வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி

.
வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி: இளைஞர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு.


ஐதராபாத்: ஆந்திராவில், ஓட்டுச் சாவடியில் வரிசையில் நிற்காமல், ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவியை, இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்; மத்திய சுற்றுலா அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது.
'பைபாஸ்' செய்தார்:
இதையொட்டி, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நடிகர் சிரஞ்சீவி, தன் மனைவி, மகள், நடிகரும், மகனுமான ராம்சரண் தேஜா ஆகியோருடன் வந்தார். அப்போது, ஓட்டுச் சாவடி யில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். சிரஞ்சீவியும், அவரின் குடும்பத்தினரும், வரிசையில் நிற்காமல், நேராக ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டளிக்க முயற்சித்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த, ராஜா கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினார். ''நீங்கள், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக வேண்டுமானாலும் இருக்கலாம்; மத்திய அமைச்சராக கூட இருக்கலாம். ஆனால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள், மூத்த குடிமகனோ, மாற்றுத் திறனாளியோ இல்லை. எனவே, வரிசையில் நின்று, ஓட்டளியுங்கள்,'' என்றார். இதனால், சிரஞ்சீவி, கடும் அதிருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும், சிரஞ்சீவிக்கு எதிராக, கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல், சிரஞ்சீவி, வரிசையில் நின்று, ஓட்டளித்தார்.

'அனுமதிக்க முடியாது':

சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி, தைரியமாக கேள்வி கேட்ட இளைஞரை, அங்கு நின்றிருந்த வாக்காளர்கள், கை கொடுத்து, பாராட்டினர். இளைஞர் ராஜா கார்த்திக் கூறுகையில், ''நான், லண்டனில் வசிக்கும் இந்தியன். ஓட்டு போடுவதற்காக, ஐதராபாத்துக்கு வந்துள்ளேன். சிரஞ்சீவியை நான் மதிக்கிறேன். ஆனால், அவர், விதிமுறைகளை மீறுவதை, அனுமதிக்க முடியாது,'' என்றார்.
nantri:

No comments: