தமிழ் சினிமா

மறுமுனை – விமர்சனம்

மறுமுனை – விமர்சனம்

காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு ஜோடிக்கு நேரும் கொடூரமே இந்த மறுமுனை. படம் துவங்கும்போதே புன்னகை மன்னன் ஸ்டைலில் நாயகனும் நாயகியும் மலை மேல் இருந்து குதிக்க வருகிறார்கள். ஆனால் நாயகி மட்டும் குதித்து தற்கொலை செய்து கொள்ள நாயகன் அங்கிருந்து சென்று ஒவ்வொருவராக கொலை செய்கிறான். ஒருவேளை ஹிரோவே இந்த படத்துல நெகட்டிவ் ரோல் பண்ணிட்டாரோ என்று சீட் நுனியில் நம்மை உட்கார வைக்கிறார் இயக்குநர்.
படம் அப்படியே ஃப்ளாஷ்பேக் செல்ல ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவருகிறார் நாயகன் மாருதி(கதிர்). அதே ஊரில் வேறொரு கல்லூரியில் படித்து வருகிறார் நாயகி மிருதுளா பாஸ்கர்(சாருமதி). கதிரின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் கண்டெக்டர் வேலை செய்கிறார். தன் மகன் படித்து நன்றாக படித்து குடும்பத்தை பார்த்துப்பான் என்று நினைக்கிறார். ஆனால் எதார்த்தமாக நாயகி சாருவை சந்திக்கும் இவர் அவர் மேல் காதல் வயப்படுகிறார். ஊரிலேயே பெரிய கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு ரவுடியின் மகளை காதலிக்கிறோம் என்று தெரியாமல் பார்க், தியேட்டர் என்று சுற்ற அதை சாருவின் அப்பா காதில் ஓதிவிடுகிறார்கள் புண்ணியவான்கள். இதனால் எம்.எஸ்.பாஸ்கரை மிரட்டும் சாருவின் அப்பா மகன் வேண்டுமென்றால் இனி என் மகள் பின்னால் அவன் வரக்கூடாது என்று 1000 காலத்து பொன்மொழியை ஊதிவிட்டு செல்கிறார். இதனால் பயத்தில் உறைந்துபோன பாஸ்கர் மகனிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறார். பின் பக்குவமாக மகனிடம் எடுத்துக்கூறி அந்த ரவுடியிடம் மன்னிப்பு கேட்க அழைத்து செல்ல சென்ற இடத்தில் சாருவின் அப்பாவிற்கே செக் வைத்துவிட்டு வருவதெல்லாம் செம அப்ளாஸ் தான்.
தன் மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயப்படும் பாஸ்கர் அவரின் யதார்த்த நடிப்பால் நம்மை கவர்கிறார். குடும்பத்தை பற்றி சிறிதும் கவலைபடாமல் சாருவை அழைத்துக் கொண்டு ஏலகிரி மலைக்கு செல்கிறார். அப்படியே கல்யாணம் பண்ணிகிட்டு காதலை வென்றுவிடுவார்களோ என்று நினைத்த நமக்கு இதுவரை தமிழ்சினிமாவில் திருந்தாத அந்த காட்சியை வைத்து காதலர்களை கதறவிடுகிறார்கள். இனி எவனும் ஏலகிரி போகமாட்டான். அட இதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எப்பவும்போல கடிதத்தை எழுதி வைத்துவிட்டு அதை கையோடு கொண்டுபோய் மலை உச்சியில் வைத்து சாப்பிட்டுவிட்டு திரும்புகிறார் மாருதி… தன் காதலை அவசரத்தில் ஓப்பன் செய்த குக்கர் போல வெடிக்க செய்தவர்களை கொலை செய்யத்தான் இந்த விரட்டலோ என்று அமைதியடைய வைக்கிறது க்ளைமேக்ஸ்….
மாருதியின் முதல் படம் மறுமுனை என்றாலும் காதல் சொல்ல் ஆசை படம் முன்னதாகவே ரிலீஸ் ஆனதால் அறிமுகம் என்று சொல்ல முடியாது. எம்.எஸ்.பாஸ்கரின் தங்கை மகன் என்பதால் நடிப்பை மாமாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் மாருதி… வல்லினம் படத்தில் நமக்கு ஏற்கனவே அறிமுகமான மிருதுளா நடிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் சிரிக்கிறாரா அழுகிறாரா என்றே தெரியாத புரியாத புதிராக ஒரு எக்ஸ்ப்ரஷன்ஸ்.
ஒளிப்பதிவு புன்னகை வெங்கடேஷ் என்பதாலோ என்னவோ முதல் காட்சியிலே புன்னகை மன்னன் ஸ்டைல் கொண்டு வந்துவிட்டார். ஒளிப்பதிவு நன்று. இசை சத்யதேவ் சிம்பு பாடிய பாடல் தவிர மற்றவை அனைத்தும் சுமார் ரகம் தான். பின்னணி இசை தாஜ்நூர் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. 
நன்றி தமிழ்சினிமா 

No comments: