சங்க இலக்கியக் காட்சிகள் 10 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


கலங்காதே! கார் என்று மயங்காதே!

தலைவன் தன் கடமை காரணமாக வெளியூருக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. அவ்வாறு செல்லும்போது அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் கவலைப்பட்ட தலைவியிடம் கார்காலம் தொடங்குவதற்கு முன்னர் வந்துவிடுவதாக வாக்களித்துச் சென்றான். குறிப்பிட்ட கார்காலம் வந்துவிட்டது. ஆனால் அவன் வரவில்லை. அதனால் தலைவி ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்தாள். உண்ண மறுக்கிறாள். உறங்க மறக்கிறாள். தன்னை வருத்திக்கொண்டு தலைவன் வரும் வழியையே பார்த்தவாறு ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.

அவளைக்காண அங்கே அவளின் தோழி வரகிறாள். தலைவி அவளிடம் தன் கவலையைக் கூறுகிறாள். “மழை பெய்கிறது. மலர்ச் செடிகள் பூக்கத் தொடங்கிவிட்டன. எனவே மாரிகாலம் வந்துவிட்டது. என் காதலன் இன்னும் வரவில்லையே! அவன் வருவதாகச்சொன்ன காலம் இதுதான் அல்லவா?” என்று தோழியிடம் கேட்கின்றாள்.

அதனைக் கேட்ட தோழி அவளுக்காக இரங்கினாள். அவளது துன்பத்தைப்போக்க எண்ணினாள். அதனால், தலைவியிடம் பொய்யுரைத்தாள். “நீ நினைப்பதுபோல இப்போது வந்திருப்பது கார்காலமல்ல. இது வெறும் வம்ப மாரி. இது கார்காலம்போல உனக்குத் தோன்றுகிறது. உன் தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இன்னும் வரவில்லை” என்று அவளைத் தேற்ற முனைகின்றாள்.



மேலும் கூறுகின்றாள். “மேகத்திற்குப் புத்தி கெட்டுப் போயிற்று. அதனால் நீரை முகர்ந்து செல்ல வேண்டிய பருவத்தை மறந்து கடல்நீரை முகர்ந்து சென்றிருக்கின்றது. அதனால் நிறைசூலுற்று, கார்மேகமாயிற்று. பின்னர் நீரின் சுமை தாங்கமுடியாமல் பெருமழையாகப் பெய்து தன் சுமையைக் குறைத்துக்கொண்டது. அதனைத்தான் நீ கண்டிருக்கிறாய். கடுமழை பெய்ததும் கார்காலம் வந்துவிட்டதே. காதலர் இன்னும் வரவில்லையே என்று நீ கவலைப்படுகிறாய். உன்னைப்போலவே கொன்றை, காந்தள் முதலிய மரங்களும் கார்காலம் வந்துவிட்டது என்று தவறாக நினைத்துக்கொண்டதால்தான் பூக்கத் தொடங்கிவிட்டன. அவ்வளவுதான். மற்றும்படி இன்னும் கார்காலம் வரவில்லை. உன்தலைவன் வாக்குத் தவறமாட்டான். சொன்னபடி கார்காலத்தில் வந்துவிடுவான். நீ வீணாகக் கலங்காதே” என்று பலவாறு எடுத்துச் சொல்லித் தலைவியின் துயரத்தைப் போக்க முயல்கிறாள் தோழி.

இந்தக் காட்சியை எடுத்துக்காட்டுகின்ற பாடல் வருமாறு.


நீர் அற வறந்த நிரம்பா நீள்இடைத்
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ? என்றிசின் மடந்தை – மதிஇன்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூழ் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
‘கார்’ என்று அயர்ந்த உள்ளமொடுää தேர்வில
பிடவமும்ää கொன்றையும்ää கோடலும்
மடவ ஆகலின்ää மலர்ந்தன பலவே!

(நற்றிணை. பாடல் இலக்கம்: 99. முல்லைத்திணை. பாடியவர் இளந்திரையனார்)
இதன் கருத்து:
மடந்தையே! அறவே நீர் இல்லாமல் போயும்ää வரட்சியடைந்தும்ää வெண்ணிற ஆடையை விரித்துப் பரப்பிப் போட்டவாறும் உள்ள நிலத்திலே வெயிலும் கடுமையாக எறித்து நிற்கும். அவ்வாறு காண்போரைப் பயங்கொண்டு நடுங்க வைக்கும் வெப்பம் மிகுந்த இடத்தைக் கடந்து சென்றவர் நம் தலைவர். அத்தகையவர் நம்மை மகிழ்வூட்டத் திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்ற பருவகாலம்  இதுதானா என்று நீ கேட்கின்றாய்!
“அறிவு கெட்டதால் பருவத்தை மறந்து கடல்நீரை முகர்ந்துசென்ற மேகம் கார்மேகமாகி நிறை சூலுற்றுப் பின்னர் நீரின் சுமை தாங்கமுடியாமல் மழையாகப் பெய்துவிட்டது. உன்னைப்போலவே கொன்றைää காந்தள் முதலிய மலரங்களும் கார்காலம் வந்துவிட்டது என்று தவறாக நினைத்த்துக்கொண்டதால் பூக்கத் தொடங்கிவிட்டன. (இது உண்மையான கார்காலம் அல்ல)”

இதேபோன்ற காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவரும் இன்னும் சில பாடல்களும் சங்க இலக்கியத்தில் உள்ளன. அவற்றுள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:
மடவமன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே  (குறுந் தொகை 66)

பிரிந்து சென்றவர் வருவதாகக் கூறிய பருவகாலம் வராமல் இருந்தும்கூடää கொன்றைகள் தம் அறியாமையால் கிளைகளிலே பூக்களை மலர விட்டுவிட்டன. “வம்ப மாரி”யாகிய நிலையற்ற மழையைக் கண்டுää அது மழைக்காலம் என்று நினைத்து அவை அவ்வாறு செய்தன. (உண்மையிலே இது உன் தலைவன் வருவதாகச் சொன்ன கார் காலம் அல்லää நீ கவலைப்படாதே என்று தலைவிக்கு ஆறுதல் சொல்லப்படுகிறது)

No comments: