கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்
28/05/2014 இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும்,தமிழ் மக்களின் காணிகளைப் படையினர் ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஆக்கிரமித்த நிலங்களை மீள ஒப்படைக்கக் கோரியும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம்ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், வடமாகாணசபை அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன், சு.பசுபதிப்பிள்ளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்றையதினம் திட்டமிட்டபடி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் ஜனாதிபதி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்
28/05/2014 இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தி உரிய தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு – கிழக்கு பகுதிகளில் புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்றது.
காலை 10.47 மணி முதல் சுமார் 20 நிமிடம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலும் சார்க் நாடுகள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இலங்கையில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தீர்வுக்கும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீர்வுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடருமென்றும் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை வருமாறு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ரா௪ஜபக் ஷ அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர் இலங்கை வருவதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினகை்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இருவரும் கலந்துரையாடியதுடன் மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டுக்குழுவின் தொடர்ச்சியான சந்திப்புக்கள் தொடரவேண்டும் என்று முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. தனது பதிவியேற்பு நிகழ்வுக்கு வருகை தந்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை ஜனாதிபதியும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்றுக்காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்று தனது பொறுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹைதராபாத் இல்லம் சென்ற மோடி அங்கு ஆப்கன் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை முதலில் சந்தித்து பேச்சு நடத்தினார். அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுக்கா செனவிரட்ன, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக அலகு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இரண்டு தலைவர்களும் நெருக்கமான விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்தனர். இலங்கையில் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கினர்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் இரண்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். இரண்டு நாடுகளினதும் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர். மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டுக் குழுவின் தொடர்ச்சியான சந்திப்புக்கள் தொடரவேண்டும் என்று இருவரும் இணங்கியுள்ளனர்.
தனது பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமையானது எதிர்கால சார்க் ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு வலுவாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
சார்க் நாடுகள் அமைப்பு பிராந்தியத்துக்கு நன்மைகளை தரும் பொது விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் சர்வதேச மேடைகளில் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி இந்தியாவின் தலைமைத்துவம் சார்க் நாடுகளின் திட்டங்களுக்கு தீர்க்கமானதாக அமையும் என்றும் சார்க் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட இலங்கை எதிர்பார்க்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாஜக தலைவர்களை மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங், தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இலங்கை வருமாறு அந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை துரிதப்படுத்துமாறும் இலங்கை ஜனாதிபதியை மோடி கேட்டுக்கொண்டார். அதேசமயம் இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடருமென்றும் மோடி உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment