கலை - இலக்கியத்தேடலை ஊக்குவித்த மெல்பன் அனுபவப்பகிர்வு

.
கலை - இலக்கியத்தேடலை    ஊக்குவித்த    மெல்பன்    அனுபவப்பகிர்வு
தமிழ்   விக்கிபீடியா    பயிலரங்கு              - முருகபூபதி



அவுஸ்திரேலியா   தமிழ்     இலக்கிய     கலைச்சங்கத்தின்    பணிகளில் நடப்பாண்டுக்கான    இரண்டாவது     அனுபவப்பகிர்வு  -  தமிழ் விக்கிபீடியாவில்    பங்களித்தல்  தொடர்பான    பயிலரங்கு  கடந்த  பெப்ரவரி 23 ஆம்   திகதி     ஞாயிற்றுக்கிழமை   மெல்பனில்  -  பிரஸ்டன்    இன்றர்  கல்சரல்   நிலையத்தில்   சங்கத்தின்   தலைவர்    டொக்டர்  நடேசன் தலைமையில்     நடைபெற்றது.
ஒருவர்    தமது     வாழ்வில்    பெற்றுக்கொண்ட    மகிழ்ச்சியான தருணங்களிலிருந்துதான்    வாழ்வின்    பயன்பாட்டை பெற்றுக்கொள்வாரேயன்றி     தேடிப்பெற்ற     டொலர்    நாணயங்களினால் அல்ல    என்று    அமெரிக்க  தத்துவ   ஆசான்   தோரோ    அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.    மகிழ்ச்சியான     தருணங்களை   வாழ்வின் அனுபவம்தான்     நமக்குத்தருகிறது.     படைப்பிலக்கியவாதிகளும் கலைஞர்களும்     தீவிர வாசகர்களும்    அனுபவப்பகிர்வுகளில் கலந்துகொள்வதன்     மூலம்    அந்த    மகிழ்ச்சியான     தருணங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.     தமிழ்    இன்று    இணையத்துக்குள்    வந்துள்ள சூழலில்     எமது     அவுஸ்திரேலியா     தமிழ்     இலக்கிய     கலைச்சங்கம்   தமிழ்     விக்கிபீடியாவில்    எவ்வாறு    பங்களிக்கலாம்    என்பது    பற்றிய பயலரங்கை     அனுபவப்பகிர்வாக    நடத்துவதற்கு     முன்வந்திருப்பது சிறந்த   பணியாகும் -    என்று      டொக்டர்   நடேசன்  தமது தலைமையுரையில்     குறிப்பிட்டார்.



சங்கத்தின்     செயலாளர்     திரு. லெ.முருகபூபதி   வரவேற்புரை நிகழ்த்துகையில் -  சங்கம்   எதிர்வரும்   மாதங்களில்   நடத்தவுள்ள  இதர அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சிகள்   தொடர்பாக   குறிப்பிட்டார்.  தமிழில்  கவிதை  இலக்கியம்  -  வலைப்பூக்கள்  -  இணைய இதழ்கள்  - தமிழ்  நாவல் இலக்கியம்   முதலான   தலைப்புகளில்   குறிப்பிட்ட   அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகள்   நடைபெறுவதற்கு   ஏற்பாடாகியிருக்கும்    தகவலையும் சொன்னார்.
தமிழ்   விக்கிபீடியாவில்   பங்களித்தல்    பயிலரங்கில்   உரையாற்ற குவின்ஸ்லாந்து   மாநிலத்திலிருந்து   வருகை   தந்திருந்த   திரு. சுப்பிரமணியம்    முகுந்தராஜ் - தமிழ்நாட்டில்   நாமக்கல்  மாவட்டம்  சேந்த மங்கலத்தில்   பிறந்தவர்.   இவர்   அண்ணா   பல்கலைக்கழகத்தின்   சென்னை   தொழில்   நுட்பக்கழகத்தின்    பட்டதாரியாவார்.
குவின்ஸ்லாந்தில் - பிரிஸ்பேர்ண்   நகரில்    இரண்டாம்   தலைமுறை தமிழ்க்குழந்தைகளுக்காக   தாய்த்தமிழ்   பள்ளி   என்ற    பாடசாலையை நடத்திவருகிறார்.
சுந்தரராமசாமி   விருதுக்குழுவும்   கனடா   தமிழ்   இலக்கியத்தோட்டமும் தமிழ்க்கணிமைக்கு   முகுந்தராஜ்   வழங்கிய   பெரும்   பங்களிப்பிற்காக  2012 ஆம்   ஆண்டிற்கான    சுந்தரராமசாமி    விருதைப்பெற்றவர்.
இந்நிகழ்வில்   உரையாற்ற   வருகைதந்த   திரு. சத்தியா  ராஜேந்திரன் - பிரிஸ்பேர்ண்    தாய்த்தமிழ்ப்பள்ளியின்    தன்னார்வலர்.   அத்துடன் பிரிஸ்பேர்ணில்   தமிழ்கணிமை   மற்றும்   நூலகம்   முதலான   முயற்சிகளை ஒருங்கிணைத்தவர்.   அவுஸ்திரேலியா   பல  கதைகள்   சிறுகதைப்போட்டியின்    ஒருங்கிணைப்பாளர்களில்    ஒருவராகவும் இயங்குபவர்.
ஐம்பதினாயிரத்துக்கும்   அதிகமான   கட்டுரைகள்   பதிவாகியிருக்கும்   தமிழ் விக்கிபீடியா   2003    ஆம்   ஆண்டில்   தொடங்கப்பட்டது.   அதன்    பயன்பாடு - எவ்வாறு   அதில்   பங்களித்தல்   பதிவேற்றம்   செய்யப்படும்     தகவல்களில் நிகழும்   தவறுகளை   எவ்வாறு   களைவது -   முதலான  விபரங்களை    திரு. முகுந்தராஜ்   தமது   உரையில்  விளக்கினார்.
வரலாறு - மொழிக்குடும்பம் - சொற்பிறப்பு - தமிழ்பேசப்படும்    நாடுகள் - ஆட்சிமொழி   அங்கீகாரம் - செம்மொழி   அங்கீகாரம்   உட்பட சுமார்   16 தலைப்புகளிலும்   உப தலைப்புகளிலும்   தமிழ்விக்கிபீடியா   உலகத்தமிழர்கள்   அனைவருக்கும்   கட்டற்ற   கலைக்களஞ்சியமாக விளங்குகிறது.
தமிழ் - பண்பாடு - வரலாறு - அறிவியல் - கணிதம் - விஞ்ஞானம் - தொழில் நுட்பம் - புவியியல் - சமூகம் - நபர்கள்   என்ற   தலைப்புகளில்   பல   அரிய தகவல்கள்    பதிவாகியிருக்கும்   தமிழ்   விக்கிபீடியாவில்   நபர்கள்  என்ற தலைப்பில்    அரசர்கள் - அரசியல்வாதிகள் - அறிவியலாளர்கள் - இசைத்துறையினர் - ஊடகவியலாளர்கள் - எழுத்தாளர்கள் - ஓவியர்கள் - கவிஞர்கள் - மொழிபெயர்ப்பாளர்கள்   முதலான   தலைப்புகளிலும்   தகவல்கள் இருக்கின்றன.


எழுத்தாளர்கள்   தமது   சுயவிபரக்குறிப்புகளை   தமது   படத்துடன் பதிவேற்றுவது   எவ்வாறு   என்ற   பயிலரங்கையும்   முகுந்தராஜ்   நடத்தினார்.   அத்துடன்   டுவிட்டர்   முறையில்   மின்னல்  வேகத்தில்   பல தொண்டு   நிறுவனங்களும்   மக்களுக்கு   சிறந்த   பணிகளை வழங்கியிருக்கும்   தகவல்களையும்   அவர்   சொன்னார்.
திரு. சத்தியா ராஜேந்திரன்   தமதுரையில்   இணையத்தளங்கள்   மற்றும் வலைப்பூக்களின்   சாதக - பாதக   விளைவுகளை   சுட்டிக்காட்டினார்.
பயனுள்ள   பயிலரங்காக   நடைபெற்ற   இந்த   அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சியில் கலந்து  கொண்டவர்கள்   தமது   சந்தேகங்களை   தெரிவித்து  மேலதிக விளக்கங்களையும்   பெற்றுக்கொண்டனர்.
இறுதியாக   சங்கத்தின்   துணைச்செயலாளர்   எழுத்தாளர்   திரு. ஆவூரான் சந்திரன்   நன்றி   நவின்றார்.
 மதியவிருந்தோம்பலுடன்  தமிழ்  விக்கிபீடியா   அனுபவப்பகிர்வு - பயிலரங்கு இனிது    நிறைவெய்தியது.
www.tamilwikipedia.com

                                ----0----

1 comment:

Kanags said...

பயிரங்கை நடத்திய முகுந்த்ராஜுக்கு எனது பாராட்டுகள். ஒரு சிறு திருத்தம். //எழுத்தாளர்கள் தமது சுயவிபரக்குறிப்புகளை தமது படத்துடன் பதிவேற்றுவது//. பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றிய தகவல்களை தருவது எந்த மொழி விக்கிப்பீடியாவிலும் விரும்பப்படுவதில்லை. வேறு நடுநிலையான ஒருவர் தகவல்களைத் தரலாம். நன்றி.