இலங்கைச் செய்திகள்


13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் விவாதிப்பதற்கு தீர்மானம்

கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

மலையகத்தில் தொடர்ந்து மழை: மவுசாக்கலையில் கீழ் இறங்கியது வீதி

இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மன்மோகன் சிங்

13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் விவாதிப்பதற்கு தீர்மானம்

(அதிரன்)
23/07/2013  கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.துரைரட்ணம் மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோரால் கொண்டுவரப்படவிருந்த பிரேரணைகள் பாராளுமன்றத்தில் குறித்த திருத்தச்சட்ட விவகாரம் மீளவும் கொண்டுவரப்படும் பட்சத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.


கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வுக்கு முன்னர் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த மாத அமர்வுகளில் ஆர்.துரைரெட்ணம் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவான பிரேரணைகளை முன்வைத்திருந்தபோதும் அவை சபை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஜெமீல் இன்றைய தினம் மேலும் ஒரு தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இவர்களுடைய பிரேரணைகளை சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வதா இல்லையா என்பது பற்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை கலந்துரையாடப்பட்ட போது பாராளுமன்றத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்கள் தணிவு நிலையில் இருப்பதுடன் அது தொடர்பான வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எனவே, தற்போது இந்த பிரேரணைகள் சபை அமர்வில் சேர்த்துக்கொள்ளப்படத் தேவையில்லை. அதேநேரம் பாராளுமன்றத்தில் மீளவும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் விசேட அமர்வு ஒன்றை நடத்தி இந்தப் பிரேரணையை ஆராய்வதற்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர், முதலமைச்சர் உட்பட கட்சித் தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 
கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

- பி.பி.சி

tinneveli_juncition_srilankaஇலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.

இக்கலவரத்தின் காரணமாக பலர் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர் ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.

இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது. பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது. நன்றி தேனீ 
மலையகத்தில் தொடர்ந்து மழை: மவுசாக்கலையில் கீழ் இறங்கியது வீதி
 25/07/2013   மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலையக மக்கள் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக அனேகமான பாதைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. அவ்வாறு பாதிப்புக்குள்ளன ஒரு பாதையே மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பாதை இப்பாதையின் மவுசாக்கலை பகுதியில் பாதை கீழ் இறங்கி பாரிய குழி ஒன்று உருவாகியுள்ளது.

இந்த குழி ஆரம்பத்தில் சிறியதாக காணப்பட்ட போதும் தொடர்ந்து மழை பெய்வதால் தொடர்ந்தும் பாதை உடைந்து குழியின் அளவு அதிகரிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இரவில் அதிக பனி மூட்டம் காணப்படுவதுடன் மழையும் பெய்கின்றது. இந்நிலையில் பாதையின் இந்த தேமடைந்த பகுதியில் பயணம் செய்வது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொர்ந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பாதையின் சீரமைப்பு பணிகள் தாமதமடைவதாக இப்பகுதிக்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரிஇலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மன்மோகன் சிங்

25/07/2013   சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 14ஆம் திகதி பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த பதில் கடிதத்தை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க விடயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிச்சயமாக எந்த மாற்றமும் இல்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் குறிப்பாக, தமிழர்கள் தமது நிலையை தாமே தீர்மானிப்பதை உறுதிப்படுத்துவதற்கு புதுடில்லி நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.
இந்த நோக்கத்தை எட்டும் வரை தொடர்ந்து நாம் பணியாற்றுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி வீரகேசரி


No comments: