இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர மோடி
மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வைகோ கைது
லிபிய ஊடகவியலாளர் சுட்டுக்கொலை
=======================================================
இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர மோடி
26/05/2014 இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.
பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றது.
சார்க் நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு
இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பூடான், நேபாள பிரதமர்கள், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி பொலிஸார், துணை இராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய பொலிஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வலையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வலையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொலிஸார் வலையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வைகோ கைது
26/05/2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜந்தர் மந்தரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட 150 ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
லிபிய ஊடகவியலாளர் சுட்டுக்கொலை
27/05/2014 லிபியாவின் முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் பென் காஸி நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் எழுச்சி பெற்ற அந்நாட்டு போராட்டக் குழுக்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
புர்னிக் பத்திரிகையின் ஆசிரியரான மெட்டாஹ் புருஸயிட்டே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மும்மர் கடாபி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு பென்காஸி நகரில் வன்முறைகள் இடம்பெறுவது வழமையாகவுள்ளது.
கடாபியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்கேற்ற எண்ணற்ற ஆயுதக் குழுக்களையும் போராளிகளையும் ஆயுதக்களைவிற்கு உட்படுத்துவதற்கு லிபியா பெரும் போராட்டததை எதிர்கொண்டு வருகிறது.
அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment