.
தொலைந்துபோன வாழ்வை காற்றுவெளிக்கிராமங்களில்
தேடிய சமூகச்செயற்பாட்டாளன் கவிஞர் வில்வரெத்தினம்
வீதிகளுக்கு தனிநபர்களின் - பிரபல்யமானவர்களின் அரசியல் - தொழிற்சங்கத்தலைவர்களின் பெயர் -
மரங்கள் - மலர்கள் - ஆலயங்களின்
- தேவாலயங்களின் மசூதிகளின் விகாரைகளின் அல்லது தெய்வங்களின் பெயர்
சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கிறீர்கள்.
மனிதர்கள் அணியும்
பாதணி சப்பாத்து.
அந்தப்பெயரில் வீதி இருக்கிறது. எங்கே?
கொழும்பில் கொட்டாஞ்சேனைப்பிரதேசத்தில் ஜெம்பட்டா வீதி மிகவும் பிரசித்தம் . அந்த வீதி
முடிவடையும் இடத்தில் புனித அந்தோனியார் தேவாலயம். செவ்வாய்க்கிழமை அந்தோனியாரை வழிபடுபவர்களுக்கு முக்கியமான நாள்.
அன்றையதினம் அந்த வீதி
ஜனத்திரளினால் பரபரப்படைந்து
காணப்படும்.
அந்த வீதியில்
ஒரு
சிறிய வீதி திரும்புகிறது.
அதன்
பெயர் சப்பாத்து வீதி. ஆங்கிலத்தில் Shoe Road என அழைப்பார்கள். அங்கே 1970 களில் ஒரு இல்லம்
-
இலக்கியவாதிகளின் உரத்த உரையாடல் களமாக விளங்கியது.
சில வேளைகளில்
மதுரமான குரலில் பாடல்களும் அங்கு ஒலிக்கும். அந்த இல்லத்திலிருந்து அவ்வாறு இலக்கியக்குரலும்
இசைக்குரலும் மாத்திரமின்றி தரமான காலாண்டு இலக்கிய இதழும்
வெளியானது. அதன் பெயர் பூரணி.
அந்த வீட்டில் வசித்த
என்.கே.
மகாலிங்கம் அவர்களும் அவரது மனைவியாரும் தங்களை
சந்திக்கவருபவர்களுக்கு இலக்கியவிருந்துடன்
அறுசுவை விருந்தும் படைத்து இன்முகத்துடன் வழியனுப்பிவைப்பார்கள்.
பெயருக்கேற்றவிதமாக இலக்கியச்சிற்றேட்டில்
பூரணத்துவம் காண்பித்தமைபோன்று அந்த இல்லமும் இலக்கியவாதிகளுக்கான விருந்தோம்பலிலும் பூரணத்துவம் பெற்றிருந்தது.
பூரணியை இலக்கிய நண்பர்களுடன்
இணைந்து ஆரம்பித்த நண்பர் மகாலிங்கம் அந்த இல்லத்துக்கு பூரணி
என்ற
பெயரைச் சூட்டாமல் கனடாவுக்கு
புலம்பெயர்ந்துவிட்டார்.
தற்பொழுது அந்த இல்லத்தில் இலங்கையின் பிரபல தொழிற்சங்க
அரசியல் பிரமுகர் ஒருவர் வசிப்பதாக அறிகின்றேன்.
அந்த இல்லத்திற்கு அடிக்கடி வந்து இலக்கியம் பேசியவர்கள்
மு. தளையசிங்கம் அவரது தம்பி
மு.பொன்னம்பலம் - வில்வரெத்தினம் - சட்டநாதன்
- சாந்தன் - இமையவன்
ஜீவகாருண்யன் - சிவச்சந்திரன் - எஸ்.கே. பாலச்சந்திரன் - நேமிநாதன் - தங்கவேல் - சிவராசா
மாஸ்டர் - சந்திரசேகரம் மாஸ்டர் - டொமினிக் ஜீவா.... இப்படிப்பலர்.
இந்தப்பட்டியலில் இணைந்திருக்கும் கவிஞர் வில்வரெத்தினத்தை ஒரு மழைக்கால
மாலைவேளையில்தான் முதல் முதலில் அந்த இல்லத்தில் சந்தித்தேன்.
அந்த மழைநாளில்
அந்த
இல்லத்தின் படிகளில்
ஏறி கதவைத்தட்டுவதற்கு முனைந்தபொழுது உள்ளிருந்து
இனிமையான பாடல் ஒலிக்கிறது. ஆண்குரல். அந்தக்குரலில் சொக்கிப்போய் சில செக்கண்டுகள்
கேட்டுக்கொண்டு வெளியே நின்றேன். மழை சோவெனப்பொழிந்து தூவனத்தினால் நனைந்துவிட்டேன். தாமதிக்காமல் கதவைத்தட்டினேன்.
உள்ளே பாடல் நின்றது.
சுருள் முடி. வசீகரமான
முகம். கதவைத்திறந்தவர் யார்? எனக்கேட்டார்.
முருகபூபதி என்றேன். உள்ளே அழைத்தார்.
அவரது முகம்
பரவசமானது.
கண்கள் சிரித்து யாரையாவது பார்த்திருப்பீர்கள். ஆம் - அப்படித்தான். வில்வரெத்தினத்தின் கண்களும் சிரிக்கும்
இயல்புகொண்டது. அதனைத்தான் மந்திரப்புன்னகை
என்பார்களோ?
என்னை அமரச்செய்துவிட்டு - விரைந்துசென்று
திரும்பி என்னிடம்
ஒரு துவாயை நீட்டி
தலையை துடைத்துக்கொள்ளச்சொன்னார். அந்த அன்பின்
நெருக்கம் மறக்க முடியாதது. அதற்கு
முன்னர் நாம் சந்தித்துக்கொண்டதுமில்லை.
உங்களை நான் முன்னர் பார்த்ததில்லை. நீங்கள்...?
எனக்கேட்டேன்.
நானும் உங்களை முன்னர்
பார்த்ததில்லை. ஆனால் -
உங்கள் அந்தப்பிறவிகள் கதையை பூரணி இரண்டாவது இதழில் படித்தேன். படித்துவிட்டு ஒரு முதிய எழுத்தாளர்தான் அதனை எழுதியிருக்கவேண்டும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால்
உங்களைப்பார்த்து ஏமாற்றமடைந்துவிட்டேன் - என்று
வெளிப்படையாக பேசி தனது
பெயரையும் சொன்னார்.
சொற்பவேளையில் வெளியே சென்றிருந்த
மகாலிங்கம் தம்பதியரும் வந்தவிட்டனர். திருமதி மகாலிங்கம்
தந்த சுவையான பால் கோப்பி
உபசரிப்புடன் எமது இலக்கிய
உரையாடல் அன்று தொடங்கியது.
எனது வேண்டுகோளை
ஏற்று அவர் அன்று
சில பாடல்களைப்பாடினார். திருமதி மகாலிங்கமும் பாடினார். எல்லாம் நேற்று நிகழ்ந்த சம்பவங்களாக
மனதில் பசுமையாக
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பூரணி 1972 முதல் வெளியாகி
சில வருடங்களில் தனது ஆயுளை
நிறுத்திக்கொண்டது. அந்த இல்லத்தில் நான் 1972
ஆம் ஆண்டில் சந்தித்த கவிஞர் வில்வரெத்தினம் 2006 ஆம் ஆண்டு
தனது ஆயுளை நிறுத்திக்கொண்டார்.
இலங்கையில் இனநெருக்கடி உக்கிரமானதன் பின்னர்
எம்மவர் மத்தியில் அன்றாடம் இரண்டு
சொற்கள் பேசுபொருளாக இருந்தன. அவை: இடப்பெயர்வு
-
புலப்பெயர்வு.
வில்வரெத்தினம் தனது மூச்சை
நிறுத்திக்கொள்வதற்கு 11 வருடங்களுக்கு முன்னர்
வடக்கில் தனது இடப்பெயர்வு குறித்து இப்படி எழுதுகிறார்:
18-10-1992
இல் யாழ்ப்பாணத்தின் தீவுகள்
சிறைப்பிடிக்கப்படுவதற்கு முதல் நாள் மக்கள்
இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். மறுநாட் காலை ஊர் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நானும் யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்தேன்.
நம்பிக்கை பொய்யாயிற்று. ஊர் திரும்ப
முடியவில்லை. தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்த
பாலமும் துண்டிக்கப்பட்டாயிற்று. நான் துடித்துப்போனேன். ஊரில் என் குடும்பம். நானோ யாழ்ப்பாணத்தில். குடும்பத்தவருடன் இணையத்துடித்து துயரிடைக்கழிந்தன எட்டு
மாதங்கள். இந்தக்காலத்துயர் கவிதைகளாயின.
பெயர்வு நிகழ்ந்த
பின்னால் பெயர்வுற்றவர்களின்
துயரங்கள் - துன்பங்களையும் பிறந்தகம் குறித்த ஏக்கங்களையும் காலத்துயர்
பிரதிபலிக்கிறது.
கவிஞர் வில்வரெத்தினம் இந்த வரிகளை தமது
காலத்துயர் கவிதைத்தொகுதியில் 25-12-1995 ஆம் திகதி பதிவுசெய்துள்ளார்.
அதற்கு முன்னர் வெளியான அவரது காற்றுவெளிக்கிராமம்
கவிதை நூல் மக்களில்லாத பாலையாகிவிடும் கிராமங்களின் வெறுமை கொண்ட வாழ்வைப்பதிவுசெய்கிறது. ஒரே நிகழ்வின்
இருபக்க அவலங்களையும் பதிவுசெய்ய முடிந்தமை
குறித்து காலக்கடமையை செய்து முடித்ததாய்
ஒரு திருப்தி என்று அமைதிகொண்டவர் வில்வரெத்தினம்.
வில்வரெத்தினத்தின் மானசீக குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் தளையசிங்கம்.
தளையசிங்கம் தீவிர சமூக அக்கறையுள்ள செயற்பாட்டாளர்.
அவரைப்பின்பற்றிய கவிஞர் வில்வரெத்தினமும் அவரைப்போன்றே தமது ஊர் புங்குடுதீவை ஆழமாக நேசித்தவர்.
அங்கே மக்கள் நலன்சார்ந்த
சர்வோதய இயக்கத்தில்
தன்னை பூரணமாக இணைத்துக்கொண்டு இயங்கியவர். சர்வோதய இயக்க பாடல்களை மேடைகளில் பாடியவர். கடலும் வயலும் சார்ந்த அந்தத்தீவிலிருந்து - மறுநாள்
திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் - அருகே யாழ்ப்பாணம் சென்றுவிட்டு
திரும்பமுடியாத அபாக்கியவாதியாக மனம் குமுறினார். அந்தக்குமுறல் கவிதைகளாகவே
வெளிப்பட்டது. அவர்
தமது காற்றுவெளிக்கிராமத்தை எப்படி சித்திரிக்கிறார் பாருங்கள்.
முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச்
சூனியத்தைக் கண்டு
சூரியனே
திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து
விறைத்த
கட்டையெனக்
கிடக்கிறது
இக்கிராமம்.
கிராமத்தின்
கொல்லைப் புறமாய்
உறங்கிய
காற்று
சோம்பல்
முறித்தபடியே
எழும்பி
மெல்ல வருகிறது.
-------------
என்ன
நடந்தது?
ஏனிந்தக்
கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து
நின்றது காற்று
தேரடியில்
துயின்ற சிறுவன்
திருவிழாச்
சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க
விழித்தது போல.
-----------------
வழுக்கிக்
கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல்
கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப்
பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின
சொற்கள்.
பறியுண்ட
மூச்சு
மடியைப்
பிடித்து உலுக்குவதாய்
காற்று
ஒருகால் நடுங்கிற்று.
-------------
பக்கத்திருந்து
உறவுகள்
பால்
பருக்க
கால்
பிடிக்க
கை
பிடிக்க
தேவாரம்
ஓத
கோலாகலமாய்
பிரிகின்ற உயிர்
அநாதரவாய்
அருகெரியும்
சுடர் விளக்கின்றி
பறை
முழக்கமின்றி பாடையின்றி.....
அட சாவிலும்
கூட ஒரு வாழ்விருந்த
கிராமம் இது.
காற்று
பரிதவித்தது.
எங்கே
போயின இதன் உறவுகள்?
ஒன்றும்
விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும்
அகாலத்தில்தான்
மூட்டை
முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன
கதை.
-----------------
வீதியில்
தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய்
விலக்கியபடியே
மெல்ல
நடந்தது
காற்று
சொல்லிக்
கொள்ளாமல் போன புதல்வரைத்
தேடும்
சோகந்
தாளாத தாயைப் போல.
--------------
காற்று வெளிக்கிராமம்
1995 இல் கொழும்பில்
இயங்கிய விபவி
சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த
கவிதை நூலுக்கான விருதைப்பெற்றது.
சில மாதங்களுக்கு முன்னர்
மறைந்த
கலைஞர் கே. எஸ்.
பாலச்சந்திரனையும் வில்வரெத்தினத்தின் இக்கவிதை மிகவும்
கவர்ந்திருக்கிறது. பாதித்திருக்கிறது.
மென்மையான
இயல்புகள் கொண்ட கவிஞர்களிடமிருந்துதான் இத்தகைய ஈரலிப்பான
கவிதைகள் பிறக்கும்.
1995 இல் தமிழ்நாட்டில் வெளியான
எனது நெஞ்சில்
நிலைத்த நெஞ்சங்கள் நூலை நண்பர்
மகாலிங்கத்தின் பூரணி வெளியான இல்லத்தில் நான் சந்தித்தவர்களிடம் சேர்ப்பிப்பதற்கு நீண்ட நாட்கள் முயன்றேன்.
அந்த நூலில் தளையசிங்கம் பற்றியும்
ஒரு கட்டுரை எழுதியிருந்தமைதான் முக்கிய காரணம். போர்க்காலச்சூழலில் யார் யார் எங்கே
இடம்பெயர்ந்தார்கள்? எங்கே புலம்பெயர்ந்தார்கள்? முதலான தகவல்கள் எதுவும்
தெரியாத நிலையில் கொழும்பிலிருந்த நண்பர் தெளிவத்தை
ஜோசப் அவர்களுக்கு சில பிரதிகளை அனுப்பினேன்.
அவர் அவற்றில்
ஒரு
பிரதியை கொழும்பிலிருந்த தளையசிங்கத்தின் தம்பி
மு. பொன்னம்பலத்திற்கும் திருகோணமலைக்கு
இடம்பெயர்ந்துவிட்ட வில்வரெத்தினத்திற்கும்
சேர்ப்பித்திருக்கிறார்.
அதனைப்படித்துவிட்டு - வில்வரெத்தினம் எனக்கு
எழுதிய பதிலும் இடப்பெயர்வு இலக்கியத்தின்
அடையாளமாக என்வசம்
இன்றும் இருக்கிறது. கவிஞனுக்கேயுரித்தான
அந்தப்பதிலில் இவ்வாறு எழுதியிருந்தார்:-
......இந்தத்
தாமதம்
தங்களுக்கு பல விதமான கற்பனார்த்தங்களுக்கு இடம் தந்திருக்கும் எனின் சிரமத்திற்கு
எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்ள
நான் கடமைப்பட்டுள்ளேன்.
...... தற்போது இங்கு நாம்
வாழும் வீடு வாடகை
வீடு. வருடத்துக்கு ஒரு முறை வீடுகள் - கிரகங்கள் வீட்டுக்கு வீடு மாறிக்கொள்வது போல பெயர்வதும் ஒவ்வொரு
பெயர்விலும் புதிய வீட்டிற்கு செலுத்தவேண்டிய வாடகை முற்பணம்....
இவற்றின் அதிகரிப்பு வேறு. எனவே வீடு தேடும்
படலம் ஒரு புறம்.....
இவற்றினிடையே
தொலைந்துபோய்விடுகின்ற வாழ்வையும் தேடுதல். சொல்லுங்கள். - இவற்றினிடையேயும் எழுத்திற்கும் - நெருக்குவாரப்படுத்தும் கவிதைப் பிரசவங்களிற்கு சிறிது அவகாசம் நல்குவது தவிர - மிகைப்பட வழங்க நேரம்
அற்றுத்தவிக்கின்றேன்.
பெயர்வு பற்றி குடும்பத்தைப்பிரிந்திருந்தமை பற்றி எழுதியிருந்தீர்கள். இவை நமக்கு மட்டும் பிரத்தியேகமல்லவே. இங்கு சகலர்க்கும்
அல்ல. - எனினும் பெரும்பாலோர்
கூறுவது நாம் இவற்றை
கலைப்பணி மூலம் ஆவணப்படுத்துகிறோம்.
உள்ளார்ந்த
படைப்பாளி - கவிஞன் - சமூகச்செயற்பாட்டாளன் தான் எங்கே வாழ நேரிட்டாலும்
ஒதுங்கி ஓய்ந்துவிடமாட்டான். கவிஞர் வில்வரெத்தினமும் அவ்வாறே திருகோணமலைக்கு
இடம்பெயர்ந்த பின்னரும்
இயங்கியவாறிருந்தவர்.
அங்கே சில நாடகங்களை எழுதி தமது நெறியாள்கையில்
அரங்கேற்றியிருக்கிறார். தமிழ்த்தின விழாவில் அவரது தோப்பிழந்த கதை
என்ற நிகழ்வு அகில இலங்கைப்போட்டியில்
முதலிடம் பெற்றிருக்கிறது. கிழக்கு மாகாண சபையின் கலாசாரப்பணிகளுக்கான முன்வரைவு
திட்டப்பட்டறை நிகழ்வுகளிலும் பங்கேற்று பணியாற்றியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர்
வில்வரெத்தினத்தை 1998 ஜனவரியில்
கொழும்பில் வெள்ளவத்தை
இராமகிருஷ்ண மண்டபத்தில் கம்பன் விழாவில் சந்தித்தேன். அவரது உருவத்தில் சிறிய மாற்றம்
இருந்தபோதிலும் அவருடைய மந்திரப்புன்னகையில் மாற்றம்
ஏதும் இல்லை.
கம்பன் விழா - இரவு நிகழ்ச்சி கவியரங்கு வர்ணங்களின் தலைப்பில் தமிழ்நாட்டைச்சேர்ந்த நெல்லைக்கண்ணன்
தலைமையில் நடந்தது.
வில்வரெத்தினமும் கவியரங்கில்
பங்கேற்றார். நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின்னர் அவரது மதுரமான குரலை
அன்று கேட்டேன்.
2004 இறுதியில் சுநாமி கடற்கோள்
அநர்த்தத்தின் பின்னர் 2005 முற்பகுதியில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும்
கிழக்கிலங்கைக்குச்சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு திருகோணமலைக்கு
சென்றதும் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த
சட்டத்தரணி சிவபாலனை சந்தித்தேன்.
அவர் வில்வரெத்தினத்துடன்
பேசுவதற்கு தொலைபேசி இணைப்பு தந்தார். சிறிது நேரம்
உரையாடினேன். மறுநாள்
அதிகாலையே அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு
பல்கலைக்கழகத்திற்கும் வேறு
பிரதேசங்களுக்கும் செல்ல வேண்டிய நிகழ்ச்சிநிரல் இருந்தமையினால் அவரை நேரில் சந்திக்கமுடியாமல் போய்விட்டது.
அன்று இரவு தொலைபேசியில் கேட்ட அந்த இனிய
குரல் சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில்
நிரந்தரமாக மௌனமாகிவிட்டது. அவர் தமது 56
வயதில் மறைந்தார்.
2007 ஜூன் மாதம் வெளியான
காலம் ( கனடா) மலரில் நண்பர் பூரணி மகாலிங்கம் வில்வரெத்தினம் பற்றிய
உருக்கமான கட்டுரையை எழுதியிருக்கிறார்.
அதற்கு அவர் இட்ட தலைப்பு வில்வரெத்தினம் அடிக்கடி பாடும்
மலர்கள்
நனைந்தன பனியாலே...
பல வருடங்களுக்கு முன்னர் வெளியான
இதயக்கமலம் திரைப்படப்பாடல் மலர்கள்
நனைந்தன பனியாலே..
நிலாக்காலங்களில் புங்குடுதீவு வயல்வெளிகளில்
வில்வரெத்தினத்தின் குரலில் ஒலித்த அந்தப்பாடல்
அங்கு பலரதும் இதயத்தை ஊடுருவியிருக்கும் என்பதை மகாலிங்கம் எழுதிய அந்தப்பதிவு எமக்கு
உணர்த்துகிறது.
கவிஞர் வில்வரெத்தினம் அவர்களின் குரல் மக்கள் இடம்பெயர்ந்த
அவர் பதிவுசெய்த காற்றுவெளிக்கிராமங்களில்
மட்டுமல்ல எமது மனங்களிலிலும் இன்றும்
ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.
---0---
-
No comments:
Post a Comment