வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)

.


னிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(?). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டக் கட்டிலில் படுத்துக்கொண்டு குழந்தைப் புகைப்படத்தையும் மனைவி புகைப்படத்தையும் அம்மாவின் புகைப்படத்தையும் பார்த்துப் பார்த்து அழுதுக் கொண்டிருக்கும் மனதின் ரணம் இதயத்தை தனியாக எடுத்து’ பிழிய வலிக்கையில் வலிப்பதற்கு ஈடென்று வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வோருக்குத்தானே தெரியும்.
ஒருவன் இந்தியில் பேசி தமிழ்வாலா என்று கிண்டல் செய்வான், இன்னொருவன் மலையாளம் பேசியே உடன் நின்றுக் கொல்வான். யார் எதை பேசுகிறார்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று எதுவுமே புரியாது என்னவோ தலையெழுத்து வந்துவிட்டோம் என்று வாழும் நாட்கள் கத்தியின் மீது நடப்பதைக் காட்டிலும் கொடூரமானது.

அதில் வேறு காவிரி நீரா’ பெரியாறு அணையா’ கருணாநிதி தோல்வியா’ ஜெயலலிதா வெற்றியா’ வைகோ கொடி பிடித்தாரா எல்லாவற்றிற்கும் எங்களிடம் பதிலை எதிர்பார்க்கும் சகோதரத்துவ மாநிலங்களையெல்லாம் உடன் சேர்த்துக்கொண்டுதான், ஜனகனமன கேட்கையில் ஜெயஹிந்த் சொல்லிக் கொள்கிறோம். ஹிந்தி தெரியவில்லை அதற்கொரு பேச்சு, இந்தி தெரிந்து இந்தி தெரியாத தமிழரோடு தங்கவேண்டிவந்தால் அதற்குமொரு பேச்சு என’ அப்பப்பா, வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பது சுலபம், மனிதர்களை வெல்வதும், தனிமையை உதறிவிட்டு பிறரோடு கலந்துப்போகப் பழக்கிக்கொள்வதும் இன்னொரு பெரிய சவால்தான்.


ஆனால் அடிபட்டுக் கொள்ளும் பனம்பழம் இனிப்பதைப் போல, வேற்றுமைகளை உடைத்துக் கொண்டு கைகோர்த்துக்கொண்டப்பின் எங்களிடமொரு இரும்பு பலம் வந்து யானையைப் போல தோளில் அமர்ந்துக் கொள்வதுண்டு. ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, இந்தியாவிலிருந்து பக்கத்துவீட்டுக்கார அண்ணன் பேசுகிறார், அம்மாவிற்கு உடல்நலக் கேடு’ உயிர்போகும் தருணம்’ உடனே வாவென்று சொல்லி எதிர்முனை துண்டிக்கப்படுகிறது.
பெண்கள் வயதுக்குவருகையில் சுண்டியிழுத்த அடிவயிற்று வலியைப் போல பயம்கவ்வி தலையிலடித்துக் கொண்டு கீழே அமர்கிறேன் நான். எனது அறையில் இரு மலையாளி ஒரு பெங்காளி ஒரு தெலுங்கர் மூன்று வடநாட்டவர் ஒரு தமிழர் இருக்கிறார். நாளை வெள்ளிக்கிழமை வேறு, குவைத் நாட்டில் வெள்ளிகிழமையன்று பொதுவிடுமுறை என்பதால் நிறுவனத்திலிருந்து கடவுசீட்டை பெறுவதற்கே வெள்ளிவிட்டு சனிக்கிழமை ஆகிபோகும், வேறென்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் நான் கதறிக்கொண்டே வீட்டிற்கு அழைக்க நினைப்பதற்குள் தங்கை அழைத்து அண்ணா அண்ணா என்று கதறுகிறாள், உடனே வா என்கிறாள்.
நினைத்தால் பேருந்து ஏறி ஊர்போய்ச் சேர இதென்ன நமது தேசமா? அந்நிய மண்ணில் அடிவயிறு சூட்டில் வலிக்க வலிக்க உழைக்கும் எங்களைப் போன்ற பணம் தேடி வந்தோருக்கு நினைத்தால் நாடுசெல்லும் பணியில் நானில்லை என்று எனது தங்கையிடம் சொல்ல எனக்கு நா எழவில்லை.
வெளிநாட்டில் உழைப்போருக்கு சாபங்கள் இப்படி பின்னாலேயே துரத்திக் கொண்டு வருவது என்பது காட்டுத்தீ வந்து நமை கருவறுப்பதற்குச் சமம். ஊரில் ஒரு ஆபத்து என்றால் உடனே உயிர்போவது வெளிநாட்டில் வசிப்போருக்குத் தானென்று வெளிநாட்டில் உழைப்பவர்கள் அறிவார்கள். பெண்பிள்ளையைப் பெற்றால் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப்போலத் தான் வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்வோரும் ‘ஆயி என் குடும்பத்தை காப்பத்துன்னு’ மனதுள் தீச்சட்டி தூக்கிக்கொண்டு தான் போகின்றனர்.
எப்படியோ எனது அறையில் வசித்த பெங்காளி அவனுக்குத் தெரிந்த அலுவல் அதிகாரியிடம் பேசி கடவுசீட்டை வாங்கிவர, மலையாலியில் ஒருவர் நான் வரேன் அண்ணா நீ வான்னு தனது வங்கியிலிருந்த பணத்தை எடுத்து எனக்கு விமானச் சீட்டு பெற்றுக்கொடுக்க வடநாட்டைச் சேர்ந்த பஞ்சாபி எனது துணிமணிகளை எடுத்துக் கட்டி வண்டியில் ஏற்றி கூட இருந்த மற்ற தோழர்களிடமிருந்து பணத்தை வசூலித்து இந்தா என்றுத் தந்து எல்லோருமாய் நின்று போய்வா என்று வழியனுப்பி வைக்கையில்; நானும் என்னோடிருந்த இன்னொரு தமிழரும் அவர்களை கையெடுத்து கும்பிட்டுவிட்டு விமான நிலையம் நோக்கிப் பயணித்தோம்.
வாழ்க்கை என்பது வேறென்ன; இப்படி இதென்று நமை முடிவுசெய்ய விடாமலே துரத்தி துரத்தி பல திசைக்கு நமை அலைகழித்து புதிய பல பாடங்களைப் புகட்டி கூடுமிடமெல்லாம் அன்பைப் பகிரவும், இயன்றப் போதெல்லாம் எல்லோருக்கும் உதவவும் நமைப் பக்குவப்படுத்தி, யாரிடத்துமே பிரிவினைப் பாராது, இன்னபிற உயிர்களை வருத்தாது, உயர்ந்த மனிதத்தோடு வாழ்ந்து, இந்த கட்டை எரிந்துப்போகையில்; எரிபவன் வாழ்ந்தான் என்று பிறரை உணரவைப்பது தானே?
நாங்கள் இப்படித் தான், பணம் சம்பாதிப்பது போதுமானதாக இல்லாதுபோகலாம், ஆனால் வாழ்க்கையை அதுவாகப்படிக்க பல முற்புதர் மீது தனியாக நடந்து கடப்போம். கால் வலிக்குமெனில் எங்களின் வீடுகளை நினைத்துக்கொள்வோம், முள் குத்திய இடத்திலெல்லாம் குடும்பத்தின் கண்ணீரை தடவி மீண்டும் நடைபோடுவோம். எங்களின் பாவத்தையெல்லாம் யாருடைய தலையிலும் வைக்காது நாங்களே சுமப்போம்.
தூக்கம் கெடும், உடல் சோர்ந்து விழும், காடு பெரிதாக நீண்டு கனக்கும், நதி நிரம்பி ஓடும், அடர்ந்து இருட்டு கவ்விக்கொள்ளும், திசையெதுவென்றுக்கூட தெரியாது எங்களுக்கு. ஆனால் ஓடுகிறோம், ஓடி நிற்குமிடம் வீடென்பது மட்டுமே எங்களுக்கு நினைவில்..
———————————————————————————————————————————
வித்யாசாகர்

No comments: