திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
குண்டு  வெடிப்பில்   ஒரு   கண்ணை    இழந்தபோதும்    இயங்கிய    அபூர்வ  கலைஞன்   ஸ்ரீதர்    பிச்சையப்பா

   புதுமைப்பித்தனது    வாழ்க்கை    தமிழ்    எழுத்தாளர்   ஒருவரின்  சோக நாடகம்  -    உயிருள்ள    எழுத்தாளர்களுக்கு    ஒரு    எச்சரிக்கை  -  என்று எழுதினார்    தொ.மு.சி.ரகுநாதன்.    ஸ்ரீதர்    பிச்சையப்பாவின்    மறைவுச்செய்தி கிடைத்தபோது    ரகுநாதனின்    அந்தக்கூற்றைத்தான்    நினைத்துப்பார்த்தேன்.
 இந்த   நினைப்பு    ஸ்ரீதரை    புதுமைப்பித்தனுடன்    ஒப்பிடும்    முயற்சியல்ல.
ஸ்ரீதர்   மட்டுமல்ல   பல   கலைஞர்கள்    எழுத்தாளர்களின்    வாழ்க்கையும்  சோகநாடகமாகத்தான்    அரங்கேறியுள்ளன.    பட்டியலிட்டால்    அது  அவர்களின்    உறவுகளை    காயப்படுத்தும்.    வாழ்பவர்களுக்கு   எச்சரிக்கை என்று    சொன்னாலும் -   எத்தனைபேரால்    இந்த   எச்சரிக்கை   சமிக்ஞையை      புரிந்துகொள்ள முடியும்    என்பது    மற்றுமொரு    கேள்வி.
 2009   ஆம்   ஆண்டு    டிசம்பரில்     இலங்கைவந்து     மீண்டும் அவுஸ்திரேலியா   திரும்புவதற்கு   முன்பு   2010   ஜனவரி  20  ஆம்  திகதி மாலை   கொழும்பில்   பூபாலசிங்கம்     புத்தகசாலையில்    2011   ஆண்டு   ஜனவரியில்   நடக்கவிருந்த     சர்வதேச   தமிழ்   எழுத்தாளர்    மாநாடு   சம்பந்தமான     செயற்குழுக்கூட்டத்தை     முடித்துக்கொண்டு   கீழ்  தளத்துக்கு   இறங்கி    வந்தபோது -    ஒருவர்    அண்ணா    என    விளித்தவாறு   வந்து   என்னை    கட்டி   அணைத்துக்கொண்டார்.



  அந்தக்கணம்    எனக்கு  அவரது   செயல்  சற்று   திகைப்பாக   இருந்தது.   முகத்தை    நேருக்கு   நேர்   பார்த்தபொழுதுதான்    அவர்   கலைஞர்  ஸ்ரீதர் பிச்சையப்பா    எனத்தெரிந்தது.    அவரது     வாடிய    தோற்றம்    எனக்கு   மிகவும்    கவலை  தருவதாகவே    இருந்தது.     முகத்தில்    வழக்கமான    சிறிய தாடி.    அந்த   மாலை  வேளையிலும்    அவர்   தாகசாந்தி    செய்திருந்ததும்   தெரிந்தது.
அன்று    எனது   கையைப்பற்றியவாறு    உரையாடிக்கொண்டிருந்த   ஸ்ரீதர் சரியாக   ஒரு   மாதத்தில்    நிரந்தரமாக   விடைபெறுவார்    என்று  நான்   எதிர்பார்த்திருக்கவில்லை.    நான்  மட்டுமல்ல    அவரது    நண்பர்கள்    எவரும்    எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
 கவிஞன் -   கலைஞன்  -   நடிகன்  -  ஓவியன்   - பாடகன் - இப்படி    பன்முக ஆற்றல்   மிக்க  ஸ்ரீதர்   இன்னும்   பல   ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவர்.
தீபாவளி    என்றால்    பட்டாசுதான்   கொளுத்துவார்கள்.    அதில்    குதூகலம்   அடைவார்கள்.    ஆனால்  -   கிழக்கிலங்கையில்    காரைதீவில்   19-10-1998  தீபாவளி  பண்டிகையன்று  பட்டாசு   மாத்திரம்    வெடிக்கவில்லை.   அந்த   ஊரில்   ஸ்ரீதர்   கலந்துகொண்ட     கலை   நிகழ்ச்சியில்    குண்டும் வெடித்தது.    அந்த    குண்டுவெடிப்பில்   தனது   ஒரு  கண்ணை   அவர்   இழந்தார்.
அச்சம்பவம்    பற்றி   பிரபல  அறிவிப்பாளர்    நண்பர் -  பி.எச். அப்துல் ஹமீத்   இவ்வாறு    குறிப்பிடுகிறார்:-
நுளம்பொன்று   நம்மைக்கடிக்கிறது.    மூளை    கட்டடளையிடும்  முன்பே   நம்  கை  ஓங்கி   அறைகிறது.    நுளம்பின்    ஆயுள்   கெட்டி   எனில்  நொடிக்குள்    பறந்துவிடும்.   இல்லையேல்   அதோகதி.     நுளம்பு   கடித்ததும்   அடிப்பது   மனித  உடலோடு   ஒட்டிப்பிறந்த  வன்முறை    உணர்வு.    அந்த வகையில்   நாம்    எல்லோரும்    வன்முறையாளர்கள்.    ஆனால் கடிக்காமலே     தண்டனைக்குள்ளாவதை    என்னவென்று   சொல்ல? யாருக்கோ    வைத்த ---  வேட்டு   பலியானவர்கள்   கலைஞர்கள்.   என்று முடிவுரையும்    சொல்லிவிட்டார்கள்.   ஆனால் -   அது   ஒரு   நல்ல கலைஞனின்   விழிப்புலனுக்கல்லவா   வேட்டு   வைத்திருக்கிறது.
நமக்குள்    மனிதம்    மெல்ல   மெல்ல    மறைந்து    மிருக    உணர்வு    கொஞ்சம்   கொஞ்சமாக   பெருகிவரக்காரணம்    யார்?   என்ற   கேள்விக்கு   விடை   காண    இயலாமல்   இந்நாட்டில்   எல்லா    இனத்தாரும்    மனம்   குமைந்துகொண்டிருக்கிறோம்.
 2010    ஜனவரியில்   பூபாலசிங்கம்   புத்தகசாலையில்   அவரை    இறுதியாக   சந்திக்க    முன்பு   அதாவது     சுமார்    பத்து   ஆண்டுகளுக்கு முன்னர்    மல்லிகை    காரியாலயத்தில்   நண்பர்   ஜீவா    எனக்கொரு   தேநீர்    விருந்துபசாரம்    தந்தார்.    பல  கலை  -  இலக்கிய    நண்பர்கள்    கலந்துகொண்ட    அந்த    இனிய   மாலைப்பொழுதில்   எனக்காக    ஒரு   சிறிய   பூமாலையை    வாங்கிக்கொண்டுவந்து    எனக்கு   அணிவித்து வாழ்த்திய    ஸ்ரீதருக்கு  -  அவரது   பூதவுடலுக்கு    மலரஞ்சலி   கூட செலுத்தமுடியாது     வெகு   தொலைவில்    நான்    இருந்தது கொடுமைதான்.    எமது   அந்நிய    புலப்பெயர்வு   வாழ்வின்    தீராத   பல   வலிகள்    இப்படித்    தொடர்கின்றன..
 அன்றையதினம்   அவர்    எனக்குத்தந்த    மலர்   அவரது   மேடைக்கதை வசனம்   -   பாடலுடன்  29-03-1999   இல்    டவர்    அரங்கில்   மேடையேறிய    இதற்குத்தானே    ஆசைப்பட்டாய்     நாடகத்தின்     சிறப்புமலர்.
 அந்த    மலரில்   அமைச்சர்    தொண்டமான்  -   மல்லிகைஜீவா  -  ஜீவன் குமாரணதுங்க  -   உடுவை.தில்லைநடராஜா  -   பி.எச்.அப்துல்ஹமீட் - கமலினி    செல்வராஜன்   உட்பட   பல    நாடகக்கலைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.    தமிழக    திரையுலக   கலைஞர்களுடன்   ஸ்ரீதர்    எடுத்துக்கொண்ட     ஒளிப்படங்களும்    அதில்   இடம்பெற்றிருந்தன.
 அந்த    மலரில்   தனது    அழகிய    கையெழுத்தில்    இப்படி எழுதியிருந்தார்:-
 மதிப்புக்கும்   மரியாதைக்கும்   உரிய    அண்ணா---- இவனைப்பற்றி    இன்று---  இறைவன்     அருளால்   பலர்    எழுதுகிறார்கள்.     ஆனால்  -   எவருக்கும்   தெரியாதபோது   இவனைப்பற்றி    எழுதி   அதை   ஆரம்பித்து   வைத்தவர்     நீங்கள்தான்.    அந்த     நன்றியோடு    உற்சாக    வார்த்தைகளால்    நீங்கள்   வளர்த்துவிட்ட----   உங்கள்     தம்பி    ஸ்ரீதர்    பிச்சையப்பா.
 அதனை    வாசித்துவிட்டு   நான்    எங்கேயப்பா   உம்மைப்பற்றி    எழுதினேன்?   என்று    கேட்டேன்.


உடனே    மலரினுள்ளிருந்து    ஒரு   பத்திரிகை    நறுக்கை எடுத்துக்காண்பித்தார்.    பல   ஆண்டுகளுக்கு    முன்னர்    வீரகேசரி வாரவெளியீட்டில்     இலக்கியப்பலகணியில்    (ரஸஞானி)     நான்  அவரது   ஒளிப்படத்துடன்   எழுதியிருந்த    அவரைப்பற்றிய    குறிப்பு    அந்த   நறுக்கில்   இருந்தது. 
 நான்   எப்பொழுதோ    மறந்துவிட்ட    செய்தி.    ஆனால் அதனைக்காண்பித்ததன்    மூலம்    அவரைப்பற்றிய   பல  நினைவுகளை   மீளக்கொண்டுவந்தார்.    அவரது   முகத்தை    கவனித்தேன்.    அந்த   முகத்தில்    அந்த   சிறிய    பத்திரிகை   நறுக்கை   என்னிடம்   காண்பித்துவிட்ட    பெருமிதம்    சுடர்விட்டது.    ஸ்ரீதர்   சிறந்த   கலைஞர்.   அத்துடன்    நன்றியுணர்வு    மிக்க   பண்பாளன்   என்பதையும்   அந்த   மலரில்    பார்த்தேன்.
காரைதீவு   சம்பவத்தில்    படுகாயமுற்றபொழுது   தனக்கு   முதலுதவி சிகிச்சை    செய்தவர்கள்   முதல்    சில   மருத்துவமனைகளில்   சிகிச்சைக்காக    அனுமதிக்கப்பட்ட  வேளைகளில்    தன்னை   பராமரித்தவர்கள்  -   உடனிருந்து    ஆறுதல்    சொல்லி    தேற்றியவர்கள்  -   தமிழகத்திற்கு    தன்னை   அனுப்பி    மேலதிக   சிகிச்சைக்கு  உதவி செய்தவர்களுக்கெல்லாம்   நன்றி     தெரிவித்திருக்கிறார்.
 எனக்கு   ஸ்ரீதரை    அறிமுகப்படுத்தியவர்    நண்பர்    மேமன் கவி.
ஸ்ரீதரின்    தந்தை   பிச்சையப்பா    புகழ்பெற்ற    வானொலிக்கலைஞர்.    ஆனால்    அவருடன்   எனக்கு    பரிச்சயம்    இருந்ததில்லை.   லடீஸ் வீரமணி   கொழும்பில்    மேடையேற்றிய   ஜெயகாந்தனின் உன்னைப்போல்  ஒருவன்    நாடகத்தில்  சிட்டி   என்ற   சிறுவன்  பாத்திரம்    ஏற்று   நடித்தவர்தான்   ஸ்ரீதர்    என்ற    தகவலை   தெரிந்துவைத்திருந்தேன்.  ஸ்ரீதரின்    அப்பாதான்    கலைஞர்   பிச்சையப்பா   என்பதை    பிச்சையப்பாவின்  மரணச்செய்தி    கிடைத்தபோது   அறிந்து   உடனே    அவர்களின்    வீட்டுக்குச்சென்று    இறுதி   அஞ்சலி    செலுத்தியது    நேற்றுப்போல் ஞாபகத்தில்     இருக்கிறது.
ஜெயகாந்தனின்   உன்னைப்போல்    ஒருவன்     நாவலைப்படித்திருக்கின்றேன்.    ஆனால்    அந்தக்கதையை   கலைஞர் லடீஸ்   விரமணி   மேடை    நாடகமாக்கியபொழுது    அதனைப்பார்க்கும் சந்தர்ப்பம்    எனக்கு   கிடைக்கவில்லை.    அந்தக்கதையில்    வரும்   சிட்டி முக்கியமான   பாத்திரம்.    ஜெயகாந்தனின்   இளமைக்காலத்தில்  அவருடன்  ஒரு    தொழிற்சாலையில்   பணியாற்றிய    ஜெயகாந்தனால்   அன்புடன்  மொட்டை    என    அழைக்கப்பட்ட    பால்யகால   நண்பன்    அந்த    சிட்டி   என்ற    பாத்திரமாக    உருவானதாகவும்    நாவலின்   முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும்   ஜெயகாந்தன் -  அந்த   நண்பன்    இப்போது   எங்கிருக்கின்றானோ   தெரியவில்லை   என்றும்   ஆதங்கத்துடன் பதிவுசெய்துள்ளார்.
லடீஸ்வீரமணியின்   அந்த  நாடகத்தில்   ஸ்ரீதர்  சிறப்பாக    நடித்திருந்ததாக   எனது   நண்பர்கள்    சொல்லியிருக்கிறார்கள்.
மேடை   இசைநிகழ்ச்சிகளில்   மட்டுமன்றி    வானொலி  -  மேடை நாடகங்கள்  -   திரைப்படம்  -   தொலைக்காட்சி    நாடகங்கள் முதலானவற்றிலும்   தனது   ஆற்றலை   வெளிப்படுத்தியவர்  இந்த  பல்கலை   இளவரசன்    ஸ்ரீதர்    எனச்சொன்னால்    அது  மிகையற்ற  கூற்று.

இலங்கை -  தமிழக  கூட்டுத்தயாரிப்பில்   இலங்கையில்   உருவான   மாமியார்   வீடு   -   ரத்தத்தின்   ரத்தமே    மற்றும்   இலங்கைத் தயாரிப்புகள்   அவள்   ஒரு   ஜீவநதி   -   ஒரு   தலைக்காதல்    முதலான    படங்களுக்கு   குரல்    கொடுத்தவர்.   காமினி     பொன்சேக்காவின்   இயக்கத்தில்   நொமியன   மினிசுன்   சிங்களப்படம்   சில  சிங்கள  தொலைக்காட்சி    நாடகங்களிலும்   நடித்திருப்பவர்.
இலங்கையில்   பல    பாகங்களிலும்  சில    ஐரோப்பிய    நாடுகளிலும்   நடந்த   பல    இசை   நிகழ்ச்சிகளில்    தோன்றியிருப்பவர்.
இசைப்பாடல்களும்   புனைந்திருப்பவர்.
 மலரின்    கதவொன்று   திறக்கிறதா---- மௌனம்   வெளியேற   தவிக்கிறதா---   என்று   அவர்    முணு  முணுத்த  அவரே   இயற்றிய    பாடல்   வரிகளே    அவருக்கு   காதலியையும்   தேடித்தந்திருக்கிறது.    காதலியே     மனைவியானது   விதிப்பயன்   என்றால்    அந்தக்காதல்   தம்பதியர்    பிரிந்ததும்     விதிப்பயன்தானோ?
தனது    ஒரு   கண்பார்வையை  இழந்திருந்த   ஸ்ரீதர்   --  நீண்ட இடைவெளிக்குப்பின்னர்    அந்த    இழப்பையும்   நகைச்சுவையுணர்வுடன்   என்னிடம்   சொல்லி   சிரித்தபோது    என்னால்    சிரிக்க   முடியவில்லை.
 1999   ஆம்   ஆண்டு    இலங்கை    வந்திருந்தபோது     நண்பர்   எழில்வேந்தன்    சக்தி   தொலைக்காட்சிக்காக    என்னை  ஒரு  நேர்காணல்    நிகழ்ச்சிக்கு   அழைத்திருந்தார்.    ஒரு    வாகனத்துடன்   வந்து   என்னை   கூட்டிச்சென்றவர்    ஸ்ரீதர்.
   கொட்டாஞ்சேனையிலிருந்து   ராஜகிரிய   நோக்கி    அந்த  வாகனம்   புறப்பட்டது.    அந்த    வாகனம்   வீதியில்   ஒரு திருப்பத்தில்    குலுக்கலுடன்   திரும்பியபோது  -   என்னருகே    அமர்ந்திருந்த  ஸ்ரீதர்  -   திடீரென    தலையை    திருப்பி  குனிந்துகொண்டு  -   இப்படித்தான் அண்ணா--- அடிக்கடி   எனது   செயற்கைக்கண்ணை பொருத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது -- எனச்சிரித்துக்கொண்டு    சொன்னார்.
 அவரது   நிலை  குறித்து   எனக்குள்   தோன்றிய    அனுதாபத்தை    அவரது   தோள்    பற்றி    அணைத்தே   வெளிப்படுத்தினேன்.
தனிப்பட்ட   சொந்த   வாழ்வில்   பல  அதிர்ச்சிகளையும்   சோகங்களையும்   சுமந்து    வாழ்பவர்கள்    நகைச்சுவையுடன்   பேசுவதை  அவதானித்திருக்கிறோம்.    அந்த  ரகத்தைச்சேர்ந்தவர்   ஸ்ரீதர்.
 அந்தச்சம்பவத்தில்   தெய்வாதீனமாக    உயிர்  தப்பி  தனது  ஒரு  கண்ணை   இழந்த    பின்பும்    தன்னம்பிக்கையுடன்    சுறுசுறுப்பாக    இயங்கிய    ஸ்ரீதர்  --- கொழும்பில்     இயங்கிய    சிலோன்    யுனைட்டட்   ஆர்ட்    ஸ்டேஜ்    குழுவினருக்காக     இதற்குத்தானே    ஆசைப்பட்டாய்    என்ற    நாடகத்தின்   மேடைக்கதை   வசனம்    பாடல்களையும்    எழுதியிருந்ததுடன்    அதில் நடித்தார்.
அவருடைய    கண்சிகிச்சை   மருத்துவ    நிதியத்திற்காகவே    அந்த    நாடகம்    29-03-1999    இல்   மேடையேறியது.
நான்     அவரைச்சந்தித்து    ஒரு   மாத   காலத்தில்    பார்வையிருந்த   ஒரு   கண்ணையும்   நிரந்தரமாக   மூடிக்கொண்டார்.
காதலில்   தோல்வியடைந்தால்  அதிகம்   பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான்.    இதுவிடயத்தில்  பெண்கள்   தைரியசாலிகள்தான்.    காதலில்    தோல்வியுற்றால்    தேவதாஸ்    ஆகிவிடுபவர்கள்    அநேகர்.
ஒரு    பஸ்ஸை    மிஸ்    பண்ணினால்    அடுத்த    பஸ்ஸில்   ஏறிப்பயணத்தை தொடருபவர்கள்     இந்த   காதல்    விவகாரத்தில்   மாத்திரம்   ஏன்   இப்படி   சோர்ந்து   பின்தங்கிவிடுகிறார்கள்?
அவுஸ்திரேலியாவுக்கு    படிக்க   வந்த   ஒரு   தமிழ்   இளைஞர்   காதல்   தோல்வியினால்   உயரமான   பாலத்திலிருந்து    குதித்து தற்கொலை  செய்துகொண்டார்.    இதுபற்றி    என்னுடன்    பணியாற்றிய     ஒரு  வெள்ளை    இனத்து    அவுஸ்திரேலியரிடம்    சொன்னபொழுது    அவர்   இரத்தினச்சுருக்கமாக    சொன்ன   பதில்:    கடலில்   ஏராளமான   மீன்கள்     இருக்கின்றன.
நண்பர்    ஸ்ரீதர்   காதலித்தார் .   காதலித்த    பெண்ணையே   மணம்    முடித்தார்.   ஒரு    குழந்தைக்கும்    தந்தையானார்.     காதல்   மனைவியும்  ஒரு   பிரபல   பாடகி.   இருவரும்    ஒன்றாக   பல    இசைமேடைகளை   கலக்கியவர்கள்.    இசை    அவர்களை   இணைத்தது.    விதி    அவர்களை   பிரித்தது.   அதற்காக    ஸ்ரீதர்  மதுவை    ஏன்  காதலித்தார்    என்பதுதான்    எனக்குப்புரியவில்லை.
மது    அருந்துவதற்குத்தான்.    மது    அழிப்பதற்கு   அல்ல    என்பதை இந்தக்கலைஞன்    புரிந்துகொள்ள   தவறிவிட்டானே   என்பதுதான் எனக்குள்ள    கவலை.   மேடைகளில்    நவரசத்துடன்  தோன்றிய   ஸ்ரீதர்  தனது   சொந்த    வாழ்வில்   சோக ரசத்துடன்    வாழ்ந்துவிட்டதுதான்    எமக்கெல்லாம்    விட்டுச்சென்றுள்ள    எச்சரிக்கைச்செய்தி.
 கலையுலகத்தில்    அவர்    சம்பாதித்த    நண்பர்கள்    அநேகம்   என்பதை   அவர்  1999   இல்   எனக்களித்த   அந்த    மலர்   சான்று   பகர்கிறது.     ஆனால்    அவர்களையெல்லாம்    மிஞ்சிய    ஒரு   நண்பன்    வேறு   ஒரு   வடிவத்தில் அவருடன்    இணைபிரியாமல்    வாழ்ந்து    எங்களிடமிருந்து   நிரந்தரமாக அவரை    பிரித்துவிட்டான்.  
 அந்த   நண்பனின்   பெயர்  மது.
                         ---0---
      




No comments: