அவுஸ்திரேலியா புதிய பிரதமரின் புகலிடக் கொள்கைகள் உச்ச நீதி மன்றக் கதவுகளை தட்டுமா?

.
டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் மற்றும் பாரிஸ்டர் உச்ச நீதிமன்றம் (ஆஸ்திரேலியா)
இந்த மாதம் அவுஸ்திரேலியா பிரதம மந்திரி கெவின் ரட் அறிமுகம் செய்துள்ள அகதிகள் தொடர்பான புதிய கொள்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேல் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கிட்டும்  வாய்ப்பைப் பெற மாட்டார்களென பிரதம மந்திரி கெவின் ரட் தெரிவித்துள்ளார். படகுகள் மூலம் ஆட்கடத்தும் வியாபாரிகளை ஒழிப்பதற்கே தான் இந்தப்   புதிய கொள்கையைக் கொண்டுவந்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.


இனி  வரும் அகதிகள் பப்புவா நியூகினியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டு அங்கு அவர்களின்  அகதி அந்தஸ்த்து நிர்ணய மதிப்பீடு செய்யும் உடன்படிக்கை பப்புவா நியூகினியாவுடன் எட்டப்பட்டுள்ளதாக திரு.ரட் அறிக்கை வேளியிட்டு உள்ளார். அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரூட் மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஓ நீல் ஆகியோர்  கையெழுத்திடிட்டுள்ள இந்த  புதிய உடன்படிக்கை படி, புகலிடக் கோரிக்கை நியாயமானதாகக் தீர்மானிக்கப் படும் பட்சத்தில் அவர்கள் பப்புவா நியூகினியாவில் குடியமர்த்தப்படுவார்கள். புகலிடக் கோரிக்கை நியாயமற்றதாக தீர்மானிக்கப்படும் பட்சத்தில், படகுமூலம் வந்தவர்கள் சொந்த நாட்டுக்கோ, மூன்றாம் நாடொன்றிற்கே திருப்பி அனுப்பப்படுவார்களென கெவின் ரட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர். அதற்கு கைமாறாக பப்புவா நியூகினியாவிற்கு  ஆஸ்திரேலியாவிடமிருந்து பெருமளவு முதலீடுகள் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் முகமாகஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனத்தின் அடிப்படையில் , அகதிகள் அந்தஸ்த்துக்கு தகுதியானவர்கள் கூட  படகு மூலம் வருபவர்களை அரசாங்கம் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டாதென பதில் உயர் ஸ்தானிகர் சோனியா கோப்பெ கொழும்பில்  தெரிவித்துள்ளார்.இதன் படி அகதிகள் அந்தஸ்த்துக்கு தகுதியானவர்கள் பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவார்கள். அங்கேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அகதிகளாக அங்கீகரிக்கப்படுவோர் அங்கேயே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் இலங்கை மக்களுக்கு என்பது இந்த செய்தியால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் பிரதம மந்திரி கெவின் ரட் அறிமுகம் செய்த அதிரடிக் கொள்கைகளை ஆட்சேபித்து அனைத்து பெரும் நகரங்களிலும்  பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின். இதற்கு முன் இருந்த பிரதமர்களின் கொள்கைகளை விட இது மோசமானது என விமர்சிக்கப் பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியாவின் 26-வது பிரதமாராக ரட் தெரிவாகி இருப்பதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் அடுத்த தேர்தலுக்கு தன் அரசியல் நிலையை ஸ்திரப் படுத்திக் கொள்ளும் ஒரு உத்தியே இது எனவும் அவர்   விமர்சிக்கப் பட்டுள்ளார். ஜகர்த்தாவில் கடந்த மாத தொடக்கத்தில் அகதிகள் பிரச்சனையை தீர்க்க  எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டி கெவின் ரட் மற்றும் இந்தோனேசிய அதிபர் சிசிலோ பம்பங் யுதோயோனோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்அப்போது,எல்லை பாதுகாப்பைப் பலப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஒப்பந்த்தை ரட்டின் பிரதான போட்டியாளரும் எதிர் கட்சியின் தலைவருமான டோனி அப்பட் விமர்சிக்கும்போது, குடிவரவு கொள்கைகள் இறுக்கமடைவதி தான் வரவேற்கும் வேளையில் , இப் புதிய ஒப்பந்தம் எந்த அளவுக்கு வெற்றிகரமாகும் என்பது சந்தேகமே என்று கூறியுள்ளார்.
திரு ரட்டின் அறிக்கை உண்மையை  திசை திருப்புவதாகவும் , நேர்மையற்றது எனவும் டோனி அப்பட் கருத்து தெரிவித்துள்ளர்.
ஆனால் திரு ரட், தற்போது வரும் அகதிகளில் பலர் உயிராபத்துக்குப் பயந்து வருபவர்கள் அல்லர் அவர்கள் பொருளாதார ரீதியான புகலிடம் கோருபவர்கள் என்றும்இந்தப் புதிய  திட்டம் பலர் அகதிகள் என்ற போர்வையில் படகேறி வருவதை குறைக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாத அகதி வருகை 22,500 ஐ எட்டியதைத் தொடர்ந்து. இந்த  ஆண்டு  ஜூன் 30க்குள் 25000 அகதிகள் வருவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ஆஸ்திரேலிய அரசு 3.2 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது. இந்த செலவை விட பப்புவா நியூகினியாவிற்கு  ஆஸ்திரேலியாவிடமிருந்து கிடைக்கும் முதலீடுகள் மற்றும் இந்தோனேசியாவுக்கு எல்லை பாதுகாப்பு குறித்து வழங்கும்  முதலீடுகள், ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக செலவிட வேண்டியதை விடக் குறைவானதே என்பது ஆஸ்திரேலிய அரசின் கணிப்பாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த  சர்வதேச மன்னிப்பு சபை (அம்னஸ்டி இண்டர்நேஷனல் ) ‘உலகின் மிகவும் நலிவடைந்த மக்களை கைவிட்டு ஆஸ்திரேலியா முகத்தை திருப்பிக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த கொள்கை குறித்து கருத்து தெரிவித்த ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR)  பப்புவா நியுகினியின் சட்டதிட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக குறை கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் புதிய கொள்கை தொடர்பான தனது  முதலாவது மீளாய்வில் (UNHCR) ஆஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான மிக முக்கியமான விடயங்கள் தொடர்பான தனது பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என ' 'பப்புவா நியுகினி அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றி வரும் ஆர்ஆர்ஏ என்ற ஆஸ்திரேலியாவின் பிராந்திய மீள்குடியேற்ற மையம் சுட்டிக்காட்டியுள்ளது.குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பப்புவா நியுகினியில் தகுந்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதிருக்கின்றமை குறித்து யூஎன்எச்சீஆர் வருத்தம் தெரிவித்துள்ளது. அகதிகள்  விடயத்தில் ஆஸ்திரேலியா தந்து பொறுப்பை , அபிவிருத்து அடைந்து வரும் நாடான பபுவா நியூகினியாவிடம்  தட்டிக்கழித்துவிட பார்க்கிறது எனவும் ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

தவிர புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிர்ணயிக்கும்  அளவுக்கு தேவையான ஆளணி மற்றும் நிபுணுத்துவ வசதிகள் பப்புவா நியுகினியிடம் இல்லை என்றும் அங்கு ஏதேச்சாதிகாரமாக கட்டாய தடுப்புக்காவல்களுக்கு ஆட்கள் உட்படுத்தப்படுவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் கவலை  தெரிவித்துள்ளது

இவற்றை மீறி இந்த வாரம்  இந்தோனேஷிய மேற்கு ஜாவா பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்படவிருந்த கப்பலை நோக்கி, இருநூறுக்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு  விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.இந்த  படகு விபத்தில் பலியானவர்களில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதல் பத்து வயதுகுட்பட்ட  ஆறு சிறுவர்களும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. 189 பேர் வரை காப்பாற்றப்பட்டதாக கூறப் பட்டாலும் பலர் காணாமல் போயிருக்கக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய ஊடகமொன்று, அவுஸ்திரேலியாவில் நான்கு வருடங்களாக வேலை செய்யும் இலங்கைத் தமிழரின் மூன்று வயது பிள்ளை மரணத்தைத் தழுவியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. தமது மனைவியும் பிள்ளையும் ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி இந்தோனேஷியாவை அடைந்த விடயம் தமக்குத் தெரியாதென அவர் கூறியதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் இந்தோனேஷியாவின் குடிவரவு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 44 பேர் இலங்கையர்களென தெரிய வருகிறது.
ரட்டின் இந்த உடன் படிக்கை முன்பு இருந்த அரசுகளின் மலேசிய தீர்வு போன்ற ஒரு மாயையே என்பது உண்மையாகும். இதற்கு காரணம்
  • மலேசியா ஐ நா அகதி மாநாட்டின் கையொப்பதாரி இல்லை.
  • சர்வதேச அம்னிஸ்டி இயக்கத்தின்  அறிக்கைகள் , மலேசியாவில் அகதிகள் துஷ்பிரயோகம், துன் புறுத்தல், மற்றும் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
  • 2011 இல் ஆஸ்திரேலிய  உச்ச நீதிமன்றம்  மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பி வைப்பது ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கடமைகளை மீறுவதாகும் எனத் தீர்ப்பளித்தது.
  • இது போலவே 2009-2014 இடையில் முன்பு நடந்த பசுபிக் தீர்வு,  மனு தீவு மற்றும் கிரிஸ்மஸ் தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான புற நிர்ணய முயற்சிகள்படு தோல்வியில்முடிவடைந்தன.
2011 இல் ஆஸ்திரேலிய  உச்ச நீதிமன்றம்  மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பி வைப்பது ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கடமைகளை மீறுவதாகும் எனத் தீர்ப்பளித்தது
தற்போது இப் புதிய திட்டமும் கன்பராவிலுள்ள உச்ச நீதி மன்றக் கதவுகளை தட்டும் என பரவலாக எதிர் பார்க்கப் படுகிறது. 


Dr Chandrika Subramaniyan
Solicitor    Notary     Migration Agent  Nationally Accrd Mediator
MAIL:  P O BOX  500 Parramatta 2124  l OFFICE : Suite 1 Level 1 ,42 George Street Parramatta NSW 2150
P:(02) 9633 5019 l F :(02) 9633 5071 l M : 0433099000 
Women of the West - University of  Western Sydney Commended Award 2012
Highly Commended Award - Women Lawyers Association  2011
Nominee Justice Award 2009


No comments: