உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடாத்தும் தமிழ் அறிவுப் போட்டிகள்உலகத்தமிழ் இலக்கிய மாநாடு, சிட்னி அவுஸ்திரேலியா
தமிழ் அறிவுப் போட்டி – 04-08-2013


இப் போட்டிகள் August மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் காலை 10  மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

திருக்குறள் ஓவியப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும்.

ஒவியப் போட்டி (2 மணித்தியாலங்கள்) 10 மணியிலிருந்து நடைபெறும். இதே நேரத்தில் மற்றய போட்டிகளிற் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு அப்போட்டிகளுக்கென 30 நிமிடங்கள் மேலதிகமாகக் கொடுக்கப்படும்.

 மற்றய போட்டிகள் பாலர் பிரிவு காலை 10 மணிக்கும், கீழ்ப்பிரிவு காலை 10.30 மணிக்கும், மத்திய பிரிவு காலை 11 மணிக்கும் மேற்பிரிவு காலை 11.30 மணிக்கும் அதிமேற்பிரிவு மதியம் 12 மணிக்கும் நடைபெறும். 

திருக்குறள் ஓவியப் போட்டி பற்றிய விளக்கம்
அன்புடைமை என்னும் அதிகாரத்திற் காணப்படும் பத்துக் குறள்களையும் படித்து அவற்றின் பொருளை விளங்கி இந்த அதிகாரத்திலுள்ள குறள்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவியம் ஒன்றை வரைய வேண்டும்.

பேச்சுப்போட்டிற்கான பேச்சுக்களையும் திருக்குறள் மனனப் போட்டிற்கான திருக்குறள்களையும் கீழே தரப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவையான பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம். பிரதி எடுப்பதில் ஏதாவது சிக்கல் இருந்தால் கு. கருணாசலதேவா 0418442674 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் 3 - 8 - 2013ற்கு முன்னபாக கிடைக்க கூடியதாக அனுப்பப்பட வேண்டிய முகவரி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி
21 Rose Crescent, Regents Park NSW 2143.
அல்லது  utimsydney@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

 திருக்குறள் ஓவியப் போட்டி

போட்டி பற்றிய விளக்கம்

இத்துடன் தரப்பட்ட அன்புடைமை என்னும் அதிகாரத்திற் காணப்படும் பத்துக் குறள்களையும் படித்து அவற்றின் பொருளை விளங்கி இந்த அதிகாரத்திலுள்ள குறள்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவியம் ஒன்றை வரைய வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் யாவரும் இப்போட்டியிற் பங்குபற்றலாம். இப்போட்டி ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி தமிழர் மண்டபத்தில் காலை 10 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெறும். இதே நேரத்தில் வேறு போட்டிகளிற் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு  அப்போட்டிகளுக்கென 30 நிமிடங்கள் மேலதிகமாகக் கொடுக்கப்படும். ஒவியம் வரைவதற்குக் கொடுக்கப்படும் நேரம் 2 மணித்தியாலங்கள்.

 அதிகாரம் 8 அன்புடைமை
  
1)    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்.                        (குறள் 71)

இதன்பொருள்;
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ?  அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

2)    அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                        (குறள் 72)

இதன்பொருள்;
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

3)    அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.                    (குறள் 73)

இதன்பொருள்;
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

4)    அன்புஈனும் ஆர்வம் உடைமை, அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.                    (குறள் 74)

இதன்பொருள்;
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

5)    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.                        (குறள் 75)

இதன்பொருள்;
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

6)    அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்,
மறத்திற்கும் அஃதே துணை.                        (குறள் 76)

இதன்பொருள்;
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர். ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

7)    என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.                        (குறள் 77)

இதன்பொருள்;
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

8)    அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.                        (குறள் 78)

இதன்பொருள்;
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

9)    புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?                    (குறள் 79)

இதன்பொருள்;
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

10)    அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                    (குறள் 80)

இதன்பொருள்;
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

இதே நேரத்தில் வேறு போட்டிகளிற் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு  அப்போட்டிகளுக்கென 30 நிமிடங்கள் மேலதிகமாகக் கொடுக்கப்படும்.(அவர்கள் ஓவியங்களை வரையும் நேரம் 2 மணி மட்டுமே)


 =======================================================================
பாலர் பிரிவு
திருக்குறள் மனனப் போட்டி

காலம்: 04-08-2013 காலை 10மணி

இத்தேர்வில் பங்கு பற்றுவோர் கொடுக்கப்பட்ட எல்லாக் குறள்களையும் மனனம் செய்தல் வேண்டும். அவற்றுள் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட குறள்கள் கேட்கப்படும். நான்கு குறள்கள் கொடுக்கப்படும். அவற்றுள் மூன்று குறள்கள் மட்டும் கேட்கப்படும். ஆனால் நான்கு குறள்களும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.

1.    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

2.    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்

3.    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

4.    ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து
======================================================================
கீழ்ப் பிரிவு
திருக்குறள் மனனப் போட்டி

காலம்: 04-08-2013 காலை 10:30 மணி

இத்தேர்வில் பங்கு பற்றுவோர் கொடுக்கப்பட்ட எல்லாக் குறள்களையும் மனனம் செய்தல் வேண்டும். அவற்றுள் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட குறள்கள் கேட்கப்படும். ஆறு குறள்கள் கொடுக்கப்படும். அவற்றுள் நான்கு குறள்கள் மட்டும் தேர்வுக்காகக் கேட்கப்படும்.

1.    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்

2.    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

3.    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

4.    தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

5.    இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

6.    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
======================================================================
மத்திய பிரிவு
திருக்குறள் மனனப் போட்டி

காலம்: 04-08-2013 காலை 11 மணி

இத்தேர்வில் பங்கு பற்றுவோர் கொடுக்கப்பட்ட எல்லாக் குறள்களையும் மனனம் செய்தல் வேண்டும். அவற்றுள் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட குறள்கள் கேட்கப்படும். எட்டு குறள்கள் கொடுக்கப்படும். அவற்றுள் ஆறு குறள்கள் மட்டும் தேர்வுக்காகக் கேட்கப்படும்.

1.    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்

2.    தொட்டனைத் தூறும் மணந்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

3.    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

4.    எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

5.    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

6.    தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

7.    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

8.    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
=======================================================================

மேற் பிரிவு
திருக்குறள் மனனப் போட்டி

காலம்: 04-08-2013 காலை 11.30 மணி

தேர்வாளர்கள் கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் அவற்றின் பொருள்களையும் மனனம் செய்தல் வேண்டும். தேர்வாளர்களிடம் இவற்றுள் நான்கு குறள்களும் பொருளும் கேட்கப்படும்.

1.    கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர்எனின்
கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை. எனவே கற்றதன் பயன் கற்பித்தவனைப் போற்றிப் புகழ்வதுதான் எனப்படுகிறது.
2.    அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

3.    எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்கவேண்டும். செய்யத் தொடங்கியபிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.

4.    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம் காதால் கேட்டுப் பெறும் கேள்விச் செல்வமேயாகும். இச்செவிச் செல்வமே செல்வங்களில் எல்லாம் மேலான செல்வம்.

5.    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

உடை நெகிழ்ந்தவனது கை உடனே அதைப் பிடிப்பதற்கு உதவி செய்வது போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்போதே சென்று அதைக் களைவதுதான் நல்ல நட்பு.

6.    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

எப்பொருளை எவர் சொல்லக் கேட்டாலும் சொல்லப்பட்ட அப்பொருளின் உண்மையையும் இயல்பையும் கண்டறிவதே அறிவு ஆகும்.
========================================================================
அதிமேற் பிரிவு - திருக்குறள் மனனப் போட்டி

காலம்: 04-08-2013 12 மணி

தேர்வாளர்கள் கீழே கொடுக்கப்பட்ட எட்டுக் குறள்களையும் அவற்றின் பொருள்களையும் மனனம் செய்தல் வேண்டும். தேர்வாளர்களிடம் இவற்றுள் ஆறு குறள்களும் பொருளும் கேட்கப்படும்.

1.    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனத்தில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது.

2.    யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாள வேண்டும். அங்ஙனம் அடக்கியாளாவிட்டால் பேசும் போது சொற்குற்றத்திற்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்.

3.    வெள்ளத்தனைய மலர்நீட்டல் மாந்தர்தம்
உள்த்தனையது உயர்வ

தண்ணீரிலே மலரும் பூவின் தாளினுடைய நீளம், தண்ணீர் உயரத்துக்கு இருக்கும். அதுபோல் மனத்தில் ஊக்கம் உள்ள அளவுக்கு உயர்வு இருக்கும்.

4.    தெய்வத்தாள் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தத் கூலி தரும்.

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போனாலும், வருந்தி உழைக்கின்ற முயற்சி இருக்குமானால் அம்முயற்சிக் கேற்ற பலன் கிடைத்தே தீரும்.

5.    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் நிகழும் உணர்ச்சியைத் தெளிவாக முகம் காட்டும்.

6.    ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்கு ஒரு நாளைய இன்பமும், அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்.

7.    நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம், தீயோழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும். தீய ஒழுக்கம் இம்மை, மறுமை, ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும்.

8.    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

கோடிக்கணக்கான செல்வத்தை ஒருவன் முயன்று சேர்த்து வைத்தாலும், விதி இருந்தால்தான் அவனால் அதை அனுபவிக்க முடியும்.
=========================================================================
பேச்சுப் போட்டி – கீழ்ப்பிரிவு
காலை 10.30 மணி
04 - 08 - 2013

திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் வள்ளுவரால் இயற்றப்பட்டது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இந்நூல் எழுதப்பட்டது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாக திருக்குறள் திகழ்கின்றது. இரண்டு வரிகளில் அரிய கருத்துக்களை திருக்குறள் அழகாக எடுத்துக் கூறுகின்றது. பைபிள் தமிழில் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக அது விளங்குகின்றது. கிறீஸ்த்தவர்களின் மதம் சார்ந்த நூலாக அது விளங்குவதனால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் திருக்குறள் எந்த மதத்தையும் சாராத ஒரு நூலாகும். பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெருமையை திருக்குறள் பெறுகின்றது. திருக்குறளில் உள்ள உயர்வான கருத்துக்களின் காரணமாகவே அது அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.
மக்களில் பலர் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்கிறார்கள். சிலர் எப்படியும் வாழலாம் என்று வாழ்கிறார்கள். ஒரு மனிதன் வாழ வேண்டிய முறைப்படி வாழ திருக்குறள் வழிகாட்டுகின்றது.
“ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”

ஓழுக்கமானது ஒருவனுக்கு உயர்வைக் கொடுப்பதனால் அது உயிரைவிட மேலாக மதிக்கப்படும் என்பது இக்குறளின் பொருளாகும் இதனைப் போல அற்புதமான கருத்துக்களைக் கொண்ட 1330 குறள்களை உடையதாக திருக்குறள் சிறந்து விளங்குகின்றது.
=========================================================================
பேச்சுப் போட்டி – மத்தியபிரிவு
காலை 11 மணி
04 - 08 - 2013

திருவள்ளுவரின் பெருமை

திருக்குறள் என்னும் சிறந்த நூலின் படைப்பாளி திருவள்ளுவர். தமிழ் மொழியின் பெருமைக்குரிய நூலாக திருக்குறள் விளங்குகின்றது. அதனை இயற்றிய திருவள்ளுவரும் பெருமைமிக்கவராக விளங்குகின்றார்.
“யாமறிந்த புலவருள்ளே கம்பனைப் போல்
வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்
யாங்கணுமே கண்டதில்லை உண்மை
வெறும் புகழ்ச்சி இல்லை.”
என்று பாரதியார் பாடினார். மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியாரே வள்ளுவரை இவ்வாறு கூறினார் என்றால் வள்ளுவரின் பெருமைக்கு வேறு சான்று வேண்டுமா? மக்களுக்கு அறக்கருத்துக்களை எடுத்துக் கூறவேண்டிய தேவை இருந்தமையால் திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டதாக திருக்குறளை திருவள்ளவர் எழுதியுள்ளார். அறவழியில் நின்று, பொருளீட்டி, இன்பமாக வாழவேண்டும் என்பதை 1330 குறள்களில் அவர் அழகாகக் கூறியுள்ளார். மக்கள் வாழவேண்டிய முறைபற்றி இரண்டு வரிகளைக் கொண்ட பாடலில் சிறப்பாகக் கூறியவர்கள் திருவள்ளுவரைத் தவிர யாருமில்லை.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
அதாவது இவ்வுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் மறுபிறப்பில் விண்ணுலகத்தில் தேவர்களில் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான். என்று வள்ளுவர் கூறிகின்றார்.
இனம், மொழி, மதம், நாடு என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு எல்லோரும் போற்றுகின்ற உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த பெருமைக்குரியவராக திருவள்ளுவர் திகழ்கின்றார். இதனாலேயே உலகத்தில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட இரண்டாவது நூலாகத் திருக்குறள் விளங்குகின்றது. தமிழ் நாட்டின் சிறப்பைப் பாரதியார் பாடுகின்றபோது
“வள்ளுவன் தன்னை உலகினிற்குத் தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று குறிப்பிடுவது வள்ளவரின் பெருமையை, மேன்மையை, சிறப்பை, உயர்வை ஆகாயம் முட்டுவளவுக்கு கொண்டு செல்கின்றதென்றால் அது மிகையில்லை.
வாழ்க தமிழ்!   வாழிய நற்றமிழர்!!    வளர்க வள்ளுவன் புகழ்!!!
=========================================================================
பேச்சுப் போட்டி – மேற்பிரிவு
காலை 11.30 மணி
04 - 08 - 2013

செம்மொழியான தமிழ்மொழி

பதவி கொண்டா எம் பாரதி தமிழ் வளர்த்தான்
பட்டம் பெற்றா நம் வள்ளுவர் வாய்மொழிந்தான்
உள்ளத்தால் ஓங்கி நின்றனர் உண்மைப் பெரியோர் – தமிழ்
உணர்வைத் தாங்கி நின்றனர் செம்மொழிச் சான்றோர்
தேர்வு கடந்த தேடல் எங்கள் தமிழ்
தேவை கடந்த தாகம் சங்கத் தமிழ்…
அத்தகைய தமிழை, தீந்தமிழை, தெகட்டா மொழியை எடுத்தியம்பும் மறத்தமிழனாய் பிறந்தமைக்குப் பெருமிதம் கொண்டோம். செம்மொழியின் வரலாற்றுச் சுவடுகள் எல்லாம் வாழ்வியலைச் சொல்லுகின்றன. மானுடத்துக்கு மகத்தான வழிகளைக் காட்டுகின்றன. மனிதப் பண்புகளை மொழிகின்றன. அறிவை வளர்ப்பதோடு அகத்தையும் வளர்க்கும் அருமை மொழி அருந்தமிழ்.
பார் போற்றும் புதையலை தம்முள் புதைத்து வைத்திருக்கின்றது எம் பைந்தமிழ். நெறிசார்ந்த வாழ்க்கைக்கான கருவுலம் எங்கள் கன்னித்தமிழ் என்றும் இளமை மாறாமல் பூத்துக்குலுங்கும் புதுமொழி. அகம், புறம் என்ற இருபிரிவால் உலகை அளந்த பெருமொழி. அள்ள அள்ள குறையாத அமுத மொழி. ஆனால் பருகப் பருக பசியைத் தூண்டும் அமுதம். உருகி உருகி அதன் புகழைக் கேட்டாலும் சலித்துப் போகாத செந்தமிழ். சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சுவையைத் தந்து கொண்டிருக்கும் நற்றமிழ்.
வற்றா மொழி, பெற்றாலும், இட்டாலும் பெருகிக் கொண்டே இருக்கும் செல்வமொழி. எங்கள் செம்மொழியான தமிழ்மொழி.
“வாழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்”
வாழ்க தமிழ்!
=========================================================================
பேச்சுப் போட்டி – அதிமேற்பிரிவு
பகல் 12 மணி
04 - 08 - 2013

தலைமுறைக்குத் தமிழ்

எங்கள் தமிழ் இங்கு முழங்கட்டும்
எட்டு திக்குகளும் ஒலிக்கட்டும்.
பைந்தமிழ் பாரெங்கும் பரவட்டும் - எம்
பகைவர் எச்சிலை விழுங்கட்டும்
தமிழ் முரசு கேட்டு நடுங்கட்டும் - தமிழ்
தலைமுறை தாண்டி தொடரட்டும்
புலம் பெயர்ந்த போதும், ஐம்பலன்வழி அன்னைமொழியான அருந்தமிழை அருந்தும் அவா கொண்டோம். செம்மொழியான தமிழ்மொழியை சிந்தித்தல், செவிவழி கேட்டல், செப்புதல் மட்டுமின்றி செய்யுளியற்றும் சீரிய திறத்துடன் சந்ததிகளை உருவாக்கும் உந்துதல் கொள்வோம்.
பிழைப்பிற்கும், உழைப்பிற்கும், தழைத்தோங்குவதற்கு தமிழ் தயை செய்யுமா என்ற ஐயத்தில், எம் தன்னிகரில்லா மொழி நிராகரிப்படுவதா…….
மொழி மறக்கும் போது வந்தவழி மறப்பது இயல்பு விழியிருந்தும், நல்ல வாழ்விருந்தும் அவர்களைக் குருடர்களாய் தவிக்கவிட்டப் பழி பரம்பரை மூதாதையர்களைச் சாரும். சிரமில்லா தேகம் போன்றது செம்மொழி இல்லா செல்வ வாழ்க்கை.
கனவாகிக் கலையப்போகும் நாம் கருத்தாகி மலரப் போகும் சந்ததிகளுக்கு சரித்திரத்தின் சாதனையைச் சொல்ல விழைந்தால், அதனை விழுதுகளும் அசைபோட்டு மெல்ல விழைந்தால் அதற்கு அருமை மொழி ஆத்ம பலமன்றோ!
எந்திர வாழ்க்கைக்கு மத்தியில் இளைப்பாறுவதற்கு தமிழ் தாயின் மடியை இளக்கதிர்களுக்கு இழைப்போம். எம் தமிழச்சியின் தாலாட்டில் அவர்களும் உறங்கட்டும். தலைமுறைக்குத் தமிழை தந்துவிட்டோம் என்ற தாகம் தணிய அவள் ஒப்பாரியில் உயிர் விடுவோம்.
“தலைமுறை தழைக்கத் தமிழ் மறை ஓதுவோம்”
வாழ்க தமிழ்
=========================================================================

1 comment:

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்