உலகச் செய்திகள்


மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்!

சவூதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை: போதைவஸ்து கடத்தியதாக குற்றச்சாட்டு

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: சந்தேகத்தில் நடிகை கைது

 ஒபாமாவின் அதிரடி முடிவு!

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரோஹானி தெரிவு

======================================================================
மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்!

08/06/2013 தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தற்போதைய வயது 94.

கடந்த சில காலங்களாக ‌உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை அவர் நுரையீரல் அழற்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நன்றி வீரகேசரி   



சவூதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை: போதைவஸ்து கடத்தியதாக குற்றச்சாட்டு


13/06/2013 சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும்.

நன்றி வீரகேசரி  

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: சந்தேகத்தில் நடிகை கைது


09/06/2013   அமெரிக்க அதிபருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் ஷன்னான் ரிச்சர்ட்சன் என்ற (35 வயது) தொலைக்காட்சி தொடர் நடிகையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. பொலிசார் பலரிடம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பொலிசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார்.

தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை மற்றும் விஷம் தயாரிப்பது தொடர்பாக அவரது கணவர் இண்டர்நெட்டில் தகவல்களை தேடியது போன்றவற்றை அந்த பெண் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அவரது கணவரிடம் விசாரித்து வந்தபோது பொலிசாரின் சந்தேகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது.


சில டி.வி. சீரியல்களில் நடித்துள்ள ஷன்னான் ரிச்சர்ட்சன்(35) என்ற அந்த பெண், தனது கணவரை பொலசில் மாட்டிவிட நாடகம் ஆடுகிறாரோ? என்று நினைத்து தங்களது சந்தேகப் பார்வையை நடிகையின் மீது படரவிட்ட போலிசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கபட்டால் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என பொலிசார் கூறினர்.
     

நன்றி வீரகேசரி 

 

 

 

ஒபாமாவின் அதிரடி முடிவு!



14/06/2013   சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமளிப்பதினை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
உள்நாட்டுப் போரில் ஆசாத் ஆதரவுப் படையினர் இரசாயன குண்டுகளை பாவிக்கின்றமை தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையை அடுத்தே ஒபாமா இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இராசயன குண்டுகள் பாவிக்கப்பட்டால் அமெரிக்கா நிச்சயமாக உள்நாட்டுப் போரில் தலையிடும் என ஒபாமா கடந்த சில காலங்களாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதமளிக்கவுள்ளமை உறுதியாகின்றதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் எவ்வைகையான ஆயுதங்களை அமெரிக்க வழங்குமென்பது தொடர்பில் பரீசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பானது ஆயுதங்களை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பில் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இம்முடிவு சிரிய உள்நாட்டுப் போர் நிலைமைகளை மேலும் சீர்கெடச் செய்யுமென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆசாத்திற்கு ஆதரவாக ரஸ்ய செயற்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகின்றது.  நன்றி வீரகேசரி   





ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரோஹானி தெரிவு




ஈரான்  ஜனாதிபதித் தேர்தலில் ஹசன் ரோஹானி வெற்றி பெற்றுள்ளார்.
அங்கு கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குரிமை பெற்ற 3 கோடியே 67 லட்சம் பேர் வாக்களித்தனர்.

சுமார் 72.7 சதவீதம் வாக்குப் பதிவானதாக அந்நாட்டு  உள்துறை அமைச்சு அறிவித்தது.
இதில், ஒரு கோடியே 86 லட்சம் வாக்குகள் (50.68 சதவீதம்) பெற்று ஹசன் ரோஹானி(65) வெற்றி அடைந்துள்ளார்.
இவர் ஈரானின் 7 ஆவது ஜனாதிபதியென்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2003ம் ஆண்டு ஈரான் அதிபராக கடாமி பொறுப்பு வகித்தபோது அணு உலைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டவர் ரோஹானி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அஹமடி நிஜாட் ஆட்சியில் மீண்டும் அணு உலைகள் உற்பத்தியை தொடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பகைக்கு ஈரான் உள்ளாகியது.
இதனால் ஈரானின் நாணயமான ரியாலின் அன்னிய செலவாணி மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 70 சதவீத சரிவை சந்தித்தது.
இதனையடுத்து, ஈரானின் தற்போதைய பணவீக்கம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு தெஹ்ரானில் உள்ள சோர்கே நகரில் 1948ம் ஆண்டு பிறந்த ரோஹானி, ஸ்கொட்லேண்டில் உள்ள கிளாஸ்கோ கேலடோனியன் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றவர்.
திருமணமாகி 4 குழந்தைகளுடன் வாழும் இவர், ஈரான் முன்னாள் ஜனாதிபதி அயாத்துல்லா கோமேனியுடன் சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.

இவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடனான பிணக்கு நீங்கி எண்ணெய் வளம் மிக்க ஈரான் பொருளாதார ரீதியாகவும் முன்னேறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை இவரது வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஈரானிய இளைஞர்கள் இவருக்கு ஆதரவாக வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி