சிறில் ரமபோஷா யாழ். விஜயம்
எமக்கு எதுவுமே வேண்டாம்; பிள்ளைகளை மட்டும் எம்மிடம் ஒப்படைத்தால் போதும்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை
போரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன
'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்"
அளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை
எழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை
மலையகத்தில் சீரற்ற காலநிலை
எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை
நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்
ஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்
==================================================================
சிறில் ரமபோஷா யாழ். விஜயம்
08/07/2014 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோஷாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு வருகைதந்தனர்.

இதன்போது உலங்குவானூர்திகளில் வருகைதந்த சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த சமயம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ரமபோஷா வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலை நடாத்தவுள்ளார்.
இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
நேற்று இலங்கைக்கு வருகைதந்த ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்து.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரிஎமக்கு எதுவுமே வேண்டாம்; பிள்ளைகளை மட்டும் எம்மிடம் ஒப்படைத்தால் போதும்
08/07/2014 புதுமாத்தளன் பகுதியில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஷெல் தாக்குதலில் தனது 5 பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதே தாக்குதலில் படுகாயமடைந்த
கணவரை மாத்தளன் பாடசாலையில் இயங்கிய வைத்தியசாலையில் தவறவிட்டதாகவும் முல்லைத்தீவில் பெண்ணொருவர் நேற்று ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

இதேவேளை எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எங்களுடைய பிள்ளைகளை மட்டும் திரும்ப எங்களிடம் ஒப்படையுங்கள் என ஆணைக்குழுவிடம் உருக்கமாக மன்றாடிய தாயார் ஒருவர் தாம் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் சுமார் 4 தினங்களாக சீரான குடிநீர் கிடைக்காத நிலையில் உணவுகள் எதுவுமின்றி பசியுடன் வாடியதாகவும் சாட்சியமளித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த அமர்வுகளில் சாட்சியமளிப்பதற்காக நேற்றைய தினம் 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணையில் புதுமாத்தளன் பகுதியைச்சேர்ந்த பாபு காளியம்மா என்ற பெண் சாட்சியமளிக்கையில்,
நாம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாலாம் மாதம் புதுமாத்தளன் பகுதியில் வசித்தபொழுது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டோம். இந்த ஷெல் தாக்குதலில் நான் எனது 5 பிள்ளைகளைப் பறிகொடுத்துள்ளேன். இதே ஷெல் தாக்குதலில் கணவரும் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை நாம் மாத்தளன் பாடசாலையில் இயங்கிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் செல்கின்றபோது அந்த வைத்தியசாலையில் பிணக்குவியல்களும் இரத்தமுமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நாம் படுகாயமடைந்த கணவரை அங்கு ஷெல் தாக்குதலின் அகோரத்தினால் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கு எட்டுப் பிள்ளைகள் பிறந்தார்கள். நான் ஐவரை ஒரே ஷெல்லில் பறிகொடுத்துள்ளேன். எனவே எனது கணவரை என்னிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என ஆணைக்குழுவின் முன்னிலையில் மன்றாட்டமாக தனது கோரிக்கை முன்வைத்தார்.
நேற்றை அமர்வில் வற்றாப்பளையைச் சேர்ந்த வேலாயுதம் இரத்தினம்மா என்ற பெண் சாட்சியமளிக்கையில்,
நான் எனது மகளான ஜெய்பிரியா என்பவரை கடந்த 3.5.2009அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் தவறவிட்டுள்ளேன். இதேபோல் எனது மகனையும் ஷெல் தாக்குதலில் பறிகொடுத்துள்ளேன். எனக்கு எனது பிள்ளைகளைத் தவிர எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை. என்னுடைய பிள்ளையை என்னிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றார்.
இதேவேளை அம்பலவன்பொக்கனையைச் சேர்ந்த திருமதி யோகராஜா சாட்சியமளிக்கையில்,
கடந்த 8.4.2009 அன்று அம்பலவன்பொக்கனைப் பகுதியில் பிரியந்தன் என்ற எனது மகனை யுத்தத்தினால் தொலைத்துவிட்டேன். அதன்பின்னர் நாம் இராணுவத்திடம் சரணடைந்தோம். இராணுவத்திடம் சரணடைந்த அன்றிலிருந்து சுமார் நான்கு நாட்களாக எமக்கு உணவுகள் கிடைக்கவில்லை. குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் நாம் மிகவும் பாதிப்படைந்திருந்தோம். எனக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம். எனது பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றார்.
இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்த செல்லன் கந்தசாமி என்பவர் சாட்சியமளிக்கையில்,
எனது மனைவியான விக்னேஸ்வரி முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2009.5.14 அன்று குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார். அவரைக் காப்பாற்றும் நோக்குடன் நாங்கள் 2009.5.17 அன்று அவரையும் தூக்கிக் கொண்டு வட்டுவாகல் பகுதியை நோக்கி நடந்து சென்றோம். அப்பொழுது அங்கே இராணுவத்தினர் எம்மை இடை மறித்தனர். எனது மனைவியை தாங்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகவும் எம்மை பிரிதொரு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் இராணுவம் எனக்குத் தெரிவித்தது. ஆனால் நான் எனது மனைவியுடன் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முயற்சித்தேன். அப்பொழுது இராணுவத்தினர் எனக்கு தடியால் அடித்துத் துரத்தினர்.
அன்றிலிருந்து எனது மனைவியைக் காணவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நான் தற்பொழுது மிகவும் பாதிப்படைந்துள்ளேன். எனவே எனது மனைவியை மீட்டுத்தாருங்கள் என்றார்.
இதேபோல் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்சியமளிக்கையில்,
மகிந்தன் என்ற தனது மகன் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும் அவர்களின் கட்டளைக்கமைய மணலாறு பகுதியில் வேவு நடவடிக்கைகளுக்காக தனது மகன் சென்றதாகவும் அவரை அன்றிலிருந்து காணவில்லை எனவும் தெரிவித்தார்.
தன்னுடைய மகன் உயிருடன் இருந்தால் அவரை மீட்டுத் தருமாறும் ஆணைக்குழுவிடம் கோரினார்.
இதேவேளை நேற்றுச் சாட்சியமளித்தவர்களில் பலர் தங்களுடைய குழந்தைகளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து தொலைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இவர்களில் சிலர் விடுதலைப் புலிகள் வீட்டுக்கொருவரைப் போராட வேண்டும் என அழைத்தபொழுது தாம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தாகவும் தெரிவித்தனர். இவ்வாறு உறவுகள் தெரிவித்த பொழுது ஆணைக்குழுவின் அதிகாரிகள் விடுதலைப் புலிகள் படைக்கு ஆட்களைச் சேர்த்தபொழுது பணம் ஏதாவது வழங்கினார்களா என்ற வினாவையும் எழுப்பியிருந்தனர்.
இவேளை தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தருமாறு சாட்சியமளிக்கையில்,
கடந்த 2009.03.15 ஆம் திகதி வலைஞர்மடத்தில் இருந்த போது கடைக்கு போவதாக கூறி வீட்டை விட்டுச் சென்றவர் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இறுதிக்கட்டம் வரை மகன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.
நாங்கள் இருந்த பகுதியில் நாலாபக்கத்தில் இருந்தும் ஷெல் விழுந்து கொண்டே இருந்து.மகனை பார்த்தும் மகன் வரவில்லை. கடைசியாக தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றேன். அப்போது எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
இன்னும் எனது மகன் குறித்து எதுவும் தெரியாது. நான் தனிய இருப்பதால் அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த வாழ்வாதாரத்திட்டம் என்றாலும் தனியாட்களுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நான் இப்போது கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடாத்துகின்றேன். வேறு யாரும் எனக்கு உதவி இல்லை.
எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என்றார்.
நன்றி வீரகேசரி
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை
07/07/2014 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிறிஸ்மஸ் தீவு பகுதியை 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் சென்றடைந்திருந்தனர்.
சிட்னி உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது உயர் நீதிமன்ற நீதவான் சுசான் கிரினானன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களில் 45 பேரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய 105 புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்த இடைக்கால தடையுத்தரவு நாளை மாலை 4.00 மணி வரையில் மட்டுமே அமுலில் இருக்கும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளைய தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்களை ஆபத்தில் விடக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
நன்றி வீரகேசரி
போரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன
07/07/2014 போரின் இறுதி நாட்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நாம் வந்த பின்னர் கூட இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருந்தன.

பல ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்களைக் கடந்தே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றோம்.
சொல்லொணாத்துன்ப துயரங்களை அனுபவித்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று அவர்களிடம் எமது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு இன்றும் அவர்களை தேடி அலைகின்றோம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தமது ஆதங்கங்களை கண்ணீருடன் கொட்டித் தீர்த்ததோடு இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை கண்ணால் கண்ட சாட்சியாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்குப் பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் அதன் தலைவர் மக்வேல் பராக்கிரம பரணஹம தலை மையில் ஆணையாளர்களான மனோராமநாதன், சுரண்யா வித்யவத்னே ஆகியோரின் முன்னிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை இடம்பெற்றது.
நேற்று 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டடிருந்த போதும் 29 பேரே விசாரணைக்கு சமுகமளித்திருந்தனர்.
புதிதாகப் பதிவு
இதேவேளை 85 பேர் நேற்று புதிதாக பதிவினை மேற்கொண்டிருந்தனர் என்று ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி புதிதாக பதிவு செய்தவர்கள் மற்றும் நேற்றைய தினமும் நேற்று முன்தினமும் விசாரணைக்கு சமுகமளிக்காதவர்களுக்கு எப்போது விசாரணை என்பதை கொழும்புக்குச் சென்றுதான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்ற ஆணைக் குழுவினரின் விசாரணைக்கு மொத்தமாக 122 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 56 பேர் மட்டுமே விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்தனர்.
தொடர் அச்சுறுத்தல்
மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்கவிடாது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு ரி.ஐ.டியினர் மற்றும் புலனாய்வுத்துறையினர், இனம்தெரியாத நபர்களினால் விடுக்கப்பட்டு வந்த தொடர் அச்சுறுத்தலே இதற்கு காரணமாக அமைந்திருந்தது எனச் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்தவர்களில் சிலர் இரா ணுவத்தினருக்கு எதிராக துணிந்து தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இராணுவம் மீது குற்றச்சாட்டு
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சாட்சியப்பதிவின்போது சமுகமளித்த 25 பேரில் சுமார் 18 பேர்வரை இராணுவத்தினர் மீது நேரடியாக குற்றம் சாட்டிருந்தனர்.
ஏனையோர்களில் சிலர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தனது சாட்சியங்களில் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரண்டாம் நாள் விசாரணை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது சமுகமளித்த 29 சாட்சிகளில் 15 இற்கும் மேற்பட்ட சாட்சியங்கள் இராணுவத்தினர் மீதும் 8 இற்கும் மேற்பட்ட சாட்சியங்களின் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஏனையவையாரால் தமது உறவினர்கள் காணாமற் போனவர்கள் என்றும் தெரியாது என்றும் சாட்சியமளித்திருந்தனர்.
தனது தம்பியையும் அக்காவின் மகளையும் காணவில்லை என்று சாட்சியமளித்த அன்ரன் வினோத் மேரி கொன்ரா என்பவர் தெரிவிக்கையில், கடந்த 2009-ம் ஆண்டு சித்திரை மாதம் 23-ம் திகதி வளைஞர்மடம் பகுதியில் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் நாம் செல்லும்போது இரணைப் பாலைப்பகுதியில் எனது தம்பியான ரவியும் அக்காவின் மகளான சுரே ந்திரனும் தவறப்பட்டுவிட்டனர்.
இரணைப்பாலையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நாம் செல்லும் வழியில் வீதியோரங்கள் எல்லாம் பலரது சடலங்களைக் காணக்கூடியதாகயிருந்தது. ஆனால் எனது தம்பியினதும் அக்காவின் மகனின் சடலத்தையும் யாரும் காணவில்லை.
இதேவேளை இராணுவக்கட்டுப்பாட்டுக்கள் நாம் வந்தபோது இராணுவத்தினரின் பதிவில் அவர்கள் எமக்கு முன்பே உட்சென்று விட்டனர் என்பதை அறியமுடிந்தது.
அன்றியிருந்து பல முகாம்களிலும் வேறுபல இடங்களிலும் அவர்கள் இருவரையும் தேடிச்தேடி அலுத்து விட்டேன் என்றார் கண்ணீர் விட்டபடி.
தாக்குதலின் மத்தியில் சரணடைந்தனர்
செல்வம் நகுலேஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன் பிரதீபன் (வயது 19) 2009 .03. 25 ஆம் திகதி அம்பலவன் பொக்கணைப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
இராணுவத்தினரின் பகுதியிலிருந்து ஷெல் தாக்குதல் மழை போல் பொழிந்து கொண்டிருந்த நிலையில் எனது மகன் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார் என்றார்.
க.ஆறுமுகம் என்ற வயோதிபர் சாட்சியமளிக்கையில், எனது மகனான பிரசாத் 2009.01.19 ஆம் திகதி காணாமற்போயிருந்தார் அவர் எங்கு போனார் என்று தெரியாது.
ஒரே ஷெல்லடி. அடிக்கடி ரவுண்டப் நாங்கள் எங்கபோய் தேடுவது என்று தெரியாமல் நாங்கள் எல்லாரிடமும் சென்று கேட்டும் விட்டோம்.
எல்லா இடமும் தேடியும் விட்டம். இப்ப உங்களிடமும் வந்திருக்கின்றோம் எந்தப்பதிலும் நீங்களும் தரவில்லை என்று சாட்சியமளித்த போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர், நீங்கள் உங்கட பிள்ளையை தேடவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர் எங்க போய் நான் தேடுவது எல்லாம் அவர்கள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்களே ஷெல்ல டியில் பலர் இறந்து கொண்டு இருக்கும் போது நான் எங்கு போய் தேடுவது என்று ஆணைக்குழுவினடம் பதில் கேள்வியெழுப்பினர்.
இவ்வாறு பலர் நேற்று இடம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட் சியமளித்திருந்தனர்.
அதேவேளை இறுதிப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கில் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் தாம் வந்த பிற்பாடும் ஷெல் தாக்குதல்களும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமேயிருந்தன.
இதில் பல ஆயிரக்கணக்காணவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் சடலங்களை கடந்தே நாம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றோம் என்று சாட்சியமளித்த போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர், யார் பகுதியிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த காணாமற் போனவர்களின் உறவினர்கள் இராணுவத்தினரின் பகுதிக்குள் இருந்தே ஷெல்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இறுதிப் போரில் நடந்த கொடூரங்க ளையும் உயிர் பலியையும் விபரித்தனர்.
பலர் குடும்பங்களுடன் ஷெல் தாக்குதலில் உடல் சிதறிப் பலியானதாகவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தனர்.
நன்றி வீரகேசரி
'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்"
07/07/2014 எனது கணவர் காணாமல்போகவில்லை நான்தான் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். மனிதநேயமுள்ள அரசாங்கமாகயிருந்தால் மனித நேயமுள்ளவர்களாக இராணு வத்தினர் இருந்தால் பொறுப்புடன் பெற்றுக்கொண்ட எனது கணவரை உயிருடன் திரு ப்பித் தர வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று சாட்சியமளித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 - மே - 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடக்குக் கிழக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
விசாரணையின் ஆரம்பத்தில் ஆணைக்குழுவினரால் யார் காணாமற்போயுள்ளார் என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட குறித்த பெண் எனது கணவர் காணாமல் போகவில்லை அவரை இராணுவத்தினரிடம் நானே ஒப்படைத்தேன் என்றார்.
தொடர்ந்து சாட்சியமளித்த குறித்த பெண் எனது கணவரான வசந்தனை கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணு வத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன்.
அப்போது மதியம் 1.30 மணியிருக்கும் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது அவருக்கு 35 வயது என்றார் ஜெயீனா என்ற இளம் குடும்பபெண்.
ஏன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தீர்கள் என்று ஆணைக்குழுவினர் மறுபடியும்; கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அந்தப் பெண், போராளிகள் தாமாக முன் வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் பகிரங்கமாக ஒலி பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டு இருந்தனர். இதன் காரணமாக எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன் என்றார்.
இதன்போது உங்கள் கணவர் போராளியா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப ஆம் என்று பதிலளித்தார் அந்தப் பெண்.
அதேவேளை 5 வருடங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தார். பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து எம்முடம் சேர்ந்து விட்டார் என்றும் இராணுவத்திடம் சரணடையும் போது விடுதலைப்புலிகளுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்வும் இல்லை என்றார்.
இதன்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் விடுதலைப்புலிகள் குடும்பங்களுடன் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனரா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
ஆம், என் கணவர் மட்டும் அல்லாது பலர் அவ்வாறு குடும்பங்களுடன் இறுதிக் கட்டத்தில் இணைந்து விட்டனர் என்றார் அந்தப் பெண்.
மேலும் தனது சாட்சியத்தை தொடர்ந்த அந்தப்பெண் இராணுவத்தினரிடம் கையளித்த (ஒப்படைத்த) எனது கணவரை பொறுப்புள்ள, மனிதாபிமான அரசாங்கம் என்றால், மனிதாபிமானமுள்ள இராணுவத்தினர் என்றால் உயிருடன் நான் கையளித்த எனது கணவரை உயிருடன் என்னிடம் மீண்டும் தர வேண்டும்.
எனது கணவரை இராணுவத்தினரிடம் நான் ஒப்படைத்தபோது எங்களையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு நான் கேட்டேன். ஆனால் இராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
விசாரணையின் பின்னர் விட்டுவிடுவதாகவும் கூறிச் சென்றனர். எனது கணவரை இராணுவத்தினர் தனது பேருந்தில் கொண்டு செல்லும் போது அந்தப் பேருந்துக்குள் பலர் இருப்பதை என் கண்களால் கண்டேன்.
இவ்வாறு அந்தப் பெண் கூறிய போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் யாரிடம் உங்கள் கணவரை ஒப்படைத்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், இராணுவச் சீருடையில் நின்றவர்களிடம் தான் எனது கணவரைநான் ஒப்படைத்தேன்.
ஆனால் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியாது. அதேவேளை பெயர் மற்றும் அவர்களின் பதவி நிலைகளை அறியக் கூடிய நிலையில் இராணுவத்தினர் இல்லை என்றார்.
இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இராணுவத்தினர் உள்ளனரா? உங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப, எனக்கு அம்மா, அப்பாதான் பாதுகாப்பு இராணுவத்தினரின் பாது காப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று சட்டென்று பதிலளித்தார்.
நன்றி வீரகேசரி
அளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை
09/07/2014

அளுத்கம முஸ்லிம் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அளுத்கம பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளதாக இராணுவ ஊடக பணிப்பாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் அளுத்கம பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றமையால் பல சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. குறிப்பாக வீடுகள் மற்றும் கடைகள் சேதமாக்கப்பட்டன. இப்பகுதிகளில் புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த புனரமைப்பு பணிகளுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. எனவே மக்களி;ன் கோரிக்கை இணங்க நாம் அங்கு இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளோம். நாட்டின் பாதுகாப்பு கருதி பல நிரந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் இங்கு அமைக்கப்படும் இராணுவ முகாம் தற்காலிகமானதே என்றார்.
நன்றி வீரகேசரி
எழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை

வீதிப்பெயர்ப் பலகையில் 'பல்கலைக்கழக வீதி" என பொறிக்கப்பட வேண்டியது 'பல்லைக்கழக வீதி" என எழுத்துப் பிழையுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
மலையகத்தில் சீரற்ற காலநிலை

இதனால் இன்று காலை 8 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததினால் அவ்வீதியினுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரத்தை வெட்டி அகற்ற தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
நன்றி வீரகேசரி
எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆஸி.யின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் நேற்று கொழும்பு துறைமுகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு ரோந்து படகுகளின் செயற்பாடுகளையும் இதன்போது ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து கூட்டாக செயற்படுவதாகவும் அந்த கூட்டு செயற்பாடு தொடர்வது அவசியம் என்றும் ஆஸி. அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஸ்கொட் மொரிஸன்:
''பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கை அடைந்துள்ள மட்டம் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்திலான முன்னேற்றம் தெரிகின்றது. மேலும் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
அரசியல் செயற்பாடுகளை பொறுத்தமட்டில் உள்நாட்டில் இருந்து வருவதே சிறப்பாக இருக்கும்.
அந்தவகையில் யுத்தத்துக்கு பின்னரான நிலைமையில் இலங்கைக்கு எந்தவொரு வழியிலும் உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருக்கின்றது'' என்று குறிப்பிட்டுள்ளார்.முதற் தடவையாக
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிவேக பாதையில் பயணித்த அனுபவம் குறித்து குறிப்பிட்ட ஆஸி. அமைச்சர் மொரிஸன் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முறையான உட்கட்ட
மைப்பு வசதி முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இரண்டு ரோந்து படகுகளை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச மேடைகளில் வழங்கிவரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித்த அபேகுணவரத்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுக்கா செனவிரட்ன, கூட்டுப் படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, இராணு
வத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை

இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புக்களும் சிவில் சமூக நிறுவனங்களும் தமது ஊடக செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு குறித்து அமெரிக்கா கவலையடைகின்றது.
இந்த உத்தரவானது பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளடங்கலான இலங்கையின் நீண்டகால ஜனநாயக விழுமியங்களை வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளது.
இலங்கையின் ஜனநாயக விழுமியங்களுக்காக அளப்பரிய பங்கினை அளிக்கும் சிவில் சமூக நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
நன்றி வீரகேசரி
நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்

அவுஸ்திரேலியாவை சென்றடைவதற்கான பயண முயற்சியின் பெறுபேறாக 41 இலங்கையர்களைக் கொண்ட குழு தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகையில் அவர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டதாக தான் நினைக்கவில்லையென அவர் கூறினார்.
அந்த குற்றச்சாட்டுக்கள் கோபமூட்டுவதற்கான செயற்பாடு என்பதை நான் கண்டறிந்துள்ளதுடன் அவற்றை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என ஸ்கொட் மொரிஸன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு இரு படகுகள் அவுஸ்திரேலியாவினாலும் நன்கொடையாக வழங்கப்படுவது தொடர்பான வைபவத்தில் பங்கேற்ற பின்னர் கொழும்பு துறைமுகத்தின் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முந்திய அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட உறுதிப்பாடுகள் அடிப்படையில் எமக்கு தாய்நாடு திரும்பும் குடியேற்றவாசிகள் துப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற கவலை கிடையாது என ஸ்கொட் மொரிஸன் மேலும் கூறினார். தமது படகு திரும்பப்பட்டப்பின் தாம் நடுக்கடலில் அவுஸ்திரேலியா அதிகாரிகளால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாகவும் குறைந்தளவு உணவே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தம்மை நாய்களை விடவும் மோசமான முறையில் நடத்தியதாகவும் சில குடியேற்றவாசிகள் செவ்வாய்க்கிழமை உரிமை கோரியிருந்தனர்.
அந்த குடியேற்றவாசிகளில் சிலர் தாம் வேலைக்காக நியூஸிலாந்திற்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் தாம் சுங்க உத்தியோகத்தர்களால் இன ரீதியாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு பழைய உணவு வழங்கப்பட்டு முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
4 பெண்கள், 9 சிறுவர்களை உள்ளடக்கிய மேற்படி குடியேற்றவாசிகள் குழு கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பியிருந்தது. அந்தக் குழுவினர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இதன்போது சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதும் ஏனையவர்கள் ஆகக் கூடியது இருவருட சிறைத்தண்டனைக்குரியதான குடிவரவு சட்டத்தை மீறிய ஆரம்பக்கட்ட குற்றச்சாட்டை எதிர் கொண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் ஒரு தசாப்தகால பிரவினைவாதப்போர் 2009 இல் முடிவடைந்ததையடுத்து துன்பத்துக்குள்ளாகி வந்தவர்களை உள்ளடக்கிய சிறுபான்மை தமிழர்களை விடவும் பெரும்பான்மை சிங்களவர்களே அதிகளவில் உள்ளனர்.
இந்த குடியேற்றவாசிகள் கையளிக்கப்பட்ட விவகாரத்தால் அவுஸ்திரேலியர்களும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
குடியேற்றவாசிகளின் அகதி அந்தஸ்து தொடர்பான பரசீலனை கப்பலில் வைத்து மேற்கொள்ளப்படுவது சர்வதேச சட்டத்தின் கீழ் சரியான ஒன்றல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்ளை வெற்றிகரமானதாக உள்ளதாகவும் கடந்த சுமார் 7 மாதங்களாக அவுஸ்திரேலியாவை ஆட்கடத்தலில் ஈடுபடும் படகுகள் எதுவும் வந்தடையவில்லை எனவும் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்தார்.
இதற்கு முன் அபாயகரமான படகுப் பயணங்களை மேற்கொண்ட சமயம் சுமார் 1200 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடலில் மூழ்கி இருந்துள்ளதாக தெரிவித்த அவர் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார்.
படகுகொன்றுக்கான பயணச்சீட்டை வாங்குவது தண்ணீரில் சமாதியடைய வழிவகுக்கும் என ஸ்கொட் மொரிஸன் கூறினார்.
கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 153 இலங்கையர்கள் தொடர்பான விமர்சனத்துக்கு மறுப்புத் தெரிவித்த அவர் , அவர்கள் தொடர்பான விவகாரம் நீதிமன்றங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த 153 அகதிகள் விவகாரத்தால் அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கைகளானது அந்நாட்டு உயர்நீதிமன்ற நடவடிக்கையால் கடும் அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளது.
இந்த 153 பேரும் தற்போது அவுஸ்திரேலிய சுங்கப் படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவது சட்ட விரோதமானது என சட்டத்தரணிகள் விவாதித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
ஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வின் போது ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டில் எழுதப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாதக கேள்வியெழுப்பிய அநுர குமார எம்.பி.
சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் இலங்கையிலிருந்து சென்ற இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் விபத்தின் இறுதியில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் என்ற பெயரில் மேற்படி இரு படகுகளுடன் குடியேற்றவாசிகளும் அவுஸ்திரேலியாவினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் அவுஸ்திரேலியாவோ இந்த இரு கருத்துகள் குறித்தும் எதுவும் கூறவில்லை.
இது இவ்வாறிருக்க கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற 41 பேர் கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பை அண்டிய கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரிடம் சரணடைந்தனர். மேற்படி குடியேற்றவாசிகளாகச் சென்றோரின் கைது மற்றும் விடுதலை ஆகிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவும் இல்லை. மேலும் ஊடகங்களில் வெளி வந்த தகவல்களின்படி அவுஸ்திரேலியாவில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுவோரின் நிலைமை குறித்து நிச்சயமில்லா தன்மை ஒன்று காணப்படுகின்றது எனக்க கூறினார்.
இதன்போது பதிலளித்த பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கூறுகையில்,
இலங்கையரை ஏற்றிச் சென்ற படகொன்று கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது. படகில் இருந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்றாவது நாடொன்றின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசினால் தகவல் திரட்ட முடியாது. எனினும், கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்களே சட்டவிரோத குடியேற்றவாசிகளென கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்படி கைது மற்றும் விடுதலை தொடர்பான தகவல்கள் மட்டுமே இலங்கை அரசிடம் இருக்கின்றன.
மேலும், குடியேற்றவாசிகள் கடத்தல்களுக்கு எதிரான சட்ட ரீதியான ஒத்துழைப்புகள் தொடர்பில் 2009, நவம்பர், 9ஆம் திகதி இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆட்டத்தில் மற்றும் நாடு கடந்த குற்றச் செயல்கள் பற்றிய கூட்டு செயற்பாட்டுக்குழு ஒன்றும் கடித பரிமாற்றங்கள் ஊடாக இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்களை முறியடிப்பது தொடர்பான விடயங்கள் பற்றி இரு தரப்புக்குமிடையில் வருடாந்த சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment