.
தந்தை செல்வநாயகத்துக்காக தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்ட அம்பி
குவின்ஸ்லாந்து
மாநிலத்தில் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு நிகழ்வை முடித்துக்கொண்டு சிட்னிக்கு திரும்பினேன்.
கவிஞர் அம்பியின்
ஏக புதல்வர் திருக்குமாரன்
என்னை சிட்னி விமான நிலையத்திலிருந்து
அழைத்துச்சென்றார். நீண்ட நாட்களாக படுக்கையில் தஞ்சமடைந்தவாறு அவ்வப்போது சக்கரநாற்காலியிலும் வோக்கரிலும்
வலம்வரும் கவிஞர் அம்பி என்னைக்கண்டதும் முகம்மலர வரவேற்றார்.
எனது வருகையை
அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவரை எப்பொழுது
சந்திக்க நேரிட்டாலும் எனக்கு எழுதுவதற்கு ஏதாவது விடயதானம் கிடைத்துவிடும். அண்மைய
சந்திப்பில் முதலில்
எமது பேசுபொருளாக இருந்தது மாயமாக மறைந்துவிட்ட மலேசியன் ஏயர்லைன்ஸ் (MH
370) விமானம்தான்.
மலேசியப்பிரதமர்
உத்தியோகபூர்வமாக தெரிவித்த செய்திகளை உள்வாங்கிக்கொண்டே - சரிதான்
-
அனைவரும் ஜலசமாதிதான் - என்று ஏக்கப்பெருமூச்சு
விட்டார்.
அப்பொழுது அவரது உடன்பிறந்த சகோதரர் ஒருவர் மலேசியாவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மிருவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்தச்சகோதரர் சோதிடம்
பயின்றவர். பலருக்கு சாதகக்குறிப்பு
பார்த்து பலனும்
சொன்னவர்.
மாயமாக மறைந்த விமானத்தில்
பயணித்த ஒரு இளைஞனின்
சாதகமும் பார்த்திருக்கிறார். அந்த இளைஞன் மரணித்திருக்கமாட்டான் என்பது அம்பியின் சகோதரரின் திடமான நம்பிக்கை. உலகத்தையே வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கும் அந்த விமானம்
மர்ம முடிச்சுக்களுடனேயே புதிர்களை
பரவ
விட்டுக்கொண்டிருக்கிறது.
புதிர்முடிச்சுக்கு மலேசியப்பிரதமர் முற்றுப்புள்ளி வைத்தபோதிலும் Unsolved Misstry ஆகவே குறிப்பிட்ட மலேசியன்
ஏயார் லைன்ஸ் விமானம்
நீண்டகாலத்துக்குப் பேசப்படும்.
அம்பியும்
செல்வநாயகமும்
தமிழர்களை
கடவுள்தான் காப்பாற்றவேண்டும்
என்ற
தந்தை செல்வநாயகத்தின் வாக்குமூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இதனை நினைவுபடுத்திய
கவிஞர்
அம்பி - இனிமேல்
விமானங்களில் பயணிப்பவர்களையும் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனச்சொல்லிவிட்டு - தந்தை செல்வாவுடன் தனக்கிருந்த தொடர்பு - உறவு பற்றி சொல்லத்தொடங்கினார். சுமார் ஆறு தசாப்பதங்களுக்கு ( அறுபது
வருடங்களுக்கு) முந்திய கதையொன்று அம்பியின் நாவிலிருந்து பிறந்தது.
அம்பி அந்த கடந்த காலக்கதையை சொன்னபோது தந்தை செல்வாவுக்கு
116 வயது நெருங்கிக்கொண்டிருந்தது. அதாவது மார்ச் 31 ஆம்
திகதிதான் செல்வாவின் பிறந்ததினம்.
நான் அம்பியை
மார்ச் 25 ஆம் திகதி சந்தித்து இந்தப்பதிவை
எழுதுகின்றேன்.
அவரது படுக்கையின்
அருகே எனது மடிக்கணினியை
வைத்துக்கொண்டு அவர் சொன்னவற்றை பதிவுசெய்து செம்மைப்படுத்திய பின்னர் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
அம்பி
சொல்கிறார்:-
1952 ஆம்
ஆண்டு. பொதுத்தேர்தல் காலம். நான் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
ஆசிரியனாகி இரண்டு
ஆண்டுகள் ஆகவில்லை. தந்தை செல்வாவின் தேர்தல் பிரசாரத்திற்கு நான் உதவவேண்டும் என்று தந்தையின் இளைய சகோதரர்
பொன்னுத்துரை என்பவர் கேட்டுக்கொண்டார்.
தமிழரசுக்கட்சியின் ஆரம்ப முதலாக
- அக்கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினனாக உழைத்திருக்கிறேன். அதனால் தந்தையின்
சகோதரரின் வேண்டுகோளை ஏற்று தேர்தல்
களத்தில் இறங்கினேன்.
முதல் முதலாக
தந்தைக்கு அதரவு அதிகம் கிட்டாத
ஒரு வட்டாரத்தை அணுகுவதற்கு முடிவு செய்தோம். குறிப்பிட்ட ஒரு சிறுபான்மைச்சமூகம்
வசித்த
வட்டாரம்
அது. ஆனால் - என்னை நேசித்த - நான் கற்பித்த
மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் வசிக்கும் வட்டாரம் என்பதையும்
அறிவேன்.
அந்தச்சமூகப்பிள்ளைகளுக்கு பாடசாலையில் நான் காண்பித்த ஆதரவும் வாஞ்சையும் என்னை
அவர்கள் நேசிக்க காரணமாயிற்று. பின்தங்கிய மாணாக்கருக்கு நான் வழங்கிய பலவித உதவிகளும் இலவச ரியூஷன்
வகுப்புகளும் அந்த நேசிப்பை ஆரோக்கியமாக
வளர்த்தன. எனவே சிறிது
முன்னறிவித்தலுடனும் இரண்டொரு கை ஆட்களுடனும்
பிரசாரத்தில் ஈடுபட்டேன். இதுபற்றி தந்தை
செல்வாவோ அல்லது அவரது பிரசார
முக வர்களோ அறிந்திருக்கவில்லை.
வாக்குக்கேட்டு
சென்ற வீடுகளில்
நல்ல வரவேற்பு. எனது மாணாக்கர்
பலரும் அந்த வட்டாரத்தில் புதினம் பார்த்துக்கொண்டே என்னை பின்தொடர்ந்தனர். ஒவ்வொரு வீடாகச்சென்று பிரசாரத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம்.
வசதிப்பட்டவேளையில் தமிழரசுக்கட்சி பற்றியும்
சமஷ்டி அரசு பற்றியும்
விளக்கினோம். தீண்டாமை ஒழிப்பும்
கட்சியின் கொள்கைகளுள் ஒன்று என்பதையும் எடுத்துரைத்தோம். சென்ற வீடுகளிலெல்லாம் தேநீர் - கோப்பி - குளிர்பானமாகிய ஓரேஞ்பார்லி என்று ஏதோவெல்லாம் கிடைத்தது. எமது வயிறும்
நிரம்பியது. அவர்களின் மனதும் குளிர்ந்தது. நாம் பரஸ்பரம் திருப்தி அடைந்தோம்.
சில நாட்களுக்குப்பின்னர்
- தந்தை செல்வா
தமது பாரியாருடனும் தலைமை ஆதரவாளர்களுடனும் அந்த வட்டாரத்துக்குச் சென்றார். அங்கு தந்தையே எதிர்பார்க்காத ஆதரவு வரவேற்பு அவருக்கு கிடைத்தது.
அம்பிகைபாகன்
மாஸ்டர்
ஏற்கனவே வந்து தனக்கும்
கட்சிக்கும் ஆதரவு திரட்டிவிட்டு சென்றுவிட்டார் என அறிந்ததும் எந்த அம்பிகைபாகன்?
என்ற கேள்வி
அவர் மனதில் எழுந்திருக்கிறது. அவர் தமது புருவம் உயர்த்தி எந்த அம்பிகைபாகன்?
எனக்கேட்டிருக்கிறார்.
அதற்கு என்ன காரணம்?
அம்பி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டு குடிக்க
தண்ணீர் கேட்டார். எடுத்துக்கொடுத்தேன்.
சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டிருந்தவர்.... சரி எந்த இடத்தில்
விட்டேன் எனக்கேட்டார்.
எந்த அம்பிகைபாகன்?
தந்தை
செல்வாவிடம் உதித்த கேள்வி என்றேன்.
ஆம். ஆம்....ஆம்...
அந்த நாட்களில் அதாவது 50
களில் ச. அம்பிகைபாகன் என்ற பெயருள்ள
ஒருவர் அப்பகுதியில் மிகவும்
பிரபல்யமாக இருந்தார். அவர் யாழ்.
வைத்தீஸ்வராக்கல்லூரி அதிபர். சமூகப்பணியாளர்.
சமயச்சொற்பொழிவாளர். கட்டுரை எழுத்தாளர். அமைச்சர் சு.நடேசபிள்ளையின்
பகிரங்க ஆதரவாளர். சுருக்கமாகச் சொன்னால்
நாடறிந்த அதிபர் -
அறிஞர். அவரைத்தான் செல்வாவும் அறிந்துவைத்திருந்தார்.
தந்தை செல்வா அன்றைய அவரது பிரசாரத்திற்காக ஆதரவு கேட்டுச்சென்ற முதலாவது வீட்டிலேயே ஆரோக்கியமான
வரவேற்பு. அதை அவர் எதிர்பார்க்கவில்லை. மேலும்
தமிழரசுக்கட்சியின் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரங்கள் மற்றும்
படங்களை கண்டு ஆச்சரியமிகுதியால் - இவையெல்லாம்
எப்படிக்கிடைத்தன? - என கேட்டிருக்கிறார்.
அம்பிகைபாகன்
வந்தார். இவற்றைத்தந்தார் - என்ற வீட்டுக்காரர்களின் பதிலினால் வியப்புற்றார்.
பின்னர்
தனது சகோதரர் பொன்னுத்துரை ஊடாக மேலதிக
தகவல் அறிந்து என்னை அழைத்து உரையாடினார்.
அம்பிகைபாகன்
வந்தார். தமிழரசுக்கட்சி பிரசுரங்களைத்தந்தார். என்று அவர்கள்
சொன்னபொழுது என்னால் நம்ப முடியவில்லை. நான் நினைத்த அம்பிகைபாகன் எனக்காக வரமாட்டார். ஏனென்றால் அந்த அம்பிகைபாகன் நடேசபிள்ளையின்
தீவிர
ஆதரவாளர். - என்று அந்த வீட்டுக்காரர்களிடம் சொல்ல நினைத்தேன்.
ஆனால் சொல்லவில்லை. என்னை ஆதரிக்கவும் மற்றுமொரு
அம்பிகைபாகன் இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் - என்றார்
தந்தை செல்வநாயகம்.
அன்றைய சந்திப்பின் பின்னர்
எமக்கிடையே நட்புறவு மலர்ந்தது.
அவரது தமிழரசுக்கட்சிக்காக நான் முழுமூச்சாக உழைத்தேன்.
அவரது சமஷ்டி கனவு கனவாகவே நீடிக்கிறது.
தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனச்சொல்லிவிட்டு
அவரும் கடவுளிடம் போய்விட்டார். கடவுளிடமும் அவர் சமஷ்டிக்கோரிக்கையை வைத்திருப்பார்.
நானும் கடந்துவிட்ட 62 ஆண்டுகளில் இலங்கையிலும்
இலங்கைத்தமிழரிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்தவாறே உலகலாவிய
தமிழர் பற்றி யாதும் ஊரே: ஒரு யாத்திரை
நூலையும் எழுதிவிட்டு தற்பொழுது ஓய்ந்துபோனேன். எனக்கூறிவிட்டு
பெருமூச்சொன்றை உதிர்த்தார் கவிஞர் அம்பி.
---0----
No comments:
Post a Comment