மெல்பனில் ஆடிப்பிறப்பு விழா


தமிழைத்துளிர்க்கவைக்கும்  இளந்தலைமுறையினரின் கருத்தைக்கவர்ந்த  பல்சுவை  நிகழ்ச்சிகள்

ரஸஞானி

எனது மின்னஞ்சலுக்கு  சமீபத்தில் யூரியூபில் வந்த தமிழக தொலைக்காட்சி  ஒன்றின் நீயும் நானும் என்ற   நிகழ்ச்சியை பார்த்துவிட்டு  அதிர்ச்சியடைந்தேன்.  செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது  காதினிலே என்று பாடிய பாவலன் நல்லவேளை தற்பொழுது இவ்வுலகில் இல்லை.
தேமதுரத்தமிழோசை உலகமெலாம் வளர்ப்போம், தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம்  என்றெல்லாம்  கனவுகண்ட அந்த மகாகவி பிறந்த நாட்டில்,  குறிப்பாக  சிங்காரச்சென்னையில்  பாடசாலை செல்லும்  தமிழ்க்குழந்தைகள்  தமிழில் பேசுவதற்கு தயங்குகிறார்களாம் -   கூச்சப்படுகிறார்களாம்  என்று  அந்தத்  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு   பேசிய   பெற்றோரும்  அவர்களின்   குழந்தைகளும்  கருத்துச்சொன்னார்கள்;.
  நாம்  தற்போது  எந்த உலகத்தில்  இருக்கிறோம்  என்ற   யோசனைதான்  முதலில்  வந்தது.


பாடசாலையில்,   விளையாட்டுத்திடலில்   அல்லது  வெளியில் தமது   சிநேகிதர்களை   சந்தித்தால்   ஆங்கிலத்தில்தான்    பேசிக்கொள்கிறோம்.  தமிழில் உரையாடினால்  எமக்கு    ஆங்கிலம்    தெரியாது  என்று  நினைத்து,  பார்வையை வேறுகோணத்தில்  திருப்பிவிடுவார்களாம்.
தமிழ்க்குழந்தைகள்    பரஸ்பரம்  ஆங்கிலத்தில்  உரையாடுவதற்கே  விருப்பமுள்ளவர்கள் என்பதை  அந்த    நிகழ்ச்சி  ஊர்ஜிதப்படுத்தியது.
தமிழில் பேசுவது  தாழ்வுச்சிக்கலின்  அறிகுறியோ  என்று  எண்ணுமளவுக்கு  சிங்காரச்சென்னையில்  பெற்றவர்கள்  சிந்தித்துக்கொண்டிருக்கும்    சூழலில்,    எனக்கு    மற்றுமொரு    மின்னஞ்சலில்  விக்ரோரியா  மாநிலத்தின் கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு   விழா   அழைப்பிதழும்    வந்தது.
இந்த விழாவுக்கு  கடந்த ஆண்டும்  சென்றிருக்கின்றேன்.


மேலே குறிப்பிட்ட   சென்னை    தொலைக்காட்சி  நிகழ்ச்சியினால்  ஏற்பட்ட மனச்சோர்வை   போக்குவதற்கு  கேசி தமிழ் மன்றத்தின்  ஆடிப்பிறப்பு  விழா உதவும்  என்ற  நம்பிக்கையை  2012 ஆம்   ஆண்டு   இதே ஜூலை மாதத்தில் இச்சங்கம் நடத்தியிருந்த    விழாவும் எனக்குத்தந்திருந்தது.   அதனால்  கடந்த 20 ஆம் திகதி  சனிக்கிழமை   மெல்பனில்  நடந்த கேசி தமிழ் மன்றத்தின் மூன்றாவது விழாவுக்குச்சென்றேன். எனது  நம்பிக்கை வீண்போகவில்லை.
தமிழர்   திருநாட்களில்  ஆடிப்பிறப்பும்  முக்கியமானது.
ஆடி   பிறந்துவிட்டால்  புகுந்தகம்  சென்ற   மகளை  பெற்றவர்கள்   பிறந்தகத்திற்கு அழைத்துவந்துவிடும்  மரபு    இப்பொழுதும்  தமிழகத்திலும்  இலங்கையிலும் தொடர்கிறது.
தமிழகத்தில்  புடவைக்கடைகளில்  ஆடித்தள்ளுபடி    வியாபாரம்   அமோகமாக நடைபெறும்.

ஆடி மாதம்   அவுஸ்திரேலியாவைப்பொறுத்தமட்டில்   கடுங்குளிர்காலம்தான். அந்தக்குளிரையும்  பொருட்படுத்தாமல்  ஏராளமான  தமிழ்க்குழந்தைகள்  குறிப்பாக  இந்த நாட்டில் பிறந்த கொழுந்துகள்  உற்சாகமாக   கலந்து சிறப்பித்து  கேசி தமிழ் மன்றத்தின்  ஆடிப்பிறப்பு    விழாவை    கொண்டாடினார்கள்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும்  அனைத்து மாநிலங்களிலும்  அமைந்துள்ள  தமிழர்களின்  அமைப்புகள்   நடத்தும்  எந்தவொரு விழாவிலும் ஒன்றுகூடலிலும் நிகழ்ச்சிகளுடன் தேநீர் விருந்து அல்லது   மதிய, இராப்போசன விருந்தும் நடைபெறும்.
இந்த உணவு   சார்ந்த  விருந்தோம்பல் நிகழ்ச்சியில்  பெரும்பாலும்   இரண்டாம் பட்சம்தான்.


ஆனால்  கேசி  தமிழ் மன்றம்  வருடந்தோறும்  நடத்துகின்ற தைப்பொங்கல்  விழாவும் ஆடிப்பிறப்பு  விழாவும்  உணவு சார்ந்த விருந்தோம்பலுக்கே முக்கியத்துவம்  கொடுக்கிறது  என்ற தகவலை  வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மதியழகன் தமது  உரையில்  குறிப்பிட்டார்.   உணவை மையமாக வைத்து விழாவா? ஆச்சரியப்படுவீர்கள்.
அதிசயம்   அல்ல   உண்மைதான்.   தைப்பொங்கல் விழாவில்  பொங்கல்,   ஆடிப்பிறப்பு விழாவில்  ஆடிக்கூழ்.

ஆடிப்பிறப்பு  விழா மண்டபத்தினுள் பிரவேசித்தபொழுது    சிறுவயதில்  பாடசலையில்  நாம்   படித்துப்பாடிய   நவாலியூர்  சோமசுந்தரப்புலவரின் “ ஆடிப்பிறப்புக்கு  நாளை விடுதலை   ஆனந்தம்  ஆனந்தம்  தோழர்களே…”  என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
 நிகழ்ச்சியின்  தொடக்கத்தில் ஆடிக்கூழ்  செய்முறை பற்றிய  விளக்கத்தை  சில  சகோதரிகள் மண்டபத்தின்  சமையலறையிலிருந்து   சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  அங்கே ஒளிப்பதிவு கெமராவை பொருத்தி, ஆடிக்கூழ்  செய்முறைகளை  அவர்கள் விளக்கியது, மண்டபத்திலிருந்த   சபையோருக்கு  நேரடி ஒளிபரப்பாகியது.
இளம் சிறார்களின்  தமிழ்த்தாய்  வாழ்த்துப்பாடலும் ஆடிப்பிறப்பு  வரவேற்பு  நடனமும் விழா  நிகழ்ச்சிகளை இனிமையாகத்தொடக்கிவைத்தன..
மாணவர்களின்     அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சியை  ரசித்தவேளையில்தான்   சென்னையில் மாணவர்கள்  தமிழில்  பேசுவதற்கு சங்கடப்படும்   காட்சி மனத்திரையில்  ஒரு மூலையில்  ஓடிக்கொண்டிருந்தது.
வழக்கமாக  சிறுவர்களை  மேடையேற்றி  பேசவைப்பதற்கு  யாராவது  ஒரு தமிழ்வளர்த்த சான்றோர் பற்றி நாட்கணக்காக சிரமப்படுத்தி  பேசப்பழக்கிவிடுவார்கள். சபையோரின்  கைத்தட்டலுடன்  அந்தப்பேச்சு  காற்றோடு  கலந்துவிடும்.  அதன்  பிறகு  பிள்ளையும்  அந்தப்பேச்சை  மறந்துவிடும். இதுபோன்ற  ஊக்குவிப்புப்போட்டிகள்  என்ற பெயரில் சிறுவர்களுக்கு     நடத்தப்படும்    சித்திரவதைபற்றி  எனக்கு  தனிப்பட்ட முறையில்  விமர்சனங்கள்  இருக்கின்றன.
ஆனால்  அனுபவப்பகிர்வு  என்பது முற்றிலும்  வித்தியாசமான,   சபையோரையும்  பேசும்  குழந்தைகளையும்  நெருங்கிவரச்செய்கின்ற   சுவாரஸ்யமான   மனதை விட்டகலாத நிகழ்ச்சி.
தலைமுறை   இடைவெளியில்   நெஞ்சோடு உறவாடச்செய்யும் சங்கமம்தான் அனுபவப்பகிர்வு.

ஏழு   குழந்தைகள்  பங்குபற்றினார்கள்.
அதில் ஒருவர்  தலைமை தாங்கினார். தமது அன்றாட வாழ்க்கையை தமது தரிசனங்களை  சமூகத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை   ஆறு குழந்தைகள் தமது அனுபவப்பகிர்வாக கையிலே  எந்தவொரு குறிப்பும்  இல்லாமல்  பகிர்ந்தார்கள்.
பாடசலையால்  வெளியே  சில நாட்களுக்கு அழைத்துச்செல்லப்படும்   முகாம்  பயிற்சி (கேம்பிங்), வீட்டிலே  பாவனைக்குதவும்   ஐ பேர்ட்,   குடும்பத்தில் ஓரு குழந்தையின் வருகை (அம்மாவுக்குத்  தம்பிப்பாப்பா),   இலங்கையிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு  வந்தவுடன்  ஏற்பட்ட   அனுபவங்கள், கார் செலுத்தும்பொழுது   கைத்தொலைபேசியை  பாவிப்பதனால்  ஏற்படும் விபத்துகள்,   பொலிஸின் தண்டப்பணம், நீண்ட நேர விமானப்பயணம்    முதலான தலைப்புகளில் அந்தப்பிள்ளைகள்  தமது சொந்த அனுபவங்களை   பகிர்ந்துகொண்டார்கள்.   ஆங்கிலத்தில்  அல்ல கலப்படமற்ற  தூய தமிழில்.

அவர்கள்   எடுத்துக்கொண்ட  விடயதானங்கள்  சுவாரஸ்யமானவை.    அவர்களின் சுயஆற்றலும்  வெளிப்பட்டது. இந்த அரங்கில்  பங்குபற்றிய குழந்தைகள், துவிஜன், நிகேதன், ஆரபி, துவாசகி,   துசியந்தி,   துவாரகன்,   காவியா ஆகியோரை ஊக்குவித்த பெற்றோர்கள்  பாராட்டுக்குரியவர்கள்.
எதனையும்  மனப்பாடம்   செய்து   ஒப்புவிக்காமல்,  தாம்  பெற்ற அனுபவங்களை தமது தாய்மொழியில்   சரளமாகப்பேசி   சபையினரை பெரிதும்  கவர்ந்தார்கள் இந்தக்குழந்தைகள்.
செல்வன்கள்   மயூரேந்திரன்,   சுதன்  ஆகியோரின் வயலின் - மிருதங்கம்  இணைந்த இசை நிகழ்ச்சியும் சிறப்பாகவிருந்தது.
எழுத்தாளர்  ஆவூரான்  எழுதித்தயாரித்த   மலைகுடையும்  மூடக்கிழவன்  நாடகம் புகலிட நாட்டில்    தமிழ்க்குழந்தைகள்   தமிழைப்பேசவேண்டிய   தேவையை வலியுறுத்தியது.

ஆச்சி   ஆஸ்திரேலியா    வந்திட்டா  என்ற  நாடகமும் மூத்த - இளம் தலைமுறையினரிடத்தே   தாய்மொழி  தொடர்பாக   தோன்றும்    முரண்பாடுகளை சித்திரித்தது.
இந்த  இரண்டு  நாடகங்களிலும்   துவாரகன்,   ஆரணன்,    அபிதாரிணி,   காவியன், அரூரன்,   லர்ஷி,   சிந்து  ஆகியோர்   நடித்தனர்.
இந்த இரண்டு  நாடகங்களுமே  நோக்கத்தில்  ஒரு புள்ளியில்  சந்தித்தன.
அண்ணாவியார்    இளையபத்மநாதனின்   ‘பாலகாத்தான்’   பிரதியை பயின்று தாளலயத்துடன்   அந்தக்கூத்தை  அரங்கேற்றிய செல்வி அபிதாரிணி, மற்றும் ஜெயராணி  ஆகிய    இருவரும் சபையோரை  பரவசத்தில்  ஆழ்த்தினர்.   குறிப்பாக   இந்த  நாட்டில்  பிறந்த   குழந்தையான   செல்வி   அபிதாரிணியின்   தமிழ் உச்சரிப்பில் சொக்கிப்போனோம்    என்றுகூடச்சொல்லலாம்.
கவிஞர்    கேதாரசர்மாவின்  தலைமையில்  நடந்த  கவியரங்கும்  வழக்கத்தைவிட   சற்று    வித்தியாசமாக    நடைபெற்றது.
ஒரு    வீட்டில்    வாசல் முற்றம்,    சமையலறை, குளியலறை, பள்ளியறை  என்பன முக்கியமானவை. இவை  நான்கு    பற்றியும் தமது கவித்துவ அறிவை சொல்நயத்தாலும் கருத்தாழத்தினாலும் சுய மற்றும்  பொது அனுபவத்தினாலும் சித்திரித்தனர்.
இவை  நான்கும்  ஒவ்வொருவர்    வாழ்விலும்    ஏற்படுத்தும்  பாதிப்புகள் புத்திக்கொள்முதல்   மட்டுமல்ல  இலக்கியநயமானவையும்தான்.
ஆவூரான்  சந்திரன்   தமது முற்றத்தை குறிப்பிடும்பொழுது அவுஸ்திரேலியாவில் அவரது  வீட்டு  முற்றத்தை மட்டுமன்றி,    இலங்கையில்  ஊரில் விட்டுவந்த, ஏக்கமாகப்;பின்தொடரும்    முற்றத்தையும்  சித்திரித்தார்.  அற்றைத்திங்கள்  அவ்வெண்ணிலவில்…  பாடல்தான்  நினைவுக்கு  வந்தது.


சத்தியசுதன்,   சமையலறையின்   மகிமைபற்றியும்  இன்றைய நவயுகத்தின்    ஃபாஸ்ட் ஃபூட்    உணவுக்கலாசாரத்தையும்   ஆய்வு   செய்தார்.
குளியலறை   உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் புனிதமாக்கும் இடம் என்ற உண்மையையும்  அதன்   மகத்துவம் பற்றியும்  சொன்னார்   ஜெயக்குமரன்.
பள்ளியறை  என்றவுடன் கிளுகிளுப்பூட்டும் கவிதையைத்தான் பாடப்போகிறார்  என்று எதிர்பார்த்திருந்தவர்களை வேறு ஒரு கோணம்  நோக்கி சிந்திக்கவைத்தார் ஆனந்த். பள்ளியறை  என்பது கணவன் - மனைவி காதல்  மொழி பேசும்  அறை மாத்திரமல்ல. குழந்தை தொட்டிலில்  தாயின் ஆராரே பாடலும்  கேட்டிருக்கிறது. முதுமையடைந்தவரின் பள்ளியறையில்  மருந்து மாத்திரைகளும் இடம்பெறும் என்று  வாழ்வின் முழுத்தத்துவத்தையும் பகன்றார்  கவிஞர் ஆனந்த்.

மொத்தத்தில்  கவியரங்கு  களை கட்டியதற்கு அதற்கு தலைமை தாங்கிய கவிஞர்  கேதார   சர்மாவும்  காரணம்தான்.
இந்த விழாவில் கேசி தமிழ் மன்றத்தின்  வெளியீடான இளவேனில் சிறப்பிதழும்  வெளியிடப்பட்டது.   இந்தச் சிறப்பிதழின் முகப்பை வரைந்தவரும் இளம்தலைமுறையைச்சேர்ந்த செல்வி நித்தியா பத்மசிறி என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
திருமதி பரமேஸ்வரி குமாரவேலு அவர்கள்  சிறப்பிதழை வெளியிட்டுவைத்தார். இந்த ஆடிப்பிறப்பு விழாவும்  அதனை வருடந்தோறும்  நடத்திவருகின்ற கேசி தமிழ் மன்றமும்  அவுஸ்திரேலியாவில்  விக்ரோரியா மாநிலத்தில் பிறந்த  எம்மவரின் குழந்தைகளுக்கு ஆதர்சமாக   திகழுகிறது  என்பதை உறுதியாகச்சொல்லமுடியும்.
  சிவசுதன்   நிகழ்ச்சிகளை   ஒழுங்கமைத்திருந்தார்.  ஜெயதீபன்  நன்றி  நவின்றார்.

ஆடிக்கூழ்   உட்பட   சிற்றுண்டி   விருந்தோம்பலுடன்  விழா   நிறைவடைந்தது. இந்த விழாவின்  பின்னணியில்  இயங்கிய  அன்பர்கள்  பாராட்டுக்குரியவர்கள்.
No comments: