நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4 கீதா மதிவாணன்

.
மழையும் குளிரும் வாட்டும் வேளைமக்கள் படும்பாட்டை விவரிக்கும் அழகு மேவிய வரிகள்!
 
குளிர்மாலைத் துயர் நினைத்து
மலர்மாலை புனையப் பயந்து
சிலமலர் சூடிடுவார் மகளிர்தம்
அடர்கூந்தல் அழகு செய்ய! 

 நறுமண விறகில் நெருப்பினை மூட்டி
அகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி
முகிலென்றெழுந்த புகையினில் காட்டி
முடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி!


 கைவினைக் கலைஞன் செய்த 
கலைநயமிக்க விசிறியெலாம்
சிலந்திவலைப் பின்னலோடு
வளைந்த ஆணியில் தொங்க.... 

இளவேனிற் காலத்தில்
இளந்தென்றல் காற்றால்
இதம் மேவும் பள்ளியறையின்
பலகணிக்கதவுகள் இரண்டும்
உலவுவாரில்லாக் காரணத்தால்
திறவாது கிடந்தன தாழிட்டு!

 தொடர்மழைத் தூறலால்
இடர்மிகு வாடையால்
குறுங்கழுத்துப் பானையின்
குளிர்நீரைப்பருகத் துணியாது
அகன்ற சட்டியிலே அனலுண்டாக்கி 
அதன் அருகே அமர்வர் யாவரும்.

 குளிர்ந்த நரம்புகளால்
குறையுறும் இன்னிசையென்றே
திரண்ட மார்பணைத்து
யாழினுக்கு வெம்மையூட்டி
நிறைந்த பண்ணிசைத்தார்,
நயமிகு ஆடல்மகளிர்! 

 கணவரைப் பிரிந்து வாடும்
காதல் மகளிர் மேலும் வாட,
கனத்த மழை மிகுந்து 
பனிக்காற்றும் தொடர்ந்ததே. 

************************************ 

நெடுநல்வாடைப் பாடல் (53-72)

கூந்தல் மகளிர் கோதை புனையார்;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக், 

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க 

வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்  

கல்லென் துவலை தூவலின்யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; 

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப 

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால்