படங்கள்: திரு.ப. இராஜேந்திரன்.
'இசை வேள்வி' என்பது அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கர்நாடக சங்கீத நிகழ்வாக 2008ம் ஆண்டிலிருந்து நடாத்தி வருகின்றோம்.
2008ம் ஆண்டில் 'சங்கீத கலாநிதி' நித்தியஸ்ரீ மகாதேவன், 2010ல் 'வீணை' இராஜேஷ் வைத்தியா,
2012ல் 'கலை இளமணி' காஷ்யப் மகேஷ் எனக் கலைஞர்கள் பங்கேற்ற இசை வேள்விகளை திருப்திகரமாக அரங்கேற்றியிருந்தோம்.
அவ்வகையில் இவ்வருடத்திற்கான இசை வேள்வியானது சனிக்கிழமை, மே மாதம் 24ம் திகதி சிட்னியில் இடம்பெற்றது.
கம்பன் கழகத்திற்கேயுரிய கலா இரசிகர்கள் நிறைந்த மண்டபம்.
அன்பும் ஆதரவும் தந்து இசையை இரசித்த பெருமக்கள்.
'கலியுக இசை இராவணன்' என்றழைக்கப்படும் வீணை வல்லோன்,
கலைமாமணி இராஜேஷ் வைத்தியா அவர்கள், இளம் வித்தகி வாரிஜாஸ்ரீயுடன் பொழிந்த இசைக்கு
அணி சேர்த்தனர் தென்னிந்திய-உள்ளூர்க் கலைஞர்கள்.
இரசிகர்கள் வாயிலாக நல்ல வரவேற்புக் கிட்டிய வேள்வியாக அமைந்ததில் மகிழ்ச்சி.
மூன்று மணிநேர முழுமையான இசைக் கச்சேரியாக இருந்தபோதும்,
'அடடே இன்னும் சற்று நேரம் இசைத்திருக்கலாமே!' என்ற ஏக்க உணர்வு எமக்கும் இருந்தது உண்மைதான்.
பல இரசிகர்கள் கடந்த ஒரு வாரகாலமாக பல வழிகளிலும் எம்மைத் தொடர்புகொண்டு
நல்லிசை பருகிய தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களுக்கு எம் பணிவான நன்றிகள்.
தரமானதாக ஒரு நிகழ்வையமைக்கும்போது,
அதற்குண்டான வரவேற்பையும் ஊக்கத்தையும்
இசை மாந்திய பெருமக்கள் வழங்குவார்கள் என்பதை மீண்டும் உணர்ந்தோம்.
தொடர்ந்தும் செழுமையான இசை வேள்விகளை அமைக்கவேண்டிய கடமையையும் கூடவே மனதேற்றிக் கொள்கின்கின்றோம்.
இசை வேள்வியின் நிறைவான ஒழுங்கமைப்பிற்கு பலரும் கழகத்திற்குத் துணை நின்றனர்.
அனுசரணை வழங்கிய Sri Accounting - Toongabbie, Ruhlins Pvt Ltd - Nallur, Nichayatharthem-Web portal, Gnana-Karan Solicitors - Wentworthville,
Dr A. Punnia-Moorthy Family - Strathfield, Indian Eye - Perth, நுழைவுச் சீட்டுக்களை மக்களிடம் எடுத்துச் சென்ற எம் கழகத்து நண்பர்கள்,
தமிழ் முரசு அன்பர்கள் முதற்கொண்டு இசைவேள்விக்கு உதவிய அனைத்து ஊடகத்துறைசார் நண்பர்கள், மற்றும் எம் கம்பன் குடும்பத்தார் அனைவருக்கும் மனதார நன்றியுரைக்கின்றோம்.
இவ்விசை வேள்வியானது, எம் நெஞ்சில் நிறைந்த திருமதி தர்ஷினி குமாரதாசன் அவர்களுக்கான சமர்ப்பணம்.
இசை வேள்வி பற்றிய இரசிகர்களின் சில அனுபவப் பகிர்வுகளை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
அத்தோடு உங்கள் பார்வைக்காக சில படங்களையும் இங்கு இணைத்துள்ளோம்.
** ** ** ** ** **
"கம்பன் கழகத்தினரின் அனுசரணையுடன் மிக செழுமையாக இசைவேள்வி சிட்னியில் நடந்தேறியது. இங்கு வருகை தந்த இசை வித்தகர்களுடன் நாமும் இணைந்து இசைத்தது ஒரு இனிய அனுபவம்" - ஜனகன் சுதந்திரராஜ்
"இசை நிறைந்த சபை. மிக அற்புதமாக படைக்கப்பட்ட இசை வேள்வி. தென்னிந்தியக் கலைஞர்களுடன் இணைந்து மோர்சிங் மற்றும் கஞ்சிரா வாத்தியங்களில் அணி செய்த ஜெயராம் - ஜனகனின் வாசிப்பு இசை விருந்துக்கு அழகு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.” பிராபகர் தியாகராஜா -
"அருமையான இந்த நிகழ்வு எம் மனங்களைக் கொள்ளை கொண்டது. விரைவில் நிறைவேறிவிட்டதோ என்றொரு ஏக்கம். நானும் என் நண்பர்களும் இரசித்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது." - சிவபாலன் -
"இராஜேஷின் வாசிப்பு தனிரகம். வாரிஜாஸ்ரீயின் இசையில் நனைந்தது ஒரு மகிழ்ச்சி. குழலிசையோடு அவரின் குரலிசையும் அதிகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உள்ளூர்க்கலைஞர்கள் ஜெய்ராம், ஜனகனுக்கு என் வாழ்த்துக்கள்."
- சுமதி கிருஷ்ணன் -
"சிறப்பான ஒரு இசை நிகழ்ச்சியை அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். ஒவ்வொரு மணித்துளியும் இடைவிடாத இசையில் நனைந்தோம். இசை வல்லுனர்களை நேரில் பார்த்ததும், இசையை ரசித்ததும் ஒரு புதுமையான அனுபவம். நிகழ்வு நீண்டிருக்கவேண்டும், ஆனால் நிறைவவென்பது தவிர்க்க முடியாததுதானே." - வைத்திய கலாநிதி சங்கரி சுரேன் -
"சபை நிறைந்த சங்கீத நிகழ்வு. நிகழ்வை ஒழுங்கு படுத்தி, செம்மையாக திறம்பட நாடாத்திய இளைஞர் குலாத்தின் ஆளுமைக்கு எம் வாழ்த்துக்கள்."
- கோபால் கிருஷ்ணன் -
"கால தாமதமின்றி நிகழ்வு நேரத்திற்கு தொடங்கியது. எந்தவொரு தடங்கலும் இன்றி இராஜேஷ் வைத்தியாவின் வீணா கானமும், வாரிஜாஸ்ரீயின் குழலிசையும், தென்னிந்தியக் கலைஞர்களுடன் இணைந்த எம் இளம் கலைஞர்கள் ஜனகன், ராமின் வாத்திய விருந்தும் கேட்போர் உள்ளங்களை களிப்படையச் செய்தது." -பாமினி பிரதீபன்-
'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'
2 comments:
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் .
உங்கள் தளத்தை நான் தொடர்ந்து பார்ப்பதுண்டு. குறிப்பாக அறிவுக் கட்டுரைகள் சிறப்பு
நட்பைத் தொடர்வோம்.
செ.பாஸ்கரன்
Post a Comment