தமிழ் சினிமா


MailPrint
நேரம்

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா படங்களைப் போன்று வித்தியாசமான கதையமைப்பில் வந்திருக்கும் படம் நேரம்.
காலையில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதைக் கரு.
நாயகன் நிவின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனம் நஷ்டத்தில் இயங்க இவருடைய வேலை பறிபோகிறது.
இந்நிலையில், தனது தங்கையின் திருமணத்திற்காக வட்டிராஜா என்பவரிடம் ரூ.50,000 வாங்குகிறார். 4 மாத காலத்திற்குள் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்ற நிபந்தனையுடன் அந்த வட்டிப் பணத்தை வாங்கிச் செல்கிறார்.
ஆனால், நாயகனுக்கோ குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் வட்டிராஜாவிடம் சொன்ன நேரத்திற்குள் வட்டிப் பணத்தை கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் மாலை 5 மணிக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று வட்டிராஜா நாயகன் நிவினுக்கு கெடு வைக்கிறார்.

இந்நிலையில், தனது சிறுவயதிலிருந்தே தன்னுடன் படிக்கும் நாயகி நஸ்ரியா நசீமும், நிவினும் காதலித்து வருகிறார்கள்.
இவர்களுடைய காதலுக்கு நசீமின் அப்பா தம்பி ராமையா சம்மதம் தெரிவித்திருக்கும் பட்சத்தில், நிவினின் வேலை பறிபோனது தெரிந்தது தனது மகளை தற்பொழுது திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்.
இந்நிலையில், நிவினை பிரிய முடியாத நசீம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது ஒரு திருடனிடம் தனது கழுத்தில் போடப்பட்டிருந்த செயினை பறிகொடுக்கிறார் நசீம்.
மறுமுனையில், இதைப்பற்றியெல்லாம் தெரியாத நிவின், வட்டிராஜாவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக தனது நண்பனிடம் பணத்தைப் பெற்று திரும்பும் வழியில் நசீமிடருந்து செல்போன் அழைப்பு வருகிறது.

அப்போது, தனது கழுத்தில் போட்டிருந்த செ ினை திருடனிடம் பறிகொடுத்ததை நசீம் விளக்குகிறார். இதை நிவின் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடனை அடைப்பதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிடுகிறார்.
இந்நிலையில் வட்டிராஜாவிடம் பணத்தை வாங்கிய இன்னொருவரான மாணிக், அவரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்தவேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த நசீம், நாயகனிடம் பேசுவதற்காக அவரிடம் போனை வாங்குகிறார்.
இதைத் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை நோட்டமிடும் வட்டிராஜா நசீமை, மாணிக்கின் காதலி என்று தவறாக புரிந்துகொண்டு மாணிக் தனக்கு தர வேண்டிய பணத்திற்காக அவளை கடத்தி விடுகிறான்.

இந்நிலையில், தன்னுடைய மகளைக் காணவில்லை என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்-யிடம் தம்பி ராமையா புகார் செய்கிறார்.
இறுதியில் நிவினும், நஸ்ரியா நசீமும் ஒன்று சேர்ந்தார்களா? கடத்தப்பட்ட நசீம் மீட்கப்பட்டாரா? குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் வட்டிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் நிவின் எளிமையான தோற்றம், அளவான நடிப்பு என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார்.
நாயகி நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு கேரளத்து வரவு. திரையில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வட்டிராஜாவாக வரும் சிம்ஹா நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இளமையான தோற்றத்தில் வில்லத்தனம் காட்டுவதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
மேலும், நாசர், ஜான் விஜய், மாணிக் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்த் நாக் உள்ளிட்ட பல துணை கதாபாத்திரங்கள் படத்தில் ஆங்காங்கே வந்து சென்றாலும், அனைவரும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

நாயகியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா இயல்பான தோற்றத்தில், அன்பான அப்பாவாக தனக்கே உரித்தான பாணியில் நடித்துள்ளார்.
உலக சினிமாவின் பிரபல இயக்குனர்களையும், அவர்களின் படங்களையும் படத்தின் ஆரம்பத்திலேயே பட்டியலிடுவது, பரபரப்பான கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் காட்சிகள் என்று ஆங்காங்கே சுவாரசியங்கள் பளிச்சிட்டாலும் காட்சிகளின் நீளம், யூகிக்கக்கூடிய காட்சிகள் என்பனவற்றை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
என்றாலும், தனது முதல் படத்தை நேர்த்தியாக கையாண்ட விதத்திற்காக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனை நிச்சயம் பாராட்டலாம். படத்தின் இசையும், ஒளிப்பதிவும் வசீகரம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
மொட்டை மாடி அதிகாலை வெளிச்சம், மழை சூழ்ந்த மேகம், சேசிங் காட்சிகள் என கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில், அதே சமயம் கதையை விட்டு வெளியே வராமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆனந்த் சந்திரன் கைதட்டல்களை அள்ளுகிறார். ராஜேஷின் பாடல்களைவிட பின்னணி இசை மிரட்டுகிறது.
முற்பாதியில் நம்மை சிரிக்க வைக்கும்படியான வசனங்கள் பிற்பாதியில் மிஸ்ஸிங். காட்சிகளின் நீளத்தால் கதை ரொம்பவும் நொண்டியடித்துக் கொண்டு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் "நேரம்" போகிறது.
நன்றி விடுப்பு