கோடையில் ஒரு விபத்து - நடேசன்

.
dog_on_wheels
அவுஸ்திரேலியா கோடைகாலத்தில் சூரியன் தாமதமாக மேற்கில் அஸ்தமிப்பதால் எங்களது நாட்கள் நீண்டவை. ஐரோப்பா வடஅமெரிக்காபோல் கோடையில் இஙகு நீண்ட விடுமுறை கிடைப்பதில்லை. கோடை வெப்பம் நாற்பது டிகிரிக்கும் மேல் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் வறுத்து எடுத்துவிடும் தன்மையுள்ளது.
மெல்பனில் சூரியன் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மிகவும் மெதுவாக அசைந்தபடி அஸ்தமிப்பதால் எங்களைப் போன்ற சொந்த தொழில்செய்பவர்களது வேலை நேரமும் பகலோடு சேர்ந்து நீண்டு விடுகிறது.
இதனால் உடல் மனம் இரண்டும் களைத்து எப்போது வீடு செல்வோம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால் இன்னும்இரவாகவில்லைத்தானே மிருக வைத்தியர் இன்னமும் இருப்பார் என நினைத்துக்கொண்டு சிலர் தமது செல்லப்பிராணிகளை வைத்தியசாலைக்குகொண்டு வருவார்கள்.
வெள்ளிக்கிழமை எனும்போது மனச்சோர்வு மலையாக மாறுவதால் சரியாக மாலை ஆறரை மணியிருக்கும்போது கிளினிக்கை மூடிக்கொண்டுவீடு செல்வதற்கு நானும் எனது நேர்சும் தயாராகிக் கொண்டிருக்கும்போது வாசலில் எங்களுக்கு மிகவும் அறிமுகமான மிஸ்டர் பாக்கர் தனதுஆறு வயது நாயை கையில் அணைத்தபடி வந்து நின்றார். எமக்குள் அபாயச்சங்கு ஒலித்தது.

வேறு என்ன செய்யமுடியும்? மிருகவைத்தியம் தொழிலோடு தொண்டாகிறதே.
ஏற்கனவே மூடிய கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்தோம். அவரது கொக்கோ என்ற பெயருள்ள நாய், நிரந்தரமான காக்காய்வலிப்பு நோய் பீடிக்கப்பட்டு இருப்பதால் தினமும் காலை மாலை வேளைகளில் மாத்திரையில் தங்கியுள்ளது.
சிலமாதங்களுக்கு முன்பாக முழங்காலில் பெரிய மூட்டின் சவ்வு அறுந்ததால் பெரிய ஓபரேசன் செய்து பல காலமாக அது மூன்று கால்களால்நடந்து இப்பொழுதுதான் நாலுகால் நாயாகியது. சில மனிதர்களைப்போல் கொக்கோவும் பல நோய்களைத் தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டது.ஆறு வயதான சென்னிற கொக்கஸ் ஸ்பனியல் வகையை சேர்ந்த அந்த நாய் பாக்கரின் குடும்பத்தில் முக்கிய அங்கத்தினன். அந்தக்குடும்பத்தில் ஒரே மகனுக்கு ஓட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதால், அவன் இந்த நாயோடு மிகவும் தோழமையான ஈடுபாடுகொண்டவன்.அவனது மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு இந்த கொக்கோ ஒரு மருத்துவ கருவியாக (Therapeutic device) பயன்படுகிறது.
மெல்பன் மாநகர தபால் நிலையத்தில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் பாக்கரிடம் மாலை நேர போக்குவரத்து நெருக்கடி மற்றும்கொக்கோவின் நோய் வேலையால் திரும்பியிருந்த களைப்பு என்பன வயதான அவர் முகத்தில் இருளாகப் படிந்திருந்தது.
நேரடியாகவே விடயத்திற்கு வந்தார்
‘கொக்கோ இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. அத்துடன் வாந்தி எடுக்கிறது.’
உள்ளே அழைத்து பரிசோதித்தபோது பங்கியாரைஸ் எனப்படும் நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ‘இரத்தம் எடுத்து பரிசோதனைசெய்வதுடன் இன்று இரவு சேலையினும் கொடுக்கவேண்டும். கொக்கா இன்று இரவு கிளினிக்கில்தான் இருக்கவேண்டும்” என்று நான்சொன்னவுடன் எனது நேர்ஸ் ஷரன் பாக்கரை வழியனுப்பி கதவை மூடினாள்.
நான் நாயை பிடித்துக்கொண்டிருக்கும்போது இரத்தம் எடுப்பதற்கான ஆயத்தங்களை ஷரன் செய்துகொண்டிருந்தாள். மீண்டும் வாசலில் ஒரு பெண்முகம் தெரிந்தது. அழகிய இளமையான முகம். பாக்கர் போல் களைத்திராமல் இருந்த அந்த முகத்தில் – கண்களில் பரபரப்புத் தெரிந்தது.ஆனால,; அவளது கையில் எந்தச் செல்லப்பிராணியுமில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
அவளுக்காக ஷரன் மீண்டும் கதவைத் திறந்தபோது ‘வெýலிங்டன் ரோட்டில் உங்களது இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நாய்அடிபட்டு காயத்துடன் வீதியில் கிடக்கிறது. அதை ஒருவராலும் அகற்ற முடியவில்லை. வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. நீங்கள்வந்து உதவி செய்யமுடியுமா? ” எனக்கேட்டாள்.
எனது நார்சுக்கோ கருணையான மனம். என்னைப் பார்த்து ‘உதவ முடியுமா?” என்றாள்.
‘கொக்கோவை என்ன செய்வது? கொக்கோவின் இரத்தத்தை சேகரித்து விட்டு சேலையின் ஏற்றவேண்டும். அதை யார் செய்வது? நாங்கள் உதவமுடியும். ஆனால் கொக்கோவுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அத்துடன் அதன் எஜமான் பாக்கரிடம் இருந்துவரும் பணம்தான் எம்இருவருக்கும் உணவிற்கு வருவதால் கொக்கோவைத்தான் முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகுதான் என்னால் தொண்டு செய்யமுடியும்.”என்றேன்.
‘நம்மால் மட்டுமே செய்யமுடியும்” என்றாள் மீண்டும் ஷரன்.
அந்தப் பெண் எமது இந்த உரையாடலைக் கேட்டதும் அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டாள்.
‘இந்த நாயை எமது பொறுப்பில் பாக்கர் ஒப்படைத்திருக்கிறார். எனக்கும் உதவ வேண்டுமென்பதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால்கொக்கோவின் விடயத்தை முடித்து விட்டு இரத்தத்தை பரிசோதனைச்சாலைக்கு எடுத்துச்செல்லும்போது அந்தவழியால் போவோம்.அப்பொழுதும் எம்மால் உதவமுடியும்’ எனச் சொன்னாலும் – எப்படியும் நாம் எல்லாவேலைகளையும் முடிக்க அரைமணிநேரமாகிவிடும்.அப்பொழுது தெருவில் காயமடைந்த நாயின் பிரச்சினையை யாராவது தீர்த்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணம்தான்; என் மனதில் மின்னல்கீற்றாக வந்து மறைந்தது.
கொக்கோவின் இரத்தத்தை பரிசோதனை குழாயில் எடுத்துக் கொண்டு சேலையின் போத்தலை இரத்த நாளத்தோடு இணைத்துவிட்டுகிளினிக்கில் உள்ள நாய்க் கூடோன்றில் வைத்துவிட்டு ஷரனோடு எனது காரில் ஏறினேன்.
ஏற்கனவே யாராவது வந்து அடிபட்ட நாயை அகற்றி வீதிப் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணியிருப்பார்கள் என்ற நினைப்புடன் சிறிதுமயக்கமருந்து மட்டும் எடுத்துச் சென்றேன். ஊசி படுக்கை விரிப்பு மற்று நாய்வார் என்பனவற்றை ஷரன் கொண்டுவந்தாள்.
விபத்து நடந்த இடத்தில் நாங்கள் பார்த்த காட்சி எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரில் நாய் அடிபட்டதால் மெல்பனில் இருந்துதென்கிழக்கே செல்லும் முக்கிய வீதியில் போக்குவரத்து கடந்த ஒரு மணிநேரமாக தடைப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு நின்ற பொலிஸ் – அம்புலன்ஸ் வாகனங்கள் அடிபட்ட நாயின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.
வெலிங்டன் வீதியின் மத்தியில் நாயை அடித்த கருப்பு டொயாட்டா கார் வீதியின் நடுவே நின்றது. காரின் உள்ளே ஒருவரும் இல்லை. அந்தஇடத்தில் வலது பக்கமாக பொலிஸ்கார் ஒன்றும் இடது பக்கமாக இரண்டு வெள்ளை அம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிகுறைந்தது இருபதுபேராவது கூட்டமாக நின்றார்கள். வீதியில் வந்த வாகனங்கள் கிளைப் பாதைவழியாக திருப்பி விடப்பட்டன.
அந்த வீதியில் மனிதர் ஒருவர் அடிபட்டிருந்தால் நிச்சயமாக பொலிசார் மக்களை அந்த இடத்தில் கூட விடமாட்டார்கள். மேலும் மக்களும்அங்கு செல்லமாட்டார்கள். அந்த இடத்தில் நிற்கும் எல்லோரும் அடிபட்ட நாய் மீது ஏற்பட்ட கருணையால் அதற்கு உதவ முடியுமா? என்றஎண்ணத்துடன் நிற்கிறார்கள் என்றே நினைத்தேன்.
எனது காரை பாதை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு நாங்கள் கொண்டுவந்த நாய் மருத்துவ பொருட்களுடன்;; சென்றோம்.
அங்கே – எனது கிளினிக்கிற்கு சற்று நேரத்துக்கு முன்னர் வந்து தகவல் சொன்ன அந்த அழகான இளம் பெண் என்னையும் ஷரனையும்வழிமறித்தாள். அவளது நீல நிறக்கண்களின் இமைகள் பட்டாம்பூச்சிபோல் சிறகடித்தன. தனது இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினாள்
‘என்னை நாய் கடித்துவிட்டது.’ என்றாள் பதட்டத்துடன்.
அவளது விரல்கள் புதிதாகப் பறித்த பழுத்துச் சிவந்த மிளகாய்போன்று இரத்தத்தில் தோய்ந்து இருந்தது. கையில் பல காயங்கள் தெரிந்தன.
‘என்ன நடந்தது?” எனக்கேட்டேன்.
‘நாயை பிடிக்கப்போனபோது கடித்துவிட்டது.” என்றாள்.
‘தயவுசெய்து உடனே டொக்டரிடம் போங்கள். காயங்கள் ஆழமானதாகத் தெரிகிறது.’ – எனக் கூறிவிட்டு – அந்தக் காரைநோக்கி முன்னேறி காரின்அடியில் பார்த்தபோது முப்பது கிலோ நிறையுள்ள டோபமான் இன நாய் அங்கிருந்தது. கோரைப்பற்களுடன் கோபச் சிரிப்பைக்காட்டியது.
இதைப்பார்த்துவிட்டபின்பும் அந்த நாயின் அருகில் சென்றதற்கு அந்த இளம் பெண்ணின் துணிவா ? இல்லை அவளது கருணையா ? காரணம்என்பது கேள்வியாக மனதில் வந்து தொற்றியது.
நான் குனிந்து பார்த்தபோது பொலிஸார் ஒருவர் வந்து ‘நீங்கள் யார்? எனக்கேட்டார்.
‘நான் மல்கிறேவ் மிருகவைத்தியர்’
‘என்ன செய்யப் போகிறீர்கள்?
‘நாய்க்கு மயக்கமருந்து கொடுக்கப்போகிறேன்.’
சுமார் முப்பது வயது நிரம்பிய அந்த ஆறடி உயரமான அந்த பொலிஸ்காரரின் முகத்தில் அவநம்பிக்கை தெரிந்தது.
மீண்டும் காரின் கீழே குனிந்து பார்த்தபோது நாயின் கால் மட்டும் வெளித் தெரிந்தது. எங்களது பேச்சு சத்தம் கேட்டு காரின் அடியில் மேலும் உள்ளே ஊர்ந்துவிட்டது.
என்னிடம் இருந்த மயக்கமருந்தை எடுத்துப் பார்த்தபோது பத்துக்கிலோ நாய்க்கு போதுமானதாக மட்டும் இருந்தது.
இரண்டு அம்புலன்சிலும் பணியிலிருக்கும் பராமெடிக்கல் இளைஞர்கள் வந்து
‘என்ன செய்வதாக உத்தேசம்? எனக்கேட்டார்கள்
‘என்னிடம் உள்ள மயக்கமருந்தை ஊசியால் ஏற்றப்போகிறேன். அது வேலை செய்யாதுவிடில் உங்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டிஇருக்கலாம். மயங்கிய நாயை மட்டுமே நாங்கள் தூக்கி வெளியே எடுக்க முடியும்.’ என்றேன்.
ஊசியை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்த்தபோது நாய் என்னை நோக்கி சிறிது அசைந்து வந்திருந்தது.
எனது நேர்சிடம் இருந்த விரிப்புத்துணியை நாயின் தலையில்போட்டு விட்டு வேகமாக காலில் ஊசி மருந்தை ஏற்றினேன்
பராமெடிக்கல் இளைஞர்கள் – ‘இந்த ஒரு மணிநேர நாடகம் உங்களால் ஒரு முடிவுக்குவந்தது நல்லது” என்றார்கள்.
எங்களருகே நின்ற பொலிசாருக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.
‘எதற்கும் நாய் மயங்குவதற்கு ஐந்து நிமிடம்செல்லும்.’ என்றேன்
என்னைப் பொறுத்தவரையில் அந்த ஐந்து நிமிடங்கள் ஐந்து மணித்தியாலம் போன்று இருந்தது.
நாயை குனிந்து பார்த்தபோது அது இன்னமும் டோபமானின் கோரைப்பற்கள் தெரிய உறுமியது.
பொலிஸ்காரரின் பார்வையில் ஏளனம் தெரிந்தது.
நான் அம்புலன்ஸ் பராமெடிக்கல் இளைஞர்களிடம் சென்று ‘எனக்கு மோபின் தரமுடியுமா? எனக்கேட்டேன். அவர்களில் ஒருவர் உடனே தனதுவைத்தியசாலை மருத்துவரிடம் கைத்தொலைபேசியில் பேசிவிட்டு எனக்கு ஊசியில் மோபினை தந்துவிட்டு எனது பெயரைகுறித்துக்கொண்டார்.
மோபின் போன்ற மருந்துகள் வைத்தியர் அல்லது மிருகவைத்தியராலே மட்டுமே பாவிக்க முடியும். அதன் அளவு பாவித்த நோக்கம் என்பனபதிவேட்டில் பதியப்படவேண்டும்.
மீண்டும் அதே பொலிஸார் வந்து ‘நான் இந்த இடத்தில் நடப்பதற்கு பொறுப்புக்கூறவேண்டும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’எனக்கேட்டார்.
அவரது பேச்சு ஒருவிதத்தில் எனக்கு எரிச்சல் மூட்டினாலும் ‘ நான் கொடுத்த மருந்து போதாமையால் மீண்டும் சிறிதளவு கொடுக்கப்போகிறேன்.’ என்றேன்.
நான் கொடுக்கவிருந்த மோபின் ஊசிமருந்தின் அளவு ஒரு எண்பது கிலோ மனிதனுக்குப் போதுமானது
அந்த மருந்து கொடுத்து இரண்டு நிமிடத்தில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து இறங்கிய பெண்என்னிடம் நேரே வந்து விடயத்தை கேட்டாள். அப்பொழுது நாய் மயக்கமாகிவிட்டது.
‘நாம் காருக்கு அடியில் இருந்து இழுத்து எடுக்கவேண்டும்’
இருவரும் காரின் அடியில் சென்று அவள் முன் கால்களையும் நான் பின்னங்கால்களையும் பற்றி இழுத்து – ஏற்கனவே இருந்த விரிப்பில்நாயை கிடத்திவிட்டு பின்பு அவளது அம்புலன்சிற்கு மாற்றினோம்.
பொலிஸ்காரர் சிரித்த முகத்துடன் வந்து நன்றி சொன்னார்.
எங்களைப் பொறுத்தவரை வந்த விடயம் முடிந்துவிட்டது. எந்த அங்கீகாரத்துக்கும் காத்திராமல் எனது நேர்சும் நானும் கொக்கோவின்இரத்தத்தை அருகில் இருந்த இரத்த பரிசோதனைச்சாலையில் கொடுத்துவிட்டு பதினைந்து நிமிடத்தால் அதேவழியில் மீண்டும் வந்தபோதுதீயணைக்கும் எஞ்ஜின் வண்டி வந்து அந்தவீதியில் உறைந்திருந்த அடிபட்ட நாயின் இரத்;தத்தை கழுவிக்கொண்டு நின்றது. அப்போதும் அந்தபொலிஸார் அங்கே நின்றார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நின்று அந்த இடத்தில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி மக்களை ஒழுங்குபடுத்தி நிலைமையைகட்டுக்குள்கொண்டு வந்து இறுதியில் அந்த இடத்தை கழுவும்வரையும் நின்ற அந்த பொலிஸ்காரர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டது.
‘அவர்கள் நல்ல வேலை செய்கிறார்கள்” என்றேன் ஷரனிடம்.
‘அது அவரது தொழில். நாம் இதை ஜீவகாருண்யமாக செய்கிறோம்’ என்றாள்.
‘உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அந்த பொலிஸ்காரர் எனக்கு எரிச்சலூட்டியவர். இப்பொழுது அந்த எரிச்சல் இல்லை. அவரதுகடமையுணர்வு எரிச்சலைப் போக்கிவிட்டது.” என்றேன்.
மீண்டும் கிளினிக் திரும்பிய பொழுது இருண்டுவிட்டது. அந்த நாள் எனக்கும் ஷரனுக்கும் நீண்ட வேலை நாளாகியது.
கடமையும் காருண்யமும் இணைந்தால்….உலகம் எங்கோ சென்றுவிடும் என்று மனதில் நினைத்தவாறு காலதாமதத்துடன்வீட்டுக்குத்திரும்பினேன்.
நன்றி:http://noelnadesan.com/

No comments: