அருணாசல அற்புதம் 1: செம்மலைக்கு நிகர் எம்மலை!


அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம் 
அது பூமியின் இதயம்

என்பது அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக வருவது. இந்த அழகிய செய்யுளை எழுதியவரோ அருணாசலம் என்று கூறியவுடனே நம் நினைவுக்கு வருகின்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். எல்லாத் தலங்களையும் விட மகிமையில் உயர்ந்தது என்பதனாலே இது ‘தலம் யாவினும் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

வணிகமும் செல்வமும் செழிக்கும் இடங்களையே தேடித்தேடிப் போய்க் குடியேறிக் கொண்டிருக்கிற காலம் இது. ஆனால் திருவண்ணாமலைத் தலமோ அருளாலே நிறைந்தது. ‘என்றுமே அறவோர் அன்பர்க்கு இருப்பிடம்’. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான சித்தர்கள் வசிக்குமிடம். “ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அருணாசலம்” அல்லவோ அது. தபோதனர் என்றால் தவத்தையே செல்வமாக, தவத்தால் பெற்ற ஞானத்தையே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்களைக் குறிக்கும். ஞானிகளை மட்டுமல்லாமல் ஆன்மீகத் தேடல் கொண்ட அனைவரையும் இந்த மலை வா என்று அழைத்தபடியே இருக்கும்.



அருணம் என்றால் சிவந்த நிறம். அசலம் என்றால் மலை. இந்தப் பகுதியில் வசிப்போர் செம்மலை என்று பெயரிட்டுக்கொள்வதுண்டு. சோணம் என்றாலும் சிவப்புதான். சோணாசலம் என்ற பெயரும் அண்ணாமலைக்கு உண்டு. ‘சித்திரமாம் இஃதெல்லாம் செம்மலையே’ என்று ரமணர் அருணாசல பஞ்சரத்னத்தில் கூறுகிறார்.

குன்றாத நெருப்புக் குன்றம்

சிவப்பு நெருப்பின் நிறம். அண்ணாமலை என்பது அக்கினி மலை. அந்த அக்கினி மலையை அடையாளம் காட்டுவதாகத்தான் இங்கே அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று இந்தக் குன்றத்தின் உச்சத்தில் ஏற்றப்படுகின்றது. ஆண்டுதோறும் இந்த ஞானப் பேரொளியின் தரிசனத்தை அன்பர்கள் தொலைக்காட்சி வழியே கண்டு களித்திருப்பீர்கள்.

இந்த நெருப்புக் குன்றம் வெறும் பௌதிகப் பொருளல்ல. வெறும் கல்லென்று இதைக் கருதுவதற்கில்லை. இது ‘சித்கனம்’ எனப்படும் ஞானத்திரள். அதனால்தான் திருஞானசம்பந்த மூர்த்திகள் திருவண்ணாமலைத் தேவாரத்தில் ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்’ என்று விதந்து பாடுகிறார். அதற்கொரு புராணக் கதை உள்ளது.

சிவமலையே இந்தச் செம்மலை

ஒருமுறை பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்றொரு விவாதம் எழுந்தது. விவாதம் வலுத்து, சண்டை என்ற நிலைக்குப் போய்விட்டது. படைப்புக்கும் கடவுளுக்கும் காக்கும் கடவுளுக்கும் இடையே போர் மூண்டால் பிரபஞ்சம் என்ன ஆவது? அப்படியே அச்சத்தில் உறைந்து நின்றது. தேவர்கள் எல்லாரும் ஓடிச் சென்று சிவபெருமானிடம் இதற்கு வழி செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

நீறாடிய பெருமான் நெருப்புத் தூணாக மாறி அங்கே நின்றுவிட்டான். போராடிய இருவருக்கும் அசரீரியாக ஒரு குரல் கேட்டது, “எனது பாதத்தையும், உச்சியையும் கண்டுபிடிக்க இருவரும் ஆளுக்கொரு புறமாகப் புறப்படுங்கள். யார் முதலில் இரண்டில் ஒன்றை எட்டுகிறாரோ, அவரே பெரியவர்!” என்றது அந்தக் குரல். “நல்லது, நாமே அதிக சக்திசாலி, சவாலைச் சந்தித்து, வெற்றி பெற்று எமது மேன்மையை உலகுக்கு நாட்டுவோம்” என்று இருவருமே எண்ணினர்.

திருமாலுக்கு வராக அவதாரம் எடுத்த அனுபவம் கைகொடுத்தது. தான் ஒரு காட்டுப்பன்றியாக மாறி, பூமியைக் குடைந்துகொண்டு அக்னிஸ்தம்பத்தின் அடியை நோக்கிக் கிளம்பினார். பூதேவி எப்படியும் அவருக்கு உதவியாகத்தானே இருப்பாள்!

பிரம்மா அன்னத்தை வாகனமாகக் கொண்டவர். ஆனால் இந்தமுறை வானில் ஏறி உயரப் பறக்க வேண்டிய நிலை வரவே, தானே தன் வாகனத்தின் வடிவெடுத்து, அன்னமாகப் பறந்தார். மேலே, மேலே போய்க்கொண்டே இருக்கிறார், ஆனால் உச்சியை அடைய முடியும் என்று தோன்றவில்லை. அவ்வளவு உயர்ந்து நின்றது அந்த செஞ்சடை நெருப்புத் தூண்.

சற்றே மனம் தளர்ந்த நேரத்தில்தான் பிரம்மா அந்தத் தாழம்பூவைப் பார்த்தார். அது செஞ்சடையிலிருந்துதான் விழுந்திருக்க வேண்டும். “இதைக் கொண்டுபோய்க் காண்பித்தால் போதுமே, நாம் உச்சியை அடைந்ததற்குச் சாட்சியாக இருக்குமே” என்று ஓர் எண்ணம் தோன்ற, அந்தத் தாழம்பூவைக் கையில் பற்றிக்கொண்டு, தாழ இறங்கினார். அவரது தாழ்ச்சிக்கு அதுவே காரணமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

திருமாலுக்கும் எட்டவில்லை சோதிவானவனின் திருவடி. ஆனால், தனது இயலாமையை ஒப்புக்கொண்டு மேலே ஏறிவந்தார். பொய்மையைத் துணைக் கொள்ளாத காரணத்தால் அவரும் நிலையில் தாழாது உயர்ந்தார். சிவஜோதியைத் துதித்துப் பாடி நின்றது நீலமணி நெருப்பு! தாழம்பூவைச் சாட்சியாகக் கொண்டு தாழ்ந்த செயல் செய்த பிரம்மனோ வானவர்முன் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அடிமுடி காணாத அக்கினியின் பிரகாசத்தையும் வெப்பத்தையும் தாள முடியாமல் வானோரும் மண்ணோரும் தவித்தனர். “ஐயனே! குளிர வேண்டும்!” என்று மன்றாடினர். கையில் நெருப்பேந்தினாலும் தலையில் கங்கையை வைத்திருக்கும் ஐயனோ கருணைகூர்ந்து, “குளிர்ந்தோம்! ஆதவனின் ஒளியைப் பெற்று நிலவு எப்படி அமுத ஒளியைத் தருகிறதோ, அதுபோல புவியின் எல்லா ஆன்மீகத் தலங்களும் அண்ணாமலையிடமிருந்தே தெய்வீக சக்தியைப் பெற்று ஒளிதரும்” அன்று அருளினார் அரவணி பூண்ட ஐயன்.

இத்தலத்தை நினைத்ததும் அத்தன் ஆனந்தன் அருணா ரமணனே நமது நினைவுக்கு வருகிறான் என்றபோதும், சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் போலப் பல மகான்களின் வசிப்பிடமாக இருந்து சித்தபூமியாக இருந்து வருவது அருணாசலம். இதனை வலம்வருவதன் பெருமை சொல்லி மாளாதது. வரும் நாட்களில் இவற்றைப் பற்றி மேலும் மேலும் பார்த்து நம் அருணகிரி வலத்தைத் தொடர்வோம்.

(தொடரும்)
நன்றி மதுரமொழி

No comments: