.
நாம் ஏன் பிறந்தோம்..?
மீண்டும் பிறக்காமலிருப்பதற்காகவே பிறந்தோம் என சமயங்கள் உரைக்கின்றன. நாம் செய்யும் நல்வினை, தீவினை அடிப்படையில் நமக்குப் பல்வேறு பிறப்புகள் உண்டு என்று சமயங்கள் அறிவுறுத்திச் செல்கின்றன. காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் பல்வேறு சட்டங்களை வகுத்து மக்களை நல்வழிப்படுத்த முயற்சிசெய்கின்றன. இருந்தாலும் இந்த உலகம் சுயநலமிக்கதாகவே உள்ளது. உலகம் செல்லும் பாதையில் நாமும் செல்வோம் என்றே பலரும் செல்கிறோம். இந்த நிலையிலும் மனிதாபிமானத்தோடு, சீவகாருண்யத்துடன், பொதுநல உணர்வோடு வாழ்பவர்களைக் காணும்போது பெரு வியப்பு தோன்றுகிறது.
ஒரு நாளிதழில் ஒருவருடைய அனுபவம் படித்தேன்..
தன் தந்தையின் நினைவுநாளுக்காக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருக்கின்றனர் அண்ணன், தம்பி இருவரும் அங்கு உள்ள முதியோருக்கு ஏதாவது தந்தையின் நினைவாகச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு..
அப்போது அங்கு முதியோரெல்லாம் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார்களாம். இவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்த முதியோரின் முடிதிருத்தத்துக்கு ஆகும் செலவை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன? என்று தோன்றியதாம். தம் எண்ணத்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்….
ஐயா இந்த முதியோர் இல்லத்துக்கு நீண்ட நாட்களாகவே முடிதிருத்தம் செய்ய வருபவர் அதற்காக பணம் எதுவும் வாங்குவதில்லை. தம் மனநிறைவுக்காக அவர் மாதம் ஒரு முறை இங்கு வந்து இலவசமாகவே முடிதிருத்தம் செய்துவிட்டுச்செல்கிறார் என்றவுடன் எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றுதம் அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.
இப்படியும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த மனிதாபிமானமிக்கவரின் பண்பை எண்ணி நான் மனதில் ஒப்பீடுசெய்துகொண்ட பாடல் இதுதான்,
கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
புறநானூறு, 119, பாடியவர்: கபிலர்.
பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த பொழுது ,யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?
பாடலின் வழியே..
தெறுழ்ப் பூக்கள் யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் பூத்தனஎன்ற உவமை மிகவும் நுட்பமானதாகவுள்ளது.
ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்ணும் சங்ககால உணவு மரபு சுட்டப்பட்டது.
இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய பாரியின் வள்ளல் தன்மைக்கு நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல என்ற உவமை மிகவும் ஏற்புடையதாகவுள்ளது.
Nantri:gunathamizh.com
No comments:
Post a Comment