உலகச் செய்திகள்


சிலியில் மீண்டும் நில அதிர்வு

தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்தான இறுதி தொடர்பாடல் வார்த்தையில் மாற்றம்

பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் அறிமுகம்

தூக்குத் தண்டனை எதிரான மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி


=======================================================================

சிலியில் மீண்டும் நில அதிர்வு

03/04/2014  சிலி நாட்டிற்கு அண்மையிலுள்ள பசுபிக் கடற் பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் 7.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய  தினம் 8.2 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்து சுனாமி எச்சரிக்கை விடுக்கபப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!


02/04/2014   தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள கழிவு உலோக களஞ்சியசாலையொன்றில் இரண்டாம் உலகப்போர் கால குண்டென சந்தேகிக்கப்படும் குண்டொன்று இன்று புதன்கிழமை வெடித்ததால் குறைந்தது 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
 பணியாளர்கள் அந்த குண்டை வெட்டி திறக்க முயற்சித்தபோதே அது வெடித்துள்ளது.
நிர்மாணத்தளமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குண்டை நிர்மாணப் பணியாளர்கள் செயலிழந்த குண்டெனக் கருதி கழிவு உலோகங்களை சேகரித்து விற்பதில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.
இதனையடுத்து கழிவு உலோகக் களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த குண்டில் உள்ள உலோகப் பகுதியை பிரித்தெடுக்க பணியாளர்கள் முயற்சித்தபோது அது வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பால் குறிப்பிட்ட களஞ்சியசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள வீடுகளும் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.


நன்றி வீரகேசரி 


காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்தான இறுதி தொடர்பாடல் வார்த்தையில் மாற்றம்

01/04/2014   காணாமல் போன மலேசிய எம்.எச். 370விமானத்திலிருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதித் தொடர்பாடல் வார்த்தை குறித்து திருத்தமொன்றை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 
அந்த விமானத்திலிருந்து இரவு வணக்கம் மலேசியா 370 மற்றும் அனைத்தும் சரியில்லை இரவு வணக்கம்  என்பதே இறுதி வார்த்தையாக கூறப்பட்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. 
மேற்படி இறுதி வார்த்தை துணை விமானியால் கூறப்பட்டது என்பது தொடர்பில் தடயவியல் நிபுணர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது. 
இதற்கு முன் அந்த விமானத்திலிருந்து கடைசியாக கேட்கப்பட்ட இறுதி வார்த்தை எல்லாம் சரி, இரவு வணக்கம் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் மேற்படி விமானத்திலிருந்தான இறுதி வார்த்தை ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்தோ, அந்த வார்த்தை குறித்து சரியாக தீர்மானமெடுக்க அதிகாரிகள் ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பது குறித்தோ தெளிவற்ற நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 


பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் அறிமுகம்

01/04/2014   இந்திய  ரிசர்வ் வங்கி நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபா நாணயத் தாள்களை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒரிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அவுஸ்திரேலியா ,கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளட்ட 30 நாடுகளில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


தூக்குத் தண்டனை எதிரான மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி

01/04/2014  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிராக மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது.
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, கருணை மனு மீது முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், 'தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு இந்த வழக்கின் தன்மையை பரிசீலிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து அரசின் அதிகார வரம்புக்குள் நுழைய துணிந்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பிறப்பித்த இந்த தீர்ப்பு அதற்கான அதிகாரம் இல்லாத 3 நீதிபதி அமர்வால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பல்வேறு விளக்கங்கள் தொடர்புடையது என்பதால் 5 நீதிபதி அமர்வு விசாரித்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றே மரியாதையுடன் நாங்கள் தெரிவிக்கிறோம். இந்த நீதிமன்றம் வகுத்துள்ளதும் மற்றும் அரசமைப்புச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் இடம்பெற்றுள்ளதுமான காலம் காலமாக நடைமுறையில் உள்ள சட்ட கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன.
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகும்.
குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரமே இருக்கிறது. கருணை மனுமீது உரிய பரிசீலனை தரப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கருதி இருந்தால் மறு பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். தாமதம் பிரச் சினையாக இருந்திருந்தால், அந்த மனு மீது விரைந்து முடிவு எடுக்கும்படி குடியரசுத் தலை வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். 3 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து தீர்ப்பு பிறப்பிக்கும்போது மத்திய அரசு வைத்த வாதங்கள் உரிய வகையில் பரிசீலிக்கப்படவில்லை' என்று அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.  நன்றி வீரகேசரி

No comments: