ஒரு வீடு , இருவேறு உலகம் - சிறுகதை

.                                        
                          எஸ். கிருஸ்ணமூர்த்தி



நாதனது கன நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவுஸ்திNலியாவில் காணி வாங்கி பெரிய மாடி வீடு கட்டு வேண்டும் என்பது அவனது இலட்சியம். அவனும் மனைவியும் மாறி மாறி  உறக்கமின்றி கடுமையாக உழைத்து  காசு சேமித்து  நிலம் வாங்கி அதில் ஒரு அழகிய பெரிய மாடி வீடொன்று கட்டிவித்தான். வீட்டைக் கட்டிப் போட்டு சும்மா இருந்தால் அதில் என்ன சுகம் இருக்கிறது. நாலு சனம் வந்து வீட்டைப் பார்த்தால் தானே கஸ்டப்பட்டதன் பலன் கிடைக்கும். பார்த்த நாலு சனம் பார்க்காத நாலு சனத்திற்க்கு சொல்ல  அந்த பார்க்காத நாலு சனம் இன்னும் பத்துப் பேருக்கு சொல்ல நாதனது வீட்டைப் பற்றிய நியூஸ் கொஞ்ச நாளாவது மெல்பேண் தமிழ் சனத்துக்குள்ளே பரபரப்பாக உலாவும். வீடுகுடிபூர்வை என்று யாழ்பாணத்து பாசையில் சொல்லப்படும்ää கிரஹப்பிரவேசத்திற்கு நண்பர்களை அழைத்து விருந்துவைப்பதில் நாதனுக்கு உடன்பாடு இல்லை. ஊரிலை சிம்பிளாக பால் காச்சி வீட்டைச் சுற்றி பாலைத் தெளித்தால் விசயம் முடிந்துவிடும். இங்கை அப்படியில்லை. ஐயர் தனது வித்தையைக் காட்டுவதற்காக ஊரிலை கேள்விப்படாத புது புது நடைமுறைகளை கொண்டு வருவார். அதனால் ஐயருடைய கைக்கை எப்பவும் நிற்கவேணும். வருகிற நண்பர்களுக்கு வீட்டைச் சுற்றிக்காட்டி பெருமையடிக்கமுடியாது. வேறு ஒருநாளில் ஹோம் வெல்கம் என்றோ கெற்றுக் கெதர் என்றோ அழைத்து விருந்து வைக்கலாம். இதிலும் ஒரு சூட்சுமம் இருக்குது. எல்லாரையும் ஒரே தடவை அழைக்கக் கூடாது. இரண்டு மூன்று குடும்பங்களாக கூப்பிடலாம். அப்பதான் வீட்டு விற்பனை முகவரைப் போல ஒவ்வொரு அறை அறையாக காட்டி விளக்கம் கொடுக்கலாம். இப்படியே  நாலைத்து கிழமை இழுத்தடித்தால் நாதனது புதுவீட்டு நியூஸ் கொஞ்சக்காலம் கூட ஓடும்.



இந்தச் சனி இரவுää குலம் குடும்பம்ää சிவா குடும்பம்ää பால குடும்பம் ஆகியோருக்கு இராப்போசனம் விருந்து. மூன்று குடும்பமும் சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் காரில் வந்து இறங்கினார்கள்.  நாதனது மனைவி நளினி விசயகாரி வருகிற ஒவ்வொரிடமும் ஒரு கறி சமைத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டாள். ஆதனால் அவர்களது கைகளில் ஒவ்வொரு கறிச்சட்டி. நளினி அதை வாங்கி கிச்சின் மேசையில் வைத்து விட்டு மூன்று பெண்களையும்  பமிலி றூமுக்கு அழைத்தாள். நாதன்  ஆண்கள் மூவரையும் முன்னாள் உள்ள விருந்தினர் அறைக்குக் கூட்டிச்சென்றான். அங்கேயுள்ள கோப்பி ரேபிலில் விஸ்கிப் போத்திலும் கொறிப்புத் தீனியும் இருந்தன.

 நாதன் விஸ்கிப் போத்தலை சுட்டிக் காட்டி “தொடங்குங்கோவன்” என்றான்.

சிவாவோ “ இதுக்கு இப்ப என்ன அவசரம். முதலில் வந்த விசயத்தை முடிப்பம். வீட்டைச் சுற்றிக் காட்டன்.”

“அதுவும் சரிதான்ää போதையேறினால்  வீட்டை சரியாகப் பார்க்க முடியாது.” இது பாலா.

“ வடிவாகப் பாத்தால்த்தானே வெளிலை போய் மற்றவரிடம் நொட்டை நொறுக்குச் சொல்லலாம்.” கடுந்தொனியில் நாதன்.

“ என்ன நீ மில்லியன் டொலரிலை வீடு கட்ட நாங்கள் என்ன குறைகண்டு பிடிக்கவா வந்தனாங்கள். வா பார்ப்பம்.”  என்ற படி எழுந்தான் குலம்.

நளினி கிச்சினை பெண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தாள். கிச்சினுக்குள்ளை போன பெண்கள் கிச்சின் ஆராய்ச்சியை இப்போதைக்கு முடிக்க மாட்டினம் என்று உணர்ந்த நாதன். மேல்மாடிக்கு மூவரையும் அழைத்துச் சென்றான்.

அப்போது நாதனது ஐபோனில்  ஓரு மெசேச் வந்தது அதைப் பார்த்து விட்டுää

“ஒரு நிமிடம் பொறுங்கோää சஞ்சய் நாளைக்கு என்ற காசுவேணுமாம்” என்று கூறினான்.

சஞ்சயன் நாதனது ஒரே ஒரு பிள்ளை வயது இருபது. யூனியில் படிக்கிறான். நாதன் தனது ஐபோனில் தனது எக்கவுண்டிலிருந்து மகனது எக்கவுண்டுக்கு காசை மாற்றினான்.

“சஞ்சை என்ன  வீட்டில் இல்லையா?.”  சிவா கேட்டான்.

“இல்லைää மேலே மாடியில் தான் இருக்கிறான். கீழே வாறது இல்லை. எங்களாலும் அடிக்கடி படியேறி மேலே போக  ஏலாது. எங்கள் மூவரிடமும் லேற்றர் ஐபோன் இருப்பதால் மகன் சஞ்சை வீட்டில் இருந்தாலும் மகன் சஞ்சையுடன் போனில்த் தான் தொடர்பு கொள்ளுவோம்.”  என்றான் நாதன் பெருமையுடன்.

மேலே மூவரையும் அழைத்துக் கொண்டு போய் காண்பித்துக் கொண்டிருந்தான் நாதன். ஒரு பெரிய அறை. சுவரில் ஒரு எல் சிடி ரெலிவிசன் பொரித்தியுள்ளது.  அதற்கு கீழே இரண்டு கதிரைகளுடன் வட்டமான சிறிய மேசை. அதற்குள்ளேயே ரொயிலற்றுடன் கூடிய ஸ்பா பாத் அழகிய பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

“இது  எங்களது மாஸ்ர பெட்றூம்ää ஓன் சுவிற்றுடன். ஆனால் நாங்கள் இப்போது இங்கே தங்குவதும் கிடையாது வருவதுமில்லை. கீழே ஒரு றூம் இருக்கு அதில்தான் படுப்போம்.” என்றான் நாதன்.

சிவா கூர்ந்து பாத்துவிட்டு “ஞாபகமிருக்கா நாதன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நீங்ககள் தங்கியிருந்த பிளட் இந்த றூமின் பாதியாகத்தான் இருந்தது” என்றான்.

 “ என்ன குத்திக்காட்டுகிறாயா? ஊரிலை கொட்டில்  வீட்டில் இருந்ததுகள் எல்லாம்  இப்ப மில்லியன் டொலர் வீடு வேண்டியிருக்கு என்று சிலர் சொல்வதும் எனது காதில் விழுந்திருக்கு” என்றான் நாதன்.

“சரிää உதுகளை விட்டுத்தள்ளுää மற்ற றூம்களைக் காட்டு.” என்று கதையை மாற்றினான் குலம்.

ஓவ்வொரு றூமாக பார்த்தபடி வந்தனர். ஒரு றூமை சுட்டிக் காட்டி இது சஞ்சயனது என்று சொன்னபடி றூம் கதவைத் தட்டி விட்டு திறந்தான் நாதன். சஞ்சயன் கட்டிலில் இருந்தபடி  லெப் டொப்பில் எதையோ நோண்டிய படி இருந்தான். இவர்களை கண்ட சஞ்சயன்ää “ஹாய் அங்கிள்ஸ்.” என்று விட்டு திரும்பவும் லெட்டொப்பில் நோண்டினான்.

மேல்மாடியை பார்த்து விட்டு கீழே நால்வரும் இறங்கியவாறுää
“இப்ப இந்தக் காலத்துச்  சிறுசுகள் எல்லாம் பேஸ் புக்கிலை எந்த நேரத்திலும்ää இதாலை பல பிரச்சினை வருது.” என்றான் பாலா.

“ சிறுசுகளைச் சொல்லிக் குற்றமில்லை. பெரிசுகளும் எந்த நேரத்திலும் பேஸ்புக்கிருக்கிறார்கள் இதாலும் பிரச்சனைதான்.” என்று குலம் கூறினான்.

உடனே தனது ஐபோனை எடுத்துää தனது பேஸ் புக் எக்கவுண்டைத் திறந்து காட்டினான்.

“இதைப் பாருங்கள்ää நானும் பேஸ் புக் வைத்திருக்கிறேன். எனது மகன் சஞ்சையுடனும் இணைந்திருக்கிறன்.” என்றான் நாதன்.

அதற்கு சிவாää பாலாவிற்கு கண்ணால் ஓரு சைகை காட்டிவிட்டு சொன்னான்.

“ பேஸ்புக் மட்டுமல்லää  பேஸ்புக் போல டுவிற்றர்ää இன்ஸ்ராகிராம் என்று பலவகைகள் இருக்கின்றன. எமது பிள்ளைகள் சரியான சிமாட்.  எங்களைத் திசைதிருப்புவதற்காக எங்களுடன் பேஸ்புக்கிலை இணைந்து விட்டுää இன்ஸ்ராகிராம் போன்றவற்றில் தங்கடை விளையாட்டைக் காட்டுவினம். ஏதற்கும் கவனமாகக் கண்காணிக்க வேணும்.”

“இன்ஸ்ராகிராமா?  நான் கேள்விப்படலை” ஆச்சரியத்துடன் நாதன்.

அப்போது நாதனது ஐபோன் சினுக்கியது. அவனது மனைவி நளினி சமையல்  அறைக்குள் இருந்து போன் எடுத்தாள். புதிதாக வாங்கின குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி விளக்கம் கேட்டாள். நண்பர்களை ஆறுதலாக பார்த்துக் கொண்டு வரும்படி கூறி விட்டு அவசரமாகப் படி இறங்கி ஓடினான்.

நாதன் போனதும் சிவா தாழ்ந்த குரலில்  “செல் போன் கண்டு பிடிக்காவிட்டால் இவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். நாதனின் மகன் சஞ்சய்ன் ஓரு கேள் பிரண் வைத்திருக்கிறான். சீனக்காரிää இருவரும் மோசமாக போடடோ எடுத்து இன்ஸ்கிராமில் போட்டிருக்கிறார்கள். எனது மகன்தான் காட்டினான். நாதன் ஏதோ தனது மகன் தன்னைர கொன்றோல்லைதான் என்று நினைக்கிறான். என்னை மகன் இவனோடை ஏதோ பிரச்சனை  எண்டு நினைக்கிறன். அதாலை விசயத்தை எனக்கு புட்டு வைத்தான்.” என்றான்

“நாங்கள் ஏன் மற்றவையின்ரை பிரச்சனைக்குள் அதிகம் நுழைவான். எங்களுடைய பிள்ளைகள் என்ன செய்யுதுகள் என எங்களைத் தவிர மற்றவைகளுக்குத்தான் அதிகம் தெரியும்.” என்று எப்போதும் சச்சரவைத் தவிர்க்க விரும்பும் குலம் கூறினான்.

விருந்து முடிந்து இரண்டு கிழமையின் பின்னர் ஒரு நாள் இரவு நாதன் வீட்டு அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. நாதன் எழுந்து நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரண்டைத்தாண்டியிருந்தது. இந்த நேரத்தில் யார் என எண்ணியபடி எழுந்தான். ஆனால் அழைப்பு மணி விடாது அடித்துக் கொண்டேயிருந்தது. யன்னலூடாக யார் பெல் அடிப்பது எனப்பார்த்தான். வெளியே இரண்டு பொலிஸ்காரர்கள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாக கதவைத் திறந்தான். தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டுää “சஞ்சையனுக்கும் அவனது கேள்பிரண்டுக்கும் ஏதோ சண்டைääசஞ்சையன் அவளுக்கு அடித்து விட்டான். இருவரையும் விசாரிக்க வேணும்” என்றான் பொலிஸ்காரனில் ஒருவன்.

“சஞ்சயன் மேல்மாடியில்தான் இருக்கிறான். ஆனால் அவனுக்கு கேள் பிரண்டே கிடையாது” என்றாள் நாதனது மனைவி நளினி. இல்லை இருவரும் ஒன்றாகத்தான் இரு மதங்களாக இங்கே தங்கியுள்ளனர்” என உறுதியாகச் சொன்னான் அந்த பொலிஸ் காரர்.
அப்போது ஒரு சீனக்காரியும் சஞ்சையனும் மாடிப் படியாலே இறங்கிவந்து கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த நாதனுக்கும் நளினிக்கும் தலை சுற்றியது. அவர்கள் வேறோர் உலகத்தில் இருப்பது போல் உணர்ந்தனர்.







No comments: