உலகச் செய்திகள்


இங்கிலாந்து அரச குடும்ப வாரிசை பிரசவித்தார் கேட்!

பிரிட்ரிஷ் வாரிசின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர்

ஸ்பெய்னில் ரயில் தடம் புரண்டது: 77 பேர் பலி


========================================================================

இங்கிலாந்து அரச குடும்ப வாரிசை பிரசவித்தார் கேட்!

23/07/2013     இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
பக்கிங்கம் அரண்மனை இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நண்பகல் 4.24 மணியளவில் சென். மேரிஸ் வைத்தியசாலையில் வைத்தே கேட்  குழந்தையை பிரசவித்துள்ளார்.
இதே வைத்தியசாலையிலேயே இளவரசி டயனா வில்லியம்ஸ் மற்றும் ஹெரியை பிரசவித்திருந்தார்.
பிறக்கும் போது குழந்தையின் நிறை 3.8 கிலோ எனத் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அரச குடும்பத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், இதனை முழு பிரித்தானியாவும் கொண்டாடும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை பிறந்த செய்தி வெளியானதையடுத்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி

பிரிட்ரிஷ் வாரிசின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர்

Georgeபிரிட்டன் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத் மிடில்டனும் தங்களது குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று பெயர் வைத்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும் அவரது காதலி கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு லண்டன் மருத்துவனையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த குழந்தையுடன் வில்லியம் தம்பதி கென்சிங்டன் அரண்மனைக்குச் சென்றனர். இந்நிலையில், வில்லியமும் அவரது மனைவி கேத் மிடில்டனும் தங்களது குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும், குழந்தை இனி "கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜார்ஜ்' என்று அறியப்படும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் என்ற பெயரை வைக்குமாறு பிரிட்டன் அரசி எலிசபெத், இளவரசர் வில்லியமிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாக வரலாற்றில் இடம்பெற்ற மன்னர்களின் பெயர்களே வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, புகழ்பெற்ற ஜார்ஜ் மன்னரின் பெயரை அரசி தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக, அரச குடும்பத்தின் இந்த ஆண் வாரிசுக்கு என்ன பெயர் வைக்கப்படும்? என்பது தொடர்பாக பிரிட்டனில் சூதாட்டங்கள் நடைபெற்றன. அப்போது புக்கிகள் எனப்படும் சூதாட்டத் தரகர்களின் விருப்பத் தேர்வாக ஜார்ஜ் என்ற முதல் பெயரே அதிக அளவில் இடம்பெற்றது. அப்பெயரின் இரண்டாவது வார்த்தையாக ஜேம்ஸ் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய பெயர்கள் மீது புக்கிகள் பந்தயங்களை நடத்தினர். அந்தக் கணிப்பின்படியே, குழந்தையின் இரண்டாவது பெயராக அலெக்சாண்டர் என்று வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   நன்றி தேனீ


ஸ்பெய்னில் ரயில் தடம் புரண்டது: 77 பேர் பலி

25/07/2013 வட ஸ்பெய்னில் பயணிகள் ரயிலொன்று `தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 130 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேரில் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது 247 பேர் ரயிலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்பெய்னின் வடக்கில் கலிசியா பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகின்றது.நன்றி வீரகேசரி

No comments: