நாற்சார்வீடு - முருகபூபதி

.
இலங்கை    வடமராட்சியிலிருந்து    கடந்த  சில  ஆண்டுகளாக  வெளியாகிறது ஜீவநதி   கலை,   இலக்கிய    மாத  இதழ்.  கடந்த  2012  ஆம் ஆண்டு  ஜீவநதியின்   அவுஸ்திரேலியா   சிறப்பிதழ்  வெளியான  தகவலையும்    வாசகர்கள்  அறிவர்.   அதற்கு    முன்னர்   வெளியான  ஜீவநதியில்     குந்தவையின்   சிறுகதை நீட்சியை    படித்ததும்   சில    நிமிடங்கள்    ஆழ்ந்த   மௌனத்தில்   கரைந்தேன். அச்சிறுகதை    எனக்குள்    ஏற்படுத்திய   அதிர்வுகளை    கட்டுப்படுத்திக்கொள்ளவே அந்த    மௌனம்.
மௌனம்   கலைந்ததும்    ஜீவநதி   ஆசிரியர்    பரணீதரனுடன்    தொலைபேசியில் தொடர்புகொண்டு,    “குந்தவை    எங்கே    இருக்கிறார்?    அவருடன்    உரையாடி வாழ்;துக்கூற    விரும்புகின்றேன்”    எனச்சொன்னேன்.
“   ஏன்…  சேர்..?”
“ உங்கள்   ஜீவநதியில்   வெளியான   குந்தவையின்    நீட்சி    சிறுகதை    என்னை    மிகவும்    பாதித்துவிட்டது.    அவருடன்    தொடர்புகொண்டு உரையாடவிரும்புகின்றேன்.    தொலைபேசி    இலக்கம்    தாருங்கள்”   என்றேன்.


மறுமுனையில்    சில   கணங்கள்    மௌனம்.    “சேர்…  உங்கள் வாழ்த்துக்களை அவரை    நேரில்    சந்தித்து    சொல்கின்றேன்.   ஆனால்   நீங்கள்   தொலைபேசியில்    உரையாடுவது   சற்று    சிரமம்.   வாருங்கள்   அவரது இருப்பிடத்திற்கே    அழைத்துச்செல்கிறேன்.”    என்றார்.   இந்த   உரையாடல் நடந்தபோது   அவுஸ்திரேலியாவில்    நின்றேன்.   குறிப்பிட்ட   சிறுகதை    பற்றி இந்தப்பத்தியில்   நான்    எதனையும்    சொல்லமாட்டேன்.    இதனைப்படிக்கின்றவர்கள் குறிப்பிட்ட    சிறுகதை   வெளியான   ஜீவநதி   இதழை   தேடி   எடுத்துப்படித்தால் அதுவே   எனக்கு   மனநிறைவுதரும்.
அவுஸ்திரேலியாவில்   வதியும்   இலக்கிய   நண்பர்கள்   மற்றும்   இலக்கிய ஆர்வமுள்ள   சகோதரிகளிடம் அச்சிறுகதை   பற்றி   சிலாகித்தேன். அவர்களில் சிலர் படித்துவிட்டு, “ஆமாம் சமகாலத்தில் தரமான நல்ல சிறுகதை” என்றார்கள்
கடந்த   ஜனவரி மாதம் நண்பர் தெணியானின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவநதி நடத்திய இலக்கிய   நிகழ்வுக்கு    தலைமைதாங்குவதற்காக    வடமராட்சிக்கு   சென்றேன்.
அங்கு    சென்றதும்   பரணீதரனிடம்   எனது   முதலாவது   வேண்டுகோள், “குந்தவையிடம்   அழைத்துச்செல்லுங்கள்.”
அவரது    மோட்டார்சைக்கிளில்   தொண்டமனாறுக்கு   புறப்பட்டோம்.   1981 இல் முதல்தடவையாக    செல்வச்சன்னிதிக்கு    வந்திருக்கிறேன்.   பல ஆண்டுகளின் பின்னர் சன்னிதியானையும்    தரிசித்துவிட்டு   குந்தவையின்   அந்த நாற்சார் இல்லத்தின் வளவுக்குள் வந்தோம்.
அந்த   இல்லம்   என்னை   பெரிதும் கவர்ந்தது. அப்படி நாற்சார் இல்லங்கள் இலங்கையில் அபூர்வமாகவே   எனது   கண்களுக்கு   தென்பட்டிருக்கின்றன. தமிழ்த்திரைப்படங்களில்   தமிழக   நாற்சார்   வீடுகளை   பார்த்திருக்கின்றேன்.   எனது ஆயுளுக்குள்   எனக்கு   வசதிவாய்ப்பு   கிட்டுமானால்   ஒரு   நாற்சார்   இல்லம் அமைக்கவிரும்புகின்றேன்.   அதுவும்   எனது   கனவுகளில்  ஒன்று.
குந்தவை   வசிக்கும்   இல்லத்தின்   சுற்றுப்புறம்   சரியான   கவனிப்பும் பராமரிப்புமின்றி  தனிஅழகோடு  காட்சி  அளிக்கிறது.   அந்த  இல்லத்தில்   முன்பு வாழ்ந்தவர்கள்    நன்றாக   செழிப்போடு   வாழ்ந்திருக்கவேண்டும்.  
முற்றத்திலிருந்து   குரல்   கொடுத்தோம்.
“  அம்மா…  அம்மா…”
எமது   குரல்கேட்டு   அயல்வீட்டுப்பெண்தான்   வெளியே வந்து, “ ரீச்சர் உள்ளேதான் இருக்கிறாங்க…  அவுங்களுக்கு   கொஞ்சம்   சுகமில்iலை…  மீண்டும் கூப்பிட்டுப்பாருங்க…” எனச்சொல்லிவிட்டு   அகன்றார்.
இப்போது  உரத்த   குரலில்   அழைத்தோம்.
“அம்மா…  அம்மா..”
“ வாரன்…  வாரன்…”   உள்ளிருந்து குரல் வந்தது.
“  சேர்.   அது   குந்தவையின்   குரல்தான்.   வந்து   இருங்கள்.” விறாந்தாவில் அமர்ந்தோம்.
“ யார்…?”   எனக்கேட்டவாறு   வெளியே   வந்தவரை,   “ சேர்… இவர்தான்   குந்தவை.   நீங்கள்   பார்க்கவிரும்பிய   படைப்பாளி.”  என்றார்   பரணி.
 கண்களை   இடுக்கியவாறு   “ யார்…  தம்பி பரணியா?   யார்…வந்திருப்பது?” எனக்கேட்டவரின்    அருகில்   சென்று   என்னை   அறிமுகப்படுத்தினேன்.
அவரது   தோற்றம்   என்னை   அதிர்வுகலந்த   வியப்பில் ஆழ்த்தியது.
பலவருடங்களுக்கு    முன்னர்   குரும்பசிட்டியில்   இரசிகமணி    கனகசெந்தியையும் அளவெட்டியில்    அ.செ. முருகானந்தனையும்   நேரில்   சந்தித்தபோதிருந்த உணர்வுகளையும்    மீறியதாக    அக்கணங்கள்   என்னை   வெகுவாகப்பாதித்தது. செவிப்புலன்,   கட்புலன்   பாதிப்புக்குள்ளாகியிருந்தபோதிலும்   தொடர்ச்சியான   வாசிப்பு,    எழுத்தூழியம்    என   வாழ்ந்துகொண்டிருக்கும்   குந்தவையின் சிறுகதையொன்றை   நாடகவடிவமாக்கி,  லண்டனில்   வதியும்   பாலேந்திரா-  ஆனந்தராணி   தம்பதியர்   தங்களின்   அவைக்காற்றுக்கழகத்தின்   ஊடாக   ஐரோப்பிய   நாடுகளில்   மேடையேற்றினர்.
ஈழத்துச்சிறுகதையொன்று    ஐரோப்பாவில்   மேடையேறியதற்கு   என்ன   காரணம்? அதற்கு   சர்வதேசத்தரம்   இருந்தமையே   காரணம்.   அகதி  வாழ்வில் குழந்தைகள் எதிர்கொள்ளும்   நெருக்கடிகள்   ஈழத்து   தமிழ்   அகதிகளின்   கதை  மட்டுமல்ல. பாலஸ்தீனிய,   அல்பேனிய,   சோமாலிய   அகதிகளுக்கும்   பொதுவானதுதான். தொண்டமனாறு   என்ற   ஒரு   புறநகர்பிரதேசத்தை   வாழ்விடமாகக்கொண்டிருப்பவரிடம் ஒரு   சர்வதேச   தரம்   வாய்ந்த   கதையொன்று   உருவானது   தற்செயலானதாக இருக்கலாம்.   ஆனால்   குந்தவைக்கு   அந்த   அங்கீகாரம்   ஒரு   பேறுதான்.
சிலநாட்கள்   காய்ச்சலினால்   அவதியுற்றதாகச்சொன்னார்.   அவரது முகத்தில் அந்த தாக்கம்   தெரிந்தது.   அந்த   நடுப்பகலிலும்   ஆழ்ந்த   உறக்கத்திலிருந்தவரை, எங்கள்   “அம்மா…அம்மா..”   குரல்தான் துயில் எழுப்பியிருக்கிறது.
தன்னைத்தான்   தேடிவந்திருக்கிறோம் என்பதறிந்து உற்சாகம்மேலிட இலக்கியம்  பேசினார். சமீபத்தில்   வெளியான மகுடம்,   கணையாழி   இதழ்களை   படித்துவிட்டு கருத்துச்சொன்னார்.   அ.யேசுராசா,   பத்மநாப ஐயர்,   உட்பட   சிலரை   குறிப்பிட்டார். தற்கால   விமர்சனங்கள்   தனிநபர்  தாக்குதலாக  வெளியாவது   குறித்து புன்முறுவலோடு   வருந்தினார்.
கோகிலா   மகேந்திரன்.   சித்திரலேகா மௌனகுரு,   அன்னலட்சுமி இராஜதுரை முதலான சில பெண் எழுத்தாளர்களை   விசாரித்தார்.
“ஜீவநதியில் வெளியான நீட்சி சிறுகதைதான் அவுஸ்திரேலியாவிலிருந்து உங்களை தேடிவரச்செய்தது” எனச்சொன்னபோது ஒரு குழந்தையைப்போன்று நாணிச்சிரித்தார். தன்னைப்பற்றி  அவர்   எதுவும் சொல்லவில்லை. தனக்கிருந்த ஒரு அண்ணன் காலமாகிவிட்டதைச்சொல்லி   சுவரில்   மாட்டியிருந்த அவரின் படத்தை காண்பித்தார். அருகே எவரும் இல்லை.   சில உறவுகள் வெளிநாட்டில். தனிமையில் அந்தவீடும் அவரும்.
தனிமைதான்   அவரது   உற்றசொந்தமோ   என்று யோசித்தேன்.   இல்லை.  இலக்கியம்   அவருடன்   வாழும்   சொந்தம்.   என்பது  ஆறுதலானது.  
ஜனவரி 6 ஆம் திகதி   தெணியானின் விழா முடிந்ததும் அன்றிரவே புறப்படவேண்டிய நிகழ்ச்சிநிரல் எனக்கு,   மீண்டும்   வருவேன்   எனச்சொல்லிவிட்டு   புறப்பட்டேன்  பயண ஒழுங்குகளில்   திடீர்   திருப்பங்கள்,  மாற்றங்கள்.   இதற்கிடையில்  தமிழகப்பயணம். திட்டமிட்டவாறு   அவரை   மீண்டும்   சந்திக்க  தொண்டமனாறுக்குச்செல்ல   முடியாமல் அவுஸ்திரேலியாவுக்குப்பயணமானேன்.
அவரது   தோற்றமும்  அந்த  நாற்சார்  இல்லமும் எனது மனதில் நிறைந்திருக்கிறது.
அவரது ஏற்கனவே வெளியான படைப்புகள் குறித்த மறுவாசிப்புகள் இலக்கியப்பரப்பில் நிகழவேண்டும். அவரை எம்மவர்கள் அவ்வப்போது சென்று பார்த்து உரையாடவேண்டும். அவரை இலக்கிய உலகம் கனம் பண்ணவேண்டும். புதிய தலைமுறைப்படைப்பாளிகளுக்கு குந்தவையின் படைப்புகள் அறிமுகமாகவேண்டும்.
இதுவே  நான் சொல்லவிரும்பும் செய்தி.
இந்தப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில்   கோயம்புத்தூரில்   பிரபல   மாக்சிய இலக்கிய விமர்சகர்   கோவை   ஞானி அவர்களைச்சந்தித்து   நீண்டநேரம் உரையாடினேன். முற்றாக கண்பார்வை   இழந்திருக்கும்   அவர்   ஒரு   உதவியாளரை வைத்துக்கொண்டு படிக்கிறார்.   எழுதுகிறார்.  சில மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் காலமாகிவிட்டார்.
அன்று   மாலைவேளை   எனது   கரம்பற்றியவாறு   அருகில் வீதியோரமாக   சுமார் ஒருமணிநேரம்   நடந்தார்.  நடந்துகொண்டே   இலக்கியம்.   அரசியல்   பேசினார்.
சடுதியாக நின்று,   “ இவ்வளவு   நேரம்   உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்…  ஆனால்   ஒரு   படைப்பாளிக்கே   உரித்தான   மேட்டிமைக்குணத்தை   உங்களிடம் காணமுடியவில்லையே முருகபூபதி.   அது ஏன்?” எனக்கேட்டார்.
அதற்கு   என்னிடம்   அவர்கேட்கும்   விதமான   சிரிப்பு   மாத்திரமே பதிலாக வெளிப்பட்டது.   வார்த்தைகளில்   பதில்   தெரியவில்லை .
கனகசெந்திநாதன்,   அ.செ.முருகானந்தன்,   குந்தவை   முதலான எளியமனிதர்களுடன் பழகும்   சந்தர்ப்பங்கள்   கிடைத்தமைதான்    அதற்குக் காரணமா   என்ற பதில் எனக்கு   அப்போது   உடனடியாக   வரவில்லை.