பலேரி மாணிக்கம் "ஒரு பாதிராக் கொலபாதகத்திண்டே கதா" - கானா பிரபா

.

"ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா"
பலேரி மாணிக்கம் படம் வந்து 5 வருஷங்கள் கழிந்து விட்டது. ஒரிஜினல் டிவிடியைக் கூட எப்பவோ வாங்கி வைத்தாலும் ஏனோ இது நாள் வரை நான் பார்க்கவில்லை. இதை மட்டுமல்ல இன்னும் சில படங்களை நான் பார்க்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், இப்படியான படங்களைப் பார்ப்பதற்கேற்ற மனச்சூழலை என்னுள் ஏற்படுத்த வேண்டும் என்பதே. சும்மா கடமைக்காக இப்படியான படங்களைப் பார்த்துக் கழிக்கக் கூடாது. அந்த வகையில் நேற்றுத்தான் "பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா" படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவாரம் நீட்டித்துப் பார்க்கும் எனக்கு, படத்தின் எழுத்தோட்டமே அப்படியே நிலைகொள்ள வைத்து விட்டது, முழுமூச்சாய் முடிவுப் புள்ளி வரை இந்தப் படத்தோடு ஒன்றிப்போனேன்.

சில மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட, சொக்கலிங்கம் என்ற வழக்கறிஞர் எழுதிய "புகழ்பெற்ற வழக்குகள்" என்ற நூலை வாசிக்கும் போது ஒரு புலனாய்வு அதிகாரியாக மனம் கூடு விட்டுக் கூடு பாய்ந்த உணர்வு ஏற்பட்டது அதே உணர்வு தான் இந்தப் படம் தந்த அனுபவமும். படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்தில் வரும் பாடலே பலேரி என்ற ஊரில் உள்ள மாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஐம்பதுகளின் இறுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைப் பற்றிப் பாடலோடு சோக ராகம் பாடுகிறது.

ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற புலனாய்வாளன் தன்னுடைய உதவியாளர் பெண்ணுடன் டெல்லியில் இருந்து ஐம்பது வருடங்கள் கழித்து இந்தக் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்காகப் பலேரி செல்கிறார். பலேரி என்ற அந்தக் கிராமத்தின் பழைய சுவடுகள் மறைந்து நாகரிகத்தின் உச்சங்கள் விளைந்திருக்கும் பூமியில் மாணிக்கம் என்ற அந்தப் பெண்ணின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே இறந்த சூழலில், வெறும் செவி வழிக்கதைகள் வாயிலாக உண்மையைத் தேடும் சவால் அவனுக்கு. ஒவ்வொரு செவி வழிக்கதையிலும் பொய்யும் உண்மையும் சரி சமமாகக் கலந்திருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து ஈற்றில் அவன் முடிவைக் காணும் போது மிகப் பெரிய திருப்பத்திற்குக் கொண்டு போய் நிறுத்தி அவனை வழியனுப்பி வைக்கிறது அந்த பலேரி கிராமம்.

T. P.ராஜீவன் என்ற எழுத்தாளரின் நாவலை அடியொற்றி மலையாளத்தின் பிரபல இயக்குனர் ரஞ்சித் எடுத்த படம் இது. இயக்குனர் ரஞ்சித் இயக்கிய நந்தனம், Pranchiyettan and The Saint,Indian Rupee போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இவரின் ஒரு சில பேட்டிகளைப் படித்த போது மலையாள சினிமா உலகத்தை விட்டுக்குடுக்காத அந்த ஓர்மம் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது. சரக்கு இருப்பவன் தானே கோபப்படுவான்?

மம்முட்டியைப் பொறுத்தவரை அவரின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இது இருக்கும். அடக்கமாக வந்து ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகக் கையாளும் அந்தப் புலனாய்வு அதிகாரி, பலேரிக் கிராமத்தின் பெருந்தனக்காரர் அஹமத் ஹாஜி என்ற மகா கொடூரர் என்ற இன்னொரு மம்முட்டி, இவர்களைக் கடந்து மூன்றாவதாக வரும் இன்னொரு ஆச்சரியம் என்று ஒரே படத்தில் ஒரே நடிகன் பல்வேறு பாத்திரங்களைக் கையாளும் போது ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் எவ்வளவு தூரம் வித்தியாசப்படுத்தி நடிக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதிலும் அந்தப் பணக்காரர் அஹமத் ஹாஜி (மம்முட்டி) துப்பலைக் கூட அலட்சியமாகத் தெறிக்கும் போது நடிப்பின் நுணுக்கம் புரிபடுகின்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரளத்தின் சிறந்த நடிகராக மாநில விருது உட்பட இன்னும் பல விருதுகளைச் சேர்த்தாலும் தேசிய விருது கொடுக்கவில்லையே என்ற இயக்குனர் ரஞ்சித் இன் கோபத்தைப் படம் பார்த்தபின் எம்மிலும் சுமக்க முடிகின்றது.

கம்யூனிஸ சிந்தனைகளோடு ஐம்பதுகளில் வளர்ந்த அந்த இளைஞன் பின்னாளில் மனம் வெறுத்து ஒதுங்கிப் போகும் முதியவராக சீனிவாசன், சித்திக் என்ற குணச்சித்திரம் பாலன் நாயராகவும், கவர்ச்சிக்கு மட்டுமே தீனியாகப் பார்க்கப்படும் ஸ்வேதா மேனன் பயத்தை உள்ளே புதைத்து வைத்துக் கொண்டு நடிக்கும் அந்தக் கிழவியாகவும் என்று ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்திருக்கின்றது.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை மர்மக் கதைகளைக் கையாள்வதில் இந்திய சினிமாவிலேயே முதல் இடத்தில் வைக்கப்படவேண்டிய கதை சொல்லிகள். ஐம்பதுகளின் இறுதியிலே நடந்ததாகவும், கேரளத்தின் முதல் கொடூரக் கொலையாகவும் பதிவாகியிருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தைப் படமாக எடுக்கும் போது அந்தக் கதை மாந்தருக்குள்ளேயே மம்முட்டியை உள்ளே விட்டுக் கதை சொல்ல வைத்த உத்தி அருமையானது.

இசையமைப்பாளர் சரத், பிஜ்பால் ஆகியோர் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல், படத்தின் முகப்புப் பாடல் மட்டும் தான் அதற்குப் பின்னால் வரும் கதையோட்டம் வெறும் மெலிதான பின்னணி இசையோடு நகர்கின்றது.

"எத்தனை வருஷங்கள் ஆனாலும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்படுவான் இது எப்படி நிகழும் என்று எனக்குத் தெரியாத இயற்கையின் நியதி" என்று ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற அந்தப் புலனாய்வாளர் சொல்லி முடிக்கிறான் "பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா"யை.

"ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா" என்று ஹரிதாஸ் சொல்வது போலத்தான் வாழ்வியலும், அது கழிந்த நிமிஷத்தை முற்றுப்புள்ளியாக நிறுத்தும் போது கதையாக முடிக்கின்றது, நாமும் எத்தனை கதைகளைச் சுமந்து கொண்டு போகின்றோம், சில கதைகளின் உண்மைகள் தெரிந்தும் பல கதைகளின் உண்மைகள் தெரியாமலும்.

 



No comments: