காவல் தெய்வங்கள் - செ .பாஸ்கரன்

.


காவல் தெய்வங்கள் என்றதும் எம் கண்முன்னே தோன்றுவது வயிரவர் கோயில்களும் காளிகோயில்களும் ஜயனார் கோவில்களும்தான் பெரும்பாலும்; ஊர்க்கோடிகளில் அமைந்திருக்கும் இந்ததெய்வங்கள் காவல்தெய்வங்கள் என சின்னவயதில் சொல்லக் கேள்விப்பட்டதுதான். தமிழ்நாட்டில் இவற்றோடு சேர்த்து எல்லையம்மன் கறுப்பண்ண சுவாமி மதுரைவீரன் சுடலைமாடன் இப்படி பல பெயர்களில் கிராமத்து மக்கள் தங்கள் காவல் தெய்வங்களாக வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அல்லது பயத்தோடு பக்திகொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களே ஊரைக்காப்பதாக நம்பிக்கையோடு இருப்பார்கள்.

நான் காவல் தெய்வங்களாக இங்கேபார்ப்பது இவர்களையல்ல. நீலநிற உடையணிந்து மருத்துவ மனைகளில் நோயாளர்களை கவனிக்கும் பணிகளில் டாக்டர்களோடு இணைந்து பணியாற்றும் தாதிமார்களைத்தான். என்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக சிட்னியில் உள்ள மருத்துவ மனையொன்றில் சிலநாட்கள் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. வருத்தமாக இருந்தபோதும் வருத்தம் சுகமாகிக்கொண்டு வரும் வேளையிலும் நான் பெற்ற அனுபவங்கள் இந்த தாதிமார்களை என் கண்கள் காவல் தெய்வங்களாக பார்க்க வைத்தது.

அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றேன். இரெத்தம் எடுப்பது மருந்துகள் தருவது மருந்துகள் ஏற்றுவது என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். தேன்கூட்டை சுற்றிப்பறந்துகொண்டிருக்கும் தேனீக்கள் போன்று இவர்களும் பறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். கையில் ஒரு விசைப்பலகை தரப்படுகிறது தேவையான நேரம் அதை அழுத்தினால் தாங்கள் வருவோம் என்று கூறப்படுகிறது. இரவாபகலா என்று இயந்திரங்களுக்கு தெரியவா போகின்றது எனக்கு மருந்து ஏற்றப்பயன்படுத்தும் இயந்திரம் இருந்தாற்போல் ஒலி எழுப்பும் சற்று தலையை தூக்கிப்பார்த்தால் ஏதாவது ஒரு செய்தி இருக்கும் "Tube blocked"  இப்படி ஏதாவதொன்று. விசையை அழுத்துவேன் யாராவது ஒரு தாதி மிஸ்டர் பாஸ்கரன் எப்படி இருக்கின்றீர்கள் என்ற கேள்வியோடும் பெரும்பாலும் ஒரு புன்னகையோடும் வருவார்,  இயந்திரத்தின் பிரச்சினையை சீர்செய்வார் சில வேளைகளில் அந்த வேளையில் இன்னுமொருவர் விசையை அழுத்திய ஒலி கேட்கும். அவசரமாக அந்த நபரை நோக்கி செல்வார் அல்லது இன்னுமொரு தாதியின் "நான் போகிறேன்" என்ற ஒலி வரும்.பூவை நோக்கி ஓடும் வண்டுகளாக அவர்கள் சிறகடித்துக் கொண்டிருப்பார்கள்.





நீல உடைகளோடு தாதிமார்கள்

வருத்தம் உடலை வருத்திக்கொண்டிருந்ததால் இவர்களை அதிகம் என்னால் கவனிக்கவோ ரசிக்கவோ அப்போது முடியவில்லை வருத்தம் மாறிக்கொண்டு வந்தபோது தனிஅறையில் இருந்து நான்குபேர் ஒன்றாக இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டேன். இப்போது நான் தெம்பாக இருப்பதுபோல் இருந்தது. அப்போதுதான் இந்த தாதிமார்களின் செயல்களை அவதானிக்க முடிந்தது. அதி காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன் சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது அல்லது ஏதாவது புத்தகத்தை வாசிப்பதாக நேரத்தை ஓட்டிக்கொண்டிருப்பேன். 5.30 மணியானதும் காலைக்கடன்களை முடிப்பதற்காக எழுந்து விடுவேன் எனது காலைக்கடன்களில் முழுக்கு என்பது முக்கியமானது. அதற்கு எனது மேலங்கி கழட்டப்பட வேண்டும் மருந்து ரியூப்மூலம் சென்றுகொண்டிருப்பதால் அதற்கு தாதிமாரின் உதவிதேவை அழைப்பு விசையை அழுத்தியவுடன் யாராவது ஒருவர் வருவார் மிஸ்டர் பாஸ்கரன் குட்மோணிங் என்று புன்னகையோடு கூறிக்கொண்டு என்னை இயங்திரத்தில் இருந்து விடுவித்து விட்டு எனக்குத் தேவையான ரவல், சவற்காரம் என்பவற்றை எடுத்துக்கொண்டு வந்து தருவார்;. நான் என்னுடைய கடமைகளை முடித்துக்கொண்டு திரும்பும்போது அங்கிருந்த மற்ற மூன்று நோயாளர்களையும் எழுப்பி விட்டுவிட்டு இரண்டு மூன்று தாதிமார்கள் சேர்ந்து கட்டில் விரிப்புக்களை மாற்றுவார்கள் தலையணை உறைகளை, போர்வைகளை எல்லாம் மாற்றி மிக அழகாக படுககையை விரித்து வைப்பார்கள் இவர்கள் இதைச் செய்யும்போது அனுபவத்தின் லாவகம் தெரியும், மிகவும் சந்தோசமாக சிரித்துப் பேசிக்கொண்டே மாற்றுவார்கள். அவர்கள் வேலை செய்வது போன்றே தெரியாது. நான் எமது வீட்டில் கட்டிலுக்கு விரிப்புக்கள் மாற்றும்போது நானும் பிள்ளைகளும் படுகின்ற பாடுகளை எண்ணியபோது அந்த வேளையிலும் சிரிப்புத்தான் வந்தது. அவர்கள் அவற்றை முடிக்கும்வரை நாங்கள் கதிரையில் அமர்ந்திருப்போம் எம்முடனும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

நாங்கள் 8 மணி நேரம் வேலைத் தலத்தில் கதிரையில் இருந்து வேலை செய்து விட்டு வந்து களைத்துப்போய் விட்டோம் என்று கூறுவோம் இவர்கள் வந்த வேளையில் இருந்து சுறுசுறுப்பாக நடந்துகொண்டும் கட்டில் விரித்துக்கொண்டும் முடியாதவர்களுக்கு உடம்பை துடைத்துக்கொண்டும் மருந்து கொடுத்துக்கொண்டும் நாள்முழுக்க நடந்து கொண்டே இல்லையில்லை ஓடிக்கொண்டே இருக்கின்றார்களே அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்காகத்தான் இப்படி வேலைசெய்கின்றார்களா? நிட்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும் அதில் ஒரு விருப்பு ஒரு திருப்தி இருக்கத்தான் வேண்டும்.



எங்கள் அறையில் இருந்த நான்கு பேருக்கும் பெரும்பாலும் மாறி மாறி சில தாதிமார்கள் வருவார்கள் இவர்களில் மிக கலகலப்பாக சிரித்துக்கொண்டே நையாண்டி பேசிக்கொண்டு திரியும் ரிங்ரிங் என்பவள் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை அதனால் அடிக்கடி டபிள் சிப்ட் செய்கிறேன் என்பாள். நிறையவே கதைப்பாள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். கேட்பதையெல்லாம் எந்த சலிப்பும் இல்லாமல் செய்வாள்.அவளுக்கு ராகமாலிகை என்று பெயர்வைத்துக்கொண்டேன்.

 சீரியசாக கவனமாக வேலைசெய்யவேண்டும் என்று எல்லோரையும் கவனித்துக்கொண்டிருக்கும் இன்னொருவர் புஸ்பா முதலில் ஆங்கிலத்தில் உரையாடி தமிழ்பெண், அதுவும் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர் என்று கண்டுகொண்டபின் தமிழிலேயே உரையாடிக்கொள்வேன்.சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும். இவர் இரத்தம் எடுக்க வரும்போது மிஸ்டர் பாஸ்கரன் உங்கள் பெயரென்ன என்று கேட்பார் அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே என்பேன் ,சிரித்துக்கொண்டே இது எங்களது கடமை கட்டாயம் கேட்டே ஆகவேண்டும் என்று கூறிவிட்டு பிறந்ததிகதியையும் கேட்டு விட்டு கையில் கட்டியிருந்த இலக்கத்தையும் சரிபார்த்துக்கொண்டு இரத்தத்தை எடுத்துக்கொள்வார். இந்த வேளையில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆண்ஒருவரின் இரத்தமும் பெண்ஒருவரின் இரத்தமும் மாறி பெயரிடப்பட்டுவிடுகிறது. சோதனை முடிவில் ஆண் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்துவிடும்.நோயாளி உட்பட டாக்டர்கள் குழம்பிப்போய் நிற்கும் காட்சி சிரிப்பை ஏற்படுத்தியது. அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கவனம் என்பதில் ஓரளவு திருப்தியாக இருக்கும். இவர் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். இவர் நம்மவர் என்பதாலோ என்னவோ புஸ்பா என்றே அழைத்தேன்.

இன்னொருவர் மரியா. ஊரிலே பச்சைக்கிளியை  பார்த்திருப்போம். உடல்முழுவதும் வெள்ளை சொண்டுமட்டும் சிவப்பாக இருக்கும். அதேபோல்தான் இவரும் உதடுகளை மட்டும் இரத்த சிவப்பு நிறத்தில் பூசி வைத்துக்கொள்வார்.ஏதோ மேலதிக உதடுகள் இருப்பதுபோல் தோன்றும். கிளிமாரி இருந்தாலும் அவரது முகத்தில் எந்நேரமும் சோகத்தை அள்ளி அப்பிவிட்டது போல் இருக்கும் ஆனால் உதடுகள் சிரிக்கும் ,கலகலப்பாக பேசுவார்.நோயாளர்களுக்கு உதவி செய்வதோடு நின்று விடாது மற்றைய தாதிகளுக்கும் ஓடிச்சென்று கைகொடுக்கும் ஒரு சுபாவம் உள்ளவர். அதிமான நேரங்களில் எனக்கான மருந்துக் குளிசைகளை கொண்டுவருவார். ஓவ்வொரு முறை மருந்தை தரும்போதும் என்ன மருந்து என்பதைக் கேட்பேன். மிஸ்டர் பாஸ்கரன் ஒவ்வொருநாளும் உங்களுக்கு இதேமருந்தைதான் தருகின்றோம் தெரியாதா என்றார். நான் கூறினேன் தெரியும் ஆனால் நீங்கள் சரியான மருந்தைத் தான் தருகின்றீர்களா அல்லது வேறு யோசனையில் மருந்தை மாற்றி தருகின்றீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா என்பேன் சிரித்துக்கொண்டே மருந்தைப் போட்டு தண்ணி குடித்த பின்தான் இடத்தை விட்டு நகர்ந்து கொள்வார். இத்தனை மணிக்கு மருந்து கொடுக்கப்பட்டது என்று குறிப்பேட்டில் குறித்துக்கொள்வார்.கடமையை சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணமா அல்லது சூடுபட்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொள்கின்றாரா என்று தெரியாது. அவருக்கு பச்சைக்கிளி என்றே பெயர் வைத்துக்கொண்டேன்.

அடுத்தவர் கோபி நாயுடு குஜராத்தைச் சேர்ந்தவர் அவருடைய கண்கள்தான் அதிகமாக பேசும் வாய்பேசுவது மிகக் குறைவு. காந்தி பிறந்த ஊரில்தான் இவரும் பிறந்திருக்கின்றார் (போர்பந்தர் )அதை பெருமையாக கூறிக்கொண்டார். அடிக்கடி உள்ளங்கையைப்பார்த்து சிரித்துக்கொள்வதைப் பார்த்துவிட்டு கேட்டேன் ஜாதகம் பார்ப்பீர்களா என்று ,ஏன் என்று கேட்டார் இல்லை கையைப்பார்த்து பார்த்து சிரிக்கின்றீர்கள் என்றேன் சிரித்துக்கொண்டே கையை விரித்துக் காட்டினார் கைபேசி ஒன்று அதில் 5 வயது பெண்குழந்தையின் சிரித்த முகம். சிறிது கவலை அரின் முகத்தில் படர்ந்து கொள்ள Day Care  ரில விட்டுப்போட்டு வாறனான்,  போறதும் பிந்தித்தான் போறது, அவளைப்பார்க்கவேண்டும் போலிருக்கும் என்றாள்.  IT  தொழில் பார்க்கும் கணவர். இளம் குடும்பம் பிள்ளையை அன்போடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு வேலைசெய்யும் பல பெண்களில் ஒருத்தியாக இருந்தாலும். நோயாளர்களை பார்ப்பதிலும் பராமரிப்பதிலும் சுறுசுறுப்பாகவே காணப்படுவாள்.

இன்னும் சில தாதிமார்களும் இருந்தார்கள் எலிசபெத் என்று ஒரு தென்ஆபிரிக்க கறுப்பின பெண் சிரித்த முகம் உரத்த குரல் இரவுவேளைகளில் பாடிக்கொண்டு திரிவாள். பாடலில் இனிமை இருக்கின்றதோ இல்லையோ தெரியாது ஆனால் கேட்டுக.கொண்டிருக்கலாம். நித்திரையாக இருக்கும் நோயாளிக்கு அண்மையில் வந்து நண்பரே தூங்குகின்றாயா மருந்து எடுக்கும் நேரம் என்பாள். மதயானையின் பிளிறல் காதுக்கு அண்மையில் கேட்டதுபோல் துடித்து பதைத்து சினத்தோடு எழும்புபவர் கூட அவள் நகைச்சுவையான பேச்சைக் கேட்டு சிரித்துவிடுவார்கள். அவளுக்கு ஒரு பெயர் வைக்க நினைத்தபோது பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள்தான் ஞாபகத்தில் வந்ததால் அதையே வைத்துக்கொண்டேன்.

இன்னும் சில தாதிமார்களும் இடையிடையே வந்து போனார்கள் ஆனால் அனைவருமே அன்பாகவும் நோயாளிகளோடு ஆதரவாகவும்தான் பழகினார்கள். எந்த ஒரு வேளையிலும் சினந்து கொண்டதை காணமுடியவில்லை.

இது தாதிமார்களோடு ஏற்பட்ட அனுபவம் என்றால் நான்கு சுவர்களுக்குள் நான்கு நோயாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் இன்னும் சுவாரசியமானது.

அடுத்த வாரம் தொடரும்

5 comments:

யசோதா.பத்மநாதன் said...

அன்புள்ள பாஸ்கரன்,

நீங்கள் சுகமாகி வந்ததை இட்டு என் மனமார்ந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கலையுள்ளத்தால் தான் சம்பவங்களையும் சுவாரிசமான சமையலாக செய்து தர முடியும் என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சாட்சி.

நல்ல பொருத்தமான தலைப்பு காவல் தெய்வங்கள்! தாதிமாருக்கும் நல்ல பொருத்தமாக பெயர் வைத்ததில் தெரிகிறது ஒரு ரசிகமனம்.

தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

tamilmurasu said...

நன்றி யசோ. உண்மையாகவே அவர்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. யாழ்ப்பாண ஆஸ்பத்திரி தான் கண்முன்னால் வந்து நின்றது.

செ பாஸ்கரன்

திருநந்தகுமார் said...

அன்புள்ள பாஸ்கரன். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். எங்கோ வெளிநாடு போய்விட்டீர்களோ என்று நினைத்தேன். இதனைப் படித்த போது தான் மருத்துவ மனையில் இருந்தமை தெரிந்தது. இலக்கிய வாதி எதனைப் பார்த்தாலும் வாசகனுக்குச் சொல்ல செய்திகள் இருக்கும். நீங்கள் கோல்ட் கோஸ்ட் போன போதும் இதைப் போலவே எழுதியமை நினைவில் வந்தது. நேரில் சந்திக்கும் ஆவலுடன் திருநந்தகுமார்

tamilmurasu said...

நன்றி திருநந்தகுமார்

என் மனதுக்கு தோன்றுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்கள் குறிப்புக்கள் இன்னும் ஊக்குவிக்கின்றது. வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி.

செ பாஸ்கரன்

Ramesh said...

ஜயா வணக்கம் முதலில் நலம்பெற வாழ்த்துக்கள். பலரும் இதில் குறிப்பிட்டதுபோல் காண்பவற்றை அழகாக எழுதுகின்றீர்கள். கவிஞன் கண்டாலே கவிதை. எனக்கும் ஒருதரம் உங்க போகவேண்டும்போல இருக்கு. பச்சைக்கிளியெல்லாம் பாக்க கிடைக்காட்டியும் பறுவாயில்ல அந்த ஆபிரிக்க சிங்கத்தையாவது பார்க்கலாம் எண்டு தோன்றுகின்றது. ஊரிலயெண்டா அம்மிக்குளவிய காலில போட்டுட்டாவது போகலாம் பாவி என்ர மனுசி ஒரு கல்லுரல் கூட வாங்குறாவில்லை என்ன செய்யிறது. மிஸ்டர் பாஸ்கரன் ஆபிரிக்க பாட்டுத்தான் காதுக்க கேக்குது என்ன செய்யிறது.
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வும் வரும்.
தொடற்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.