.
கூழ்கள் காய்ச்சப்படுவதில்லை; ஆக்கப்படுகின்றன. பெருங்கவனத்தோடும் கலைநயத்துடனும் ஆக்கப்படுகின்றன. கூழ்களுக்கு தேவையான பொருட்களை தெரிவு செய்து வாங்குவதிலிருந்து பெருங்கவனம் கடைபிடிக்கப்படுகின்றது. சாதாரண சிறுவிடயம் தானே என அசிரத்தையோடு தேவையான பொருட்களை வாங்கும் போது கூழின் சுவை முற்றிலும் மாறுபட்டு போய்விடுகின்றது.
எங்கள் வீட்டில் கூழ் காய்ச்சப்படுவதற்கு தேவையானவை என இரண்டு விடயங்களைச் சொல்லலாம். முதலாவது எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அன்று லீவாக இருக்கவேண்டும். அடுத்தது எனது ஒப்புதலுக்கு மனைவி வழி மொழிய வேண்டும். கடந்த சனிக்கிழமை , இருவருக்கும் லீவாக இருந்தது.வழிமொழிவதும் உடன் நடந்தெய்தியது. தமிழர் கடைகள் செறிந்த பகுதியில் இருந்ததால் அப்போதே பொருட்களை வாங்க முடிந்தது. தமிழர்கள் தம் வாழ்வில் இருபெரும் கூழ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடிப் பிறப்பன்று ஆக்கப்படும் ஆடிக்கூழ். அரிசிமா, பால் கலவையுடன் வறுத்துப் போடப்படும் பயறும், இனிப்புக்கு சர்க்கரையும் ; அது அதி அற்புத சுவை. சோமசுந்தரபுலவரினால் பாடப்பட்ட
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே.
என்றபாடல் அந்த கூழின் சுவையையும் அதனது பேரானந்தத்தையும் சொல்லிச் செல்கின்றது.
வழக்கமாக எப்போதும் ஆக்கப்படக் கூடியவை ஒடியல் கூழ். பெரும்பாலும் ஒடியல்கூழ் அசைவ ஒடியல்கூழாக மாறிவிட்டது. மீன், சிறுநண்டு, இறால், மரவள்ளிகிழங்கு, பலாக்கொட்டை, பயற்றங்காய், பொடித்த மிளகாய்த்தூள், ஒடியல்மா கரைத்தது என இதன் உள்ளடக்கம் அமைகின்றது. மரவள்ளிக்கிழங்கு மிகக் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். நல்ல மாப்பிடிப்பான மரவள்ளிக் கிழங்கு வாய்த்தால் அன்றைய கூழின் தகமை அதிஅற்புதம் எனசொல்லலாம். தறுக்கனிச்ச கிழங்கு வாய்த்தால் கூழ் பாழ் எனலாம். தறுக்கனிச்சகிழங்கு அவிந்து கூழுடன் கரைந்து விடாது சுவையைக் கெடுத்துவிடும். இந்த வகை ஒடியல் கூழ் பெரும்பாலும் மீன்கூழ் என்று அழைக்கப்படுகின்றது. ஆக்கமுறைகளும் சேர்மானங்களும் ஊருக்கு ஊர்,வீடுகளுக்கு வீடுகள் மாறுபடும். சில வீடுகளில் முருக்கம் இலை, அரிசி, பலாச்சுளை சேர்த்துக் கொள்வார்கள்.
எல்லா உணவுகளுக்கும் ஆதிச்சுவை என்று ஒன்றிருக்கின்றது. உங்கள் வீடுகளில் தொன்று தொட்டு உங்கள் அம்மாவினால் பாவிக்கப்படும் செய்முறை, உப்பின் அளவு எல்லாம் ஆதிச்சுவையை தீர்மானிக்கின்றன. இந்த ஆதிச் சுவைக்கப்பால் வேறு எங்காவது உணவு அருந்தும் போது அவை “தூக்கலாக இல்லையே”,”நல்லாயில்லையே”என்று குறைபட்டுக் கொள்வீர்கள்.
ஒரு விடுமுறைக்கு இந்தியா போயிருந்தபோது எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். தங்கியிருந்த வீட்டிற்கு காலை 9 மணிவாக்கில் மீன்காரர் வருவார். மிகத்தரமான மீன்கள், நண்டுகள் வீட்டு வாசலிலேயே வாங்கிக் கொள்ளலாம். மீனையும், சிறுநண்டு, இறால்களை கண்டவுடன் கூழ் குடிக்கலாம் என்ற எண்ணத்துடன் உறவினர் வீட்டுப் பெண்ணிடம் சொல்லிவிட்டு பொருட்களை வாங்கினால் அவர் தன் கையால் கூழ் வைத்து தருவதாக சொல்லிவிட்டார். அம்மாவினால் வைத்து தர முடியாதவாறு தமது அன்பினால் உபசரிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார் போலும்.
எனக்கு அப்போதே விளங்கிவிட்டது கூழ் பாழாகப் போகின்றது என்று. ஆதிச்சுவைக்கு அப்பால் போக முடியாத கூழ்களே அருஞ்சுவை கூழ்களாகி விட்டன எனக்கு. அவர் வைத்துத் தந்த கூழ் இலைக்கஞ்சி வகையறாவை ஒத்தது. கூழுக்குள் சோறும், முருக்கம் இலைகளும் கிடந்தன. எங்கள் வீட்டுக் கூழ்களில் இவை இரண்டும் விலக்கப்பட்டிருக்கும்.
எனக்கு சென்ற வருடம் ஜுலையில் சாவகச்சேரி சென்றிருந்த போதில் ஆக்கப்பட்ட கூழ் அலாதியானதாக படுகின்றது. நான் மட்டும் தனியே சென்றிருந்தேன். சாவகச்சேரியில் இப்போது பெரியளவிலான நண்பர்கள் வட்டம் இல்லையாயினும் சித்தியின் மகனும், அவரது நண்பர் குழாமும் எனக்கும் நண்பர்களாகி விட்டார்கள். மீன்கூழ் வைக்கலாம் என்ற பொழுது கச்சாய் இறங்குதுறையில் நல்ல மீனும், நண்டும் கிடைக்கும் என்றார்கள். அத்துடன் நல்ல பனங்கள்ளும் அங்கே வசிக்கின்ற ஒருவரிடம் தரமாக வாங்கலாம் எனவும் தகவல் தந்தார்கள்.
சாவகச்சேரி சென்று தங்கும் நாட்கள் மிகக் குறைவானபோதும் அந்த நாட்களை மிகவும் உபயோகமாகவும், களிப்பாகவும் வைத்து இருக்க வேண்டும் என்று அடிமனதில் ஒருஎண்ணம் இழையோடிக் கொண்டிருக்கும்.
கச்சாய் இறங்குதுறைக்கு சாவகச்சேரி கச்சாய் வீதி வழியாகவும் போகலாம்; மீசாலை அல்லாரை வீதி வழியாகவும் போகலாம். அல்லாரை சென்று மீன் பேரம் பேசி வாங்குவதிலும், வாயடித்து கதைப்பதிலும் – கச்சாய் இறங்குதுறை சம்பந்தமான பூரணமான அறிவு பெற்றிருந்த அனுபவம் கொண்டநண்பர் ஒருவரை இணைத்துக் கொண்டோம். நேரம் காலை ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மதியத்திற்கு அப்பால் மீன்கள் விற்றுத்தீர்ந்துவிடும். நாங்கள் பிந்திப் போனால் ஒன்றும் கிடைக்காது என நான் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தேன். எங்கள் வாகனம் அல்லாரை கொடிகாமம் தென்னந் தோட்டங்களூடான வீதியால் விரைந்து கொண்டிருந்தது.
தென்மராட்சியின் பூரண அழகு தென்னந்தோட்டங்கள் தான். கொடிகாமம்- இயக்கச்சி வரை பரந்திருக்கும் தென்னந்தோட்டங்கள் அல்லாரை -கச்சாய் வரை நீண்டிருக்கின்றன. அவ்வீதியில் அழகான சுற்றுமதில் கொண்ட வீடுகள் தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருந்தன. அவ்இடம் அழகான சுற்றுலாத்தலம் போல காலை வேளையில் பிரகாசித்தது.
சற்று நேரத்தில் கச்சாய் இறங்குதுறையை அடைந்திருந்தோம். கச்சாய் இறங்குதுறையும், அது சார்ந்த பிரதேசமும் பெருங்கடலை அண்டிய இடமல்ல. “கடல்நீரேரி ” என்கிறார்கள். உள்முகமாக நீண்டிருந்த கடல் நீரேரியில் வரிசையாக மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவுக்கு அப்பால் மீன் பிடிக்கச் சென்றவர்கள் கரை வந்து வலைகளில் இருந்து மீன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த இறங்குதுறையில் அரைச்சுவர் கொண்ட மீன் ஏலம் விடும் விற்பனைத்தளம் அமைந்திருந்தது. தாங்கள் அன்று பிடித்த, வலையில் அகப்பட்டவைகளை ஒரு சேரவைத்து ஏலம் கூறுவார்கள். அதற்குள் எல்லாவகையான மீன்களும் கலந்திருக்கும்.
ஒரு அடிப்படைவிலை தீர்மானித்து ஏலம் ஆரம்பிப்பார்கள். “ஐநூறாம் ஐநூறாம்” என்று தொடங்கும் ஏலத்தில் ஒருவர் இடைவெட்டி 50 சொன்னால் ” ஐநூற்றிஐம்பதாம் ஐநூற்றிஐம்பதாம்” என அங்கே குரல் தரவல்லாளர் உரக்க கத்த தொடங்குவார்.
எங்களுடன் வந்திருந்த அந்த பிரதேசத்து பரிச்சயமான நண்பர் ஏலத்தொகையை பார்த்து மீன்களை வாங்குவதை தவிர்த்துக் கொண்டிருந்தார். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு கடுப்பேறதொடங்கியது. இங்கே அவசரப்படக்கூடாது என்பதே நண்பரின் விளக்கமாக இருந்தது. ஏலம் படிந்த பொழுதில் இரண்டாயிரத்து ஐநூறுரூபாவிற்கு 5 கிலோ எடையுள்ள மீன்கள், நண்டுகள், இறால்கள் என எங்கள் பைகளில் நிறைந்திருந்தன. அந்த நண்பர் வெற்றி கலந்த சிரிப்புடன் “பார்த்தீரா எப்பூடி” என்பது போல் முகக்குறி காட்டினார். தனது வீட்டிற்கென ஒரு பெரிய வாளைமீனை 100 ரூபாவுக்கு வாங்கிக்கொண்டார். இவ்வளவு மீனையும் சாவகச்சேரி மீன் சந்தையில் வாங்குவதானால் 4000 ரூபா வரும் எனவும் சொல்லிக்கொண்டார்.
நாங்கள் இப்போது அல்லாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். நோர்வேயில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த நண்பர் விடுமுறை பாவிப்பிற்கென வாங்கியிருந்த சிறிய வாகனத்தில் எங்களுக்காக காத்திருந்தார்.
அவருக்குஅவ்விடத்தில் பரிச்சயமான கள் இறக்குபவர் இருந்ததனால் கலால் துறையின் கண்காணிப்பை மீறி தரமான கள் கிடைத்தது. சிறிது வாய்க்குள் விட்டுவிட்டு அவரே தரச்சான்றிதழ் வழங்கினார்.”சூப்பர் கள்ளுஅண்ணை”. அந்த நோர்வே நண்பர் பிறப்பில் சைவம். அசைவம் உட்கொள்ளமாட்டாராம். ஆதலால் மீன்கூழ் தப்பித்தது. எனக்கென்னவோ அவர் சிறிதான முரண்பாட்டு மூட்டையாக காட்சிஅளித்தார்.
இப்போது வீட்டை அடைந்திருந்தோம். வெயில் வெக்கைகு அப்பால் “கள்” தீர்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் இணைந்து வாங்கி வந்திருந்த மீன், நண்டுகளை சுத்தம் செய்து கொடுத்திருந்தோம். வீட்டிலிருந்த பெண்மக்கள் “மீன்கூழ்” ஆக்கி தந்திருந்தனர். மிகத் தரமான கூழ் என்பதற்கு மூக்கில் பட்டவுடன் ஒடியல் நெடி ஏற வேண்டும். ஒரு வாய் வைத்தவுடன் எனக்கு கல்லடி வேலுப்பிள்ளையின் கதையும், அந்த கூழும் நினைவிற்குவந்தன.
இரத்தினபுரிக்கு அண்மித்த நிவிற்றிகல என்ற இடத்தில் கல்லடிவேலுப்பிள்ளையின் நண்பரான சுப்பையா வைத்தியராக கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட வேலர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஒரு மதிய வேளையில் நண்பரின் வீட்டை அடைகின்றார். ஒரு முழுநாளின் பரிபூரண அலுப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
நண்பரான சுப்பையாவின் மனைவி உடல் அலுப்புக்கு உவப்பானது ஒடியற்கூழ் என தீர்மானித்து ஒடியற்கூழ் ஆக்கிப் பரிமாறுகின்றார். கூழை உவகையுடன் உட்கொண்ட கல்லடி வேலுப்பிள்ளை உடல் அலுப்பு நீங்கி மகிழ்ச்சி பரவிய வேளையில் பாடல் பாடத் தொடங்குகின்றார். கல்லடி வேலுப்பிள்ளை உட்கொண்ட கூழ் மரக்கறி மட்டுமே சேர்ந்ததாக காண்பிக்கப்படுகின்றது.
“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு-கல்லடியான்
வண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்”
எனக்கென்னவோ பாடத் தோன்றவில்லை. அந்த சுள்ளென்ற மதியமும், அருந்திய கூழும், ஐட்டமும் என்னை அந்த விறாந்தையில் ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு சென்றன.
Nantri http://aruthra.com/
No comments:
Post a Comment