உன்னால்தான்... நீ இப்படி நடக்கும் காரணத்தால்தான். நீ ஒரு சுயநலமி!” சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்ட ஜோ அழுதபடியே உறங்கிப்போனான்.
பில் உறங்காமல் யோசித்தபடியே விடியும்வரை விழித்திருந்தான். பிறகுசத்தமில்லாமல் எழுந்து உடைகளை அணிந்துகொண்டு வீட்டை விட்டு எவரும் அறியாமல் வெளியே வந்தான். அவன் போஸம் வேட்டைக்குப் போவதாக நினைத்து, நாய் அவனைத் தொடர்ந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறும்வரையிலாவது நாய் அமைதியாக இருக்கவேண்டுமே என்று பில் நினைத்தான். அவன் அந்த சுரங்கப் பள்ளமிருந்த இடத்துக்குப் போனான்.மிகவும் எச்சரிக்கையாக மரச்சட்டங்களில் காலை வைத்து உள்ளே இறங்கினான்.
கோடைக்கால அதிகாலையின் வெளிச்சத்தில், மங்கிய வெண்ணிறத்தில் தென்பட்ட அந்தக் கடிதத்தைக் குனிந்து கையிலெடுத்தான். அந்த உளுத்துப்போன மரச்சட்டம் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டென முறிந்துஉள்வாங்கியதில், அவன் பிடிநழுவிப் பள்ளத்தில் வீழ்ந்தான்.
வீட்டினர் அவனை காலை ஒன்பது மணிவாக்கில்தான் கண்டுபிடித்தார்கள்.பழைய சுரங்கப்பள்ளங்களைக் கிளறித்தோண்டி ஆதாயம் தேடுபவன் ஒருவன் அந்தப்பக்கமாய் வர, நாய் குரைத்து அவன் கவனத்தைக் கவர்ந்து பில்லின் இருப்பைக் காட்டியது. பில்லை அவர்கள் மேலே கொண்டுவந்தபோது அவனுடைய வலக்கைக்குள் கடிதத்தை இறுகப்பிடித்து மறைத்திருந்தான்.அவர்கள் அவனை வீட்டுக்குக் கொண்டுசென்றார்கள். தந்தை மருத்துவரை அழைத்துவரச் சென்றார்.
பில் இயல்புநிலைக்கு வந்தபோது தாயிடம் சொன்னான், “அம்மா, நான் வீட்டை விட்டு ஓடிப்போகவில்லை. நான் தரையில் அமர்ந்திருந்த ஒரு போஸத்தைப் பிடிக்கத்தான் முயன்றேன் என்று அப்பாவிடம் சொல்லுங்கள்.ஜோ எங்கே? ஜோவை நான் பார்க்கவேண்டும். அம்மா நீங்கள் ஒருநிமிடம் வெளியே போய் ஜோவை அனுப்புங்கள்.”
“பில், நான் இங்குதான் இருக்கிறேன்.” ஜோ பயத்தில் தொண்டை அடைக்கச் சொன்னான்.
“ஆசிரியர் வந்துவிட்டாரா?”
“இல்லை.”
“கொஞ்சம் குனி, ஜோ. நான் அந்த கடிதத்தை எடுக்கத்தான் போனேன்.எல்லோரும் எழுவதற்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பிவிட எண்ணியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டைகள் முறிந்ததால் உள்ளே விழுந்துவிட்டேன். கடிதத்தை படுக்கைக்குப் பக்கமாக கீழே போட்டிருக்கிறேன்.நீயாகப் பார்த்து எடுப்பது போல் எடுத்துக்கொள். நேற்றிரவு அப்பாவிடம்அதைத் தர மறந்துவிட்டதாக சொல் அல்லது நீ அதைத் தரவிரும்பவில்லையென்று சொல். அது பொய்யாகாது. ஆசிரியரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல். இனிமேல் எந்தக் கடிதமும் கொடுத்தனுப்பவேண்டாமென்று சொல், பெண்களிடமிருந்து வரும் கடிதங்களைத் தவிர. அவ்வளவுதான். அம்மா! என் போர்வைகளை அகற்றிவிடுங்கள். எனக்கு மூச்சு முட்டுகிறது.”
*********
(ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய ‘The Master’s Mistake’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்)
Nantri geethamanjari.blogspot
No comments:
Post a Comment