முடிந்துபோன பிரியத்தின் துயரப்பாடல்....

.


தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய்
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும்
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து
ஒளிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அவை
உன்னிடம் கொடுப்பதற்காக
மழை நேர தேனீர்போல
எப்போதும் என்னிடம் இருக்கும்
எல்லையற்று நீண்ட அன்பையும்
ஆகாயத்தையும்
சொல்ல சில கதைகளையும்
முடிந்துவிட்ட பிரியத்தின்
கடைசி சொட்டில்
அடைகாத்து வைத்திருக்கும்...

நமக்கான பயணங்களில்
இசையொழுகிய தருணங்களை
லயித்தபடி
மழைக்காற்றின் ஈரம்போல
நான் சுமந்திருப்பேன் காதலை
மழையை
முற்றும் உறிஞ்சிய நிலம்போல
நீ வெடித்துக்கிட
அன்பின் வறட்சியில்...

No comments: