சங்க இலக்கியக் காட்சிகள் 2 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
----------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்> பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
உறவா? பொருளா?

காட்சி 2
திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர்கள் நமது பண்டைத் தமிழ் மக்கள். அயல் ஊர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வருவது அந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்திருக்கின்றது. அவ்வாறு செல்லும் ஆண்கள் தங்கள் காதலிகளைப் பிரிந்திருப்பதும்அதனால் அவர்கள் வாடியிருப்பதுமான காட்சிகள் சங்க இலக்கியங்களில் நிறையவே உள்ளன. அவ்வாறானதொரு காட்சியை இப்போது காண்போம்.
மனமொத்த காதலர் இருவர் களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருநாள் அவளைச் சந்திக்காமல் இருப்பதற்குக்கூட அவனால் முடியாது. அவளும் அப்படித்தான். தினமும் அவனைக் காண்பதிலும் அவனோடு கதைப்பதிலும் உடலுறவில் கலப்பதிலும் மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருப்பவள். இருவருமே திருமணம் செய்து ஒன்றாக வாழும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள். காதலில் வீழ்ந்த நாள்முதல் இதுவரையில் ஒருவரை ஒருவர் காணாத நாள் இல்லை என்றபடி காணாத வேளைகளில் நினைந்தும் கண்டபோது பிணைந்தும் தீராத காதலில் நனைந்து மகிழ்ந்து இன்புற்றிருப்பவர்கள்.
இந்த நிலையில் அவனுக்கு வெளியூர் சென்று பொருளீட்டி வருவதற்கான வாய்ப்பொன்று வருகிறது. நீண்டகால முயற்சியின் பின்னரே இந்த வாய்ப்புக் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி வெளியூர் சென்றால் நிறையப் பொருளீட்டி வரலாம் காதலியுடன் இன்பமாக வாழலாம் என்பதையெல்லாம் அவன் அறிவான். அதனாலேயே அதற்கு அவன் முயற்சி செய்தான். இப்போது போவதற்கான தருணமும் வந்து விடுகிறது.




போனால் பொருளீட்டி வரலாம். ஆனால் அவனது உள்ளமோ அவ்வளவு காலமும் தன் காதலியைப் பிரிந்திருக்க வேண்டி வருமே என்று கலங்குகின்றது. அவளோடு களித்திருக்க முடியாமல் போய்விடுமே என்று மயங்குகிறது. பிரிந்திருக்கும் காலத்தில் அவள்தரும் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய் விடுமே என்று தயங்குகிறது. காதலியோடு கலந்திருக்கும் இன்பத்தை இழந்து கனதூரம் செல்லும் போது அங்கே நினைத்தபடி பொருளீட்ட முடியாமல் போய் விட்டால் அதுவுமில்லை இதுவுமில்லை என்று ஆகிவிடலாம் என்றவாறு அவனது சிந்தனை சுழல்கிறது. செல்வத்தைத் தேடிச் செல்வதிலும் தன் உள்ளத்தில் இருப்பவளோடு கூடியிருப்பதே மேல் என்று அவன் நினைக்கிறான்.  அதனால் போகாமல் இருப்பதே நல்லது என்ற முடிவை அவன் எடுக்கிறான். அந்த முடிவைத் தன் நெஞ்சிற்கு அவன் எடுத்துச் சொல்கிறான். வெளியூர் போவதைத் தவிர்த்துக் கொள்கின்றான்.
இந்தக் காட்சியைச் சித்தரிக்கும் பாடல் ஒன்று நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை – வாழி என் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக! வாழிய பொருளே!

(நற்றிணை. பாடல் இலக்கம்: 16. பாலைத்திணை. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். )
என் நெஞ்சமே நீ வாழ்க! காதலியைப் பிரியாது அவளுடன் கலந்திருந்தால் பொருட்செல்வம் கிடைக்காது. அவளைப் பிரிந்து பொருளீட்டச் சென்றால் அவளிடம் கிடைக்கப்பெறுகின்ற இன்பம் கிடைக்காது. இந்த இரண்டிலும் ஏதாயினும் ஒன்றை நீ தேர்ந்தெடுப்பாயாக. அது பொருள் ஈட்டச் செல்வதாயிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. எனக்கு நல்லது செய்கின்ற உரிமை உனக்குள்ளது.
வாடாத பூக்கள் நிறைந்த வளமான பொய்கையிலே வாழ்ந்துகொண்டிருந்த மீன் அதைவிட்டுவிட்டு அந்தப் பொய்கையிலே வந்து விழும் புதுநீரைக்கண்டு அந்த நீர்வரும் வரும் திசைநோக்கி ஓடிச்சென்று குறித்த இடத்தை அடையாமல் வழியிலேயே (வலையில் பட்டு) இறந்துவிடும். அதைப்போல நானும் என் காதலியிடம் பெறுகின்ற இன்பத்தையும் இழந்து பொருளீட்டச் செல்லும் போது அங்கே இடையிலே துன்பமும் வரலாம் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலும் போகலாம்.
அதனால் காதளவு நீண்ட குளிர்ச்சியான தன் கண்களால் என்காதலி என்னை விருப்பத்தோடு பார்க்கும் பார்வையின் இன்பத்தில் சிக்குண்டிருக்கும் நான்ää கடலால் சூழப்பட்டுள்ள இந்தப் பெரிய உலகத்தையே  அளவு மரக்காலாகக் கொண்டு அதனால் ஏழு முறை அளக்கத்தக்கதான பெரும் பொருளைப் பெற்றாலும் அதை விரும்பமாட்டேன். அது எவ்வளவு பெரிய செல்வமாக இருந்தாலும் இருக்கட்டும். (அதைத் தேடிச் செல்பவர்களிடத்தில் சென்று) அது வாழட்டும்!
என்பது இந்தப் பாடலின் கருத்தாகும். பொருளைத் தேடுவதிலும்ää காதலியின் உறவை நாடுவதிலேயே கருத்தூன்றி வாழ்ந்திருக்கிறது பண்டைத்தமிழ் இளைஞர் உள்ளம்.
(காட்சிகள் தொடரும்)

---- ---- ----

No comments: