காகமும் நரியும் - எஸ் ராமகிருஷ்ணன்

.
பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை.
ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.





பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில்  லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வடிக்கபட்டிருக்கிறது, ,  இச்சிலையை வடித்திருப்பவர் சார்லஸ் கொர்ரியா.
ஒரு கதையைக் கௌரவப்படுத்த இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது
இக்கதை ஸ்பெயினில் உள்ள San Martín de Fromista தேவாலயத்தில் சிற்பமாக செதுக்கபட்டிருக்கிறது, சீனாவில் இக்கதையைப் பீங்கான் கோப்பைகளில் சித்திரமாக வரைந்திருக்கிறார்கள், ஜெர்மனியில் உள்ள பல மிருக காட்சிசாலைகளில் இக்கதையினை நினைவுகூறும் சிற்பங்கள் உள்ளன.  கதைகளின் தாயகம் எனப்படும் இந்தியாவில் இக்கதையின் சிற்பம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாரீஸில் உள்ள இச்சிற்பத்தில், நரியின் விடைத்த காதுகளும் காலூன்றி நிற்கும் விதமும், புகழ்ச்சியில் மயங்கிய காகத்தின் தோற்றமும் சிறப்பாக உருவாக்கபட்டிருக்கிறது.
இதே காட்சியின் செதுக்கு ஒவியம் ஒன்றைப் பார்த்தேன், அதில் காகம் தவறவிடும் வெண்ணைய் துண்டினை நரி பிடித்துச் சாப்பிடும் தருணம் வரையப்பட்டிருக்கிறது. அந்த நரியின் கண்களில் தந்திரம் ஒளிர்கிறது, அப்பாவி காகம் தன்னை மறந்து பாடுவது எள்ளலாக வரையப்பட்டுள்ளது,
காகம் நரியை விடவும் ஒவியத்திலுள்ள இடிபாடுகளுகளும் பெரிய மரமும் என்னை மிகவும் வசீகரித்தன
ஈசாப் கதையில் துவங்கி லா ஃபோந்தேன் வரை எங்குமே இக்கதையில் பாட்டி வருவதில்லை, நம் ஊருக்கு வரும்போது தான் பாட்டி நுழைந்திருக்கிறாள்.
இன்றும் குழந்தைகள் இக்கதையை விரும்பி கேட்கிறார்கள், தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஏதாவது ஒரு பள்ளிவளாகத்தில் காகம் நரி கதைக்கு இப்படியான ஒரு சிற்பம் செய்து வைக்கலாம் தானே
Nantri sramakrishnan.com

No comments: